இலங்கை-தென்னாபிரிக்க கிரிக்கெட் தொடர் முதல் டெஸ்ட் போட்டி 13ம் திகதி ஆரம்பம் | தினகரன் வாரமஞ்சரி

இலங்கை-தென்னாபிரிக்க கிரிக்கெட் தொடர் முதல் டெஸ்ட் போட்டி 13ம் திகதி ஆரம்பம்

அவுஸ்திரேலிய அணியுடனான மோசமான தோல்வியின் பின் இலங்கை அணி இவ்வாரம் ஆரம்பமாகும் பலம்வாய்ந்த தென்னாபிரிக்க அணிக்கெதிரான இரண்டு டெஸ்ட், 5 ஒருநாள், 3 ரி/20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது. தொடரில் முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் 13ஆம் திகதி டர்பனில் ஆரம்பமாகவுள்ளது.

வழமையான தோல்விகளின் பின் நடைபெறும் அணி மாற்றங்களுடன் அவசர அவசரமாக இத்தொடருக்கு தயாராகின்றது இலங்கை அணி. கடந்த காலங்களில் ஏற்பட்ட தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சிறந்த பயிற்றுவிப்பாளர் என பெயரெடுத்த அப்போதைய பங்களாதேஷின் பயிற்றுவிப்பாளராக இருந்த சந்திக்க ஹத்துருசிங்கவை பங்களாதேஷின் ஒப்பந்தக் காலம் முடியுமுன் இலங்கை அணியின் பிரதான பயிற்றுவிப்பாளராக 3 வருடங்களுக்கு நியமித்தனர்.

இதுவரை காலமும் வெளிநாட்டு பயிற்றுவிப்பாளர்களுக்கு கூட வழங்கப்படாத கூடுதல் சம்பளமும் மேலும் பல கொடுப்பனவுகளும் வழங்கி அவரை நியமித்தது இலங்கை கிரிக்கெட்.

ஹத்துருசிங்க பிரதான பயிற்சியாளராக இலங்கை அணியுடன் இணையும் போது பல நிபந்தனைகளுடனும், இலங்கை அணியின் நிர்வாகத்திலும் கூட சில தலையீடுகளை செய்யும் அதிகாதரத்துடன் (அணித் தேர்வு, உடல் தகுதி) நியமிக்கப்பமட்டார். ஆனால் ஹத்துருசிங்கவினால் கூட இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் எதிர்பார்க்கும் பெறுபேறுகளை கடந்த ஒரு வருடமாக வழங்க முடியாமலுள்ளது.

வழமைபோல் கடந்த வருட இறுதியில் இங்கிலாந்து அணியுடனான படுதோல்வியின் பின் தேர்வுக் குழுவை மாற்றியதுடன், கடந்த வாரம் முடிவுற்ற அவுஸ்திரேலிய தோல்வியின் பின் டெஸ்ட் அணித்தலைவர் தினேஸ் சந்திமால் சிறப்பாகச் செயற்படாததால் நீக்கப்பட்டுள்ளார். அவர் அவுஸ்திரேலியாவுடன் மோசமாகத் துடுப்பெடுத்தாடியதுடன் அணியை வழி நடத்தியதும் மோசமாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் கடந்த 10 டெஸ்ட் போட்டிகளில் ஒரே ஒரு அரைச்சத்ததை மாத்திரமே பெற்றுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. இத் தோல்வியின் எதிரொலியாக பயிற்றுவிப்பாளர் ஹத்துருசிங்கவின் அதிகாரங்களை குறைத்துள்ளதுடன், வாதப் பிரதிவாதங்களின் பின் எதிர்வரும் உலகக் கிண்ணத் தொடர் வரை அவரே பயிற்சியாளராக இருப்பார் என்றும் விளையாட்டு அமைச்சு அறிவித்துள்ளது.

இவ்வாரம் ஆரம்பமாகவுள்ள தென்னாபிரிக்கவுடனான டெஸ்ட் தொடருக்கு இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்னவை தலைவராக நியமித்துள்ளனர். அத்துடன் சந்திமால், ரொஷேன் சில்வா, சுழற்பந்து வீசசாளர் டில்ருவன் பெரேரா ஆகியோர் தென்னாபிரிக்காவுக்கு எதிரான தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளதுடன், கௌசல் சில்வா மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். அண்மையில் முதல்தரப் போட்டிகளிலும், அயர்லாந்து ஏ அணிக்கு எதிரான போட்டிகளிலும் பிரகாசித்த வீரர்களான லசித் இபுல்தெனிய, ஓஷாட பெர்னாண்டோ, கண்டி மடவளை மதீனா கல்லூரியின் பழைய மாணவரான வேகப்பந்து வீச்சாளர் மொஹம்மட் சிராஸ், அண்மையில் 80 வருட கால சாதனையை சமன் செய்த (இரு இன்னிங்ஸிலும் இரட்டை சதம்) அதிரடி வீரர் அஞ்சலோ பெரேராவும் தென்னாபிரிக்காவுக்கான அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

திமுத் கருணாரத்ன இலங்கை டெஸ்ட் அணியின் 16வது தலைவராவார். 1982ம் ஆண்டு டெஸ்ட் அந்தஸ்த்துக் கிடைத்த இலங்கை அணிக்கு முதல் தலைவராக பந்துல வர்ணபுர நியமிக்கப்பட்டதுடன் இலங்கை அணி இதுவரை 15 தலைவர்களின் கீழ் 274 டெஸ்ட் போட்டிகளில் மோதியுள்ளது. அவைகளில் 86 வெற்றிகளையும் 109 தோல்விகளையும் பெற்றுள்ளதோடு ஏனையவை வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளன. இதுவரை இலங்கை அணிக்கு அர்ஜுண ரணதுங்கவே அதிகமான டெஸ்ட் போட்டிகளுக்குத் தலைமைதாங்கியுள்ளார். 56 போட்டிகளுக்கு தலைமை தாங்கியுள்ள அவர் 12 வெற்றிகளைப் பெற்றுள்ளார். இலங்கை அணி பெற்ற முதல் டெஸ்ட் வெற்றி இந்தியாவுக்கு எதிராக துலீப் மெண்டிஸின் தலைமையிலேயே பெறப்பட்டது.

இலங்கை அணியை வழிநடத்திய தலைவர்களுள் கூடிய டெஸ்ட் வெற்றிகளைத் தேடித்தந்த தலைவர்களாக சனத் ஜெயசூரியவும், மஹேல ஜயவர்தனவும் திகழ்கிறார்கள். இவர்கள் தலா 38 போட்டிகளுக்கு தலைமை தாங்கி இருவரும் 18 போட்டிகள் வீதம் இலங்கை அணிக்கு வெற்றியைத் தேடித்தந்துள்ளனர். அஞ்சலோ மெத்தியூஸ் தலைமையில் விளையாடிய 34 போட்டிகளில் இலங்கை அணி 13 வெற்றிகளையும் 15 தோல்விகளையும் பெற்றுள்ளது. கடைசியாக தினேஷ் சந்திமாலின் தலைமையில் 16 போட்டிகளில் 5 வெற்றிகளையும் 10 தோல்விகளையும் பெற்றுள்ளது. இலங்கை அணிக்கு தலைமை தாங்கிய தலைவர்களுள் பந்துல வர்ணபுர நான்கு போட்டிகளிலும், டி. எஸ். டி. சில்வா 2 போட்டிகளிலும், ரஞ்சன் மடுகல்ல இரு போட்டிகளிலும், அதிரடி வீரர் அரவிந்த டி சில்வா 6 போட்டிகளிலும் இலங்கை டெஸ்ட் அணிக்குத் தலைமை தாங்கினாலும் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தென்னாபிரிக்க-இலங்கை அணிகளுக்கிடையில் இதுவரை 27 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில் தென்னாபிரிக்க அணி 14 போட்டிகளிலும் இலங்கை 7 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. 6 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளன.

ஒரு அணிபெற்ற கூடிய கூட்டமாக இலங்கை அணி 2006ஆம் ஆண்டு எஸ். எஸ. சி மைதானத்தில் 756 ஓட்டங்கள் பெற்றுள்ளதுடன் தென்னாபிரிக்க சார்பில் 2012ம் ஆண்டு கேப்டவுனில் நடைபெற்ற போட்டியில் 4 விக்கெட் இழப்புக்கு 580 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

ஒரு இன்னிங்சில் குறைந்த ஓட்டங்களாக 2018 ஆம் ஆண்டு காலி கைதானத்தில் தென்னாபிரிக்க அணி 73 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்ததே பதிவாகியுள்ளதுடன், இலங்கை சார்பில் 2001ம் ஆண்டு கேப்டவுனில் நடைபெற்ற போட்டியொன்றில் 95 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

தனி நபர் கூடிய ஓட்டமாக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்த்தன 2006 ஆம் ஆண்டு எஸ். எஸ். சி. மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 374 ஓட்டங்களையும், தென்னாபிரிக்க சார்பில் 2012ஆம் ஆண்டு கேப்டவுனில் நடைபெற்ற போட்டியொன்றில் ஜெக் கலிஸ் பெற்ற 224 ஓட்டங்களுமே பதிவாகியுள்ளது.

ஒரு இன்னிங்சில் சிறந்த பந்து வீச்சாக இலங்கை சார்பில் முத்தையா முரளிதரன் 2000ம் ஆண்டு காலி மைதானத்தில் 84 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதே பதிவாகியுள்ளதுடன் தென்னாபிரிக்கா சார்பாக கேஷல் மகாராஜ் 2018ம் ஆண்டு எஸ். எஸ். சி. மைதானத்தில் 129 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்களை கைப்பற்றியதே பதிவாகியுள்ளது.

ஒரு போட்டியில் சிறந்த பந்து வீச்சாக இலங்கை சார்பில் 2000ம் ஆண்டு காலி மைதானத்தில் நடைபெற்ற போட்டியொன்றில் முரளிதரன் 171 ஓட்டங்களுக்கு 13 விக்கெட்கள் கைப்பற்றியதே பதிவாகியுள்ளதுடன் தென்னாபிரிக்கா சார்பில் மகாராஜ் கடந்த வருடம் எஸ். எஸ். சி. மைதானத்தில் 283 ஓட்டங்களுக்கு 12 விக்கெட் கைப்பற்றியதே பதிவாகியுள்ளது.

டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாக முத்தையா முரளிதரன் 15 போட்டிகளில் 104 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளதுடன், ஷோன் பொலாக் 13 போட்டிகளில் 45 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

வேகப்பந்து வீச்சுகக்கும் பௌன்சர் பந்து வீச்சுக்கும் சாதனமான தென்னாபிரிக்க ஆடுகளங்களில் இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் கடினமான சவாலை எதிர்நோக்க நேரிடும். சிறந்த துடுப்பாட்ட வீரரான இலங்கை அணியின் புதிய தலைவர் திமுத் கருணாரத்ன இச்சவாலுக்கு எவ்வாறு முகம்கொடுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

Comments