1994 சம்பள பேச்சுவார்த்தையில் இ.தொ.கா இரண்டு ரூபா வேதன அதிகரிப்பையே பெற்றுத் தந்தது | தினகரன் வாரமஞ்சரி

1994 சம்பள பேச்சுவார்த்தையில் இ.தொ.கா இரண்டு ரூபா வேதன அதிகரிப்பையே பெற்றுத் தந்தது

அருள் சத்தியநாதன்

சம்பள உயர்வு வேண்டும் என்ற கோரிக்கை 1984ம் ஆண்டு முன்வைக்கப்பட்டபோது சிறுவருக்கு நாள் சம்பளம் 8 ரூபாவாகவும் பெண்களுக்கு 12 ரூபாவாகவும் ஆண்களின் நாள் சம்பளம் 18 ரூபாவாகவும் இருந்தது. அப்போது சகலருக்கும் சம சம்பளம் என்ற கோரிக்கையை முன்வைத்து தினசரி சம்பளத்தை 21 ரூபாவாக உயர்த்தித் தந்தது இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமே தவிர, இ.தொ.கா. அல்ல என்று அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார் அரசியல், தொழிற்சங்க பிரமுகரும் மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் (டிரஸ்ட் ) தலைவருமானவீ. புத்திரசிகாமணி.

கடந்த வார மஞ்சரி இதழில் வெளியாகியிருந்த அவரது சம்பள உயர்வு தொடர்பான கருத்துரையில் 23 ரூபா சம்பள உயர்வை இ.தொ.கா பெற்றுத் தந்தது எனக் குறிப்பிடப்பட்டிருந்தைக்கண்டு தான் அதிர்ச்சி அடைந்ததாகவும் அவ்விகாரத்தில் தான் நேரடியாக சம்பந்தப்பட்டவன் என்ற வகையில் தான் தவறான கருத்தொன்றைத் தெரிவிக்க வாய்ப்பே இல்லை என்று தெரிவித்திருக்கும் அவர், உண்மையைத் தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டார். அவர் என்ன சொன்னார் என்பதை இங்கே அப்படியே வெளியிடுகிறோம்.

1984ம் ஆண்டிலும் அதற்கு முன்னரும் மூன்று விதமான சம்பள முறை அமுலில் இருந்தது. சிறுவருக்கு குறைவாகவும், பெண்களுக்கு அதைவிட அதிகமாகவும் ஆண்களுக்கு மேலும் அதிகமாகவும் சம்பளம் தரப்பட்டது. ஒருவர் வேலை செய்யும் நேரத்தை கணக்கில் எடுக்காமல் உடல் தகுதியை வைத்து அன்றைய பெருந்தோட்டக் கம்பனிகள் இந்த வேதனத்தை நிர்ணயித்திருக்கலாம். 

1984இல் ஜே.ஆர். ஜனாதிபதியாக இருந்தார். அவர்தான் முடிவுகளை எடுத்தார். அவர் முடிவெடுத்தால், எடுத்தது எடுத்துதான். சம்பள உயர்வு தொடர்பாக எமது சங்கத்தின் சார்பாக காமினி திசாநாயக்க, ராஜா செனவிரத்ன, ராஜமாணிக்கம் ஆகியோருடன் நானும் ஜே.ஆரைச் சந்திக்கச் சென்றிருந்தேன். என்னிடம் தான் ஜே.ஆர், உண்மையாகவே  உங்களுக்கு என்ன தேவை? என்று கேட்டார். சில வினாடிகள் யோசித்த நான், மூன்றுவகையான பாரபட்சமான சம்பளம் வழங்கப்படுவதை எடுத்துச் சொல்லி, சம சம்பளம் தான் வேண்டும் என்றேன். அதாவது, 8 ரூபாவும் 12 ரூபாவும் 18 ரூபாவாக உயர்த்தப்பட வேண்டும் என்றேன். அதற்கு அவர் ஒத்துக் கொண்டார். மேலும் நடந்த பேச்சுவார்த்தையில் 18 ரூபா சம்பளத்தை 21 ரூபாவாக உயர்த்த இணக்கம் காணப்பட்டது. 

அக்காலத்தில் தோட்டங்கள் அனைத்தும், ஜே.ஈ.டீ.பி என அழைக்கப்பட்ட மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை மற்றும் அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனம் (அப்போது அரச பெருந்தோட்ட யாக்கம் என அழைக்கப்பட்டது) என்பனவற்றின் கீழ் இருந்ததால் அரசாங்கத்துடன் பேசி சம்பள உயர்வை பெற முடிந்தது. 

அக்காலத்தில் இது ஒரு பெரிய தொழிற்சங்க வெற்றியாகக் கருதப்பட்டது. ஏனெனில் 8 ரூபா சம்பளம் 21 ரூபாவாக, 13 ரூபா அதிகரிப்பு, 12 ரூபா சம்பளம் 21 ரூபாவாக, 09 ரூபா அதிகரிப்பும், 18 ரூபா 3 ரூபா அதிகரிப்பும் பெற்றிருந்தது. ஐ.தே.க தொழிற்சங்கமான மக்கள் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்துக்குக் கிடைத்திருந்த இந்த வெற்றியை அப்போது ஜே.ஆர். அரசாங்கத்தில் அமைச்சரவை அமைச்சராக அங்கம் வகித்த இ.தொ.கா  தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் ரசிக்கவில்லை. அவரது கீர்த்திக்கும் செல்வாக்குக்கும் பங்கமாக இது அமைந்திருப்பதாக அவர் கருதினார்.  

அப்போது ஜே. ஆருக்கு நெருக்கமானவர்களின் தொண்டமானும் ஒருவர். அவர் ஜே.ஆரை சந்தித்து தனது நிலையை எடுத்துச் சொன்னார்.  

இதே சமயம், 21 ரூபாவாக சம்பள அதிகரிப்பு, சம சம்பளம் என்ற அறிவிப்பு வெளியானதும் தோட்டங்களில் மகிழ்ச்சி ஆரவாரம் வெளிப்பட்டது. இதை எதிர்த்து இ.தொ.கா வேலை நிறுத்தத்தில் இறங்கியது. சம்பள உயர்வு மூன்று ரூபா என்பது (18+03=21) குறைவானது என்பது இ.தொ.கா.வின் நிலைப்பாடாக இருந்தது. ஏனைய சங்க அங்கத்தவர்கள் வேலைக்கு செல்வதை, இ.தொ.கா தொண்டர்கள் தடுக்கவும் ஆங்காங்கே கைகலப்புகளும் நிகழ்ந்தன. இதையும் ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்ட தொண்டமான், ஜே.ஆரிடம் பேசவே, அவர் இரண்டு ரூபாவை மேலதிகமாக சேர்த்து 23 ரூபா தினசரி வேதனம் என்ற முடிவை எடுத்தார். 

எனவே சம சம்பளத்துக்கு 3 ரூபா வேதன அதிகரிப்புக்கும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமே காரணம். இரண்டு ரூபா சம்பள அதிகரிப்பை மட்டுமே 1994ம் ஆண்டில் இ.தொ.கா பெற்றுக் கொடுத்தது என்பது புத்திரசிகாமணி தந்திருக்கும் விளக்கமாகும். 

மேலும் அவர் இந்தக் கூட்டு ஒப்பந்தம் எவ்வளவு தூரம் மோசடியானது என்பதையும் விளக்கினார். 

நிபந்தனைகளுடன் கூடியதாக இருப்பினும் மொத்தமாக 940 ரூபாவை தினசரி வேதனமாகத் தருவதற்கு முதலாளிமார் சம்மேளனம் இணக்கம் தெரிவித்திருந்தது. தொண்டமானும், சுரேஷும் அதற்கு ஒப்புக் கொண்டிருந்தால் தலை தப்பியுமிருக்கும், தொழிலாளர் சமூகமும் ஏற்றிருக்கும். ஏனெனில் ஆயிரம் ரூபா எண்ணிக்கொண்டு 60 ரூபா தான் குறைகிறது. இவ்வளவு காலமாக கூட்டு ஒப்பந்தங்கள் மூலம் நிபந்தனைகளுடன் கூடிய கூட்டுச் சம்பளத்தைத்தான் இச்சமூகம் பெற்று வந்திருக்கிறது. எனினும் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி அனுபவம் பெற்ற தொண்டமானுக்கு கம்பனிகளின் நிலைப்பாடுகள், உள்நோக்கங்கள் அவற்றின் உண்மையான பொருளாதார நிலை, அவற்றின் திட்டங்கள் மற்றும் எதிர்பார்ப்புகள் என்பன நிச்சயம் அத்துப்படியானவைதான். இவ்வளவையும் தற்போதைய அரசியல் சூழலையும் நன்கறிந்த அவர் 940 ரூபாவை நிராகரித்துவிட்டு, எப்படியும் சாத்தியப்படாத ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளத்தை கோரிநின்றார் என்பது புரியவில்லை. இரண்டு தினங்களுக்கு முன்னர், தோட்ட நிர்வாகத்தை விட்டு கம்பனிகள் விலகிச்செல்ல வேண்டியது தானே என்றும் கூறியவர் பின்னர் 750 ரூபாவுக்கு இணங்கியது ஏன், எதனால், எப்படி என்பதன் சூத்திரமும் புரியவில்லை. சுலபமான கணக்காக 940 ரூபாவில் இருந்து 750 ரூபாவை கழித்தால் 190 ரூபாவை குறைத்துத்தான் வேதன அதிகரிப்பை வாங்கித் தந்திருக்கிறார்கள் என்பது புரிகிறது. 30 ரூபாவை 50 ரூபாவாக மாற்றியது மட்டுமே அதிகரிப்பு என்றால் ஆண்டுக்கு 10 ரூபா என்ற வகையில் 20 ரூபா அதிகரிப்பை பெற்றுத் தந்திருக்கிறார்கள் என்று பொருள். 

மேலும் 105 ரூபா ஊழியர் சேமலாப மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதிய கொடுப்பனவுகளை சம்பள உயர்வாக காட்ட ஒப்புக் கொண்டிருப்பது மோசடி என்பதோடு ஒரு தவறான முன்னுதாரணமாகவும் அமைந்துள்ளது. மாதச் சம்பள துண்டில் இவ்வளவு காலமாக அடிப்படைச் சம்பளம் தனியாகவும் அலவன்ஸ் மற்றும் மேலதிக ஒவர்டைம் வேலைக் கொடுப்பனவு தனியாகவும் ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதிய பிடித்தங்கள் தனித்தனியாகவுமே காட்டப்பட்டு வந்துள்ளது. இப்போது தான் இலங்கையிலேயே முதல் தடவையாக பிடித்தங்கள் சம்பளத்தின் ஒரு பகுதியாகக் காட்டும் மோசடியை கம்பனிகள் அறிமுகம் செயது அதற்கு தொழிற்சங்கங்களின் சம்மதத்தையும் பெற்றுக் கொண்டிருக்கிறது.

இது இலங்கையில் உள்ள சகல தொழிற்சங்கங்களுக்கும் பிரச்சினையாக எதிர்காலத்தில் உருவெடுக்கலாம். இப் பெருந்தோட்டங்களை நடத்தும் தாய் நிறுவனங்களிலும் ஊ.சே.நிதி மற்றும் நம்பிக்கை நிதியங்களுக்கு வேலை கொள்வோர் செலுத்தும் பங்குகளையும் அடிப்படைச் சம்பளத்தின் ஒரு பகுதியாகக் காட்டுவதற்கு முயற்சிக்கலாம் அல்லவா? நாட்டில் உள்ள ஏனைய தனியார் நிறுவனங்களும் இப் பிடித்தங்களை சம்பளத்தின் ஒரு பகுதியாகக் காட்ட முன்வருவதைத் தடுக்க முடியாமல் போகலாம். ஏனெனில் ஒரு சட்டபூர்வமான ஒப்பந்தத்தில் அவ்வாறு செய்யப்பட்டுள்ளதே என அவை வாதம் புரியலாம். இதை நீதிமன்றம் தான் சட்டபூர்வமானதா இல்லையா என்பதைத் தீர்மானிக்க வேண்டியிருக்கலாம். 

இன்னும் கொஞ்சம் தீவிரமாக யோசிப்போமானால் மற்றொரு கூட்டு ஒப்பந்தம் இரண்டு ஆண்டுகளின் முடிவில் செய்து கொள்ளப்படும் தருவாயில், தற்போது சேமலாப, நம்பிக்கை நிதிய பிடித்தங்களையும் சம்பளத்தின் ஒரு பகுதியாக காட்ட முற்பட்ட மாதிரியே, இருப்பிட வசதி, தண்ணீர் வசதி, வீட்டுத் தோட்டத்துக்கான காணி என்பனவற்றுக்கும் கணக்கு போட்டு அதை மாத பெறுமதியாகக் கணித்து தின சம்பளத்தில் இத்தனை ரூபா என சேர்த்து, தொழிலாளியின் தின வேதனம் இவ்வளவு என கம்பனிகள் நிர்ணயம் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மேலும் கம்பனிகள் அப்படி ஒரு முடிவு எடுத்தாலும் கையெழுத்திடும் தொழிலாளர் தரப்பு சங்கங்கள் அதற்கு தலையாட்டி ஆமாம் சாமி போடுவார்கள் என்றுதான் தோன்றுகிறது! 

தற்போது ஒரு நாள் சம்பளம் 700 ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னர் 500 ரூபாவுக்கு பிடித்தங்களாக 75 ரூபா அறவிடப்பட்டது. தற்போது அதிகரிக்கப்பட்ட 200 ரூபாவுக்கான கொடுப்பனவு 30 ரூபா என கணக்கிடப்பட்டே 105 ரூபாவாக காட்டப்பட்டுள்ளது.

ஆனால் அது 16 ரூபாவாகவே இருக்கும். 200 ரூபாவில் 16 ரூபா கழிந்தால் 184 ரூபாவே கைக்கு வரும் காசாக இருக்கும். இதில் தொழிற்சங்க மாதாந்த கட்டணம் குறைந்த பட்சம் எட்டு ரூபா தினசரி கழிக்கப்பட்டு விடும். இவை போகத்தான் கைக்குவரும் வேதனமாக இருக்கும். 

கூட்டு ஒப்பந்தம் இரு தரப்பினரும் இடையிலான ஒரு தொழில் ஒப்பந்தம் என்றிருந்த நிலையை தற்போது கடந்து விட்டது. அது முழுக்க முழுக்க அரசியலாகி விட்டது. கூட்டு ஒப்பந்தத்தை சாட்டாக வைத்துத் தான் கட்சித் தாவல்கள், அமைச்சு பொறுப்புகளை ஏற்றது, பதவிகளைத் தூக்கி எறிவோம் எனச் சொன்னது எல்லாமே நிகழ்ந்தது.

மேலும் இந்த ஒப்பந்த போராட்டமானது முதல் தடவையாக சிங்கள ஊடகங்களின் கவனத்தை வெகுவாகக் கவர்ந்தது. வடக்கு, கிழக்கு, கொழும்பு, வெளிநாடுகள் என போராட்டங்கள் அகலக்கால் பதித்ததும் இதுவே முதல் தடவை. எனவே வழமைபோல ஒப்புக்கு சப்பாணி போல பேரம் பேசி விட்டு மூட்டையைக் கட்டும் காலம் முடிந்து விட்டதாகவே கருதுகிறேன்.  

கூட்டு ஒப்பந்தம் வர்த்தமானியில் அறிவித்தலாக வெளிவருவது தற்போது இடை நிறுத்தப்பட்டு இன்னொரு கோணத்தில் பேச்சும் பரிசீலனையும் தொடரும் எனத் தெரிகிறது. இதில் ஒரு நல்ல முடிவு வர வேண்டும். அதே சமயம், இப்படியே இந்த கூட்டு ஒப்பந்த அரசியலைத் தொடர்வதா அல்லது வேறு மாற்று வழிபற்றி யோசிப்பதா என்ற நிலைக்கு இச் சமூகம் வந்திருப்பதாகவே நான் கருதுகின்றேன். 

இவ்வாறு வீ. புத்திரசிகாமணி தெரிவித்துள்ளார்.  

Comments