ஊழலெனும் பெருச்சாளி! | தினகரன் வாரமஞ்சரி

ஊழலெனும் பெருச்சாளி!

(இலங்கை நிர்வாக சேவை அலுவலராகிய கட்டுரையாளர் ஆசிய தொழில்நுட்ப நிறுவகத்தில் (தாய்லாந்து) இயற்கை வள முகாமைத்துவ முதுமாணிக்கற்கையை மேற்கொண்டு வருகிறார். அவரை [email protected] என்ற மின்னஞ்சலூடாக தொடர்பு கொள்ள முடியும்)

2016 ஆம் ஆண்டு டிரான்ஸ்பெரன்சி இன்டர்னஷனல் நிறுவனத்தினால் உலகளாவிய ரீதியில் நடாத்தப்பட்ட ஆய்வொன்றிலே பங்குபற்றியவர் களுள் நான்கில் ஒருவர் அரச சேவையொன்றைப் பெறுவதற்காக இலஞ்சம் வழங்கியமையை ஒப்புக்கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமன்றி அவ்வாய்வில் பங்குபற்றியவர்களுள் 57 சதவீதமான மக்கள் தத்தமது ஊழலை வெற்றிகொள்ள எடுத்த நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கங்கள் மிக மோசமாக இருக்கின்றன எனவும் குறிப்பிட்டிருக்கின்றார்கள். அதேவேளை ஆய்வில் பங்குபற்றிய இளைஞர்களோ தாம் மாற்றமொன்றை உருவாக்க ஆர்வமாக இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதே நிறுவனத்தினால் ​வௌியிடப்பட்ட 2017 ஆம் ஆண்டுக்கான அறிக்கைக்கமைய உலகளாவிய ரீதியில் அதிகளவு ஊழல் புரியும் திணைக்களமாக பொலிஸ் திணைக்களமும் மக்கள் பிரதிநிதிகள் குழுவும் 36 சதவீத வாக்குகளைப் பெற்றுக் காணப்படுகின்றன. அவற்றிற்குப் போட்டியாக ஆட்சித்துறை/அரச நிர்வாகத்துறையானது 35 சதவீத வாக்குகளையும் வியாபார நிறைவேற்று அலுவர்கள் 34 சதவீத வாக்குகளையு ம் பெற்றுள்ளனர். 18 சதவீத வாக்குகளைப் பெற்றிருப்பவர்கள் சமயத்தலைவர்களே. இது உலகளாவிய நிலைமையாகும்.

ஊழல் என்றால் இலஞ்சம் மட்டுமே என எண்ணுபவர்கள் பலர் தான் எம்மத்தியிலே வாழ்கிறார்கள். ஆனால் ஊழலின் எல்லைகள் பரந்து பட்டவை. ஊழல் என்பது ஒருவர் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை தனது தனிப்பட்ட நலனுக்காக துஷ்பிரயோகம் செய்வதைக் குறிக்கும் என டிரான்ஸ்பேரன்சி இட்டர் நஷனல் நிறுவனம் வரைவிலக்கணப்படுத்துகிறது. ஆதலினால் ஊழல் நடைபெற வேண்டுமாயின் பின்வரும் நிபந்தனைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட வேண்டும். அதாவது அதிகாரமளிக்கப்பட்ட நபரொருவர் இருக்கவேண்டும். அவர் தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்ய வேண்டும். அதனால் அவர் தனிப்பட்ட நன்மைகளை அனுபவிக்க வேண்டும்.

இந்த ஊழலானது பொதுவாக ஆசிய மக்களின் கலாசாரத்துடன் இயைந்து காணப்படுகின்றமை தவிர்க்க முடியாததாகியிருக்கிறது. ஆதலினால் தான் ஒவ்வொரு மொழியிலும் அதன் கலாசாரத்துடன் இயைந்த பெயரொன்றின் மூலம் ஊழலை, அதிலும் குறிப்பாக இலஞ்சத்தை குறிப்பிடுவர். அந்த வகையிலே இலஞ்சத்தை தமிழில் ‘சந்தோஷம்’ எனக் குறிப்பிடுவர். எமக்கு ஆகவேண்டிய காரியம் ஒன்றை மேற்கொள்ள எவரேனும் உதவியிருந்தால், அது அவரது கடமையாக இருந்தாலும் கூட அவருக்குப் பணத்தையோ அல்லது பரிசுப்பொருளையோ வழங்கி “சந்தோஷத்துக்காக வைத்திருங்கள்” என்று சொல்வது எம் மத்தியில் காணப்படுகின்றமையை எவரும் மறக்க இயலாது. இதுவும் கூட ஊழலே.

ஊழல் என்ற பொதுப் பெயரால் அழைக்கப்படும் செயற்பாடுகள் உண்மையில் பல வகைப்படும். இலங்கையைப் பொறுத்தவரையிலே ஊழல் என்பது பாரிய குற்றமொன்றாகும். இலஞ்சம், மோசடி, பலாத்காரம், தீர்மானம் எடுக்கும் உரிமையைத் தவறாகப் பயன்படுத்தல், உறவு, நட்புறவு காரணமாக செய்யப்படும் சலுகைகள், அநீதியான அறவீடுகள், பொதுச் சொத்துகளை முறைகேடாகப் பாவித்தல், சட்ட விரோதமான கொடைகள் அனைத்துமே ஊழல் என்றுதான் பொருள் படும். அவை ஊழலின் பல்வேறு வடிவங்களாக க் கருதப்படுகின்றன.

நபரொருவர் தனது நன்மைக்காகவோ அல்லது வேறொறுவரின் நன்மைக்காகவோ தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி எவரையேனும் பொறிக்குள் சிக்க வைத்தலை அல்லது ஏமாற்றுவதை மோசடி எனலாம். ஒரு நபர் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி செய்ய இயலாத கருமம் ஒன்றை ஆற்றுவதற்காகவோ அல்லது செய்ய இயலுமான கருமம் ஒன்றை செய்விப்பதற்கோ அல்லது செய்யாமல் விடுவதற்காகவோ கொடுப்பனவு ஒன்றைப் பெற்றுக்கொள்ளல் இலஞ்சம் எனப்படுகிறது. அது பணமாகவோ இல்லை பொருட்களாகவோ அல்லது ஏதேனும் சேவையாகவோ இருக்கலாம். உதாரணமாக பெறுகைத் தீர்மானம் ஒன்றிலே குறித்த உணவகத்தைத் தேர்வு செய்தமைக்காக அவ்வதிகாரமளிக்கப்பட்ட நபர் தனக்கு வேண்டிய வேளைகளில் அவ்வுணவகத்தில் இலவசமாகச் சென்று உணவருந்துதல் போன்ற சேவைகளைப் பெற்றுகொள்ளலைக் குறிப்பிடலாம்.

இலவசமாகக் கிடைத்த பொருளொன்றைக் கொள்வனவு செய்தமை போன்று காட்டி போலிப்பற்றுச் சீட்டைச் சமர்ப்பித்து பணத்தைப் பெற்று தம்மிடையே பகிர்ந்துகொள்ளலை மோசடி எனலாம். ஒரு விடயமொன்றைச் செய்வதற்கோ அல்லது செய்யாமல் விடுவதற்காகவோ எவரையேனும் நிர்ப்பந்தித்து பணத்தையோ அல்லது பொருட்களையோ அல்லது ஏதேனும் சேவையையோ பெற்றுக்கொள்ளல் அநீதியான நிர்ப்பந்தம் எனப்படுகிறது. தனக்குக் கீழே பணி புரியும் அலுவலருடைய வருடாந்த மதிப்பீட்டை மேற்கொண்டு ஒப்பமிடுவதற்காக திணைக்களத்தலைவர் அவரை பாலியல் ரீதியாக வற்புறுத்துதல் கூட அநீதியான நிர்ப்ப ந்தமே.

சட்டத்தால் தனக்கு வழங்கப்படும் அதிகாரங்களைப் பயன்படுத்தி இயற்கை நீதியின் கோட்பாடுகளை மீறி ஏதேனும் ஒரு சாராருக்குச் சார்பாக, அவர்களுக்கு நன்மை கிடைக்கும் வண்ணம் தீர்மானங்களை மேற்கொள்ளுதல், சட்ட ஏற்பாடுகளைத் தவறான முறையில் பயன்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் தனிப்பட்ட நன்மைகளைப் பெற்றுக்கொள்ளுதலை ‘சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தல்’ எனக் கருதலாம்.

தமது பதவி, கடமைகள், பொறுப்புகளுடன் தொடர்பில்லாத வகையில் அலுவலரொருவர் வியாபார நடவடிக்கைகளுடன் தொடர்புடைய கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டு தனிப்பட்ட சொத்துகளைச் சேர்த்தலை ‘உள் வியாபாரம்’ என்பர்.

அதிகாரமளிக்கப்பட்ட நபரொருவர் தான் வழங்கும் குடும்பம், கட்சி, சாதி, இனம், மதம், மொழி போன்ற தனது தனிப்பட்ட விருப்புக்கமைய சேவைகளை வழங்குதலையும் நியமனங்களை மேற்கொள்ளலையும் முரண்பாட்டு விருப்பு எனக் கருதலாம்

அதிகாரமளிக்கப்பட்ட நபரொருவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இன்னோர் அதிகாரமளிக்கப்பட்ட நபரிடமிருந்து சட்டத்துக்கு முரணான வழியில் காரியங்களை ஆற்றுவதும் ஊழலின் ஒரு வடிவமே மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் ஊழல் ஒழிப்புக் கையேடு வரையறுக்கிறது. அரசியல் கட்சிகள் ஆட்சிக்கு வந்து தமது வர்த்தகத்துக்குச் சார்பான தீர்மானங்களை மேற்கொள்ளும் என்ற அடிப்படை உறுதிப்பாட்டுடன் அவற்றின் தேர்தல் பிரசாரங்களுக்கு தனியார் நிறுவனங்கள் பணத்தை வாரியிறைக்கின்றமை கூட ஊழலில் ஒரு வடிவமே.

பெறுகைத் தீர்மானங்களின் தமக்குச் சார்பானவர்களையும் ஏதேனுமொரு தனிப்பட்ட நன்மையையும் கருத்தில் கொண்டு தகுதியற்றவர்களைத் தேர்வு செய்தலும் விண்ணப்பதார்களுடன் உப ஒப்பந்தங்களை மேற்கொண்டு பெறுகை சார் பண்டங்களையும் சேவைகளையும் அதிகாரமளிக்கப்பட்டவர்கள் தாமே விநியோகம் செய்கின்றமையும் கூட ஊழலின் வடிவங்களே.

முரண்பாட்டு விருப்பு காரணமாக தாம் நன்மைகளைப் பெற்றுக்கொண்டு அரசுக்குக் கிடைக்க வேண்டிய வருமானத்தை இழக்கச் செய்கின்றமையும் ஊழலே. இத்தகைய ஊழல்கள் பெரும்பாலும் ஏல விற்பனைகளின் போது நடைபெறும். இந்தியாவில் இற்றைக்கு ஒரு தசாப்த காலத்துக்கு முன்னர் மிகவும் பிரபலமாகவிருந்த 2ஜி அலைக்கற்றையுடன் தொடர்புடைய ஊழல் அத்தகையதே. அது ஒரு பாரிய ஊழல் ஆகும். அலுவலகங்களில் காணப்படும் பெறுமதியான பொருட்களை பாவிக்க உகந்தவை அல்ல என அறிக்கையியிட்டு அவற்றின் முகப்பெறுமதியைக் குறைவாக மதிப்பிட்டு ஏலமிட்டு தாமே கொள்வனவு செய்து வீடு கொண்டு செல்லும் அலுவலர்களும் இல்லாமலில்லை.

அலுவலகத் தேவைக்கு வழங்கப்பட்ட வாகனத்தை தனது சொந்தத் தேவைகளுக்காகப் பாவிப்பதும் தனக்கான அதிகாரத்தைப் பயன்படுத்தித் தனக்குக் கீழ் பணிபுரியும் அலுவலர்களைக் கொண்டு தனது தனிப்பட்ட கருமங்களை ஆற்றுவிப்பதும் அலுவலக நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தி சேவையை விரைவில் வழங்குவதற்காக இலஞ்சம் எதிர்பார்ப்பதும் கூட ஊழலின் வடிவங்களே.

ஆக இந்த ஊழலானது அதிகாரத்தரப்பின் கீழ் மட்டங்களிலிருந்து உயர் மட்டங்கள் வரை வியாபித்து வேரூன்றிக் காணப்படுகிறது. இந்த ஊழல் உருவாவதற்கான காரணங்கள் பலவிதமாக வகைப்படுத்தப்படுகின்றன. பொருளாதார ரீதியான ஏற்றத்தாழ்வுகள் காணப்படும் போதும், அருகி வரும் வளங்களுக்கான போட்டி உருவாகும் போதும் சமத்துவமின்மை ஏற்படுகிறது. இது ஊழலுக்கான மிகப்பிரதானமான பொருளாதாரக் காரணாமாகும்.

ஒரு நாட்டில் ஜனநாயகம் தன் இயல்புகளை இழந்து போக ஊழல் பாங்கு அதிகரித்துச் செல்லும். ஜனநாயகத்தின் மிகப்பிரதானமான தூண்களாகக்கருதப்படும் நீதித்துறையும் நிர்வாகத்துறையும் சட்டவாக்கத்துறையும் தத்தமது பாங்குகளில் சுயாதீனமாக இயங்கினால் ஜனநாயகம் மிளிரும் என தத்துவங்கள் குறிப்பிடுகின்றன. ஆயினும் அது ஒரு இலட்சிய நிலைமையே. நடைமுறையில் அது சாத்தியமற்றதாகின்ற போதும் அவை ஓரளவுக்கேனும் ஒன்றை ஒன்று ஆதிக்கம் செலுத்தாத நிலைமையில் காணப்பட வேண்டும். அவ்வாறில்லாவிடில் ஊழல் மலிந்த நிலையே காணப்படும். அரச நிர்வாகம் அரசியல் மயமாகும் போது ஊழலின் வடிவங்கள் அங்கு இலகுவாக வேரூன்றத்தொடங்கும். வெளிப்படைத்தன்மை என்பது ஜனநாயகத்தினதும் நல்லாட்சியினதும் அடிப்படையாகும். அவ்வெளிப்படைத்தன்மை இல்லாத சந்தர்ப்பங்களில் கறுப்புப் பெட்டி போன்று உள்ளே என்ன நடக்கிறது என்பது அப்பாவி மக்களுக்குத் தெரியவராது. அதே வேளை அச்சந்தர்ப்பத்தை ஊழல் வாதிகள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வெற்றி கொள்வர். மக்கள் பிரதிநிதிகளின் சொத்து வெளிப்படுத்துகையும் கட்சிகளின் கணக்கறிக்கை வெளிப்படுத்துகையும் கூட வெளிப்படைத்தன்மையின் மறு வடிவங்களாகவே பார்க்கப்படுகின்றன. வெளிப்படைத்தன்மையின்மையும் நிர்வாகத்துறை அரசியல் மயமாதலும் ஊழல் உருவாவதற்கான அரசியல் ரீதியான காரணங்களாக க் கருதப்படுகின்றன.

நிர்வாகத் துறையிலே வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களைத் துஷ்பிரயோகம் செய்தலும் நிர்வாகத்துறையில் பணிபுரியும் பெரும்பாலானோர் மத்தியில் காணப்படும் வினைத்திறனின்மை, பொறுப்புக்கூறும் தன்மையின்மை, அதிகாரப்பரவாக்கலில் உள்ள இடர்பாடுகள், தகுதியற்றவர்கள் பதவிகளில் அமர்த்தப்படுகின்றமை, தனிப்பட்ட நலன் களுக்காக தமது கடமைகளை அலுவலர்கள் சரியாகச் செய்யாமை, அலுவலர்களுடைய செயற்பாட்டை மதிப்பிட போதிய அளவு கோல்கள், முறைமைகளின்மை போன்ற நிர்வாகக் காரணங்களும் ஊழல் ஏற்படக் காரணமாகின்றன.

ஊழல் தொடர்பில் முறையிடுவதில் உள்ள இடர்பாடுகள், சாட்சிகளைப் பாதுகாப்பதில் உள்ள இடர்பாடுகள், தீர்ப்பு வழங்குவதற்கான கால எல்லைகளின் நீடிப்புகள், சட்டங்களில் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்கள் போன்றவை ஊழல் நடைபெற ஏதுவாகக் காணப்படும் சட்ட ரீதியான காரணிகளாக க் கருதப்படுகின்றன.

இவை மட்டுமன்றி சமூக ரீதியான காரணங்கள் சிலவும் ஊழல் ஏற்பட வழி வகுக்கின்றன. இங்கு ஏலவே குறிப்பிட்டது போன்று சமூக ரீதியாக ‘சந்தோஷம்’ என்ற பெயரிலோ அல்லது அதை ஒத்த வேறு பெயர்களிலோ ஊழலை மக்கள் ஏற்றுக்கொண்டமை அத்தகைய பிரதானமான காரணமாகும். பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வின்மை, மக்களுக்கு போதிய தகவல்கள் சென்றடையாமை, இறுக்கமான, சிக்கலான விதிமுறைகளும் சட்டங்களும் காணப்படும் போது அவற்றிலிருந்து விலகி இலகுவாக சேவையைப் பெறுவதற்கு முயற்சி செய்யும் இயல்பு, சமூக அக்கறையில்லாத தன்மை போன்றன ஊழல் நடைபெற ஏதுவான சமூக காரணங்களாகும். ஊழல் என்பது பெருச்சாளியை ஒத்தது. உள்ளே நுழைய விட்டால் இழப்பு முழுவதையும் நாமே தாங்க வேண்டும். (தொடரும்...)

Comments