தோட்டத் தொழிலாளர்களின் குறை தீர்க்கும் ஜனாதிபதியின் அணுகுமுறை | தினகரன் வாரமஞ்சரி

தோட்டத் தொழிலாளர்களின் குறை தீர்க்கும் ஜனாதிபதியின் அணுகுமுறை

இலங்கையின் ஏற்றுமதி பொருட்களில் நாட்டிற்கு பெருமையும் முதல்தர அந்நிய செலாவணியையும் பெற்றுத்தரும் ஏற்றுமதி பொருள் இலங்கை தேயிலையே என இலங்கை தேயிலை சபை கூறுகின்றது. பல்வேறு காலங்களில் பல்வேறு ஏற்றுமதி பொருட்களை அறிமுகப்படுத்த எமது நாடு முயன்றுவந்த போதிலும் வெள்ளையர்களால் எமது நாட்டுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட இந்திய வம்சாவளியினரைக் கொண்டு உற்பத்தி செய்த தேயிலையே அன்றும் இன்றும் எமது நாட்டின் முதன்மை வருமானமாக இருந்து வருகின்றது.

பிற்காலத்தில் 90களில் ஆடைத் தயாரிப்புத் துறை அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் ஒரு துறையாக அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் அது நூற்றுக்கு நூறு இலங்கையின் உள்நாட்டு தயாரிப்பு என்பதை விட பெறுமதி சேர்க்கப்பட்ட தயாரிப்பாகவே இருந்து வருவதனால் எமது சுயமான ஏற்றுமதிப் பொருள் என்ற வகையில் தேயிலையே முதலிடத்தில் இருந்து வருகின்றது. ஆயினும் தேயிலை உற்பத்தியின் முதுகெலும்பாக இருந்துவரும் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையானது எந்தவித முன்னேற்றமும் காணாத, நாளுக்கு நாள் பின்னடைவைக் காணுகின்ற ஒன்றாகவே இருந்து வருகின்றது. அத்தோடு தமது உழைப்பிற்கும் வாழ்க்கைச் செலவிற்கும் ஏற்ற ஊதியத்தைப் பெற்றுத் தருமாறு போராட வேண்டிய துர்ப்பாக்கிய நிலையே அம்மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது.

கடந்த பல மாதங்களாக பெருந்தோட்டத் தொழிலாளர்களினால் முன்னெடுக்கப்பட்டுவரும் சம்பள உயர்வு போராட்டத்திற்கு இதுவரை நியாயமான தீர்வு கிடைக்கவில்லை.

அவர்களின் உரிமைக்காக போராடுவதாகக் கூறும் தொழிற்சங்கங்களுக்கோ அரசியல்வாதிகளுக்கோ அவர்களின் அக்கோரிக்கைகளுக்கு இதுவரை நியாயத்தை பெற்றுக்கொடுக்க முடியாதிருக்கின்றது.

இதனால் இத்தொழிலாளர்களுக்கான நியாயமான தீர்வினை பெற்றுக் கொடுக்க வேண்டியதன் தார்மீகப் பொறுப்பு தமக்கும் இருக்கின்றது என்பதை உணர்ந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புக்கான கோரிக்கை நியாயமானது என ஏற்றிருப்பதுடன் அத்துறை சார்ந்த முக்கியஸ்தர்களுடன் கலந்தாலோசித்து தொழிலாளர்களுக்கு நன்மை கிடைக்கச் செய்கின்ற அதேவேளை, தேயிலை உற்பத்தி துறையினையும் மேம்படுத்தக்கூடிய ஒரு செயற்திட்டத்தினை உருவாக்குவதற்கான வேலைகளை கடந்த வாரம் ஆரம்பித்து வைத்தார்.

சில மாதங்களுக்கு முன்னர் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக் கோரிக்கைக்கு ஆதரவாக கொழும்பு காலிமுகத்திடலில் ஆதரவு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்த இளைஞர் குழுப் பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் முன்வைத்த உருக்கமான வேண்டுகோளையும் தேயிலை உற்பத்தி துறை சார்ந்த ஊழியர்கள், ஏற்றுமதியாளர்கள், முதலாளிமார் மற்றும் தேயிலை சபை ஆகியனவற்றுடன் தொழில் ஆணையாளர் அடங்கலாக ஜனாதிபதி ஆளணி பிரதானியின் தலைமையில் தொடர்ச்சியாக மூன்று வாரங்களுக்கு வாராந்த கலந்துரையாடல்களை நடத்தி நான்காவது அமர்வினை ஒரு மாதத்திற்குள் ஜனாதிபதி தலைமையில் நடத்துவதற்கும் அதன்போது அக்குழுவினால் முன்வைக்கப்படும் தீர்வு யோசனைகளை செயற்படுத்துவதற்கான முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இந்த அமர்வில் நேரடியாக பெருந்தோட்டத் தொழில் விவகாரத்தில் சம்பந்தப்படாத போதிலும் மலையகத்தைப் பிறப்பிடமாகவும் தோட்டத் தொழிலாளர் வாழ்க்கையை அறிந்த அவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் முத்தையா முரளிதரனும் ஜனாதிபதி அழைப்பின் பேரில் இக் கலந்துரையாடலில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும். அதன்போது தோட்டத் தொழிலாளர்களுக்கு கிடைப்பது மிகக் குறைந்த ஊதியமே என்பதை தாமும் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்த முத்தையா முரளிதரன் தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கை மிக நியாயமானது எனவும் பெருந்தோட்ட விவகாரம் முழு நாட்டின் மீதும் நாட்டின் எதிர்காலம் மூலம் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதால் அதனை சிறந்த முறையில் தீர்த்து வைக்க வேண்டும் என்றும் கூறினார்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு நியாயமான ஊதியத்தையும் சிறந்த வாழ்க்கையையும் பெற்றுக் கொடுப்பதன் மூலம் அம்மக்கள் மனதளவில் பாதிக்கப்படுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் தேயிலை ஏற்றுமதியின் போது அதன் வருமானம் தமது நாட்டுக்கே கிடைப்பதாகவும் ஆயினும் பெறுமதி சேர்க்கப்பட்ட ஏற்றுமதியின் போது சுமார் 35 சதவீதமே நமது நாட்டுக்கு கிடைப்பதாகவும் ஆதலால் நம் நாட்டின் முதன்மை ஏற்றுமதி பொருள் என்ற வகையில் தேயிலை ஏற்றுமதியையும் அத்துறை சார்ந்தோரையும் பாதுகாத்துக் கொள்வது கட்டாயத் தேவையாக இருப்பதாகவும் எடுத்துக்கூறிய முரளிதரன், 1999 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கான தனது முதலாவது கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட போது இலங்கையை அந்நாட்டவர்கள் சிலோன் டீ உற்பத்தி செய்யும் நாடு என அறிந்திருந்ததாகக் கூறினார்.

தோட்டத் தொழிலாளர்கள் எட்டு மணித்தியாலம் வேலை செய்வதில்லை அதனால் அவர்கள் கோரும் சம்பள அதிகரிப்பை பெற்றுக் கொடுக்கத் தேவையில்லை எனக் கூறுவது நியாயமற்றது எனத் தெரிவித்த முத்தையா முரளிதரன், சுகாதார வசதிகளோ மலசலகூட வசதிகளோ பாடசாலை, வீதி போன்ற அடிப்படை வசதிகளோ அற்ற வறுமை நிலையில் வாழும் அம்மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு இந்த நாட்டு மக்கள் என்ற வகையில் அனைவரும் தம்மாலான பங்களிப்பினை செய்ய முயற்சிக்க வேண்டும் எனக் கூறினார்.

அரசாங்கத்தின் சார்பாக தேயிலை ஏற்றுமதியின் மீது அறவிடப்படும் பெருமளவு வரியில் ஒரு பகுதியை அரசாங்கம் குறைக்கும் அதேவேளை ஏற்றுமதியாளர்களும் தத்தமது சாதகமான பங்களிப்பினை பெற்றுக்கொடுத்தால் அதன் மூலம் தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுக்க முடியும் என தெரிவித்த முரளிதரன், தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினை என்பது வெறுமனே ஒரு சிறு குழுவினரின் பிரச்சினை அல்ல எனவும் அது இந்த நாட்டின் இரண்டு இலட்சம் குடும்பங்களின் வாழ்க்கை பிரச்சினையாகும் என்பதால் அதன் மீது உண்மையான கவனத்தை செலுத்த வேண்டும் எனவும் இக்கலந்துரையாடலின் போது எடுத்துக் கூறினார்.

இக்கலந்துரையாடலின் போது தேயிலை ஏற்றுமதியாளர்கள் தரப்பிலும் இலங்கை தேயிலை சபை சார்பிலும் பெருந்தோட்ட மற்றும் சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் சங்கங்கள் சார்பிலும் தொழில் ஆணையாளர் சார்பிலும் பல்வேறு காத்திரமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. அதன்போது 1993 ஆம் ஆண்டில் 63 ரூபாவாக இருந்த தோட்ட தொழிலாளர்களின் சம்பளம், 26 ஆண்டுகள் கழிந்த நிலையில் 2019 ஆம் ஆண்டில் கூட ஆயிரம் ரூபாவை எட்டாதிருப்பதிலிருந்து அவர்களின் வருடாந்த சம்பளம் எந்தளவு குறைந்த அளவில் அதிகரிக்கப்படுகின்றது என்பது பற்றியும் இங்கே சுட்டிக் காட்டப்பட்டது.

அத்தோடு பெருந்தோட்ட துறையில் தேயிலை மீள் நடுகை போதுமான அளவில் இடம்பெறாததனாலும் காலநிலை உள்ளிட்ட பல்வேறு பின்புலக் காரணிகளினாலும் தேயிலை உற்பத்தி வெகுவாக வீழ்ச்சி கண்டிருப்பதாகவும் இந்நிலைமை நேரடியாக தேயிலை ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சியடைவதில் செல்வாக்கு செலுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டதுடன், தேயிலை மீள் நடுகைக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் மானியங்களை தேவைக்கேற்றவாறு அதிகரிப்பதன் மூலம் தேயிலை மீள் நடுகை ஊக்குவிக்கப்பட வேண்டும் எனவும் சுட்டிக் காட்டப்பட்டது.

இச்சந்திப்பில் கலந்து கொண்ட அனைத்து தரப்பினரும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினையையும் தேயிலை உற்பத்தி துறையின் மேம்பாட்டையும் கவனத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட தரப்பினரை கலந்துரையாட அழைத்தமையும் இக்கலந்துரையாடலை தொடர்ந்து ஒரு மாதத்திற்குள் அனைவருக்கும் பயன்தரக்கூடிய முன்மொழிவுகளுடன் மீண்டும் ஜனாதிபதி யுடனான சந்திப்புக்கான வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றமையும் வரவேற்கத்தக்க பாராட்டுக்குரிய விடயம் எனவும் இதன்மூலம் தோட்டத் தொழிலாளர்களுக்கு சிறந்ததோர் தீர்வினை பெற்றுக் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினர்.

Comments