மாற்றுத்திறனாளிகளுக்கும் சம அந்தஸ்து: எப்போது சிந்திக்கப்போகின்றோம்? | தினகரன் வாரமஞ்சரி

மாற்றுத்திறனாளிகளுக்கும் சம அந்தஸ்து: எப்போது சிந்திக்கப்போகின்றோம்?

இந்துகர்ப்பிணித் தாய் ஒருவர் பேருந்தில் ஏறியதும் பேருந்து நடத்துநர், "யாராவது எழுந்து ஆசனத்தைக் கொடுங்கள்" என்று கூக்குரல் எழுப்பினாலும் ஆசனங்களில் அமர்ந்திருப்பவர்கள் ஒருவரின் முகத்தை ஒருவர் பார்த்து வேண்டாவெறுப்பாகவே தமது ஆசனத்தைக் கொடுப்பர். மாற்றுத்திறனாளி பஸ்ஸில் ஏறினாலும் இதே நிலைதான். பஸ்ஸில் ஏறும் மாற்றுத்திறனாளி காலை இழந்திருந்தால் ஆசனம் கிடைக்கும். ஆனால் ஒரு கையோ அல்லது அங்கக் குறைப்பாடோ இருந்தால் அதோ கதிதான். மாற்றுத்திறனாளிகளும் நம்மில் ஒருவர் என்பதை கவனத்தில் கொண்டு அவர்களுக்கு உதவ வேண்டும். பொதுப் போக்குவரத்து சேவைகளில் "அங்கவீனர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது" என்ற ஆசனத்தை ஆக்கிரமித்துள்ளவர்கள், அவ் ஆசனங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கானவை என்று எண்ணுவதில்லை.

மாற்றுத்திறனாளிகள் எனும் வரையறைக்குள் விழிப்புல வலுவிழப்பு, செவிப்புல வலுவிழப்பு, வாய்பேச முடியாமை, கை மற்றும் கால் வலுவழப்பு, முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோர் (இடுப்புக்கும், கழுத்துக்கும் கீழ் இயங்காதவர்கள்) ஆகியோர் அடங்குவர்.

மாற்றுத்திறனாளிகளை ஒன்றிணைத்து அவர்களின் ஆற்றல்களை வெளிக்ெகாண்டுவரும் Media Forum on Disabilities ஒன்றுகூடலும் கருத்துப் பகிர்வும் கொழும்பு ஜயவர்தனபுர மண்டபத்தில் வேணி சுரேந்திர நாதன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. மூன்று மாதத்திற்கொருமுறை கூடி, ‘மாற்றுத்திறனாளிகளிக்குள்ளும் ஒரு திறமை உள்ளது' என்பதனை வெளிக்கொண்டுவரும் நிகழ்வாகவே இது அமைந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் அவர்களின் அனுபவம், அவர்கள் எதிர்கொள்ளும் சவால், முகங்கொடுக்கும் பிரச்சினைகள் குறித்த கருத்து களமாகவும் அது விளங்கியது.

அதிகமான கட்டிடங்களில் மாற்றுத்திறனாளிகள் (கால் ஊனமுள்ளவர்கள்) பயணிக்கக் கூடிய வழிப்பாதை இருப்பதில்லை என்ற கருத்து முன்வைக்கப்பட்டதோடு, டொரின்டனில் உள்ள விளையாட்டு அமைச்சின் காரியாலயம் கூட மாடிக் கட்டடத்திலேயே அமைந்துள்ளதால், இவ்விடத்திற்குவரும் மாற்றுத்திறனாளிகளான விளையாட்டு வீரர்கள், பயணிக்க கூடிய விதத்தில் லிப்ட் வசதியின்மையை குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டது. விளையாட்டுத்துறை அமைச்சுக்குச் செல்ல வேண்டுமானால் மேல் மாடிக்ேக செல்ல வேண்டும். இந்நிலை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்ைக இங்கு மாற்றுத்திறனாளிகளால் முன்வைக்கப்பட்டது. இதேபோல் சில அரச கட்டடங்களில் கூட இதுபோன்ற நிலை காணப்படுவது கவலைக்கிடமானது.

பரா விளையாட்டுப் போட்டிகளில் கலந்துக் கொள்ளும் டினேஷ் ஹேராத், இந்து ஆகிய இருவரும் இந்த நிகழ்வில் தமது அனுபவங்களைப் பகிர்ந்தனர். நாங்கள் சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டவர்கள். பல பதக்கங்கள் வென்று எமது நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளோம். ஆனால் எங்களைப் பற்றி யாருக்கும் தெரியாது. மாற்றுத்திறனாளிகள் என்பதனாலேயே எம்மைப் பற்றி அறிந்துகொள்ள எவரும் மனைவதில்லை. தேசிய வீரர்களுக்கு ஆதரவு, உதவிகள் வழங்கப்படுவது வரவேற்கத்தக்கதே. ஆனால் மாற்றுத்திறனாளிகளான எங்களை எவ்விதம் நோக்குகின்றனர் என்பதே இன்றைய கேள்வியாகும்.

இங்கு டினேஷ் ஹேராத் கருத்து தெரிவிக்ைகயில், எனது சொந்த ஊர் பொலன்னறுவை, தந்தையை சிறுவயதிலேயே இழந்தவன் நான். எனது நிலத்தில் விவசாயம் செய்தேன். எனது தாயையும் உடன்பிறந்தவர்களை காப்பாற்றுவதாகவும் வாழ்வாதாரத்திற்காகவும் இலங்கை இராணுவத்தில் சேர்ந்தேன். எனது துரதிர்ஷ்டம் 2008 ஆம் ஆண்டு யுத்த களத்தில் எனது இடது கையில் நான்கு துப்பாகி ரவைகள் துளைத்தன. சில வருடங்களாக அதற்காக சிகிச்சை பெற்றேன். கையில் பிளேட் போடப்பட்டுள்ளது. இதன் பின்னர் எனக்கு கிடைத்த சிறப்பு பயிற்சியூடாக மாற்றுத்திறனாளிகள் போட்டியில் பங்கெடுத்தேன். ஈட்டி எறிதல் போட்டியில் பங்கு பற்றி பதக்கங்களைப் பெற்றுள்ளேன். ஆசிய போட்டியில் தங்கம் உலக சம்பியன் போட்டியில் வெள்ளிப்பதக்கம் பரா ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம்எனப் பல பதக்கங்களைப் பெற்றிருக்கிறேன். 2020 பராஒலிம்பிக் போட்டிக்காக பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். எமக்கான வசதிகள் சகலவற்றையும் செய்து கொடுத்துள்ளனர். ஆனால் என்னைப் பற்றி யாருக்குத் தெரியும் என்பது கேள்வியே. எம்மையும் ஒரு விளையாட்டு வீரராக சிந்தியுங்கள் என்பதே எமது கோரிக்கையாகும்.

இந்து என்ற யுவதி குறிப்பிடுகையில், எனது சொந்த ஊர் மொனராகலை, பிறப்பிலேயே ஒரு கையில் குறைப்பாட்டுடனேயே பிறந்தேன். குடும்பத்தில், பாடசாலையில் எனக்கு கிடைத்த வரவேற்பின் மூலம் விளையாட்டுப் போட்டியில் பங்கு கொண்டேன். க.பொ.த. பரீட்சை முடிந்தவுடன் கொழும்பிலிருந்து வந்த சமூகசேவை அதிகாரி என்னை தெரிவு செய்து, எனக்கு கொழும்பில் பயிற்சி அளித்து, 100 மீற்றர், 200 மீற்றர், 400 மீற்றர் ஓட்டப் போட்டி மற்றும் உயரம் பாய்தல் போட்டிகளுக்கான பயிற்சிகளை அளித்தார். அந்தப் பயிற்சிகளின் மூலம் சர்வதேச போட்டிகளில் பங்குபற்றி பதக்கங்கள் பெற்றுள்ளேன். தற்போது இலங்கையின் ஒரு முன்னணி நிறுவனத்தில் தொழில் பார்க்கிறேன். இந்நிறுவனம் எமக்குரிய வசதிகளை செய்து தந்தாலும், சமுதாயம் எமது திறமைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். எம்மைக் குறித்த சிந்தனை சமூகத்தில் இருக்க வேண்டும்.

இலங்கை விளையாட்டு அமைச்சில் ஏனைய வீரர்களுக்கு அளிக்கப்படும் உதவிகள், பயிற்சிகள் நிறைவாக உள்ளன. ஆனால் மாற்றுத்திறனாளிகள் அல்லது சக்கர நாற்காலில் வரும் வீரர்கள் அமைச்சின் மேல் மாடிக்குச் செல்வது சிரமமான விடயமாகவே உள்ளது. மாற்றுவழி ஏதும் அமைக்கப்படவில்லை. பொருத்துக் கால் போடப்பட்டவர்கள் சுமார் முப்பது படிகள் ஏற வேண்டும் என்பது சாதாரண விடயமல்லவே?. பயிற்சியின் பின்னர் மிகுந்த சிரமத்துடன் படியேறிச் செல்ல வேண்டும் என்ற வேதனையுடன் தன் கருத்துக்களைப் பகர்ந்தார்.

வேணி சுரேந்திர நாதன் பேசுகையில், நான் மாற்றுத்திறனாளிகளுடன் பணியாற்றுகின்றேன். தாம் ஊனமுற நேரும் என யாரும் நினைப்பதில்லை. இலங்கையில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்கின்றது. தங்களது வயது முதிர்ந்த பெற்றோர் எங்கேயாவது சென்று விழுந்து சரீரப் பாதிப்பை ஏற்படுத்திக் கொள்வாரோ என்ற பயம் அனேகருக்கு உண்டு. இன்றுள்ள நவீன பொதுப்போக்குவரத்துகள் கூட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை ஏற்றிச் செல்லக்கூடிய விதத்தில் அமையப் பெறவில்லை. பஸ்ஸில் விரைந்து ஏற வேண்டும். இறங்கும் போதும் அதே நிலைதான். ரயில் போக்குவரத்தும் அதுபோலவே உள்ளது. இலங்கையின் போக்குவரத்து என்பது சுலபமானதும் வசதியானதுமாக இல்லை. வயது முதிர்ந்த பெற்றோரும் வெளியில் செல்லப் பயப்படுகின்றனர்.

எமக்கு ஏதும் விபத்துக்கள் நேர்ந்தால் பிள்ளைகள் அவதியுறு நேருமே என்று வீடுகளிலேயே முடங்கி விடுகின்றனர். இதேநேரத்தில் பிள்ளைகள் தொழில் நிமித்தம் பிஸியாக இருப்பதால் தமது வயது முதிர்ந்த பெற்றோரை வெளியே காற்றாட அழைத்து செல்லக்கூட அவர்களுக்கு நேரமிருப்பதில்லை என்பது ஒரு சமூகப் பிரச்சினையாகும். இலங்கை மக்களின் மனநிலை மாறவேண்டும். EPF பெற்ற பெற்றோர் அதனை சில வருடங்களில் முடித்துவிட்டு, பிள்ளைகளிடம் தஞ்சம் புகவேண்டிய நிலை காணப்படுகிறது. பெருந்தோட்டங்களில் இது போன்ற விடங்கள் அதிகமாகவே காணப்படுகின்றன. அங்கும் போக்குவரத்து வசதிகள் மட்டுப்படுத்தப்பட்டதாகவே காணப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகள் எனும்போது அங்கவீனர் மற்றுமல்ல மூத்தபிரஜைகளையும் ஒரு வகையில் இதற்குள் வகைப்படுத்தலாம். நடைபாதைகளில் காணப்படும் விழிப்புலனற்றவர்கள் செல்வதற்கான பாதைவழியை இடையிலே முடிவற்றதாகயிருக்கும். இதனை குறித்து விசாரிக்கும் போது, சிறியதளவு எண்ணக்கையான மக்களுக்கு இவைகள் தேவைதான என்ற பதிலும் கிடைக்க் கூடியதாகவே இருக்கும்.

புள்ளி விபர திணைக்களத்தின் அறிக்கையின்படி ஒவ்வொரு 1000 ஆண்களில் 77 ஆண்களும் ஒவ்வொரு 1000 பெண்களில் 96 பெண்களும் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர். இலங்கையில் உள்ள மொத்த மாற்றுத் திறனாளிகளில் 996,936 பேர் பார்வை குறைபாட்டுடனும் 734,213 பேர் கால்கள் ஊனமாகவும் 389,077 பேர் கேட்டல் குறைபாட்டுடனும் 343,689 பேர் உளரீதியான பிரச்சினைகள் உள்ளவர்களாகவும் 197575 பேர் சுயமாகச் செயற்பட முடியாதவர்களாகவும் உள்ளனர். இலங்கையில் காணப்படும் 1.6 மில்லியன் மாற்றுத்திறனாளிகளில் 43 வீதத்தினர் ஆண்களாகவும் 57 வீதத்தினர் பெண்களாகவும் உள்ளனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களுக்கு ஏற்ற வாழ்வாதாரங்களை வழங்கி பொருளாதார ரீதியாக பாதுகாக்க வேண்டும். சமூகத்தில் கௌரவம் மிக்க பிரஜைகளாக அவர்களும் வாழவேண்டும். அவர்களும் நாட்டை அபிவிருத்தி செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.

 

போல் வில்சன்

([email protected])

Comments