மன்னார் பள்ளிமுனை புனித லூசியா விளையாட்டு மைதானத்தின் அவல நிலை | தினகரன் வாரமஞ்சரி

மன்னார் பள்ளிமுனை புனித லூசியா விளையாட்டு மைதானத்தின் அவல நிலை

நேரடி ரிப்போட்

சிறந்த வீளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்கு விளையாட்டு மைதானங்களின் பங்களிப்பு மிகவும் அவசியம். அந்த வகையில் மன்னார் மாவட்டத்தில் முன்னணி விளையாட்டு கழங்கங்களில் ஒன்றான பள்ளிமுனை புனித லூசியா விளையாட்டுக்கழகத்தினர் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

பல்துறைசார் விளையாட்டு வீரர்கள் மன்னார் மாவட்டத்தில் உள்ளனர்.அந்த வகையில் மன்னார் பள்ளிமுனை மீனவக் கிராமத்திலும் பல்துறைசார் விளையாட்டு வீரர்கள் உள்ளனர்.

அக்கிராமத்தில் உள்ள அனைத்து வீரர்களும் தமது பயிற்சிகளை மேற்கொள்ளுவது பள்ளிமுனை கிராமத்தில் அமைந்துள்ள மன்னார் பள்ளிமுனை புனித லூசியா விளையாட்டு மைதானத்திலேயே

ஆனால் அந்த விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்திப்பணிகள் கிடப்பிலேயே காணப்படுவது அக்கிராம வீரர்களுக்கு தினம் தினம் வேதனையை ஏற்படுத்துகின்றது.

குறித்த மைதானத்தின் தற்போதைய நிலை குறித்து இவ்வாறு கூறுகிறார் பள்ளிமுனை புனித லூசியா விளையாட்டு கழகத்தின் தலைவர்:-ஜே.அன்ரன் பிகிராடோ.

மன்னார் பள்ளிமுனை புனித லூசியா விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்தி பணிகள் கடந்த 2014 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு சுமார் ஐந்து வருடங்கள் கடந்துள்ள போதும் மைதான அபிவிருத்தி பணிகள் நிறைவடைந்ததாக இல்லை.

பள்ளிமுனை புனித லூசியா விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்தி பணிகள் கடந்த 2014 ஆம் ஆண்டு நகர திட்டமிடல் அதிகாரசபையின் (யூ.டி.ஏ) நிதி உதவியுடன், மன்னார் நகர சபையூடாக அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த அபிவிருத்தி திட்டத்திற்காக நகர திட்டமிடல் அதிகார சபை 40 மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்திருந்தது.

கடந்த 2014 ஆம் ஆண்டு இந்த விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்தி பணிகள் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறித்த நிதியில் விளையாட்டு மைதானத்திற்கான சுற்று மதில் அமைத்தல், பார்வையாளர் அரங்கு அமைத்தல், மைதானத்தை சமப்படுத்தி மண் நிரப்புதல் மற்றும் மைதானத்தில் புல் வளர்த்தல் உள்ளிட்ட அபிவிருத்தி பணிக்காவே நிதி ஒதுக்கப்பட்டது.

எனினும் குறித்த மைதானம் சமப்படுத்தப்பட்டு,பல இலட்சம் ரூபாய் செலவில் புல் வளர்க்கப்பட்ட போதும் புற்கள் அனைத்தும் பராமரிப்பின்றி கருகிப் போய்விட்டன.

மேலும் பார்வையாளர் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. ஒதுக்கப்பட்ட 40 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் அபிவிருத்தி பணிகள் முழுமை பெறாத நிலையில் சுமார் 26 மில்லியன் ரூபாய் பணம் இது வரை அபிவிருத்திக்காக செலவு செய்யப்பட்டுள்ளது.

எனினும் அபிவிருத்தி பணிகள் முழுமை பெறாத நிலையில்,14 மில்லியன் ரூபாய் பணத்திற்கான அபிவிருத்தி பணிகள் மந்த கதியில் காணப்படுகின்றன.

சுற்று மதில் அமைத்தல் மற்றும் கருகிய புற்களுக்கு பதிலாக புதிய புற்களை நாட்டுதல் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி பணிகள் இம் மைதானத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய தேவை உள்ளது.

தொடர்பாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள்,அமைச்சர்கள் குறிப்பாக விளையாட்டுத்துறை அமைச்சர் உட்பட அரசியல் பிரமுகர்களிடம் பல தவைகள் நேரடியாகவும்,எழுத்து மூலமாகவும் கோரிக்கைகளை முன் வைத்தும் எவ்வித பலனும் கிட்டவில்லை.

குறித்த விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்தி பணிகளில் ஏற்பட்டுள்ள மந்த கதியின் காரணமாக பள்ளிமுனை கிராமத்தைச் சேர்ந்த ஆண், பெண் விளையாட்டு வீரர்கள் தொடர்ந்தும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதோடு,அபிவிருத்தி முழுமை பெறாத மைதானத்தில் தமது பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எனவே, உரிய அதிகாரிகள் தலையிட்டு குறித்த அபிவிருத்தி பணியை முழுமை பெற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.என கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது. குறித்த மைதானம் பல்வேறு வீரர்களை உருவாக்கியுள்ளதோடு, மாவட்ட மட்டம், மாகாண மட்டம் மற்றும் தேசிய ரீதியில் பல்வேறு வீரர்கள் சென்றடைய இந்த மைதானம் உறு துணையாக இருந்துள்ளது.

எனவே, இக்கிராமத்தில் உள்ள பல்வேறு துறைசார் விளையாட்டு வீரர்கள் ஒருமித்து தமது பயிற்சிகளை மேற்கொள்ளும் இம் மைதானம் உடனடியாக புனரமைப்பு செய்யப்படவேண்டும். அதற்கு அனைத்து தரப்பினரது ஒத்துழைப்பும் தேவை என பள்ளிமுனை கிராம மக்களும், பள்ளிமுனை புனித லூசியா விளையாட்டுக்கழகத்தினரும் கோரிக்கை விடுக்கின்றனர்.

மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன்.

மன்னார் பள்ளிமுனை புனித லூசியா விளையாட்டு மைதானத்தில் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி பணிகள் நீண்டகாலமாக அசைவற்று காணப்படுகின்றது. இம் மைதானத்தின் தற்போதைய நிலை குறித்து உரிய தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதோடு, கைவிடப்பட்ட பணிகளை துரிதப்படுத்த நகர சபையூடாக கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

இக் கிராம விளையாட்டு வீரர்களை தமது பயிற்சிகளை தங்கு தடையின்றி மேற்கொள்ள இம் மைதானத்தின் அபிவிருத்தி பணிகளை பூர்த்தி செய்து கொடுக்கும் கடமை அதிகாரிகள், அரசியல் வாதிகளின் பொறுப்பாகும்.

 

 

 

Comments