மாக்கந்துர மதுஷ்! | தினகரன் வாரமஞ்சரி

மாக்கந்துர மதுஷ்!

போதைப்பொருள் கடத்தல் மன்னன்; பாதாளக் குழுக்களின் கேடி! இலங்கையில் தமது வீரத்தனத்தைப் பாதாள குழுக்கள் மூலமாகவும் போதைப்பொருள் கடத்தல் மார்க்கமாகவும் பறைசாற்ற முயற்சிக்கும் நபர்களைத் துபாயில் இருந்துகொண்டு இயக்கியவர். இப்போது பூண்டோடு சிக்கிக்ெகாண்டுள்ளார்.  

போதைப்பொருள் வர்த்தகத்திற்குத் துணைபோவதன் மூலம் தமது வாழ்வாதாரத்தை ஒளிமயமாக்கிக்கொள்வதற்காக அவரது சகாக்களாகச் செயற்பட்ட 25பேரினது கைதோடு போதைப்பொருள் வர்த்தக வலையமைப்பு தெறிக்கச்செய்யப்பட்டுள்ளது!  

இவர்களின் கைது இலங்கையில் பல அரசியல்வாதிகளின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. அவர்களோடு பல கோடீஸ்வரர்களுக்கும் இந்த அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது.  

போதைப்பொருள் கடத்தல் வர்த்தகத்தை முற்றாக ஒழித்துக்கட்டியே தீருவேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துச் சில நாட்கள் கடப்பதற்கு முன்னரே, இந்தக் கடத்தல் மன்னனைத் துபாய் பொலிஸார் மடக்கியிருக்கிறார்கள். இலங்கைப் பொலிஸாரின் தகவல்களின் அடிப்படையில் இந்தச் சுற்றிவளைப்பு இடம்பெற்றிருக்கிறது. இலங்கைப் பொலிஸாரை நாம் ஏளனமாகச் சிந்தித்த ஓர் யுகம் இலங்கையில் காணப்பட்டது. பொலிஸாரின் கண்களில் விரலைவிட்டு ஆட்டலாம் என்று கனவு கண்டுகொண்டிருந்தார்கள் குற்றவாளிகள். ஆனால், தற்போது சர்வதேச தரத்திற்கு ஏற்ப நவீன தகவல் தொழில்நுட்பங்களையும் பயன்படுத்திக் குற்றச் செயல்களைக் கண்டறிந்து சந்தேக நபர்களைக் கைதுசெய்யும் பணியைத் திறம்பட மேற்கொண்டு வருகிறார்கள்.  

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் நாடுகளுக்குச் சென்று திரும்பியபோது, போதைப்பொருள் வர்த்தகத்தை முற்றாக முறியடிக்கும் பணி தீவிரமாக முடுக்கிவிடப்படும் என்று அறிவித்திருந்தார். அதற்கமைவாக, பாடசாலை மாணவர்கள் மத்தியில் ​போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்ைகயைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற பணிப்புரையையும் விடுத்து அந்தச் செயற்றிட்டத்தையும் திறம்படச் செயற்படுத்தினார்.  

ஒரு காலத்தில் இலங்கையில் 'ஜெக்ெபாற்" எனப்படுகின்ற சூதாட்டம் முழு நாட்டையும் சீரழித்து வந்தது. ஆண்கள் உணவருந்துவதற்காக உணவகங்களுக்குச் சென்றால்கூடச் சூதாட்டத்தில் ஈடுபடாமல் வருவதில்லை. அப்போது இந்தப் போதைப்பொருள் அவ்வளவாகப் பிரபல்யம் அடைந்திருக்கவில்லை. ஜெக்போற் சூதாட்டத்தை ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச மிகக் குறுகிய காலத்தில் நாட்டில் துடைத்தெறிந்தார். இப்போது மாக்கந்துர மதுஷை ஜனாதிபதி கைதுசெய்ய மேற்கொண்டிருக்கும் நடவடிக்ைக அந்தச் சம்பவத்தை மீட்டிச்செல்கிறது.  

இவர்களைக் கைதுசெய்வதற்குப் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் லத்தீப் முக்கிய பங்காற்றியிருக்கிறார். அவர் மேற்கொண்ட துணிகர நடவடிக்ைகயே போதைப்பொருள் வர்த்தக முறியடிப்புக்கு வழிகோலியிருக்கிறது. அதற்காக ஜனாதிபதியும் பிரதமரும் விசேட அதிரடிப்படைக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மாஅதிபரான லத்தீப்புக்குப் பாராட்டைத் தெரிவித்திருக்கிறார்கள்.  

உண்மையாகவே, நாட்டு மக்களும் அவருக்குப் பாராட்டைத் தெரிவிக்க வேண்டும். சமூகத்தின் ஆரோக்கியத்திற்கு எதிராக உலகளாகிய அளவில் எழுந்திருக்கும் பிரச்சினைதான் இந்த போதைப்பொருள். போதைப் பொருட்களினால் தனிமனிதன், குடும்பம், சமுதாயம் என எல்லா வகைகளிலும் பாதிப்புகளே ஏற்படுகின்றன. 1000 இற்கு 1 என்ற அடிப்படையில் மாணவர்கள் புகைத்தல் பாவனைக்கு பழக்கப்பட்டுள்ளதாக அறிக்கைகள் மூலம் அறியமுடிகின்றது. இலங்கையில் 13-,15 வயதுக்கு உட்பட்ட அதிகமான பாடசாலை மாணவர்கள் புகைத்தல் பழக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

2015 ஆம் ஆண்டு இலங்கையில் போதைப்பொருட்கள் சம்பந்தமான குற்றச்செயல்களுக்காக கைது செயயப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,482ஆவதோடு இது 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 23 சதவீத அதிகரிப்பாகும். இவர்களில் 32 சதவீதம் ஹெரோயினை வைத்திருந்ததற்காகவும் 63 சதவீதம் கஞ்சா தொடர்பான குற்றச்செயல்களுக்காகவும் கைது செயப்பட்டனர். மேலும் பெரும்பான்மைக்குற்றச்செயல்கள் மேல் மாகாணத்தில் 60 சதவீதம் பதிவாகியது. அதைத்தொடர்ந்து தென் மாகாணத்தில் 10 சதவீதம், மத்திய மாகாணத்தில் 8 சதவீதம் என்ற வீதங்களில் காணப்பட்டன. மாவட்ட அடிப்படையில் கொழும்பு மாவட்டத்தில் 43 சதவீதம், கம்பஹா மாவட்டத்தில் 14 சதவீதம், மற்றும் குருநாகல் மாவட்டத்தில் 4 சதவீதம், என்ற வீதங்களில் காணப்பட்டன. 2015ஆம் ஆண்டில் போதை வஸ்துகள் தொடர்பான குற்றச்செயல்களுக்குக் கைதானவர்களின் வீதம் மொத்த சனத் தொகையில் ஒப்பிடுகையில் ஒரு இலட்சம் பேருக்கு 397 என்ற அளவில் காணப்பட்டது.  

தன் சிந்தனையைப் போதையில் புதைத்து மன மயக்கத்தையும், குழப்பத்தையும் தனக்குத்தானே மனிதன் ஏற்படுத்திக் கொள்கின்றான். போதைப்பொருட்களில் மது, ஹெரோயின், பெத்தனால் ஊசி, கஞ்சா, புகையிலை, பான் மசாலா, போதை தரும் இன்ஹேலர்கள் இன்னும் பல வகைகள் அடங்கும். அண்மைய காலத்தில் கேரள கஞ்சா கடத்தல் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டாலும் பொலிஸாரின் தீவிர கண்காணிப்பின் மூலமாக அந்த நடவடிக்ைக முறியடிக்கப்பட்டு வருகின்றது.  

கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு புறநகர்ப் பகுதியான பேலியாகொடையில் 400கிலோ கிராம் கஞ்சாவைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 40 மில்லியன் ரூபாய் பெறுமதியான இந்தக் கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அதற்கு முன்னைய தினங்களில் சாவகச்சேரியில் 80கிலோ கஞ்சாவைப் பொலிஸார் கைப்பற்றியிருந்தனர். அன்றைய தினமே கொழும்பு புறநகர்ப் பகுதியான பிலியந்தலையில் 110 கிலோ ஹெரோயின் போதைப் பொருளைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.  

கடந்த 2018 ஆம் ஆண்டிலேயே கூடுதலான போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. எனினும், இந்த ஆண்டில் இந்த நடவடிக்ைக இன்னும் தீவிரமாக்கப்பட்டுள்ளது. இதனால், போதைப்பொருள் வியாபாரிகள் மாத்திரமன்றிச் சில அரசியல்வாதிகளும்கூடச் சங்கடத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. ஏனெனில், கடத்தலைக் கச்சிதமாகச் செய்வதென்றால், அரசியல்வாதிகளின் பக்கபலம் அவசியம் என்பதைத் தெரிந்துகொண்ட வர்த்தகர்கள், அவர்களையும் வளைத்துப்போட்டுக்ெகாண்டுள்ளனர். மேலும், சில கலைஞர்களும் இதற்கு அடிமையாகியுள்ளனர்.

போதைப்பொருள் கடத்தல் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்குப் பணமே பிரதானமாகவுள்ளது. ஆனால், போதைப் பொருளைப் பயன்படுத்துவோரின் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்துவிடுகிறது. சில சமயங்களில் போதைப்பொருளுக்காகப் பணம் இல்லாதபோது வீட்டில் மனைவி, பிள்ளைகளைக் கொலைசெய்யும் அளவிற்கும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் சென்றுவிடுகிறார்கள்.  

ஹெரோயின் போதைப்பொருளை ஒரு நேரம் பரீட்சித்துப் பார்க்கலாம் என்று எவராவது நினைத்தால், அது முடியாதுபோய்விடும். ஒரே நேரத்தில் அவர்கள் அதற்கு அடிமையாகி விடுவார்கள். பணம் தீர்ந்ததும் களவு, கொள்ளையில் ஈடுபடுவதுடன் பிச்சை எடுத்தேனும் போதைப் பொருளை வாங்குவதற்கு முயற்சிப்பார்கள்.  

நாம் மேலே குறிப்பிட்டதைப்போல, பயன்பாட்டு விகிதம் சமூகத்தில் அதிகரித்தால், நாடு என்னவாகும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். எதிர்கால இளைஞர்களின் நிலை என்னவாகும் என்பதைச் சிந்தியுங்கள். இப்போது கைதுசெய்யப்பட்டிருக்கும் மதுஷ் உள்ளிட்டோரைக் காப்பாற்றுவதற்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. சிலவேளை அவர்கள் துபாயில் தண்டிக்கப்படலாம். இலங்கைக்கு வராமல் அங்கேயே நடவடிக்ைக எடுப்பது சிலருக்குக் குளிர்ச்சியைத் தரலாம். ஆனால், நாட்டிலிருந்து போதைப்பொருள் வர்த்தகத்தை முற்றாகத் துடைத்தெறிய வேண்டும் என்பது ஜனாதிபதியின் நோக்கம்!  

எனவே, வளமான நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்தில் உள்நாட்டில் உள்ளவர்களுக்கு இராஜதந்திர கடவுச்சீட்டை வழங்குவது சரிதானா என்பதையும் அரசாங்கம் மீளச்சிந்திக்க வேண்டும் என்பதையும் இங்குச் சுட்டிக்காட்டுவது பொருத்தமாகும்.   

Comments