மாக்கந்துர மதுஷை மடக்கியது எப்படி? | தினகரன் வாரமஞ்சரி

மாக்கந்துர மதுஷை மடக்கியது எப்படி?

விசு கருணாநிதி

நாடு முழுவதும் இன்று உச்சரிக்கப்படும் பெயர் மாக்கந்துர மதுஷ். சமரசிங்க ஆரச்சிலாகே மதுஷ் லக்‌ஷித்த. ஒருவரின் இயற்பெயரைவிட இரண்டாவது மூன்றாவதாக வந்து ஒட்டிக்கொள்ளும் பட்டப்பெயர் அல்லது புனைபெயர் அவர் செய்யும் நன்மை தீமை எதுவாகவிருந்தாலும் பிரபல்யத்தைத் தேடிக் ெகாடுத்து விடுகிறது. முதலில் கம்புறுபிட்டிய மதுஷ். 

மாக்கந்துர மதுஷ்! 

பிறந்தது மாத்தறை கம்புறுப்பிட்டி. புகுந்தது மாக்கந்துர. சிலர் குருணாகல் மாக்கந்துர என்று நினைக்கக்கூடும், இல்லை. அவர் தென்பகுதியிலிருந்து உருவாகியவர். கள்வனின் காதலியில் வரும் நாயகனைப்போல், தொடக்கப்புள்ளி அமைந்திருந்தாலும், இவர் தன்னுடைய செயலால் அசல் தாதாவாகப் பெயர் எடுத்தவர். தான் பிறந்த சமூகத்திலேயே அவ்வாறு உருவாக்கப்பட்டவர் என்றே சொல்ல வேண்டும். 

எட்டு வயதில், 1989கிளர்ச்சியின்போது மாத்தறையில் இடம்பெற்ற ஒரு துப்பாக்கிச் சூட்டில் தாயை இழக்கிறார். பின்னர் தந்தை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள, சிறிய தாயாரின் அரவணைப்பில் வளர்க்கப்படுகிறார். கல்வியும் அவ்வளவாக ஏறவில்லை. சிறு வயதிலேயே தொழில்புரிய வேண்டிய நிர்ப்பந்தம். முதல் தொழில் அம்பாறையில் வாகனம் திருத்தும் "கராஜ்". பின்னர் மரக்காலை. திருமணம் முடிக்கும்போது மாத்தறை வைத்தியசாலையின் சுத்திகரிப்புப் பணியாளர். 2004நவம்பர் வரை வைத்தியசாலையில் பணியாற்றுகிறார். அதன் பின்னர் கப்பம் பெறல், கொள்ளையடித்தல், போதைப்பொருள் வர்த்தகம் எனப் பல பரிமாணம். 1999ஒக்ேடாபர் 28ஆம் திகதி மதுஷின் பெயர் முதற்தடவையாக பொலிஸ் முறைப்பாட்டுப் புத்தகத்தில் பதிவாகிறது. சட்டவிரோத ஆயுதம் வைத்திருந்தார் என்பது குற்றச்சாட்டு. குற்றத்தை ஒப்புக்ெகாண்ட அவருக்கு மாத்தறை நீதிமன்றம் பத்தாண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதித்தது. அவர் மீதான முதலாவது குற்றவியல் வழக்கு 2004நவம்பர் 29ஆம் திகதி தாக்கல்செய்யப்படுகிறது. ரி56துப்பாக்கியால் ஒருவரை சுட்டுக்ெகான்றார் என்று சொன்னபோதிலும் போதுமான சாட்சியங்களின்றி நீதிமன்றத்தால் விடுவிக்கப்படுகிறார்.

அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மீண்டும் ஒரு கொலைக் குற்றச்சாட்டு. அதிலும் சாட்சியங்கள் உறுதியாக இல்லாததால் விடுதலை. அவரது ஒரே சகோதரர் நிரோஷன லக்‌ஷித்த கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்ட பின்னர்தான். மதுஷ் தன்னை ஒரு கொடூரமான மனிதராக மாற்றிக்ெகாண்டார். சிறைச்சாலையில் இருந்த காலத்தில் அவரது வாழ்க்ைகயை மாற்றிய பெரும்பங்கு அங்கிருந்த குற்றவாளிகள் பலருக்கு இருக்கிறது. அவ்வாறுதான் அவர் நீர்கொழும்பில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களில் தொடர்புபடுகிறார். 2005இல் இடம்பெற்ற இரண்டு பாரிய கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்பு. தெற்கு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டெனி ஹித்தெட்டிய கொலை செய்யப்படுவதோடு மதுஷ் பாதாள உலகின் முக்கிய புள்ளியாக மாறுகிறார். ஆனால், 2006ஜூன் 11ஆம் திகதி அந்தக் கொலை இடம்பெற்றபோது மதுஷ் சிறையிலேயே இருந்தார். சிறையிலிருந்தவாறே கம்புறுப்பிட்டியைச் சேர்ந்த தனது சகாக்கள் இருவரை கொலைக்காக அவர் அமர்த்துகிறார். சிறைச்சாலையில் இருந்த காலப்பகுதியில்தான் பல்வேறு குற்றச்செயல்களைப் புரிந்தவர்களின் தொடர்புகள் ஏற்பட்டு அவரும் அவற்றில் ஈடுபட்டிருக்கிறார். 2011இல் கம்புறுபிட்டியில் இடம்பெற்ற ஒரு கொலை அந்தப் பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தியது. அந்தக் கொலைக்கும் சிறையிலிருந்தே திட்டம் வகுத்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து கைதிகளைக்ெகாண்டு ஒரு வலையமைப்பை உருவாக்கினார். அதன் மூலம் பல்வேறு குற்றச்செயல்களை முடுக்கிவிட்டிருந்தார். பிணை எடுக்க முடியாதவர்களுக்கு உதவி புரிவதன் ஊடாக இலங்கை முழுவதும் தமக்கு நெருக்கமான வலையமைப்பைப் பலப்படுத்திக்ெகாண்டார்.  

அம்பாறையில் பணியாற்றிய காலப்பகுதியில் மதுஷ் தமிழையும் ஓரளவு கற்றுக்ெகாண்டார். அவருக்குப் பின்னர் புலிகள் இயக்க உறுப்பினர்களுடனும் தொடர்பிருப்பதாகப் பின்னர் புலனாய்வுத்துறை அறிந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. புலிகளின் பொலிஸ் மாஅதிபராகவிருந்த நடேசனின் மனைவி வழியில் மதுஷ் அவருக்கு உறவினரென்றும் ஒரு கதை! 

ஆனால், நடேசனின் மனைவி குடும்பத்தாரோடு தமக்கு எந்தத் தொடர்பும் இல்லையென்று மதுஷ் தெரிவித்திருந்தார். ஆனால், புலிகளின் புலனாய்வாளர் பொட்டு அம்மானின் வழியிலேயே மதுஷ் தனது சகாக்களை வழிநடத்தினார் என்கிறது பாதுகாப்புத் தரப்பு. சிறையிலிருந்து வெளியில் வந்ததும் போலியான கடவுச்சீட்டில் அவர் துபாய்க்குத் தப்பிச் செல்கிறார். அதற்காக அவருக்கு ஓர் அரசியல்வாதி உதவியிருக்கிறார். அவர் துபாய் செல்ல உதவியவர் கஞ்சிப்பானை இம்ரான். துபாயில் இருந்துகொண்டு அவர் இலங்கையில் பல்வேறு குற்றச்செயல்களை வழிநடத்தியதுடன் போதைப்பொருள் வர்த்தகத்தையும் திறம்பட மேற்கொண்டிருக்கிறார்.  

சிறையிலிருந்த ரணாலை சமயங் பாதாள குழு உறுப்பினரை ஏற்றிச்சென்ற பஸ் வண்டி மீது தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்தே மதுஷ் பிரபல்யமாகப் பேசப்பட்டார். 2012இல் வெலிக்கடைச் சிறைச்சாலையில் கொலையுண்ட மஹரகம களுதுஷாரவின் மனைவியைத் துபாய்க்கு அழைத்து அவருடன் வாழ்ந்து வந்த மதுஷ், பிள்ளையின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை நடத்தியபோதே துபாயில் சுற்றிவளைக்கப்பட்டுக் கைதுசெய்யப்பட்டார். ஜனாதிபதி கொலை சதித்திட்டம் தொடர்பான செய்திகளில் மதுஷும் சம்பந்தப்பட்டதால் அப்போதே விசேட அதிரடிப்படையின் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் லத்தீப்பிடம் இந்த பணியை இரகசியமாக ஒப்படைத்தார் ஜனாதிபதி மைத்திரிபால என்பது தெரியவந்துள்ளது. 

அதன் தொடர்ச்சியாகவே, நீண்ட வலையமைப்பை கண்காணித்து அந்த கோஷ்டிக்குள்ளே தமது ஆளை அனுப்பி இந்த கோஷ்டியை கூண்டோடு கைது செய்துள்ளது விசேட அதிரடிப்படை (எஸ். ரீ எப்), ஜனாதிபதியின் நேரடி பணிப்புரை என்பதால் இந்த திட்டம் இரகசியமாகவே நடந்துள்ளது. பொலிஸ் மா அதிபருக்கு கூடத் தெரியவில்லை. சொல்லப்படவும் இல்லை. விசேட பயிற்சி பெற்ற இரண்டு வீரர்கள் சில மாதங்களுக்கு முன்னரே துபாய் சென்று மதுஷ் கோஷ்டியுடன் உறவாட ஆரம்பித்தனர். அவர்களே அங்கிருந்து கண்காணித்து தருணம் பார்த்திருந்தனர் . 

தனது ஓய்வு பெறும் தினத்தன்று இதனை ஜனாதிபதியிடம் நேரடியாகவே லத்தீப் விளக்கி - மதுஷ் கோஷ்டி கைது செய்யப்பட்டால் அவர்களை இலங்கைக்கு கொண்டுவருவதில் சிக்கல்கள் வரலாம் என்பதையும் சுட்டிக்காட்டியதாக தகவல்கள் கசிந்துள்ளன. 

கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் துபாயுடன் செய்து கொள்ளாத காரணத்தினால் இவர்களை கொண்டுவருவதில் சிக்கல் என்று அவர் சுட்டிக்காட்டினாலும் - இராஜதந்திர ரீதியில் அவற்றை செய்யலாம் என்று கூறி முன்வைத்த காலை பின்வைக்கவேண்டாமென லத்தீப்பை உற்சாகப்படுத்தியிருக்கிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. 

அதேபோல் லத்தீப்பின் பதவிக்காலத்தை நீடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.  

பின்னரே திகில் சம்பவங்கள்... 

இதன் பின்னர் துபாய் மற்றும் அபுதாபி உயர்மட்ட பொலிஸாருக்கு அறிவித்து இந்த ஒப்பரேஷன் ஆரம்பமானது. போதைப்பொருள் தடுக்கும் இலங்கை நார்கோட்டிக் பொலிஸாரும் அறிவுறுத்தப்பட்டனர். 

மதுஷ் தனது பிள்ளைக்குப் பிறந்த நாளைக் கொண்டாட துபாயில் ஆறு நட்சத்திர மதினாத் ஜுமைரா ஹோட்டலைத் தேர்ந்தெடுத்தார். இதற்காக அவர் செலவிட்ட தொகை சுமார் மூன்று கோடி ரூபாய். இந்த ஹோட்டலை இரகசியமாக சுற்றி வளைத்த பொலிஸ் குழு, கடந்த 5ஆம் திகதி அதிகாலை அவர்களைக் கைது செய்தது. சிலசமயம் அவர்கள் தப்பிச் செல்ல முயன்றால் மயக்க ஊசிகளை அவர்கள் மீது செலுத்துவது (துப்பாக்கி சுடுவது போல் மயக்க ஊசிகளை தூர இருந்து ஒரு உபகரணத்தால் பாய்ச்சுவது) என்றும் திட்டமிடப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அதிரடியாக உள்ளே நுழைந்த அதிகாரிகள் அனைவரையும் வளைத்து ஓர் அறைக்குள் அடைத்தனர். அனைவரும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. எல்லோரும் தனித்தனியாக படமெடுக்கப்பட்டனர். இலங்கைக்கும் இதுபற்றி அறிவிக்கப்பட்டது. 

அங்கிருந்தவர்கள் தன்னிலை விளக்கம் அளிக்க முற்பட்ட போதும் பொலிஸ் அதை ஏற்கவில்லை. மதுஷ் உட்பட்ட பலர் போலி கடவுச்சீட்டுக்கள் போலி விசாக்கள் வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இவர்கள் கைது செய்யப்பட்ட இடத்திலிருந்து  கொக்கெய்ன் போதைப்பொருள் மீட்கப்பட்டது. தனியாக நடத்தப்பட்ட சோதனையில் மதுஷ் மது அருந்தியிருந்தமை அறியப்பட்டது. ஏனைய சிலர் கொக்கெய்ன் போதை பாவித்திருந்தனர். அனைவரையும் விசேட பாதுகாப்பின் கீழ் தடுத்துவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.  இப்போது மதுஷ் கைது அரசியலில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

போதைப்பொருள் விடயத்தில் கடும் நிலைப்பாட்டில் உள்ள ஜனாதிபதி, மதுஷ் கோஷ்டியை இலங்கைக்கு கொண்டு வந்தால், தனது போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்ைகக்கு பெரும் பலமாக இருக்கும் என நம்புகிறார். 

இலங்கைக்கு மதுஷ் கோஷ்டியை கொண்டுவருவதன் மூலம் அவர்களிடம் இருந்து மேலும் பல தகவல்களை பெற்று அவர்களுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் யார் என்பதை கண்டறிய ஜனாதிபதி ஆர்வம் கொண்டுள்ளார் எனச் சொல்லப்படுகிறது..  மறுபுறம் மதுஷ் மற்றும் சகபாடிகளை கொண்டுவர வெளிவிவகார அமைச்சும் பாதுகாப்பமைச்சும் தீவிரமாக செயற்பட்டு வருகின்றன. 

அதேசமயம், -உள்ளூர் அரசியல் பிரமுகர் இருவர் இதில் சிக்கியுள்ளனரா ? சிக்கிய டிப்ளோமட்டிக் பாஸ்போர்ட் யாருடையது? இந்த பிறந்த நாள் நிகழ்வுக்கு இலங்கையில் இருந்து செல்லவிருந்த இலங்கையின் முக்கிய அரசியல் புள்ளி யார் ? என்பதை பற்றியும் சில விபரங்கள் ஜனாதிபதியின் கைகளுக்கு சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது. 

போதைப்பொருள் ஒழிப்பு விடயத்தில் எவருக்கும் அஞ்சாது எவர் பேச்சும் கேளாது ஜனாதிபதி அதிரடியாக செயற்படுவதால் இந்தச் சம்பவத்தின் பின்னர் ஜனாதிபதியின் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. தூர இடங்களுக்கான ஜனாதிபதியின் பயணங்கள் பிற்போடப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம், மட்டக்களப்புக்கான பயணங்கள் பிற்போடப்பட்ட விடயங்களும் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டவை என்றே நம்பப்படுகிறது. 

எப்படியோ மாக்கந்துர மதுஷ் மற்றும் அவரது சகாக்கள் நாடு கடத்தப்படுவார்களா அல்லது அங்கு தண்டிக்கப்படுவார்களா அல்லது குற்றங்கள் நிரூபிக்கப்படாமல் விடுதலை செய்யப்படுவார்களா என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்து விடும். என்றாலும் கைது செய்யப்பட்டவர்களில் அஹூன்கல்ல புத்தி, அமில ஆகியோர் மிக முக்கிய புள்ளிகளென சொல்லப்படுகிறது.  

இன்னுமொரு முக்கிய புள்ளியான மாளிகாவத்தையின் கஞ்சிப்பான இம்ரான் மற்றும் அவரது சகாக்கள் பாஸ், பைசர், ஷியாம், அஜ்மி ஆகியோரும் சிக்கியவர்களில் முக்கிய புள்ளிகள் எனப்பேசப்படுகிறது. மாளிகாவத்தை பகுதி பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவரும் இதில் அடங்குவதாக பாதுகாப்பு வட்டாரங்கள் மேலும் சொல்கின்றன.  இதற்கிடையில் துபாய் பிறந்த நாள் நிகழ்வில் கலந்து கொண்டு சிகரெட் பிடிப்பதற்காக ஹோட்டலை விட்டு வெளியே வந்து மீண்டும் ஹோட்டலுக்குள் செல்ல முயன்றபோது, பொலிஸாரைக் கண்டு தப்பியோடிய அங்கொட லொக்கா மற்றும் அவரது இரு கூட்டாளிகளை சி சி ரீ வி உதவியுடன் கைது செய்ய துபாய் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

அங்கொட லொக்காவின் முக்கிய சகாக்கள் இருவர் பொலிஸாரிடம் சிக்கியிருப்பதால் அவர் தங்கியிருக்கும் பகுதி மற்றும் அவரது நட்பு வட்டாரங்கள் குறித்து தேட ஆரம்பித்துள்ள துபாய் பொலிஸ், பெரும்பாலும் அவர் கைதுசெய்யப்படுவார் என்றே நம்பிக்கை வெளியிட்டுள்ளன. 

இதற்கிடையில், மதுஸுடன் தொடர்பில் இருந்த இலங்கை முக்கிய புள்ளிகள் சிலர் அவரை இங்கு கொண்டுவரக்கூடாதென அரசுக்கு மறைமுக அழுத்தங்களை வழங்க ஆரம்பித்துள்ளனரெனச் சொல்லப்படுகிறது. 

துபாயில் மதுஸுக்கு சொந்தமான சொத்துக்களை தேட ஆரம்பித்துள்ள பொலிஸ் அவற்றுக்குரிய ஆவணங்களை மீட்டுள்ளது. இலங்கையில் இருந்து வேலைவாய்ப்புக்காக ஆட்களை தருவிக்கும் மேன்பவர் நிறுவனம் ஒன்றை அவர் நடத்திவந்ததாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.  கடந்த வருடம் மட்டக்களப்பில் இருந்து துப்பாக்கிகளை மதுஷ் அணிக்கு வழங்கிய புள்ளி ஒருவரும் இதில் சிக்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.  

ரனாலே சூட்டா, அங்கொட சுத்தா, கெஸெல்வத்த டினுக்க ஆகியோரும் கைதானோரில் அடங்குவதாக மற்றொரு தகவல் கூறுகிறது. 

இதேவேளை இந்த அணியில் இராஜதந்திர கடவுசீட்டை வைத்திருந்த நபர் குறித்த தகவலை சில பாதுகாப்பு மற்றும் அரசியல் காரணங்களுக்காக வெளியிடாதிருக்கும் இலங்கை பொலிஸார் விரைவில் அதனை அறிவிப்பார்களெனவும் சொல்லப்படுகிறது. 

மாக்கந்துர மதுஷின் டுபாய் வீட்டில் இருந்து 5கோடி ரூபா ரொக்கப்பணம் மீட்கப்பட்டதாகவும்   அவருக்குச் சொந்தமான 4வீடுகள் முற்றுகையிடப்பட்டதாகவும் தெரிய வருகிறது. 

துபாயில் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் மாத்தறை பகுதி வர்த்தகர், பிரதேச சபை உறுப்பினர் ஒருவர், பொலிஸ் அதிகாரி ஒருவர், களுத்துறை சிறைச்சாலை பாதுகாப்பு அதிகாரி ஒருவர் குறித்து தனித்தனி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே, நடிகர், பாடகர் வீடுகளிலும் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.  பிரபல பாதாள உலக புள்ளி மாக்கந்துர மதுஷ் மற்றும் அவரது சகாக்கள் துபாயில் தனித்தனி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

சம்பந்தப்பட்ட பிறந்த நாள் நிகழ்வில் கலந்து கொள்ள வந்து இறுதி நேரத்தில் தப்பிச் சென்றதாக சொல்லப்படும் அங்கொட லொக்காவை தேடும் துபாய் பொலிஸ், மதுஷின் தொலைபேசிகள் இரண்டை கைப்பற்றியுள்ளதோடு அவற்றுக்கு வந்துசென்ற அழைப்புக்களின் பட்டியலை எடுத்தனர். 

இலங்கையின் முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் முன்னணி வர்த்தகர்கள் பலருக்கு தொலைபேசி அழைப்பு எடுக்கப்பட்டுள்ள விபரம் வெளிவந்துள்ளதால் அந்த மேலதிக விசாரணைகளை இலங்கை பாதுகாப்புத் தரப்பிடம் ஒப்படைக்க அந்நாட்டு பொலிஸ் முடிவுசெய்துள்ளதாகப் பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.  இதேவேளை இந்த அணியில் இராஜதந்திர கடவுச்சீட்டை வைத்திருந்த நபர் குறித்த தகவலை சில பாதுகாப்பு மற்றும் அரசியல் காரணங்களுக்காக வெளியிடாதிருக்கும் இலங்கை பொலிஸார் விரைவில் அதனை அறிவிப்பார்களென எதிர்பார்க்கப்படுகிறது. 

மதுஷ் கைது - என்ன நடக்கிறது ? 

துபாய் மதீனாத் ஜூமெய்ரா ஹோட்டலில் (ஆறு நட்சத்திர ஹோட்டல்) வைத்து கைது செய்யப்பட்ட மாக்கந்துர மதுஷ் மற்றும் அவரது சகாக்களின் இரத்தப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்பே  அடுத்தகட்ட நடவடிக்கை தீர்மானிக்கப்படுமென அந்நாட்டு காவல்துறை இலங்கைக்கு அறிவித்துள்ளது. 

பிந்திய தகவலின்படி கைது செய்யப்பட்டவர்களில் கம்புறுபிட்டிய பிரதேச சபை உறுப்பினரே இராஜதந்திர கடவுசீட்டை பயன்படுத்தியதாகத் தெரியவந்துள்ளது. அவருக்கு அதனைப் பெற உதவியவர் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

இங்கு சிக்கிய களுத்துறை சிறைச்சாலை பாதுகாப்பு அதிகாரி சிறைச்சாலைகள் திணைக்களத்தில் விடுமுறை பெற்றே இந்த பிறந்த நாள் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார். கால் உபாதை காரணமாக அவர் ஓய்வில் இருந்தபடி மதுஷின் அழைப்பின் பேரில் ஊன்றுகோலின் உதவியுடன் அவர் துபாய் சென்றுள்ளதாக அறியப்பட்டுள்ளது. 

மதுஷ் பாவித்த அதிசொகுசு லிமோசின் கார் துபாய் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. துபாய் இளவரசர் ஒருவர் பாவித்த காரையே அவர் ஏலத்தில் வாங்கியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. 

துபாயில் கஞ்சிப்பான இம்ரானின் வீட்டில் நடத்திய சோதனையில் பெருந்தொகை பணம்  கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அந்நாட்டுப் பொலிஸார், கைது நடவடிக்கை இடம்பெறும்போது விடுதலை செய்ய தமக்கு இலஞ்சம் வழங்க முயன்ற இரண்டு முக்கியஸ்தர்களைத் தனியே விசாரித்து வருவதாக அறிவித்துள்ளனர். 

சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டு இவர்களை இலங்கைக்கு கொண்டுவர அரசு தீவிரமாக முயல்கிறது. 

மதுஷ் ஏற்கனவே இப்படி பல நிகழ்வுகளை நடத்தியுள்ளதாகவும் அதில் பல முக்கிய புள்ளிகள் இலங்கையில் இருந்து கலந்து கொண்டதாகவும் இன்னுமொரு தகவல் வெளியாகியுள்ளது. எவ்வாறாயினும், மதுஷ் மீதான விசாரணைகள் நிறைவுபெறும்போது போதைப் பொருள் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களின் வலையமைப்பு முற்றாகத் தகர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Comments