சொந்த சந்ததியை தொலைத்துக் கொண்டிருக்கிறோமா? | தினகரன் வாரமஞ்சரி

சொந்த சந்ததியை தொலைத்துக் கொண்டிருக்கிறோமா?

இன்பமும் துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை. இந்த வாழ்க்கையின் துன்பங்களை மட்டுமே அனுபவித்து முடித்தபின் இன்பமே மிஞ்சுகிறது என்ற வியாக்கியானங்களெல்லாம் உண்மையான வாழ்க்கைக்கு ஒத்து வருவதில்லை. சினிமாவில் மட்டுமென்ன? வில்லர்கள் செய்யக்கூடிய அனைத்து கேடுகளையும் செய்து கொண்டே, வாழ்க்கையை சுக போகமாக அனுபவிப்பார்கள்.

வாழ்க்கையின் தத்துவமே அடிபட்டுப்போகிறது. இன்றைய சினிமா இவற்றுக்கெல்லாம் மாறாக எமது இளையவர்களை வழிநடத்துவது கண்கூடு. முன்னைய சினிமாவில் கதாநாயகன் என்றால் அவன் அன்பானவாக இருப்பான். அனைவரையும் அணைத்துப் போற்றுவான் தீய பழக்கங்கள் அற்றவனாக இருப்பான் தாய் தங்கை போன்ற உறவுகளை சீராட்டுபவனாகவும் இருப்பான் வலிந்து சென்று பிறருக்கு உதவுபவனாக இருப்பான்.

இன்றைய கதாநாயகன் எப்போதும் புகைத்தலையும் மது பானங்களையும் அளவுக்கதிகமாகவே பாவிப்பான். யாருக்கும் அடங்கான். முக்கியமாக தொழிலற்றவனாகவும் வீதிகளில் அடாவடி பண்ணுபவனாகவும் இருப்பான் அடிமட்டத் தொழிலாளியாக இருப்பான் பெரிய கோடீஸ்வரரின் மகளை விரட்டி விரட்டி காதலிப்பான். அவளுக்கு சவால் விட்டு அவளையே காதலிக்க வைக்கும் திறமை படைத்தவனாக இருப்பான். இவை தவிர அவன்கையில் திருப்பாச்சி அரிவாளோ துப்பாக்கியோ தாராளமாக புழங்கும் அவன் செய்யும் கொலைகளும் தண்டனைகளும் மிக அதிகம் எந்த சட்டமும் படம் முடியும்வரை அவனை நெருங்காது.

இதை வைத்துக்கொண்டுதான் நாம் இப்போது சமுதாயத்தைப்பார்க்க வேண்டியதாக உள்ளது. இப்போதெல்லாம் பெண்கள் படிப்பதே முக்கியம் எனக் கொண்டு செயற்படுகிறார்கள். ஆனால் ஆண்பிள்ளைகள் கற்பதை இடை நிறுத்தி விடுகிறார்கள். காரணம் அது அவர்களுடைய சிந்தனைக்கு அநாவசியமாகப்படுகிறது. கல்வி என்பதைவிட, விரைந்து நட்புகளை சம்பாதிப்பதும் அவர்களுடன் கூடித்திரிவதும் தாங்களும் ராஜாக்கள் போல அதாவது சினிமா கதாநாயகர்கள் போல திரிவதையும் பெருமையாகக் கொள்கிறார்கள். இவர்களைப் பொறுத்தவரை மிக முக்கியமாக தாங்கள் அழகாக பகட்டாக திரிவதையே பெருமையாக நினைக்கின்றனர். இந்த நினைப்பிலேயே அவர்கள் சட்டவிரோதமான போதைப் பொருட்களுடன் ஊடாடுகின்றனர்.

தொழில் என்பது இவர்களுக்கு தேவையற்றதாக தெரிகிறது. போதிய பணம் வெளிநாடுகளில் வசிக்கும் (வதைபடும்) அண்ணன் மாமன் போன்றவர்களால் வந்து சேர்றது. என்னடா தம்பி படிப்பை விட்டிட்டாய். வேலையொண்டும் தேடேல்லயே என்று கேட்டால், நான் வெளியில போக ட்ரை பண்ணுறன் அண்ணா எடுக்கிறன் எண்டு சொல்லியிருக்கிறார், அல்லது மாமா எடுக்கிறன் என்று சொல்லியிருக்கிறார் என்பதான பதில்கள் கிடைக்கின்றன.

உள்ளூரில் அவர்கள் எதிர்பார்ப்பதான வேலைகள் கிடைப்பதில்லையா? அப்படி கடைசிவரை ட்ரை பண்ணுபவர்கள் முடியாத நிலையில் தமது வாழ்க்கையை போதைப் பொருட்களுக்குள் நாசமாக்கிக் கொள்கின்றனர். உரிய காலத்தில் திருமணம் செய்ய முடிவதில்லை. மேலும் இவர்களுக்கு போதியளவு திருமணச் சந்தையில் வரவேற்பும் இருப்பதில்லை. உங்களால் ஜீரணிக்க முடியாத உண்மை என்னவென்றால் இப்போது முதிர் கன்னிகளைவிட, முதிர்ந்த ஆண்கள் அதிகமாகி வருகிறார்கள்.

இதேயளவில் பெண்களும் இருந்தாலும் அவர்களுக்கான கேள்வி அதிகரித்தே காணப்படுகிறது. அவர்கள் குறைந்தது க. பொ.த. வரையிலாவது படித்து விட்டு நல்ல வேலையொன்றை அடைந்தவர்களாகளோ தேடுபவர்களாகவோ உள்ளார்கள். நல்ல வாழ்க்கைத்துணையை தேடுவதற்கு அவர்கள் முயலும்போது கூடுமானவரை தமக்கு வெளிநாட்டு மாப்பிள்ளையே வேண்டுமென்ற தமது ஆசையை திருமணத்திற்கான நிபந்தனையாக வைக்கின்றனர்.வாழ்க்கையில் இன்பம் என்பது பணத்தினால் மட்டுமே ஈட்டப்படுகிறது என்ற போலியான எண்ணமும் அந்தப்பணம் வெளிநாட்டிலேயே கிடைக்கிறது என்ற மோசமான சிந்தனையும் நமது மக்களின் யதார்த்தமான இன்பங்களை அள்ளிச் சென்றுவிடுகிறது.

திருமணம்தான் இப்படியென்றால். கல்யாணமாகி குடும்பமாக இருக்கும் கணவன்களையும் இந்த பேராசை பிடித்தாட்டுகிறதுதான் பெரும் வேதனை. கைநிறையச் சம்பாதிக்கும் கணவன், மனைவியும் வேலைக்குப் போகிறாள். நல்ல சம்பளம். பிள்ளையும் ஒன்றேயொன்று, ஒருகட்டத்தில் மனைவி தன் கணவனை நச்சரிக்கத் தொடங்கினாள். தனது உறவினர் மூலமாக அவனை வெளியே அனுப்பிவிடத் துடித்தாள். கணவன் வெளிநாடு பயணமாகி, பல மாதங்கள் பட்ட இடையூறுகளின் பின் ஒருவழியாக வெளிநாடொன்றில் கால்பதித்தான். இப்போது மனைவி தன் ஒரேபிள்ளையை விடுதியொன்றில் விட்டுவிட்டு ஜாலியாக சுற்றித்திரிகிறாள்.

இப்போது வாலிப வயதுக்குள் வந்து கொண்டிருக்கும் அந்த பிள்ளையை நினைத்துப்பார்த்தால் எந்தவிதமான பிடிப்புமில்லாத ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் அவனுக்கு கல்வி முக்கியமாக படவில்லை. என்பதும் தன்னையும் தந்தை வெளிநாட்டுக்கே அழைத்து விடுவார் என்ற கனவும் வருவதில் ஆச்சரியமென்ன? அவன் இப்போதே சக தோழர்களை கதாநாயகன் பாணியில் கூட்டி மகிழ்விக்கத் தொடங்கியுள்ளான். அவனது ஆடை அலங்காரங்கள் கெத்தான பேச்சுக்கள் எல்லாமே அவனுக்குப் பிடித்த ஒரு சினிமா கதாநாயகனை மையப்படுத்தியதாக அமைந்து வருகிறது. பேசும்போதும் அந்த பஞ்ச் வார்த்தைகளை பேசுகிறான். இது ஒன்றல்ல பதினெட்டு முதல் இருபத்தைந்து வயதுக்குள் இருக்கும் இளைஞர்களே கூடியளவு குற்றச் செயல்களில் நாட்டமாக இருக்கிறார்கள் என்பதை எமது காவற்றுறை கூறிவருகிறது. அதிலும் வடக்கில் நடக்கும் கொலை கொள்ளை கற்பழிப்புகளிலும், இவர்களது பங்கு கணிசமாக உள்ளது என காவற்றுறையின் சிறுவர் நன்னடத்தைப் பிரிவினால் சுட்டிக்காட்டப்படுகிறது. நாம் இன்பத்தை எங்கோ தேடும் அதே வேளை நமது சொந்த சந்ததியை தொலைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை ஏன் மறந்தோம்?

Comments