கண்டி மீதான படையெடுப்பை மிகச் சரியாக திட்டமிட்ட ஜோன் டொய்லி! | தினகரன் வாரமஞ்சரி

கண்டி மீதான படையெடுப்பை மிகச் சரியாக திட்டமிட்ட ஜோன் டொய்லி!

போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் ஆகிய வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்களினாலும் கைப்பற்ற முடியாதிருந்த கண்டி இராசதானியை தம் உடைமையாக்கிக் கொண்டு தமது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக விளங்கிய முதலமைச்சர் எஹலபொலையை கைது செய்த ஆங்கிலேயர்.

ஈவிரக்கமற்ற ஓர் அரசனிடமிருந்து நாட்டையும் மக்களையும் விடுவிக்கும் மீட்பர்களாக தம்மைக் காட்டிக் கொண்டே ஆளுநர் பிரவுன்றிக்கும் ஜோன்டொயிலியும் கண்டியை முற்றுகையிட நாலா புறங்களிலிருந்தும் தமது படையணிகளை ஊடுருவச் செய்து கொண்டிருந்ததை எஹலப்பொல அறியான். அவிசாவளையில் தரித்து நின்ற டொயிலி மேஜர் ஹூக் தலைமையில் ஓர் படையணியை கண்டிக்கு அனுப்புவதாக தெரிவித்து அவ்வணிக்கு எஹலபொலையும் மக்களும் ஒத்தாசை வழங்கினால் கண்டியை ஸ்ரீ விக்கிரம இராஜசிங்களிடமிருந்து மீட்டு கண்டியில் தேனும் பாலும் ஓடச் செய்வதாக தெரிவித்தான்.

1815 பெப்ரவரி மாத கண்டி முற்றுகைக்கு முன்னர் தக்கபடி வியூகங்களை வகுத்திருந்தான் டொயிலி. 1803ல் ஆங்கிலேயர் வசமிருந்த பிரதேசங்களிலிருந்து வியாபார நிமித்தம் கண்டிக்குச் சென்ற முஸ்லிம்கள் கண்டி அரசனின் கட்டளையின் பிரகாரம் தண்டிக்கப்பட்டமையை கருத்தில் கொண்ட ஜோன் டொயிலி, 1814ல் தமது அதிகாரத்திற்குட்பட்ட பகுதியிலிருந்து சுதேசிகளான சிலரை வியாபாரிகள் போன்று சென்றுவருவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டதைத் தொடர்ந்து புடவை வியாபாரிகளாக அங்கு சென்ற சிலர் ருவான்வெல்ல இம்புயான என்றுமிடத்தில் அரச அதிகாரிகளினால் கைதாகி கொடுமையான தண்டனைக்குட்படுத்தப்பட்டனர். அவர்களில் ஏழுபேர் மரணமடைந்தும், ஏனையோர் அங்கவீனர்களாகவும் கொழும்பு திரும்பியிருந்தனர். இச்செயலை படுபாதக நடவடிக்கையாக வெளிப்படுத்தி கண்டியை முற்றுகையிடப்போவதாக அறிவித்த ஆளுநரும், டொயிலியும் இந்த நாட்டின் குடிமக்கள் எழுவர் மரணமடைந்து ஏனையவர்கள் கைகால்களை இழந்ததை ஒரு பொருட்டாகக் கருதவில்லை.

இச்சம்பவம் பற்றி வெளிவந்த தகவல்களைப் பார்ப்போம்.

1814ம் ஆண்டு பெப்ரவரி மாதம் கொழும்பை அண்மித்த அத்துறு கோறளைக்குட்பட்ட பிரதேசத்திலிருந்து சிலர் புடவை மற்றும் உப்பு வியாபாரம் செய்வதற்காக கண்டியை நோக்கிச் சென்றபோது இம்புலான என்னுமிடத்தில் மேலும் ஐந்து வியாபாரிகள் இணைந்துள்ளனர். அவ்வூரின் கிராமத் தலைவனின் தலைமையிலான குழு இவர்களிடமிருந்து பொருட்களைச் சூறையாடியது.

இச்சம்பவம் தொடர்பாக மகுலாகம என்னும் கிராமத்தில் இருந்த அரச பிரதானியைச் சந்தித்து நிகழ்ந்தவற்றை எடுத்துக் கூறினர் வியாபாரிகள். அப்பிரதானி இவர்களை அத்துமீறிவியாபாரம் செய்ததாக குற்றம் சுமத்தி கைது செய்து கண்டி அரசனின் கவனத்திற்கு புகார் அனுப்பியிருந்தான். இதன் பின்னர் நிகழ்ந்த புலனாய்வின் பிரகாரம் ஆங்கிலேயரிடம் வேதனம் பெறும் உளவாளிகளே இவ்விதம் வியாபாரிகளாக வந்திருப்பதாக தெரியவந்தமையினால் சினம் கொண்டிருந்த மன்னன், கண்டி இராசதானி பற்றிய தகவல்களை எதிரிகளிடம் சமர்ப்பிப்பதற்காக வந்திருந்த ஒற்றர்களின் வலது கரங்கள் துண்டிக்க உத்தரவிட்டான். அக் கைகள் அவர்களின் கழுத்தில் தொங்கவிடப்பட்டன. நாசியும், காதும் அறுக்கப்பட்டன. இவர்கள் கொழும்புக்கு திருப்பியனுப்பப்பட்டனர். அதன்மூலம் எவரும் தமது அரசுக்கு எதிராக உளவு பார்க்க முன்வரமாட்டார்களென்று எதிர்பார்ப்பு அரசனுக்கு இருந்தது. எனினும் இச்சம்பவம் குறித்து ஆளுநர் பிரவுன்றிக்; மன்னன் இராஜசிங்கன் ஆங்கிலேயர்களை துச்சமாக மதிப்பதாக சினம் கொண்டான். டொயிலியின் தந்திரோபாயமே இதுவென ஆளுநரும் அறிந்திருக்கவில்லை.

ஆங்கிலேய உயர் அதிகாரிகளை உடனடியாக அழைத்த ஆளுநர், மன்னன் இராஜசிங்கன் ஆங்கிலேய சாம்ராஜ்யத்தையே அவமதித்துள்ளதாகவும் படையெடுப்புக்குத் தயாராகும்படியும் கூறினான். இதற்கிடையில் டொயிலி தனது புலனாய்வாளர்கள் மூலம் பெற்றுக்கொண்ட தகவல்களின் பிரகாரம் மன்னன் இராஜசிங்கன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் எஹலபொல மூலமாக சப்ரகமுவையில் ஆரம்பிக்கப்பட்ட கிளர்ச்சி மிகப் பாரிய அளவில் விரிவடைந்துள்ளதாகவும் ஏழு கோரளை, நான்கு கோரளை மற்றும் மூன்று கோரளை மக்களும் இப்போது இராஜசிங்களை வெறுப்பதாகவும் ஆளுநருக்கு அறிவித்தான்.

தக்க தருணம் வாய்த்துள்ளதாக உணர்ந்த ஆளுநர் பிரவுன்றிக், யுத்தத்திற்கு தயாரானான். பிரிட்டிஷ் அரசின் யுத்தங்களுக்கு பொறுப்பான செயலாளராக பதவி வகித்து யுத்தமனோ நிலை கொண்டவனாக இருந்த பிரவுன்றிக் வெகு இலகுவாக கண்டியையும் அதன் மூலம் முழு இலங்கையையும் தமது ஆட்சிக்குட்படுத்த முடிவு செய்தான். இது பற்றிய விடயங்களை லண்டனுக்கு தெரிவித்து அங்கிருந்து பதில்வரும் வரையிலும் காத்திருப்பதற்கு பொறுமையற்றவனாக காணப்பட்ட ஆளுநர், கண்டி மன்னனுக்கு கடிதம் அனுப்புமாறு ஜோன் டொய்லியைப் பணித்தான்.

அக்கடிதத்தில், தமது நிருவாகத்திற்குட்பட்ட பிரதேசத்தைச் சேர்ந்த அப்பாவி வியாபாரிகளை படுமோசமான முறையில் தண்டித்தமைக்கு பலத்த கண்டனத்தைத் தெரிவிப்பதாகவும் தண்டிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் நட்ட ஈடு வழங்கவேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

டொயிலியின் அடுத்த நடவடிக்கை, ஆங்கிலேயர் நிருவாகத்திற்குட்பட்ட பகுதிகளுக்குள் பிரவேசிக்கும் கண்டியர்களுக்கு சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதாக அமைந்தது. எனவே போர்மேகம் சூழ்ந்துள்ள மத்திய மலைநாட்டில் மன்னன் இராஜசிங்கன் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் தமது உயிருக்கு உத்தரவாதமில்லையென உணர்ந்த அமைச்சர்கள், பிரதானிகளில் பலர் கண்டியை விட்டகன்று கரையோர பிரதேசங்களை நோக்கி நகர்ந்தனர். இன்னும் சிலர் தமது மனைவி மக்களை ஆங்கிலேயர்களின் பாதுகாப்பில் குடியமர்த்திவிட்டு கண்டியில் தங்கியிருந்தனர்.

இந்நிலையில் மன்னன் இராஜசிங்கனின் நம்பிக்கைக்குரியவனாகவும், எஹலபொலையின் பரம எதிரியுமான மொல்லிகொடை ஆங்கிலேயருடன் கடிதத் தொடர்புகளைக் கொள்ளலானான். மொல்லிகொடையையும் மூளைச் சலவைக் குட்படுத்திய டொலியி, அவனும் மனமாற்றம் கொண்டுள்ளமையை ஏனைய அரச அதிகாரிகள் அறியும் வண்ணம் செய்திகளை பரவவிட்டான். இதனால் பெருமளவில் அரச அதிகாரிகள் கண்டியை விட்டு கரையோர பிரதேசங்களை நோக்கி நடையைக் கட்டினர். இயற்கை அரண்களும், கடின பிரவேச மார்க்கங்களும், கெரில்லா போர்முறைகளில் கை தேர்ந்தவர்களும் நிறைந்த கண்டி இராசதானியை கைப்பற்ற இவ்வாறு பலவீனப்படுத்தும் முயற்சியில் வெற்றிக்கு மேல் வெற்றிகள் டொயிலிக்குக் கிடைக்கத் தொடங்கின.

தனக்கெதிராக பாரிய வலைவிரிப்பு நிகழ்ந்து வருவதை ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கனும் அறியாமல் இல்லை தனது ஆட்சியில் நிகழ்ந்த கொடூர தண்டனைகள் தன்னையே சுற்றிக் கொண்டிருப்பதை உணர்ந்த மன்னன் ஓர் அரசனுக்கு ஆலோசனைகள் வழங்குவதற்காக மூதறிஞர்கள் இருந்திருப்பின் இத்தகைய நிகழ்வுகள் இடம்பெற்றிருக்கமாட்டாதென கவலையுற்றான்.

மன்னன் ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கன் ‘கொர்ன்வோலிஸ்’ கப்பலில் வேலூர் நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும்போது,

“ஆங்கிலேய ஆட்சியாளர்களினால் குற்றவாளிகளாகக் காணப்பட்டவர்களுக்கு தண்டனைகள் வழங்கப்படுவதில் தாமதங்கள் ஏற்படக்கூடியவாறு ஆலோசனைகள் கூறும் அறிஞர்கள் இருக்கின்றனர். நாங்கள் ஆலோசனைகளைப் பெறும்போது குற்றவாளிகள் மரணத்தைத் தழுவியிருப்பார்கள்” என தனது ஆதங்கத்தை வைத்தியர் ஹென்ரி மார்ஷலிடம் வெளிப்படுத்தியிருந்தான்.

கண்டி இராசதானியில் தொன்றுதொட்டு துரோகச் செயல்களும், காட்டிக் கொடுப்புகளும் அரசுக்குள் நிகழ்ந்து வந்திருப்பினும் கண்டியர்கள் மத்தியில் இத்தகைய பிரிவினைகளும், பகைமையும் ஏற்பட்ட வரலாறு கிடையாதெனலாம். தனது மனைவி மக்களை இழந்தமை காரணமாக பழிவாங்கத் துடிக்கும் எஹலபொலையும் தண்டனைக்குள்ளானவர்களின் உறவினர்களும் தங்களுக்கு ஒரு தருணம் கிட்ட வேண்டுமென எதிர்பார்க்கும் நிலை உருவாகினயமையினால் மன்னன் இராஜசிங்கன் அரண்மனையை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழிகள் இருப்பதாக தோன்றவில்லை. நாடும் நாட்டு மக்களும் வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்களின் பிடிக்குள் சிக்கியிருக்கும் சூழ்நிலை வெளிப்படையாக தெரிந்தது.

அவிசாவளையில் தரித்து நின்று டொயிலியும், மேஜர் ஹூக் தலைமையிலான படையணியும் கண்டியை நோக்கி நகரும்போதே மொல்லிகொடையின் இளைய சகோதரனால் ஆரம்பிக்கப்பட்ட கலகத்தை அடக்குவதற்காக மூன்று கோரளைக்கு வந்த கண்டி அரச வீரர்கள் கலகக்காரர்களைக் கைது செய்வதற்கு பதிலாக இரண்டு மூன்று வீடுகளை தீவைத்து கொளுத்திவிட்டு கண்டிக்குத் திரும்பினர்.

மேலும் பொறுத்திருக்க முடியாதவனாக ஆளுநர் பிரவுன்றிக் கண்டி இராசதானி மீது போர்ப்பிரகடனத்தை அறிவித்தான். இது 1815 பெப்ரவரி 15ம் திகதி நிகழ்ந்தது. யுத்த பிரகடனத்தின் பிரதி லண்டனுக்கு கப்பல் மார்க்கமாக அனுப்பப்பட்டது.

கண்டி அரசன் மிக கொடூரமான முறையில் மக்களை வதைப்பதாகவும் அவர்களை மீட்குமாறு மக்களிடமிருந்து கிடைக்கும் வேண்டுகோளில் பேரில் கண்டி மீது போர் தொடுப்பதற்கு அனுமதி கோரியும் பிரவுன்றிக் விடுத்த வேண்டுகோளை லண்டனில் உள்ள போர்கள் தொடர்பான அலுவலகமும் மக்கள் பிரதிநிதிகள் சபையும் ஏற்றுக் கொண்டன.

தனது பதவிக்காலத்திலேயே கண்டி இராசதானியை பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் வேண்டுமென அங்கமாக்கிவிட கனவு கண்டவன் பிரவுன்றிக். யுத்தத்தினால் மாத்திரம் மத்திய மலைநாட்டை கைப்பற்ற முடியாதெனவும் தந்திரரோபாயத்தின் மூலமே அதனை நிறைவேற்ற முடியுமெனவும் அதனை தன்னாலேயே நிறைவு செய்ய முடியுமென்பதை உலகுக்கு உணர்த்துவதற்கு திடசங்கப்பம் பூண்டிருந்தான் ஜோன்டொயிலி.

எஹலபொல சகிதம் மேஜர் ஹூக் தலைமையிலான படையணி அவிசாவளையிலிருந்து புறப்பட்ட பின்னர் மேலும் இரண்டு படையணிகளை அதனைத் தொடர்ந்து கண்டிக்கு அனுப்பிய ஜோன் டொயிலி அம்பாந்தோட்டையிலிருந்து ஒரு படையணியையும், காலியிலிருந்து இன்ெனாரு படையணியையும் கண்டி நோக்கி விரைவுபடுத்தினான். ஐந்தாவது மற்றும் ஆறாவது படையணிகளை திருக்கோணமலையிலிருந்து கண்டியை நோக்கி அனுப்பினான். அப்படைகள் மாத்தளை – நாலந்தா வழியாக பயணித்தன. ஏழாவது படை மட்டக்களப்பிலிருந்து பிபிலை வழியாக கண்டிக்குப் புறப்பட்டது. எட்டாவது படை நீர்கொழும்பிலிருந்து பலன வழியாக கண்டிக்கு விரைந்தது.

இவ்வாறு நாலாபுறங்களிலிருந்தும் படையணிகள் புறப்படும் வகையில் இரகசியமாக கண்டி முற்றுகைக்காக திட்டமிட்ட டொயிலியின் அடுத்த கட்ட நடவடிக்கையை முதலமைச்சர் மொல்லிகொடை ஆங்கிலேயரிடம் மண்டியிடச் செய்யவேண்டுமென்பதாக அமைந்தது. ஸ்ரீ விக்கிரம இராஜ சிங்கன் மீது அவதூறு பரப்புவதில் சிங்கள தலைவர்களை விட ஜோன் டொயிலியின் பங்கு பிரதானமாக அமைந்திருந்தது.

(தொடரும்)

 

Comments