தவளை பாய்ச்சலுக்கு தயாராகும் காங்கிரசும் தி.மு.கவும்! | தினகரன் வாரமஞ்சரி

தவளை பாய்ச்சலுக்கு தயாராகும் காங்கிரசும் தி.மு.கவும்!

காஷ்மீர் தாக்குதலை தேர்தல் வியூகத்துக்கு பா.ஜ.க. பயன்படுத்தும்!

இந்திய தேசம் தற்போது நாடளாவிய பொதுத் தேர்தலுக்கு தயராகி வருகிறது. எதிர்வரும் மே மாதம் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவிருப்பதால் நாடெங்கிலுமுள்ள கட்சிகள் தத்தமது தேர்தல் வியூகங்களையும் கூட்டணிகளையும் வகுக்க ஆரம்பித்துள்ளன. காங்கிரஸ் ஒரு மெகா கூட்டணியை அமைக்க பிரயத்தனம் செய்துவரும் அதேசமயம், கூட்டணிக்குள் வரக்கூடிய கட்சித் தலைவர்கள் ராகுல் காந்தியே பிரதமர் வேட்பாளராக விளங்குவார் என்பதை ஏற்க தயங்குகிறார்கள். ஏனெனில் கடந்த ஐந்து ஆண்டுகளாக மதவாத இந்துத்துவ பின்னணியுடன் வாமன அவதாரம் எடுத்திருக்கும் நரேந்திரமோடி என்ற பிம்பத்துக்கு எதிராக சவால் விட்டு அதை அடித்து நொறுக்கி தனது பிம்பத்தை தேசிய அரசியலில் விஸ்வரூமெடுக்கச் செய்யும் திறன் கொண்டவராக ராகுல் இல்லை என்ற கருத்து மம்தா பெனர்ஜி, ஆந்திராவின் சந்திரபாபு நாயுடு ஆகியோரிடம் உண்டு. உத்தர பிரதேசத்தில் எதிரும் புதிருமான அகிலேஷ் யாதவும் மாயாவதியும் பா.ஜ.கவை வீழ்த்துவதற்காக இணைந்துள்ள சந்தர்ப்பத்தில் தங்களுடன் காங்கிரசை இணைத்துக்கொள்ள விரும்பவில்லை என்பது இதற்கு ஒரு நல்ல உதாரணமாகக் கொள்ளப்பட முடியும். பின்னர் அகிலேஷ் யாதவ் விடுத்திருந்த செய்தியில், பிரியங்கா காந்தி தீவிர அரசியலுக்கு வருவாரானால் அவரை நம்பி தமது கூட்டணியுடன் காங்கிரசை இணைத்துக்கொள்ளத் தாம் தயார் என்று தெரிவித்திருந்தது ராகுல் மீதான சம்மட்டி அடியாகவே கருதப்பட வேண்டும்.

ராகுல் தான் காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர் என்ற ரீதியில் மோடியுடனான மோதல்களில் வெற்றியீட்டத் தவறினார். காங்கிரஸ் தலைவர் என்ற பதவியை அடைந்த பின்னரும், சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐந்து மாநிலங்களுக்கான மாநிலத் தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றிபெற்ற போதிலும் உத்தர பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் கடுகளவு வித்தியாசத்தில்தான் காங்கிரசின் வெற்றி அமைந்தது. இது, வட மாநிலங்களில் பாஜ.கவுக்கு பின்னடைவு ஏற்பட்டிருக்கிறதே தவிர அது இன்னும் மக்கள் செல்வாக்குடன் தான் உள்ளது என்பதையே வெளிக்காட்டியிருக்கிறது.

கடந்த 2014 பாராளுமன்றத் தேர்தலை எடுத்துக்கொண்டால் மொத்த பாராளுமன்ற ஆசனங்களான 545 தொகுதிகளில் பா.ஜ.க. 282 தொகுதிகளில் வெற்றிபெற்று அறுதிப்பெரும்பான்மையைப் பெற்றுக்கொண்டது. 275 ஆசனங்கள் கிடைத்தாலே ஆட்சி அமைத்துவிட முடியும். அதனால்தான் மோடி அலை என இவ்வெற்றியை வர்ணித்தார்கள்.

இத் தேர்தலில் காங்கிரஸ் நாடு முழுவதும் வெறும் 44 ஆசனங்களையே பெற்றது மூன்றாவதாக ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க 37 தொகுதிகளைக் கைப்பற்றியது. இத்தேர்தலில் மோடியும் லேடியும் மிகச் சிறப்பாகக் காய்களை நகர்த்தியிருந்தார்கள். இந்தியாவில் 175 மில்லியன் இஸ்லாமிய வாக்காளர்கள் இருந்தும் கூட, இஸ்லாமிய வெறுப்பரசியல் பேசிய பா.ஜ.க அசுர வெற்றிபெற்றது. ராகுல் காந்திக்கு இது பலத்த அடியாகவே அமைந்தது. எனவே கொழுந்துவிட்டு எரிந்த மோடி அரசியல் தற்போது தணலாகக் கனன்று கொண்டிருக்கிறதே தவிர அணைந்துவிடவில்லை. அதை ஊதி எரியச்செய்ய வேண்டியதே பா.ஜ.கவின் வேலை. அதை எப்படிச் செய்வது என்பது அவர்களுக்குத் தெரியும். இலங்​கையில் தமிழர்கள் மீதான சிங்கள மக்களின் வரலாற்று ரீதியான சந்தேகத்தை மட்டுமே மூலதனமாகக்கொண்டு ஐ.தே.கவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் மாறி மாறி நாட்டை ஆண்டு வந்திருப்பதைப் போலத்தான் இந்தியாவிலும் மதத்தை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துவதில் பா.ஜ.க வெற்றிபெற்றிருக்கிறது. இந்தியா சுதந்திரம்பெற்ற பின்னர் மத சார்பற்ற, மத சகிப்புத்தன்மை கொண்ட அரசியலே அத்தேசம் முழுவதும் கைக்கொள்ளப்பட்டு வந்தது. மதத்தை அடிப்படையாக வைத்து முதலில் அரசியல் செய்ய வந்தது பால்தாக்கரே. அவர் மகாராஷ்டிராவில் ஆரம்பித்து வைத்த சிவசேனா மத அரசியலில் ஈடுபட்டது. எனினும் மகாராஷ்டிராவை விட்டு அக்கட்சி வெளியே வரவில்லை. மத வாதத்தையும் இஸ்லாமிய வெறுப்பரசியலோடு வன்முறையை ஒரு ஆயுதமாகக் கொண்டு படிப்படியாக வளர்ந்த கட்சி என்றால் அது பாரதிய ஜனதா கட்சி மட்டுமே. ஜனதா கட்சி சிதறிய பின்னர் அதில் இருந்து வளர்ந்து தேசிய கட்சியாக பா.ஜ.க மலர்வதற்கு மும்பை கலவரம், கோத்ரா ரயில் தாக்குதல், குஜாரத் கலவரம் ஆகிய மோசமான வன்முறைச் சம்பவங்களும் வட இந்தியாவில் விரவிக் கிடக்கும் இந்து – முஸ்லிம் வன்மமுமே உரமாக இருந்தன என்பது வருத்தத்துக்குரிய ஒரு இரத்த வரலாறு.

கடந்த 14 ம் திகதி காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் இந்திய இராணுவத்தினர் தொடரணியாக வந்துகொண்டிருந்த போது இராணுவ பஸ் மீது தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 44 இந்திய இராணுவத்தினர் பலியான சம்பவம் இந்தியாவெங்கும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து ஸ்ரீநகரில் வாகனங்களும் கடைகளும் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளன. இது பாகிஸ்தானின் ஆதரவுடன்தான் நடந்திருக்க வேண்டும் என்று கருதும் இந்திய அரசு, பாகிஸ்தானுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. முன்னர் இவ்வாறான ஒரு சம்பவம் நிகழ்ந்தபோது, காஷ்மீர் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் இருக்கக்கூடிய தீவிரவாதிகளின் முகாம்கள் மீது இந்தியப் படையினர் மின்னல் தாக்குதல்களை மேற்கொண்டனர். இந்தத் துல்லியமான தாக்குதல் திட்டம் மோடியவர்களின் தொப்பியில் மயிலிறகாக அமைந்தது.

இப்போது இச்சம்பவத்தை அரசியல் ரீதியாகப் பார்ப்போம்.

மே மாதம் இந்தியாவில் நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் நிச்சயம் இந்த ‘இஸ்லாமிய பயங்கரவாதி’களின் ‘இந்துக்கள்’ மீதான தாக்குதலை பா.ஜ.க தன் தேர்தல் பரப்புரைக்கு ‘இந்து தேசிய’மாகப் பயன்படுத்திக்கொள்ளத்தான் போகிறது. பாகிஸ்தானில் நிலை கொண்டிருக்கும் காஷ்மீர் பிரிவினை தீவிரவாதிகளின் நிலைகள் மீது மற்றொரு ‘துல்லியமான’ தாக்குதலை மோடி மேற்கொள்வாரானால் அவரது இந்துத்துவ தொப்பியில் அது மற்றொரு சிவப்பு இறகாக அமையும என்பது நிச்சயம். அரசியல் ரீதியாகப் பார்த்தோமானால் காங்கிரசுக்கும் ராகுல் காந்தியின் தலைமைக்கும் இச் சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகவே அமைந்திருக்கும். ஏனெனில் இது வட இந்தியாவின் இந்து – இந்தி வலயத்தில் பா.ஜ.க.வுக்கு ஆதரவான அலையையும் மதச் சார்பற்ற காங்கிரசுக்கு பின்னடைவையும் ஏற்படுத்தலாம்.

ஏனெனில் 545 தொகுதிகளில் வெறும் 44 தொகுதிகளை மட்டுமே 2014ம் ஆண்டு கைப்பற்றியிருந்த காங்கிரசுக்கு 275 ஆசனங்களைக் கைப்பற்றி ஆட்சிக்கு வருவதற்கு ஒரு பெரும் தவளைப் பாய்ச்சலை நடத்த வேண்டியிருக்கும்.

 

நிச்சயம் இது ஒரு கடினமான பணியாகவே இருக்கப் போகிறது என்பதால்தான் பிரியங்கா காந்தியை களமிறக்கியிருக்கிறது காங்கிரஸ் என்பது புரிந்துகொள்ளப்பட வேண்டும்.

இது இப்படி இருக்க, லோக் சபாவில் 37 ஆசனங்களைக் கைப்பற்றி அசுர பலத்துடன் இருக்கும் அ.தி.மு.கவை தலைகுப்புறக் கவிழ்த்து மொத்த பாராளுமன்ற ஆசனங்களான 40 தொகுதிகளிலும் (39+1 பாண்டிச்சேரி) வெற்றிபெற முடியாமல் போனலும் தி.மு.க. கூட்டணி 25 இடங்களிலாவது வெற்றிபெற்று காட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனினும் வட மாநிலங்களில் காங்கிரஸ் எதிர்கொண்டிருப்பதைப் போன்ற பிரச்சினைகள் தி.மு.கவுக்கு இல்லை. ஆனால் பாராளுமன்றத் தேர்தல், வரவிருக்கும் மாநில தேர்தலுக்கு முன்னோட்டமாக இருக்கும் என்பது நிச்சயம். தற்போது பாராளுமன்றத்தில் தி.மு.க.வுக்கு ஒரு இடம்கூட இல்லை. எனவே 25 இடங்களைக் கைப்பற்றினால்தான் மாநிலத் தேர்தலிலும் இந்தக் கட்சியே வெற்றிபெறும் என்ற நம்பிக்கை உணர்வு தமிழ் வாக்காளர்களிடம் உருவாகும். இந்த எண்ணிக்கையை எட்டிப் பிடிப்பதும், தள்ளாடிக்கொண்டிருக்கும் அ.தி.மு.க அரசின் செல்வாக்கைக் குறைப்பதும் தி.மு.க.வுக்கு பெரிய சவாலான விஷயம் இல்லைதான்.

ஏற்கனவே தி.மு.க.வில் இணைந்திருந்த காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஷ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக் என்பன எதிர்வரும் லோக்சபா தேர்தலில் இணைந்து போட்டியிடுவது என்றும் தி.மு.க. 25 இடங்களிலும் மிகுதி 15 இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு பிரி்த்து கொடுபபது என்றும் முடிவாகி இருப்பதாக அறிய முடிகிறது.

Comments