முஸ்லிம்களுக்கு வட்டியற்ற சேவையை பெற்றுக்கொடுக்குமாறு பிரதமர் பணிப்பு | தினகரன் வாரமஞ்சரி

முஸ்லிம்களுக்கு வட்டியற்ற சேவையை பெற்றுக்கொடுக்குமாறு பிரதமர் பணிப்பு

(எம்.ஏ.எம். நிலாம்) 

தொழில் வாண்மையாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு ‘என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா’  மூலம் வங்கிக் கடன்களைப் பெற்றுக்கொடுக்கும் திட்டம் மூலம் முஸ்லிம் தொழில்வாண்மையாளர்கள் சிரமத்துக்குள்ளாவதாகவும் அரச வங்கிகளில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் வட்டியற்ற வங்கிச் சேவையை இதில் உள்வாங்க உதவுமாறு இலங்கை முஸ்லிம் கவுன்சில் முன்வைத்த யோசனையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டு அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி பெற்றோலிய வள அமைச்சர் கபீர் ஹாஷிமிடம் பொறுப்பை வழங்கியுள்ளார்.  

முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பல்வேறுபட்ட பிரச்சினைகள் குறித்து முஸ்லிம் இயக்கங்களின்ஒன்றியமான இலங்கை முஸ்லிம் கவுன்சில் தூதுக்குழு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நேற்று முன்தினம்(08)பாராளுமன்றத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.  

இதன்போது முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு கூடிய விரைவில் தீர்வுபெற்றுத் தருவதாக பிரதமர் இங்கு உறுதியளித்திருக்கின்றார். இந்தச் சந்திப்பின் போது அமைச்சர்கள் கபீர் ஹாஷிம், ரிஷாத் பதியுதீன் ஆகியோரும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.  

இந்தச் சந்திப்பின் போது தம்புள்ள பள்ளிவாசல் விவகாரம்  கொழும்பு தெற்கில் ஆண்கள் பாடசாலையொன்றை அமைத்தல், மௌலவி ஆசிரியர் நியமனம், கொலன்னாவை பிரதேசத்தில் தமிழ் மொழி மூல பாடசாலையொன்றை அமைத்தல், யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேறியுள்ள முஸ்லிம்களுக்கான வீடமைப்புத் திட்டம், முல்லைத்தீவில் மீளக்குடியேறும் முஸ்லிம்களுக்கான காணிப் பிரச்சினை, மஹரகமவில் கபூரியா அரபுக் கல்லூரிக்கு அருகில் உள்ள கொழும்பு சாஹிராக் கல்லூரியின் காணியில் ஆரம்பப் பாடசாலையொன்றை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டதாக முஸ்லிம் கவுன்சில் செயலாளர் அஸ்கர்கான் தெரிவித்தார்.  

தம்புள்ளையில் முஸ்லிம்களுக்கான பள்ளிவாசலை அமைப்பதற்கு அமைச்சர் சம்பிக ரணவக்கவினால் அடையாளம் காணப்பட்ட காணியை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறு பிரதமரிடம் கோரிய போது அதற்குரிய தரப்பினருடன் பேசி விரைவில் சுமுகமான தீர்வைப்பெற்றுத் தருவதாக பிரதமர் உறுதியளித்தார்.  

கொழும்பு தெற்கில் முஸ்லிம் ஆண்கள் பாடசாலை, கொலன்னாவையில் தமிழ் மொழி மூலப் பாடசாலை இரண்டு விடயங்கள் ஆராயப்பட்டபோது காணிகளை அடையாளம் கண்டதும் இத்திட்டங்களை முன்னெடுப்பதற்கான நடவடிக்கை துரிதப்படுத்தப்படுமெனவும் பிரதமர் தெரிவித்தார்.  

மௌலவி ஆசிரியர் நியமனம் விடயத்தில் ஏற்கனவே பணிப்புரை வழங்கி இருப்பதாகச் சுட்டிக்காட்டிய பிரதமர் அது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டார்.  

முஸ்லிம்களின் கோரிக்கைகளை துரிதமாக நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் தனது செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.  

இச்சந்திப்பில் முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன், உபதலைவர் ஹில்மி அஹமத், செயலாளர் அஸ்கர் கான், கொழும்பு சாஹிரா கல்லூரி ஆளுநர் சபை தலைவர் பௌசுல் ஹமீத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Comments