இந்தியாவை கிடுகிடுக்க வைத்திருக்கும் காஷ்மீர் தாக்குதல் | தினகரன் வாரமஞ்சரி

இந்தியாவை கிடுகிடுக்க வைத்திருக்கும் காஷ்மீர் தாக்குதல்

காஷ்மீர் மாநிலம் ஜம்மு-வில் இருந்து 78 வாகனங்களில் சுமார் 2,500க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எஃப் வீரர்கள், கடந்த வியாழனன்று (14) ஸ்ரீநகர் நோக்கி சென்றுகொண்டிருந்தனர். அவர்கள், புல்வாமா மாவட்டம் அவாந்திபோரா என்ற பகுதிக்கு வந்தபோது, 350 கிலோ வெடிபொருகளை ஏற்றிக்கொண்டு எதிரே வந்த கார், சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் வந்த பேருந்தின்மீது மோதியது. இந்தத் தாக்குதலில், இதுவரை 44 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் தொடர்பாக சி.ஆர்.பி.எஃப் செய்தித் தொடர்பாளர் ஆஷிஸ் குமார் ஜா கூறும்போது, கடந்த வியாழனன்று அதிகாலை 3:30 மணிக்கு ஜம்மு-வில் உள்ள சன்னை ராம ட்ரான்சிஸ்ட் கேம்ப்பில் (Channi Rama transit camp) இருந்து 78 பேருந்துகளில், சுமார் 2,500 சிப்பாய்கள், ஸ்ரீநகரில் உள்ள பக்ஷி ஸ்டேடியம் ட்ரான்சிஸ்ட் கேம்புக்கு (Bakshi Stadium transit camp) செல்வதற்காகப் புறப்பட்டுள்ளனர். பேருந்தில் பயணித்த வீரர்களில் பலர் தங்களின் விடுப்பை முடித்துக்கொண்டு மீண்டும் பணியில் இணைய வந்தவர்கள். மொத்தம் 350 கி.மீ தூரம் கொண்ட இந்தப் பயணத்தை அவர்கள் மேற்கொண்டிருந்தனர்.

பக்‌ஷி கேம்புக்கு செல்ல 30 கிலோமீட்டர் இருக்கும் நிலையில்தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஜெய்ஷ்-இ -முகமது என்ற அமைப்பைச் சேர்ந்த ஆதில் அகமது தார் என்ற நபர் விளையாட்டுப் பொருட்களுக்கு மத்தியில் 350 கிலோ எடையுள்ள வெடிகுண்டுகளை மறைத்துவைத்து, சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் வந்த பேருந்தின்மீது மோதியுள்ளார். இந்தத் தாக்குதலில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 20 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வீரர்கள் வந்த பேருந்து, மிக வேகமாகத் தங்களது இலக்கை அடைந்துகொண்டிருந்தது. வீரர்கள் பயணிக்க அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் முறையாகச் செய்யப்பட்டது. சுமார் ஒரு வார காலமாக ஜம்மு- ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு அனைத்து நடமாட்டங்களும் கண்காணிக்கப்பட்ட பின்னரே, வீரர்கள் பயணத்தைத் தொடங்கினர். அந்த நெடுஞ்சாலையில் இப்படி ஒரு தாக்குதல் நடக்க வாய்ப்பே கிடையாது. இந்தப் பகுதியில் நிறைய சோதனைச் சாவடிகள் உள்ளன. அவை அனைத்தையும் தாண்டி நூற்றுக்கணக்கான கிலோ வெடி பொருட்களைக் கொண்டுவர முடியாது. பாதுகாப்புப் பணிகளில் ஏதோ தவறு நடந்துள்ளது. இல்லையேல், இதுபோன்ற சம்பவம் நடந்திருக்காது. இது தொடர்பாக நிச்சயம் விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

தாக்குதல் நடந்த பகுதிகளில், இன்னும் அதிக வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் தெற்கு காஷ்மீர் பகுதியில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. மேலும், சில பகுதிகளில் இணைய வேகம் 2ஜி அளவாகக் குறைக்கப்பட்டுள்ளது. தாக்குதல் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், உச்சக்கட்ட அவசரச் செய்தி எனக்குறிப்பிட்டு, IED வெடிகுண்டு தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக காஷ்மீர் காவல்துறை இயக்குநர் சார்பில் கடந்த 8ஆம் திகதியே எச்சரிக்கை அனுப்பப்பட்டும், மிக மோசமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யார் இந்த ஆதில் அகமது தார்?-

ஜம்மு-காஷ்மீரில் கடந்த வியாழனன்று நடந்த கோரத்தாக்குதலில் 44 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு காரணமான ஆதில் அகமது தாரின் பின்னணி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்படியோரு தாக்குதல் நடக்க வாய்ப்பே இல்லை. பெரும்பாலான சுங்கச் சாவடிகள், பலத்த பாதுகாப்புகளைத் தாண்டி தீவிரவாதி வெடிபொருள் நிரம்பிய வாகனத்தை கொண்டு செல்ல முடியாது. எங்கோ தவறு நடந்துள்ளது“ என அடித்துச் சொல்கிறார் சி.ஆர்.பி.எஃப் செய்தித் தொடர்பாளர் ஆஷிஸ் குமார் ஜா. உலக நாடுகளைச்சேரந்த தலைவர்கள் பலர் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். 44 சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் உயிர் பறிபோயுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த வீரரும் ஒருவர். தூத்துக்குடி மாவட்டம் சபலபேரியைச் சேர்ந்த சுப்ரமணியன் உயிரிழப்பு குறித்து அவர்களது வீட்டுக்கு தெரியப்படுத்தப்படும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இருபது ஆண்டுகளுக்குப் பின் இப்படியொரு கோரத் தாக்குதல் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் தாக்குதலை நடத்திய ஆதில் அகமது தார், கடந்த ஆண்டுதான் ஜெய்ஷ் அமைப்பில் இணைந்துள்ளான். தாக்குதல் நடந்த பகுதியிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கண்டிபா என்ற இடத்தைச் சேர்ந்தவன். ஆதில் 12-ம் வகுப்பு வரை படித்துவிட்டு பின்னர், அருகிலிருந்த ஆலை ஒன்றில் வேலைபார்த்து வந்துள்ளான். இவரது தந்தை ரியாஸ் அப்பகுதியில் சிறிய கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். உறவினர் ஒருவர் மூலம் ஆதிலுக்கு பயங்கரவாத அமைப்பு மூலம் தொடர்பு ஏற்பட்டுள்ளது. பின் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மூலம் மூளைச் சலவை செய்யப்பட்டு, ஓராண்டுக்கு முன் ஜெய்ஷ் அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளான். இதைப் பயன்படுத்திக்கொண்ட அந்த அமைப்பு, ஆதிலை தற்கொலைப்படை தாக்குதலுக்கு தயார் படுத்தியுள்ளது. கடந்த ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய தற்கொலைப்படை தாக்குதலை அரங்கேற்ற வேண்டும் என்று திட்டம் திட்டப்பட்டது. இதற்கான சரியான நேரத்தை எதிர்பார்த்திருந்தவர்கள், ஸ்ரீநகர் - ஜம்மு நெடுஞ்சாலையில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் வாகனத்தில் மோத திட்டமிட்டனர்.

இளைஞர்கள் பலரை மூளைச்சலவை செய்து, அவர்களை தற்கொலைபடைத் தாக்குதலுக்கு பல்வேறு ஆண்டுகளாக ஜெய்ஷ் அமைப்பு தயார் செய்து வருகிறது. நான் ஓராண்டுக்கு முன் ஜெய்ஷா இயக்கத்தில்இணைந்தேன். நான் எதற்காக சேர்ந்தேனோ அதற்கான சரியான நேரத்தை எதிர்நோக்கி காத்திருந்தேன். இந்த வீடியோ உங்களை வந்தடையும் முன் நான் சொர்கத்தில் இருப்பேன். காஷ்மீர் மக்களுக்கு என்னுடைய கடைசி செய்தி!“என்று அவன் பேசிய வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டது.

அந்த வீடியோவில் ஆதில் ஆயுதங்களுடன் நின்றுகொண்டிருக்கிறான். இது தொடர்பான விசாரணையை தேசிய புலனாய்வு முகமை, அப்பகுதிக்குச் சென்று தொடங்க உள்ளது.

புல்வாமா தாக்குதல்: காஷ்மீர் தற்கொலை குண்டு தாக்குதல் குறித்து முன் கூட்டியே எச்சரித்த உளவுத்துறை

புல்வாமாவில் நடந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள ஜெய்ஷ் -ஈ-மொஹமத் அமைப்பு, பாதுகாப்பு படைகள் மீது, மிகப்பெரிய அளவில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிருப்பதாக ஏற்கனவே, பிப்ரவரி 12ம் திகதி நாடு முழுதும் உள்ள உளவு அமைப்புகளுக்கு தகவல் தெரிவித்ததாக மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த எச்சரிக்கை குறித்து காவல்துறை தலைவர் தில்பாக் சிங், டெல்லியில் உள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகரிடம் தெரிவித்ததாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதே போன்றதொரு தாக்குதலை ஆப்கானிஸ்தானில் சமீபத்தில் நடத்திய காணொளியை ஜெய்ஷ்-ஈ-மொஹமத் அமைப்பு வெளியிட்டு, பாதுகாப்பு படையினரை பழிவாங்க இத்தகைய தாக்குதல் காஷ்மீரிலும் விரைவில் நடத்தப்படும் என்று கூறியிருந்ததே, மாநில உளவுத்துறை விடுத்த எச்சரிக்கைக்கு காரணம். புதுடெல்லியில் உள்ள அதிகாரிகளிடம் முன்னரே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்குமானால், பிப்ரவரி 14 அன்று நடந்த இந்த தாக்குதல் நிச்சயமாக பாதுகாப்பு குறைபாடுதான் என்பது தெளிவு என்று பெயர் வெளியிட விரும்பாத பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

1998இல் நடந்த கார்கில் போருக்கு பிறகு லஷ்கர்-ஈ-தய்பா மற்றும் ஜெய்ஷ்-ஈ-மொஹமத் ஆகிய அமைப்புகள் பல தற்கொலை தாக்குதல்களை நடத்தியுள்ளன. இத்தகைய தற்கொலை தாக்குதலில் ஈடுபடும் தீவிரவாதிகள் பாகிஸ்தான் நாட்டவர்களாவே இருக்கின்றனர்.

இப்போதுதான், புல்வாமாவைச் சேர்ந்த உள்ளூர்வாசியான வகாஸ் கமாண்டோ என்று அழைக்கப்படும் ஆதில் என்பவர் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார். இந்தத் தாக்குதலின் கொடூரம் எந்த அளவுக்கு என்றால், தாக்கப்பட்ட பேருந்து இப்போது இரும்பு மற்றும் ரப்பர் துண்டுகளாக மட்டுமே உள்ளது.

இதில் 44 ரிசர்வ் போலீஸ் படையினர் இருந்தனர். ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு, எதிர்வரும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களுக்கு காவல் பணியில் ஈடுபட வீரர்களை ஏற்றிக்கொண்டு அந்த வாகனங்கள் சென்றதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். தேர்தலுக்கு நாடு தயாராகி வரும் சூழலில், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெள்ளியன்று காஷ்மீர் சென்று பாதுகாப்பு குறித்து ஆராய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஸ்ரீநகர் - லேத்ராபோ நெடுஞ்சாலையில் பல தாக்குதல்களை நடந்திருந்தாலும், இந்த அளவுக்குப் பெரிய தாக்குதல் பல ஆண்டுகளில் இதுவே முதல்முறை. காஷ்மீரில் நடைபெற்று வரும் வன்முறை மற்றும் தாக்குதல் சம்பவங்களுக்கு தான் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருவதாக பாகிஸ்தான் கருத்துத் தெரிவித்துள்ளது. ”இந்த தாக்குதல் சம்பவம் குறித்து உரிய விசாரணைகள் நடப்பதற்கு முன்னதாகவே, இந்திய அரசாங்கமும், ஊடகங்களும் பாகிஸ்தானை குற்றஞ்சாட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று அதன் அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.

உலக வர்த்தக நிறுவனத்தின் சரத்துகளின்படி, 1996ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு வழங்கியிருந்த “மிகவும் நெருக்கமான நாடுகள்“ எனும் அந்தஸ்தை இந்தியா ரத்து செய்துள்ளது.

இதன்மூலம் பாகிஸ்தானுடனான வர்த்தகத்தில் அந்நாட்டுக்கு இந்தியா குறைவான வரிகளை விதித்து வந்தது. இதுவரை பாகிஸ்தான் இந்தியாவுக்கு இந்த அந்தஸ்தை வழங்கவில்லை.

Comments