வரம் | தினகரன் வாரமஞ்சரி

வரம்

ஆரவ், ஆராதனா பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்தில் காதலித்து திருமணம் செய்தவர்கள். ஒருவர் மீது ஒருவர் அளவில்லாக் காதல் கொண்டவர்கள். ஆரவ் யுனிவசிற்றி விரிவுரையாளர். ஆராதனா வங்கி முகாமையாளர். ஆரவ் வீட்டின் ஒரே செல்லப்பிள்ளை என்பதால் ஆரவ் மீது அவனின் பெற்றோர் அளவில்லா அன்பு வைத்திருந்தார்கள். ஆராதானாவும் செல்வத்திலே வளர்ந்தவள். கஷ்ரம் என்றால் என்னவென்றே தெரியாது. குழந்தையில்லை என்ற குறையைத் தவிர வேறு எந்தக்குறையுமில்லை ஆராதனாவிற்கு.

ஆரவ், ஆராதனா திருமணம் முடித்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன. இதுவரை குழந்தையில்லை இருவருக்கும். ஆரம்பத்தில் இருவரும் குழந்தைகள் பற்றி சிந்தித்துப் பார்க்கவில்லை. ஆண்டுகள் செல்லச் செல்ல ஆராதனாவிற்கு குழந்தையில்லை என்ற ஏக்கம் வாட்டத் தொடங்கியது. தன்னால் ஒரு குழந்தையைப் பெற்று தன் கணவனின் கையில் கொடுக்க முடியவில்லையே என்றெண்ணிக் கவலைப்பட்டாள். ஆரவ் குழந்தையில்லை என்ற கவலையை வெளியில் காட்டிக் கொள்ளாது தன் மனைவிக்கு ஆறுதலாக இருந்தான். நாட்கள் நகர்ந்து கொண்டே சென்றன. வேலைக்குச் செல்லும் இடம், நண்பர்கள், சொந்தங்கள், ஆரவ்வின் அம்மா எல்லோரும் குழந்தை இல்லாதது பற்றியே கதைக்கத் தொடங்கினார்கள். இந்த விடயம் ஆரவ் ஆராதானாவிற்கு மனவேதனையைக் கொடுக்கவே டொக்டரிடம் சென்று தங்களைப் பரிசோதித்துப் பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்தார்கள். டொக்டரிடம் சென்று தங்களின் பிரச்சினையைக் கூறவும் டொக்டரும் இருவரையும் பரிசோதித்து விட்டு, தன்னை மீண்டும் சந்திக்க வருவதற்கான திகதியைக் கூறி அனுப்பினார்.

ஆரவ் வீட்டுக்கு வந்து தன் பெற்றோரிடம் டொக்டரை சந்தித்த விடயத்தைக் கூறி குழந்தை இல்லாதது பற்றி இனிமேல் பேசக்கூடாது காலம், நேரம் வரும்போது எங்களுக்கும் குழந்தை பிறக்கும் என்று கூறிச் சென்றான். டொக்டர் சொன்ன நாளுக்காகக் காத்திருந்தாள் ஆராதனா. நாளும் வந்தது. அன்று ஆரவ் கட்டாயம் யுனிவசிற்றி போக வேண்டிய தேவை இருந்ததால் ஆராதனாவை அவளுடைய தாயுடன் சென்று வருமாறு கூறிவிட்டுச் சென்றான். அதன்படியே ஆராதனா தன் தாயுடன் டொக்டரைச் சந்திக்கச் சென்றாள். டொக்டர் ஆராதனாவைக் கண்டதும் “உங்கள் கணவர் வரவில்லையா? நீங்கள் மட்டும் தனியாக வந்திருக்கிறீங்க” என்றார்.

“அவர் கட்டாயம் இன்று யுனிவசிற்றி போக வேண்டும் என்பதால் அம்மாவுடன் வந்தனான் டொக்டர் அம்மா வெளியில் இருக்கிறாங்க” என்றாள். “உங்கட ரிப்போட் பார்த்தனம்மா நீங்கள் ரெண்டு பேரும் இருந்தால்தான் கதைக்கலாம். உங்கட கணவர் கட்டாயம் வந்திருக்கணும். நீங்கள் நாளைக்கு உங்கள் கணவரையும் அழைச்சிட்டு வாங்க கதைப்பம்” என்றார். “என்ன டொக்டர் ஏதும் பிரச்சினையா? எதுவாயிருந்தாலும் என்னிடம் சொல்லுங்க” என்றாள். “இது உங்கள் கணவர் சம்பந்தப்பட்ட விடயம் அவர் கட்டாயம் இருக்கணும். அதுதான் இவ்வளவு தூரம் சொல்றன்”. “இல்லை டொக்டர் என்னிடம் சொல்லுங்க அவர் ரொம்ப பொசிசிவ். எதுவென்றாலும் நான் பக்குமாக எடுத்துச் சொல்றன்” என்றாள் ஆராதனா.“மனதைத் திடப்படுத்திக் கொள்ளுங்கம்மா. உங்கள் கணவருக்கு ஒரு குழந்தைக்கு அப்பாவாகும் தகுதியில்லை. எப்பவுமே உங்களுக்கு அவரால் ஒரு குழந்தையைக் கொடுக்க முடியாது” என்றார் டொக்டர். ஆராதனா ஒரு நிமிடம் உயிரற்ற உடலானாள். என்ன சொல்வதென்று தெரியாமல் மௌனமாய் திகைத்து நின்றாள். “இதை ஏற்றுக் கொண்டுதானாக வேண்டும். நான் சொல்வது கஸ்ரமா இருக்குமென்று எனக்கும் தெரியும் ஆனால் நான் உண்மையைச் சொல்லத்தானே வேண்டும்” எனக் கூறி அவளின் மௌனத்தைக் கலைத்தார் டொக்டர். ஆராதனா மௌனம் கலைந்து ஓவென்று கதறி அழுதாள். டொக்டருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. சற்று நேரத்தில் தன்னைத் திடப்படுத்திக் கொண்டு “டொக்டர் நீங்கள் எனக்கு மறுக்காமல் ஒரு உதவி செய்யணும்இந்த விடயம் யாருக்கும் தெரிய வேணாம் முக்கியமாக எனது கணவருக்கு. எனக்கு குழந்தை முக்கியம் இல்லை என் கணவர்தான் முக்கியம். அவருக்கு ஓர் அவமானம் வர நான் விடமாட்டேன் எனக்காக நீங்கள் ஒரு பொய் சொல்லணும். என்னை உங்கள் தங்கையாக நினைத்து செய்யணும் டொக்டர். என் கணவர் உட்பட யார் எப்போது வந்து கேட்டாலும் எனக்குத்தான் குழந்தை பாக்கியம் இல்லை என்று சொல்லணும். என் கணவருக்கு எந்தக் குறையும் இல்லை என்றுதான் சொல்லணும் டொக்டர்” என்று கெஞ்சினாள். “ஐயோ அம்மா என்னால் என் தொழிலுக்குத் துரோகம் செய்ய முடியாது. உனக்கு எந்தக் குறையுமில்லை. வேறு யாராவது டொக்டரிடம் உன் கணவர் போனால் உண்மை தெரிஞ்சிடும் என்னால் பொய் சொல்ல முடியாது” என்று மறுத்தார் டொக்டர். “அப்படி எந்தப் பிரச்சினையும் உங்களுக்கு வராமல் பார்த்துக் கொள்வேன் டொக்டர் ப்ளீஸ்” என்று கெஞ்சவே டொக்டரும் சம்மதித்தார்.

ஆராதானாவின் அம்மா மகள் நல்ல முடிவு சொல்லுவாள் என்று ஆவலுடன் காத்திருந்தாள். ஆனால் ஆராதனா எதுவும் சொல்லாமல் அம்மாவை அவசரமாக அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தாள். வந்த வேகத்திலே குளியறைக்குச் சென்று சத்தம் போட்டு அழுதாள். கடவுளுக்கு கண்டபடி திட்டினாள். ஆரவ்வின் அம்மா ஆராதனாவின் அம்மாவை “டொக்டர் என்ன சொன்னார்” என்று கேட்டுக் குடைந்து கொண்டிருந்தார். அதுவரை வெளியில் வராமல் இருந்த ஆராதனா கணவனின் கார் சத்தத்தில் வெளியே வந்தாள். கணவனைக் கண்டதும் ஓடிச் சென்று கட்டிப் பிடித்து “எனக்கு குழந்தை பெறும் பாக்கியம் இல்லையாம் என்று டொக்டர் சொல்லிட்டார்” என்று சொல்லி அழுதாள். எல்லோரும் திகைத்துப் போய் நின்றார்கள். ஆரவ்வின் அம்மா ஆராதனவை வெறுப்புடன் பார்த்தாள். ஆரவ் தன்னுடைய மனைவியின் தலையைத் தடவி “டொக்டர் ஒன்றும் கடவுள் இல்லை நமக்கு குழந்தை பிறக்கும் நீ ஒன்றுக்கும் கவலைப்பட வேண்டாம்” என்று ஆராதனாவையும் “இப்போ மருத்துவத்துறையின் வளர்ச்சியால் குழந்தை இல்லாத நிறையப் பேருக்கு குழந்தை பிறந்திருக்கு நாமளும் முயற்சி செய்யலாம்” என்று குடும்பத்திலுள்ளவர்களையும் சமாதானப்படுத்தினான். எல்லோரும் ஏற்றுக் கொண்டாலும் ஆரவ்வின் அம்மா மட்டும் சமாதானமாகவேயில்லை.

ஆரவ்வும் அப்படித்தான். எல்லோரையும் சமாதானப்படுத்தினாலும் தனக்கு குழந்தையில்லை என்பது அவனுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது. ஆராதனா வேறு டொக்டரிம் தன் கணவன் சென்றுவிக்கூடாது என்பதற்காக தனக்கு கற்பப்பை மிகவும் பலவீனமாக இருப்பதாகவும், குழந்தை ஒன்று உருவாகினால் தன் உயிருக்கு ஆபத்து என்றும் பொய் சொன்னாள். ஆராதானா மீது இருந்த அன்பினால்டொக்டரை சந்திப்பதையும் தவிர்த்தான் ஆரவ். நாட்கள் மாதங்களாயின, மாதங்கள் வருடங்களாயின. ஆராதனா மீது ஆரவ்வின் பெற்றோர் வெறுப்பைக் காட்டத் தொடங்கினர். ஆரவ்விற்கு மறுமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினரள். “உன்னால் எங்களுக்க ஒரு பேரக்குழந்தையை தரமுடியாது "அவனுக்கு இன்னுமொரு பெண்ணை நாங்கள் திருமணம் செய்து வைக்கப் போறம்... என்ட மகனிடமிருந்து உனக்கு விவாகரத்து வாங்கித்தாறம்” என்று வார்த்தைகளால் ஈட்டியால் குத்துவது போன்று குத்தினாள் ஆரவின் அம்மா. வீட்டுக்கு வரும் சொந்தங்கள் எல்லாம் “இவள எதுக்கு இன்னும் ஆரவுடன் சேர்த்து வைச்சிருக்கிறீங்க" பேசாம துரத்திப்போட்டு இன்னுமொரு கல்யாணம் கட்டி வைக்கலாம்தானே” என்றார்கள். ஆரவின் நண்பர்கள் எல்லாம் “உண்ட பொண்டாட்டி ஒரு பிள்ளை கூட பெத்துக் கொள்ள தகுதி இல்லாதவள் போல” என்று ஆரவ் முன்னாடி ஆராதனாவைக் காயப்படுத்தினார்கள். எல்லாக் கஷ்ரங்களையும் ஆராதனா தான் உயிராக நினைக்கும் கணவனுக்காகக் தாங்கிக் கொண்டாள். இதையெல்லாம் தாண்டி ஆராதனாவிற்கு தலையில் பெரிய இடியே விழுந்தது ஆம் ஆரவ்வின் பெற்றோர் ஆரவ்விற்கு மறுமணம் செய்து வைப்பதற்காக மணப்பெண் தேடிக் கொண்டிருந்தார்கள்.

ஆராதனாவிற்கு தன் கணவனுக்கு மறுமணம் செய்து வைத்தால்கணவனின் பிரச்சினை எல்லோருக்கும் தெரிந்துவிடுமே என்று எண்ணிப் பயந்தாள். திருமணத்ததை நடக்கவிடாது எப்படித் தடுக்கலாம் என்று சிந்திக்கத் தொடங்கினாள். ஆனால் ஆரவ் இத்திருமண ஏற்பாடுகள் பற்றி கருத்திலெடுக்கவில்லை. ஆரவ்வின் எண்ணமெல்லாம் ஆராதனாவை எப்பிடியாவது டொக்ரரிடம் அழைத்துச் சென்று அவளின் பிரச்சினையை சரிசெய்வதுவிட வேண்டும் என்பது மட்டுமே.

ஆராதனாவுக்கு தெரியாமல் அவளது பிரச்சினை தொடர்பாக ஒரு டொக்டரைச் சந்தித்து ஆலோசனை பெறலாம் என்ற முடிவுக்கு வந்தான். ஆராதனா வீட்டில் இல்லாத நேரம் பார்த்து ரிப்போட்டைத் தேடி எடுத்துக் கொண்டு ஒரு டொக்டரிடம் சொன்றான் ஆரவ். டொக்ரரிடம் ரிப்போட்டைக் காட்டி “என் மனைவிக்கு என்ன பிரச்சினை” என்று கேட்டான். டொக்டர் ரிப்போட்டை பார்த்து விட்டு ஆரவ்வை ஏற்ற இறக்கமாக பார்த்தார். ஆரவ் “என்ன டொக்டர்” என்றதும் “யார் சொன்னது உங்கள் மனைவிக்கு பிரச்சினை என்று "பிரச்சினை உங்களுக்குத்தானே” என்றதும் அதிர்ந்து போனான் ஆரவ். செய்வதறியாது எதுவும் புரியாதவனாய் “என்ன சொல்றீங்க டொக்ரர்” என்றான் பதட்டத்துடன். “உங்கள் மனைவிக்கு நூறு வீதம் குழந்தை பெறுவதற்கான தகுதியிருக்கின்றது. உங்களுக்குத்தான் அத்தகுதி இல்லை" அதைத்தான் இந்த ரிப்போட் சொல்லுது நான் சொல்றதில நம்பிக்கை இல்லாட்டி உங்களை பரிசோதித்த டொக்ரரிடமே கேட்டுப் பாருங்கள் என்று ரிப்போட்டை கொடுத்தார் டொக்ரர். ஆரவ் ரிப்போட்டை வாங்கிக் கொண்டு தங்களைப் பரிசோதித்த டொக்ரரிடம் வந்தான். டொக்ரர் ஆரவ்வை கண்டதும் “வாங்க" நிறைய "நாட்களுக்கு பிறகு” என்றார். “என்ன டொக்டர் என்னை அடையாளம் தெரியுதா?" என்றான் பதட்டத்துடன்.“ஆமாம் வாங்க" என்ன விசயம்” என்றார் நிதானமாக.ரிப்போட்டை நீட்டி நடந்த விடயங்களை மறைக்காமல் கூறுங்கள் என்றதும் டொக்டரால் ஒன்றும் செய்ய முடியவில்லை எல்லா உண்மைகளையும் மறைக்காமல் கூறினார். ஆரவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை உலகமே இடிந்து அவன் தலையில் விழுந்தது போன்று இருந்தது.தன் மனைவி தனக்காக எவ்வளவு கஸ்ரத்தை சுமந்து கொண்டிருக்கிறாள் என்றெண்ணித் துடித்தான். தன் மனைவியை உடனே பார்க்க வேண்டும் என்று அவன் மனம் படபடத்தது.

காரை வேகமாக ஓட்டிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தான.; “ஆராதனா", ஆராதனா” என்று அழுது கொண்டே வந்தான் ஆரவ். எல்லோரும் ஆரவ்வின் சத்தத்தில் வெளியே வந்தனர். ஆராதனாவைக் கண்டதும் ஓடிவந்து கட்டிப்பிடித்து அழுதான். ஆராதனாவிற்கு ஓன்றும் புரியவில்லை.

எல்லோரும் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.“எவ்வளவு பெரிய விசயத்தை மறச்சிட்டியே" எப்படி உன்னால எல்லாக் கஸ்ரத்தையும் தாங்கிட்டு இருக்க முடிஞ்சது" உன்னை எல்லோரும் எப்படியெல்லாம் பேசியிருக்காங்க" வேதனைப் படுத்தியிருக்காங்க" குத்திக் காட்டியிருக்காங்க அப்ப கூட நீ உண்மையைச் சொல்லியிருக்கலாமே”என்று கதறினான்.ஒன்றும் புரியாதவளாய் “என்ன ஆரவ்” என்றாள் ஆராதனா. “எனக்கு எல்லாம் தெரியும்" டொக்ரிடம் ரிப்போட்டை காட்டி எல்லா உண்மையையும் தெரிஞ்சிட்டுத்தான் வாறன்” என்றதும் அதிர்ந்து போனாள் ஆராதனா.

எல்லோர் முன்னிலையிலும் நடந்த உன்மையை கூறினான் ஆரவ். “இவள் என் மனைவி இல்லை கடவுள் தந்த வரம்" எனக்காக எல்லாக் கஸ்ரத்தையும் தாங்கியவள்" எனக்கு குழந்தை வேண்டாம்" இவள்தான் என் குழந்தை" எங்களுக்கு யாரும் வேண்டாம்” என்று தன் மனைவியை அழைத்து கொண்டு வெளியேறினான் ஆரவ். தன் கணவனை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டு சென்றாள் ஆராதனா.

Comments