நன்றி மறப்பவரை மன்னிக்கலாமா? | தினகரன் வாரமஞ்சரி

நன்றி மறப்பவரை மன்னிக்கலாமா?

ஜீவிதன்

நன்றி மறக்காத ஜீவன் என்றால், நாயைத்தான் சொல்வார்கள். மனிதர்களில் அந்த மகிமையைப் பெறுபவர்கள் மிக அரிது. பெரும்பாலானவர்கள் செய்த நன்றியை மறந்துவிடுவார்கள்; பின்னர் துன்பத்தில் உழன்றுகொண்டிருப்பார்கள்! இதை அப்போதே வள்ளுவர் சொல்லி வைத்திருக்கிறார்.

"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்நன்றி கொன்ற மகர்க்கு"

என்றார் வள்ளுவர். செய்த நன்றியை மறந்து செயல்படுபவன் சரிவரமாட்டான் என்று மூத்தவர்கள் அடிக்கடி சொல்வார்கள். சிலரை நேரில் கண்டிருக்கின்றோம் என்கிறார் நண்பர். உங்களுக்கும் அந்த அனுபவம் இருக்கும்.

"நன்றியை மறந்தால் மன்னிக்கமாட்டேன்

பார்வையில் நெருப்பாவேன்

-நல்லவர் வீட்டில்

நாய் போல் உழைப்பேன் -

காலுக்குச் செருப்பாவேன்"// என்கிறார் கவியரசர் கண்ணதாசன்.

உன் நண்பனை காட்டு – நீ யார் என்று சொல்கின்றேன்” – என்ற கூற்றுக்கு எத்தனை பேரால் தன் நட்பு வட்டத்தைப் பட்டியலிட முடியும்? “இனம் இனத்தோடு – பணம் பணத்தோடு” என்பதுபோல் – நம் இன்றைய நிலை, நாம் தற்போது கொண்டிருக்கும் நண்பர்களின் பிரதிபலிப்பு, நாளைய நம் வாழ்வு, இனி நாம் கொள்ளப்போகும் நண்பர்களின் பிரதிபலிப்பு எல்லாவற்றையும் கணித்துவிட முடியும்.

எவர் தோளில் ஏறியாவது நம் பயணத்தை முடித்துவிட வேண்டும் என்ற வஞ்சகத்தன்மையுடன்தான் இன்று எல்லோரும் தங்கள் வழியில் போய்க்ெகாண்டிருக்கிறார்கள். இவர்களின் வஞ்சகம் தெரியாத வெகுளிகள், அவர்களுக்குத் தொடர்ந்தும் உதவிபுரிந்து; நட்பாய் இருப்பதால், இறுதியில் அந்தக் கூடாதவருடன் சேர்த்து இவருக்கும் அபகீர்த்தி ஏற்பட்டுவிடுகிறது. அதனால், நம் வழிக்குத் தோதாக அமையாத நண்பர்களை ஆரம்பத்திலேயே கழற்றிவிட்டுவிட வேண்டும் என்பது நண்பரின் அறிவுரை. அவர் என்னதான் செல்வந்தராக, வசதிவாய்ப்பு உள்ளவராக இருந்தாலும், கபடம் உள்ளவரைக் கழற்றிவிட்டுவிடு என்பது அவரின் அறிவுரை. நான் மிளிர்வதற்கு இன்னாரும் காரணம் என்று பகிரங்கமாய்ச் சொல்லிவிட்டால், எங்கே அந்த இன்னாருக்குப் பெயர் போய்விடுமோ என்று தனக்கு உதவி செய்தவரை நாசுக்காகத் தவிர்த்துவிடும் நரிப்புத்திக்காரர்களிடம் கவனமாக இருக்க வேண்டும் என்கிறார் பாசக்கார நண்பர்!. அவ்வாறு நன்றி செலுத்த வேண்டியவருக்குச் செலுத்தாமல், சுயலாபத்திற்காகத் தற்காலிகமாக வந்துறவாடியவர்களுக்குத் துணைபோகிறவர்கள் வாழ்க்ைகயில் வெற்றிபெறமாட்டார்கள் என்பதற்குப் பல சான்றுகளைச் சொல்ல முடியும். இப்படி​ேய நிறையபேரை பார்க்க முடிந்திருக்கிறது. அது கூட்டுத் தொழிலகமாக இருந்தாலும் சரி அலுவலகமாக இருந்தாலும் சரி பின்விளைவு ஒன்றுதான்! நன்றியை மறப்பவர்கள் சொந்தப் பிள்ளைகளாக இருந்தாலும் துன்பப்படுவார்கள் என்றும் சுட்டிக்காட்டுகிறார் நண்பர். நான் அப்படிச் சொல்லமாட்டேன் என்றேன். மீண்டும் கவியரசரின் பாடலை நினைவூட்டுகிறார்.

"பிள்ளை பெற்ற ராஜா ஒரு நாயை வளர்த்தார் அதை

பிள்ளைக்குமேல் கண்களைப்போல் காத்து வளர்த்தார்

உண்மை அன்பு சேவை என்ற மூன்றும் கொடுத்தார்

அதன் உள்ளத்திலே வீடு கட்டி தானும் இருந்தார்

சொந்தம் என்று வந்ததெல்லாம் சொந்தமும் இல்லை ஒரு

துணையில்லாமல் வந்ததெல்லாம் பாரமும் இல்லை

நன்றியுள்ள உயிர்களெல்லாம் பிள்ளைதானடா தம்பி

நன்றிகெட்ட மகனை விட நாய்கள் மேலடா

நன்றிகெட்ட மகனை விட நாய்கள் மேலடா// நாய்கள் மேலடா"

நண்பர் சொல்வது நூற்றுக்கு நூறு சரி. கடந்த 2008ஆம் ஆண்டு பிரான்ஸில் நடந்த ஒரு கொலை வழக்கில், உண்மையான கொலையாளிகளைக் கண்டுபிடிக்க வளர்ப்பு நாய் உதவிய சம்பவமொன்று நிகழ்ந்துள்ளது. சாட்சிக் கூண்டில் ஏறிக்ெகாண்ட நாய் இடைவிடாது குரைத்துப் பின்னர் கொலையாளியைக் கண்டறிய பொலிஸாருக்கு உதவியிருக்கிறது. நாயை ஒரு சாட்சியாக நீதிமன்றம் ஏற்றுக்ெகாண்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படி நாய்கள் மனிதனைவிட நூற்றுக்கு நூறுவீதம் நன்றியுடன் நடந்துகொள்கின்றன. ஆனால், மனிதனுக்கு மனிதன் செய்யும் உதவி மறந்துவிடுகிறது.

எனது நண்பர் ஒருவரும் ஒரு நாய் வளர்க்கிறார். அந்த நாய் அவரைப் பலமுறை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றியிருக்கிறது என்று நம்புகிறார். இரவில் பணிமுடிந்து வீட்டுக்குச் செல்லும்போது படலை வரை வந்து வரவேற்கும் அந்த நாய், இரண்டு மூன்று முறை அவரை ஏற இறங்க முகர்ந்து பார்த்துவிட்டு ஒருவித முனகலுடன் மயங்கி சுருண்டு வீழ்ந்துள்ளது. இதன் அர்த்தம் அவருக்கு இன்னும் தெரியவில்லை. ஓர் எதிர்மறை சக்தியிடமிருந்து தம்மை அந்த நாய் காப்பாற்றியிருக்கலாம் என்பது அவரின் நம்பிக்ைக. சிலவேளை, அவரது வீட்டில் நாய் இல்லாவிட்டால், என்ன நடந்திருக்கும் என்றும் சிந்தித்துப் பார்க்க முடியவில்லை.

மகாபாரதத்தில் நல்லவர்கள் பக்கம் நான் இருப்பேன் என்றான் கண்ணன். இப்போதோ கண்ணனையும் காணோம், நல்லவனையும் காணோம் – என்பது போன்ற ஒரு தோற்றம்.

“நல்லவர்கள்” – உங்கள் நல்வாழ்வுக்கு வழி சொல்லும் வழி காட்டிகள்.

“நல்லவர்கள்” – துவண்டு விழும்போது தோள் கொடுப்பவர்கள்

“நல்லவர்கள்” – அக்கறையை வெளிப்படுத்தும் அகல் விளக்குகள்

“நல்லவர்கள்” – ஆலோசனை வேண்டின் கலப்படமில்லா கருத்து சொல்பவர்கள்

“நல்லவர்கள்” – கோபத்தை நெஞ்சில் வைக்காமல் வார்த்தைகளால் மட்டுமே வடித்து சொல்பவர்கள் என்கிறார் மித்ரன் ஸ்ரீராம்.

நல்லவர்களை அடையாளம் கண்டாக வேண்டிய கட்டத்தில் தான் நம் கால்கள்!

எப்படி? உங்கள் வாழ்வில் நீங்கள் “நல்லவர்கள்” என்று அடையாளம் கண்டவர்கள் யார்? அல்லது இங்கே சொல்லப்பட்டிருக்கும் நாய்களைப்போல் நீங்கள் அடையாளம் கண்டுகொண்டிருக்கும் நாய்கள் பற்றியும் சொல்லுங்கள்; பகிர்ந்துகொள்வோம்!  

Comments