இலங்கை-−இங்கிலாந்து டெஸ்ட்; செவ்வாய்க்கிழமை காலியில் ஆரம்பம் | தினகரன் வாரமஞ்சரி

இலங்கை-−இங்கிலாந்து டெஸ்ட்; செவ்வாய்க்கிழமை காலியில் ஆரம்பம்

கடந்த ஒரு மாதகாலமாக இலங்கை மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவரும் இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் எதிர்வரும் 6ம் திகதி செவ்வாய்க்கிழமை காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மோதவுள்ளது.

அவ்வணி இலங்கை மண்ணில் ஏற்கனவே நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-1 என்ற ரீதியில் வெற்றிபெற்றதோடு ஒரே ஒரு ரி/20 போட்டியிலும் வெற்றிபெற்றது.

கடந்த காலங்களில் ஒருநாள் போட்டி மற்றும் ரி/20 போட்டிகளில் பின்னடைவைச் சந்தித்துவரும் இலங்கை அணி டெஸ்ட் போட்டிகளில் திறமையாகவே விளையாடி வருகின்றது. கடைசியாக வருட ஆரம்பத்தில் பங்களாதேஷுடனான 2 போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என்ற ரீதியிலும், மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்ற ரீதியிலும் அந்நிய மண்ணில் திறமையாகச் செயற்பட்டு தொடரை முடித்துக் கொண்ட இலங்கை அணி கடைசியாக கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கையில் நடைபெற்ற தென்னாபிரிக்க அணியுடனான 2 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற ரீதியில் வெற்றி பெற்று டெஸ்ட் அரங்கில் வலுவான நிலையிலேயே உள்ளது.

இலங்கை அணியின் இவ்வெற்றிகளுக்கு சுழற்பந்து வீச்சாளர்களே பெரும் பங்காற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஒரு நாள் அணியைப் போன்றில்லாமல் கடந்த காலங்களில் டெஸ்ட் போட்டிகளில் துடுப்பாட்ட வீரர்களும் தங்களது பணியைச் சிறப்பாகச் செய்துள்ளனர். தலைவர் தினேஷ் சந்திமால் டெஸ்ட் போட்டிகளில் பொறுப்புடன் ஆடி ஓட்டங்களைக் குவித்து வருகின்றார். இளம் வீரர் ரொஷேன் சில்வா, குசல் பெரேரா இவ்வருட ஆரம்ப டெஸ்ட் வெற்றிகளுக்கு தமது துடுப்பாட்டத்தால் பெரிதும் பங்களிப்புச் செய்துள்ளனர். மேற்கிந்தியத் தீவுகளில் இலங்கை அணி வெற்றிபெற இவர்களின் துடுப்பாட்டமே முக்கிய காரணமாய் அமைந்தது. வழமைபோல் இலங்கை ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைவதால் ரங்கன ஹேரத், டில்ருவன் பெரேரா, அகில தனஞ்ஜய இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பர். ஆனால் நீண்ட துடுப்பாட்ட வரிசையைக் கொண்ட இங்கிலாந்து அணி சுழற்பந்து வீச்சுக்கும் மிகவும் லாவகமாக முகம்கொடுக்கக் கூடியவர்கள். ஒரு நாள் தொடரிலும் சுழற் பந்து வீச்சை துவம்சம் செய்த பல துடுப்பாட்ட வீரர்கள் அவ்வணியில் உள்ளனர். சுமார் ஒரு மாத காலமாக அவர்கள் இங்கு விளையாடி வருவதாலும் இலங்கையின் சீதோஷ்ண நிலைக்கும் பழக்கப்பட்டுள்ளமையினாலும் இலங்கை அணிக்கு இத்தொடர் சற்று கடினமாகவே அமையும் என எதிர்பார்க்கலாம்.

இங்கிலாந்து அணியின் துடுபாட்டத்தில் தலைவர் ரூட், பிரெட்சோ, கெரி பெலன்ஸ், வோக்கஸ். பட்லர். ஜென்னிங்ஸ் போன்ற துடுப்பாட்ட வீரர்கள் நிதானமாகவும் அதிரடியாகவும் ஆடக்கூடியவர்கள் மட்டுமல்ல சுழற்பந்து வீச்சுக்கும் சிறப்பாக முகம்கொடுக்கக் கூடியவர்கள்.

அவ்வணியின் பந்து வீச்சும் சமபலமாகவே உள்ளது. அவ்வணியின் ஆரம்ப வேகப்பந்து வீச்சாளர்களான அன்டர்சனும், புரோட்டும் எவ்வகை மைதானத்திலும் சிறப்பாகப் பந்து வீசக்கூடியவர்கள் எனவே எமது துடுப்பாட்டவீரர்கள் நிலைத்து நின்று ஆட முயற்சிக்க வேண்டும். இனிங்ஸ் ஆரம்பத்தில் ரி/20 போட்டியைப் போன்று அதிரடியாக ஆட முயற்சித்து தமது விக்கெட்டுகளை விரைவாக இழக்காமல் நிதானமாக ஆடவேண்டும். இங்கிலாந்து அணியிலும் மொயின் அலி, டவுஷன், ஆதில் ரஷீத், டேன்லி போன்ற துடுப்பாட்ட வீரர்களை அச்சுறுத்தக்கூடிய சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளதால் ஒவ்வொரு துடுப்பாட்ட வீரரும் தமது பொறுப்பை உணர்ந்து விளையாடினால் எதிரணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தலாம்.

முத்தையா முரளிதரனின் ஓய்வுக்குப் பின் இலங்கை அணியின் தொடர் வெற்றிகளுக்கு முக்கிய பங்காற்றிவரும் ரங்கன ஹேரத் இப்போட்டியிலும் இங்கிலாந்து வீரர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதோடு இவருக்கு ஒத்துழைப்பாக டில்ருவன் பெரேராவும் பந்து வீசினால் சிறந்த பெறுபேறைப் பெறலாம். வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரை, சுரங்க லக்மால், லஹிரு குமார டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாகப் பந்துவீசக் கூடியவர்கள். துஷ்மந்த சமீரவும் அண்மையில் கொழும்பில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் சிறப்பாகப் பந்து வீசியிருந்தமை இலங்கை அணிக்கு சாதகமான விடயமாகும். இது ரங்கன ஹேரத்தின் இறுதிப் போட்டியென்பதால் அவருக்கு வெற்றியுடன் விடைகொடுக்க இலங்கை அணி முழு வீச்சுடன் களமிறங்க வேண்டும்.

இலங்கை- இந்திய டெஸ்ட் வரலாற்றை நோக்குவோமானால் 1982ம் இலங்கை அணி தனது முதலாவது டெஸ்ட் போட்டியை இங்கிலாந்துடனேயே மோதியது. இதுவரை இரு அணிகளுக்கிடையில் மொத்தம் 31 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இவற்றில் இங்கிலாந்து 12 போட்டிகளிலும் இலங்கை 08 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளதுடன் 11 போட்டிகள் சம நிலையில் முடிவடைந்துள்ளன.

இரு அணிகளுக்கிடையிலும் கூடிய மொத்த ஓட்டமாக இலங்கை அணி 2003ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் எஸ். எஸ். சி. மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் போது 8 விக்கெட் இழப்புக்கு 628 ஓட்டங்கள் பெற்றதே பதிவாகியுள்ளது. குறைந்த ஓட்டங்களாக 2007ம் ஆண்டு டிசம்பர் மாதம் காலி சர்வதேச மைதானத்தில் இங்கிலாந்து அணி 81 ஓட்டங்களுக்கும், 2001ம் ஆம் ஆண்டு மார்ச் மாதம் எஸ். எஸ். ஸி. மைதானத்தில் இலங்கை அணி 81 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழந்ததே பதிவாகியுள்ளது.

ஒரு இன்னிங்ஸில் இலங்கை சார்பாக கூடிய ஓட்டமாக மஹேல ஜயவர்தன 2007ம் ஆண்டு டிசெம்பர் மாதம் காலி மைதானத்தில் பெற்ற 213 ஓட்டங்களே பதிவாகியுள்ளது. இங்கிலாந்து சார்பில் 2011ம் ஆண்டு மே மாதம் கார்டிபில் இங்கிலாந்து வீரர் ஜெரொப்ட் 203 ஓட்டங்கள் பெற்றுள்ளார்.

மேலும் மஹேல ஜெயவர்தன 1998 முதல் 2014ம் ஆண்டு வரை மொத்தமாக 23 போட்டிகளில் 58.21 சராசரியுடன் 2212 ஓட்டங்களைப் பெற்று இலங்கை சார்பாக கூடிய ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

இங்கிலாந்து சார்பில் அண்மையில் ஓய்வுபெற்ற அலிஸ்டயர் குக் 2006 முதல் 2016 வரை 16 போட்டிகளில் 53.75 சராசரியுடன் 1290 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

1993 முதல் 2007 வரை 16 போட்டிகளில் விளையாடி 112 விக்கெட்டுகளை வீழ்த்திய முத்தையா முரளிதரன் இலங்கை-இங்கிலாந்து டெஸ்ட் வரலாற்றில் கூடிய விக்கெட்டுகளை சாய்த்து சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்து சார்பில் ஜிமி அண்டர்ஸன் 2003 முதல் தற்போதுவரை 11 போட்டிகளில் 51 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ஒரு இன்னிஸ்சில் கூடிய விக்கெட்டுகளையும் இலங்கை சார்பாக முத்தையா முரளிதரன் வீழ்த்தியுள்ளார். இவர் 1998ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்து ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 65 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டைக் கைப்பற்றி சாதனை புரிந்தார். ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகளையும் அவரே கைப்பற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. மேற்படி போட்டியில் 220 ஓட்டங்களுக்கு 16 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இசசாதனையைப் புரிந்துள்ளார்.

இங்கிலாந்து சார்பில் ஒரு இன்னிங்ஸில் 1991ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் லோட்ஸ் மைதானத்தில் டெர்பிடாஸ் 70 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்களை வீழ்த்தியதே ஒரு இன்னிங்சில் சிறப்பான பந்து வீச்சாகும். ஒரு போட்டியில் 2016ம் ஆண்டு மேமாதம் லோட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் அண்டர்சன் 45 ஓட்டங்களுக்கு 10 விக்கெட்களைக் கைப்பற்றி இங்கிலாந்து சார்பில் சாதனை படைத்துள்ளார்.

Comments