ஒழுங்குமுறையான விசாரணைகளின் பின்னரே மறப்பதும் மன்னிப்பதும் சாத்தியம் | தினகரன் வாரமஞ்சரி

ஒழுங்குமுறையான விசாரணைகளின் பின்னரே மறப்பதும் மன்னிப்பதும் சாத்தியம்

தமிழ் மக்களுக்கு சமஜ்டி அடிப்படையிலான தீர்வைப் பெற்றுக்கொடுக்க ஜனநாயக போராட்டம் ஒன்றினை

முன்னெடுக்க தமிழ் மக்களை புதிய கூட்டணியினர்

தயார்ப்படுத்தி வருவதுடன், போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் முன்னாள்

முதலமைச்சர் தலைமையிலான புதிய கூட்டணி ஐக்கிய நாடுகள் சபைக்கு ஆவண

மொன்றை அனுப்பி

வைக்கவுள்ளனர்.

அவ்வறிக்கை தயாராக உள்ளது. மிக விரைவில் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக ஈ.பி.ஆர்.எல்.எப்

கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

சுரேஸ் பிரேமச்சந்திரன்

தினகரன் வாரமஞ்சரிக்கு

வழங்கிய நேர்காணல்

பின்வருமாறு,

 

கேள்வி: போர்க்குற்ற விசாரணைகள் தேவையில்லை. “மறப்போம்” மன்னிப்போம் என்ற பிரதமரின் கருத்து தொடர்பாக உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில்:- வடக்கில் இருந்த ஐக்கிய நாடுகள் சார்ந்த நிறுவனங்கள் வெளியே அனுப்பப்பட்டு மிக மோசமான யுத்தம் நடைபெற்றது. இந்த யுத்தத்தில் ஏறத்தாழ 70 ஆயிரம் பேர் இறந்துள்ளதாக ஐ.நா அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. ஆரம்பத்தில், ஒருவர் கூட சாகவில்லை என இலங்கை அரசாங்கம் கூறியது. ஆனால், பல்வேறுபட்ட விசாரணைகளின் மூலம், 70 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம். மேலதிக விசாரணைகள் செய்ய வேண்டுமென ஐ.நா நியமித்த 3 பேர் கொண்ட ஆணைக்குழு கூறியுள்ளது.

உள்நாட்டு, வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்ட விசாரணை ஆணைக்குழுவாக இருக்க வேண்டும் யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராயப்பட வேண்டும் என்ற விடயங்களை இலங்கை அரசாங்கமும் ஏற்றுக்கொண்டு இரு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆகவே, இந்த தீர்மானங்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன், ஏகமனதாக நிறைவேற்றபட்டது.

இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட அனைவரும் ஆணைக்குழு நியமிப்பதில் இருந்து பின்வாங்கியுள்ளனர். இன்றைக்கு பிரதமர் நாங்கள் “மறப்போம்” “மன்னிப்போம்” என்றால், இதுவரையில் நடந்த யுத்தக் குற்றங்கள் நடந்துள்ளவா? நடக்கவில்லையா என்பது ஆராயப்பட வேண்டும்.

காணாமல் போனோர் பற்றி ஆராயப்பட வேண்டும். இவ்வாறான நேரத்தில், எந்தவித விசாரணைகளும் இன்றி, மறப்போம் மன்னிப்போம் என்பது , ஒட்டுமொத்தமாக, மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள தமிழ் இனத்திற்கு, அவர்கள் நீதியைக் கோரும் நேரத்தில், அந்த நீதியை முற்று முழுதாக மறுதலித்து, மறப்போம் மன்னிப்போம் என்று கூறுவது, தமிழ் மக்கள் நீங்கள் உங்களுக்கான நியாயத்தைக் கேட்க வேண்டாம் என்று கூறுவது தவறானது. விசாரணைகள் முடிந்ததன் பிற்பாடு, சம்பந்தப்பட்டவர்களுக்கு மன்னிப்பு கொடுப்பதா இல்லையா என்பது பற்றி பின்னர் ஆலோசிக்க முடியும். குற்றம் இழைத்தவர்களுக்கு “மரண தண்டனை விதிக்க வேண்டுமென்று தமிழ் மக்கள் கூறவில்லை”. தமிழ் மக்களுக்கு நடந்தவற்றிற்கு ஒரு நீதி விசாரணை வேண்டும்.

இந்த விசாரணைக்குப் பிற்பாடு, சம்பந்தப்பட்டவர்கள் குற்றவாளிகளாக இருந்தால், அவர்களுக்கு மன்னிப்பு கொடுப்பது தொடர்பில் தமிழ் மக்கள் ஆராய முடியும். ஆனால், எவற்றையும் செய்யாமல், நீங்கள் மறந்துவிடுங்கள் என்று சொல்லுவது எந்தவிதத்தில் நியாயமானது.

கடந்த 4 வருடங்களாக ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு பொய் பேசி வந்துள்ளீர்களா? பிரதமர் வெறும் சிங்கள மக்களுக்கான பிரதமரா அல்லது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்குமான பிரதமரா?

அபிவிருத்தி என்று பலதைச் செய்கின்றீர்கள், ஆனால், தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு கடந்த 4 வருடங்களாக என்னத்தைச் செய்துள்ளீர்கள்.

பிரதமர் சொல்வது போன்று மறப்போம் மன்னிப்போம் என்பதெல்லாம், ஒரு ஒழுங்கு முறையான விசாரணைகளின் பின்னர் பார்த்துக்கொள்ள முடியும். விசாரணைகள் இடம்பெற வேண்டும். தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். விசாரணைகளின் பின்னர், தமிழ் மக்களுக்கு உரிமை கிடைக்க வேண்டும். அதன்பின்னர், பொது மன்னிப்பு கொடுக்க தமிழ் மக்கள் தயாராக இருப்பார்கள். எனவே, தமிழ் மக்களுக்கான நீதி விசாரணைகள் எவற்றையும் செய்யாது, மறப்போம் மன்னிப்போம் என்று கூறுவது தமிழ் மக்களை நடுத்தெருவில் விடுவதற்கான நடவடிக்கையே.

 

கேள்வி:- அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு மௌனம் சாதிப்பது தொடர்பில் என்ன கருதுகிறீர்கள்.

பதில்: நீண்டகாலமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மௌனம் சாதித்து வருகின்றது. அரசின் பங்காளிகளாகவும், அரசுடன் இணங்கப்பாட்டுடன் செயற்பட்டு வருகின்றதாகவும் சொல்லி வருகின்றார்கள். புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவதற்கு தாங்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படப் போவதாகவும் கூறியிருக்கின்றார்கள்.

சர்வதேசத்திலும், உள்நாட்டிலும் பேசும் போது, இலங்கை அரசாங்கத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையிலேயே கருத்துக்களை கூறி வருகின்றார்கள். அரசாங்கத்தின் பங்காளிகளாக, அரசாங்கத்தைப் பாதுகாக்க செயற்படக்கூடியவர்கள், பிரதமரின் கருத்தை சரியானதென சொன்னால், ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

 

கேள்வி: தமிழ் தலைமைகள் பிளவுபட்டுள்ள நிலைமையில், எதிர்காலத்தில் ஒன்றுபட்டு தமிழ் மக்களுக்கான நீதியைக் கோருவதற்கான வாய்ப்புக்கள் உண்டா?

பதில்:- தமிழ் மக்களால் தேர்வு செய்யப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுதலைப்புலிகள் காலத்தில் பல கட்சிகள் இணைந்த ஒரு கூட்டாக இருந்தது. தமிழ் தேசிய கூட்டமைப்பு தடம் மாறி, தமிழ் மக்கள் கொடுத்த ஆணையை மீறி அரசாங்கத்திற்கு சாதகமாக இயங்கத் தொடங்கியதால், பல பேர் அதிலிருந்து வெளியேறினார்கள். நாளை, தற்போதுள்ள கட்சிகள் கூட்டாக இருப்பார்களா என்ற கேள்வியும் உள்ளது? தமிழ் மக்களுக்கான உரிமைகளைப் பேசக்கூடிய, நீதியைப் பெற்றுக்கொடுக்கக்கூடிய ஒரு மாற்றுத் தலைமைத்துவம் தேவை. புதிய அணி உருவாகும் நிலைமையும் உருவாகி வருகின்றது.

ஆரம்பத்தில், ஓரிரு கட்சிகளை கொண்ட அணியாக இருந்தாலும் கூட, காலப்போக்கில், பல கட்சிகள் இணைவதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. முதலமைச்சரின் கட்சியில், பொது கொள்கை உடைய எவரும் இணைந்து கொள்ள முடியுமென கூறியிருக்கின்றார். அது மாத்திரமன்றி, இலங்கை தமிழரசு கட்சியில் இருந்த பல முக்கியஸ்ர்கள் முன்னாள் முதலமைச்சருடன் இணைந்துகொள்கின்றார்கள்.

எதிர்காலத்தில், முன்னாள் முதலமைச்சரின் கட்சி பலமான அணியாக மாறுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. பிரதமரின் கருத்துக்கு ஆலவட்டம் பிடிக்க மேடையில் இருக்கின்றார்களே தவிர, அவரின் கருத்துக்கு பதில் கொடுக்க கூடிய வகையில் மேடையில் யாரும் இல்லை.

பிரதமரின் கருத்துக்கு பதிலடி கொடுக்கக்கூடிய வகையில், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இல்லை என்பது வருந்தத்தக்க விடயம். அவ்வாறு பார்க்கும் போது, ஒரு புதிய அணி, புதிய தலைமை என்பது தேவை. மாற்று அணி கட்டாயமாக உருவாகும். அது பலமான அணியாகவும் இருக்கும்.

 

கேள்வி:- முன்னாள் முதலமைச்சர் தலைமையிலான புதிய அரசியல் நகர்வில், ஈ.பி.ஆர்.எல்.எப் இணையக்கூடாது என்று மற்றொரு கட்சி கூறிவருகின்றது. அது தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில்:- ஒரு கூட்டணியில் கட்சி சேர வேண்டுமா இல்லையா என்பதை கட்சி தீர்மானிக்க வேண்டும். ஏனையோர் அதனைத் தீர்மானிக்க முடியாது. நீங்கள் சேர விரும்பினால், சேரலாம். இல்லையா விலகி இருக்கலாம். மற்றவர்களை இணைக்கக் கூடாது என்று சொல்லவதற்கு அவர்களுக்கு எந்தவித உரித்தும் இல்லை. பொது கொள்கையின் அடிப்படையில் இணைந்து செயற்பட யோசிக்கின்றோம். பொதுக்கொள்கையில் இணக்கம் ஏற்பட்டால், அதனை ஏற்றுக்கொண்டால், வரலாம், அல்லாவிடின், விலகி நிற்கலாம். அதைவிடுத்து, அதற்குள் வர கூடியவர்களை, வரக்கூடாது என்று முட்டுக்கட்டை போடுவது சரியானவிடயமல்ல.

கேள்வி:- ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் மாநாட்டின் போது, விடுதலைப் புலிகளினால் கொல்லப்பட்டவர்கள் என்ற விபரங்கள் ஆவணப்படுத்தப்பட்டு புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளமை தொடர்பில் பல விமர்சனங்கள் எழுந்துள்ளதே.?

பதில்: அது, விடுதலைப்புலிகளின் கொலைகள் பற்றிய ஆவணம் அல்ல. ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் வரலாற்றுக் குறிப்பேடு. 2015 ஆம் ஆண்டு வவுனியாவில் வெளியிடப்பட்ட குறிப்பேடு. 2015 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட போது, பல்வேறு தரப்பினரும் அங்கு வந்திருந்தார்கள். அப்போது, யாரும், குறிப்பேடு தொடர்பில் எந்த கருத்துக்களும் வெளியிடப்படவில்லை. அப்போது முன்வைக்கப்படாத விமர்சனங்கள் தற்போது வைக்கப்படுகின்றதென்றால், அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, எங்கள் மாநாடு யாழ்ப்பாணத்தில் மிகச் சிறப்பான முறையில் நடந்ததை சிலபேருக்கு ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. அதனால், புலிக்கெதிராக எழுதுகின்றார்கள். தமக்கு எதிராக எழுதியிருந்தால், அவற்றைப் பற்றி பேசலாம். புலிகளுக்கு எதிராக எழுதியிருக்கென்றால், புலிகளுடன் பேச நாங்கள் தயாராக இருக்கின்றோம். விடுதலைப் புலிகள் மற்றும் புலிகளின் பேராளிகளாக இங்கு இருக்கக்கூடிய யாரும் அதைப் பற்றிப் பேசவில்லை.

முன்னாள் முதலமைச்சருடன் இணைந்து கூட்டணி அமைப்பதை இல்லாமல் செய்ய வேண்டும். ஆகவே, முதலமைச்சருக்கு எதிராகவும், எங்களுக்கு எதிராகவும் பல குற்றச்சாட்டுக்களை சுமத்தி எங்களை எவ்வாறு வெளியேற்றுவது என்பதே அவர்களின் நோக்கம். விடுதலைப்புலிகளுக்கு எதிராக கொண்டு வந்த வரலாற்றுக் குறிப்பேடு அல்ல. 2015 ஆம் ஆண்டு கொண்டு வந்தது. இந்த குற்றச்சாட்டை சுமத்துபவர்கள், யாழ்ப்பாணத்தில் இருந்து வரக்கூடிய ஒரு சில ஊடகத்தினரே. அதேபோன்று, முதலமைச்சரின் கூட்டணிக்குள் இருக்க கூடாது என்று எண்ணுபவர்கள் தான் இந்த விமர்சனத்தை வைக்கின்றார்களே தவிர, வேறு எவரும் இந்த விமர்சனங்களை வைக்கவில்லை.

Comments