பெருமிதம் கொள்கிறோம் கல்விப் பணியில் 50 ஆண்டுகளை பூர்த்திசெய்துள்ள | தினகரன் வாரமஞ்சரி

பெருமிதம் கொள்கிறோம் கல்விப் பணியில் 50 ஆண்டுகளை பூர்த்திசெய்துள்ள

மலையகத்தின் ஐந்தாவது பேராசிரியரான தனராஜ் கடந்த 31ஆம் திகதியுடன் தனது கல்விப் பணியில் 50 ஆண்டுகளைப் பூர்த்தி செய்திருகிறார். 1968இல் ஆசிரியர் ஆட்சேர்ப்புக்கான அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற போட்டிப் பரீட்சையில் சித்தியெய்தி 01.11.1968இல் மாணவ ஆசிரியராக நு/ஹோல்புறூக் தமிழ் வித்தியாலயத்தில் கடமையாற்றிய அவர், 2013இல் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் கல்வியியல் பேராசிரியராகப உயர்வு பெற்றார். தலவாக்கலை மிடில்டன் தோட்டத்தைச் சேர்ந்த இவர், தோட்டத் தொழிலாளர்களான தையமுத்து - செல்லம்மா தம்பதிகளின் மூத்த புதல்வராவார். ஆரம்பக் கல்வியை மிடில்டன் தோட்டப் பாடசாலையிலும் இடைநிலைக் கல்வியை தலவாக்கலை புனித. பத்திரிசியார் கல்லூரியிலும் பெற்றுக்கொண்டார். ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் அமரர் இர. சிவலிங்கம், அமரர் எஸ். திருச்செந்தூரன் ஆகியோரிடம் கல்வி கற்கும் வாய்ப்பு கிடைத்ததை பெருமையுடன் பகிர்கிறார். 1971 - 72 காலப்பகுதியில் கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயின்று பயிற்றப்பட்ட தமிழாசிரியர் தராதரத்தைப் பெற்ற இவர், ஹட்டன் புனித ஜோன். பொஸ்கோ கல்லூரியில் ஆசிரியராகப் பதவியேற்றார்.

1974 - 75 காலப்பகுதியில் பேராதனை ஆங்கில ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை அரசாங்கம் நடத்திய வெளிவாரி ஆங்கில ஆசிரியர் பயிற்சிநெறியைப் பூர்த்தி செய்து பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரியர் தராதரப் பத்திரத்தைப் பெற்றுக்கொண்டார். 1976இல் கலஹா தமிழ் மகா வித்தியாலயத்துக்கு (தற்போது ஸ்ரீ இராமகிருஷ்ணா மத்திய கல்லூரி) மாற்றம் பெற்றுச்சென்ற தனராஜ், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பரீட்சைக்குத் தோற்றி சித்தியடைந்து கலைப்பட்டதாரியானார்.

1983இல் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டப்பின் கல்வி டிப்ளோமா கற்கை நெறிக்கு தெரிவு செய்யப்பட்டு அங்கு பயின்ற காலத்தில் 1983 ஜுலை கலவரத்தில் தனது குடும்பத்துடன் பாதிப்புக்குளான போதும் தனது பட்டப்பின் படிப்பை பூர்த்திசெய்த தனராஜ் அரசாங்கத்தின் புலமைப்பரிசில் பெற்று புதுடில்லி NIEPA நிறுவனத்தில் பயின்று கல்வி நிர்வாகத்தில் டிப்ளோமா தகைமையை பெற்றுக்கொண்டார்.

கல்வி அமைச்சில் செயற்றிட்ட அதிகாரியாகப் பதவியேற்ற தனராஜ், போட்டிப் பரீட்சை ஊடாக முதன்முதலில் மலையகத்துக்கு வழங்கப்பட்ட 1000 ஆசிரியர் நியமனம் மற்றும் அவர்களுக்கு வார இறுதிகளில் வழங்கப்பட்ட ஆசிரியர் பயிற்சி ஆகியவை தொடர்பாக குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தார்.

இப்பயிற்சி பதுளை, பண்டாரவளை, நுவரெலியா, தலவாக்கலை, ஹட்டன், நாவலப்பிட்டி, கண்டி, இரத்தினபுரி, கேகாலை ஆகிய இடங்களில் நடத்தப்பட்டது. எனினும் தனது குடும்ப சூழல் காரணமாக கல்வி அமைச்சை விட்டு நீங்கிய தனராஜ், மாலைதீவு மற்றும் ஓமான் ஆகிய நாடுகளில் ஆசிரியராகப் பணிபுரிந்து 1993இல் நாடு திரும்பினார்.

1995இல் தேசிய கல்வி நிறுவகத்தில் செயற்றிட்ட அதிகாரியாகப் பதவியேற்று பின்னர் தமிழ்த்துறை பணிப்பாளராகப் பதவி உயர்வு பெற்றார். இக்கால கட்டத்தில் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் கல்வி முதுமாணிப்பட்டத்தையும் (MED) ஸ்ரீ ஜயவர்தன பல்கலைக்கழகத்தின் வணிக முதுமானி (MBA) பட்டத்தையும் பெற்றுக்கொண்டார்.

2005இல் தேசிய கல்வி நிறுவகத்தில் ஓய்வுபெற்ற தனராஜ், ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியீட்டத்துடன் உயர்கல்வி அமைச்சின் மேற்பார்வையில் இயங்கிய தொலைக்கல்வி நவீனத்துவ செயற்றிட்டத்தில் (DEMP) நிபுணத்துவ ஆலோசகராகப் பணியாற்றினார். இச்செயற்றிட்டத்தின் ஊடாகவே இலங்கையில் முதன்முதலில் இணையவழி கல்வி (online) அறிமுகம் செய்யப்பட்டது. தொடர்ந்து 2008இல் இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தின் கல்விப்பீடத்தில் சிரேஷ்ட

 

விரிவுரையாளராக பதவியேற்ற தனராஜ் 2013இல் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டார். இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த காலத்தில் மூதவை (செனற்) உறுப்பினராகவும், கொள்கை தர உறுதிப்பாடு அலகின் பீடத் தலைவராகவும் மற்றும் பல்வேறு பதவிகளிலும் பங்களிப்பு செய்தார்.

2013இல் ஓய்வுபெற்ற தனராஜ் 2014இல் மாலபே ஹொரைசன் தனியார் பல்கலைக்கழகத்தின் கல்விப் பீடாதிபதியாகப் பதவியேற்று கடந்த ஒக்டோபரில் தனது பதவியிலிருந்து ஓய்வுபெற்றார். பேராசிரியர் தனராஜ் தேசிய சர்வதேசிய கல்வி மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகளில் பத்துக்கு மேற்பட்ட முதன்மை உரைகளை ஆற்றியுள்ளார். அழைப்பின் பேரில் சென்று. காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், சென்னை உயர் ஆசிரியர் கல்லூரி, பெங்களூர் புனித போல்ஸ் ஆசிரியர் கல்லூரி ஆகியவற்றில் நடைபெற்ற சர்வதேச கல்வி மாநாடுகளில் உரையாற்றியுள்ளார். தேசிய கல்வி ஆணைக்குழு, தேசிய கல்வி நிறுவகம், கல்வி அமைச்சு உள்ளிட்ட நிறுவனங்கள் மேற்கொண்ட தேசிய மட்ட கல்வி ஆய்வுகள் உட்பட சுமார் 25 கல்வி ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.

25இற்கு மேற்பட்ட தேசிய சர்வதேச கல்வி மாநாடுகளில் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். கல்வித்துறை சார்ந்த ஆறு நூல்களை பேராசிரியர் எழுதியுள்ளார். இவற்றில் ”ஒடுக்கப்பட்டோர் கல்வி - மலையகக்கல்வி பற்றிய ஆய்வு” என்னும் நூல் மலையகக் கல்வி பற்றிய முக்கிய நூலாகும். சுமார் 40 கல்விசார்ந்த நூல்கள் இவரால் பதிப்பிக்கப்பட்டுள்ளன.

அமரர் இர. சிவலிங்கம் ஞாபகார்த்தக்குழுவின் உறுப்பினரான இவர், ஆண்டுதோறும் இளம் ஆய்வாளர்களால் நிகழ்த்தப்படும் ஞாபகார்த்தப் பேருரைகளை பதிப்பித்துள்ளார். அத்துடன் மேற்படி பதினெட்டு ஞாபகார்த்தப் பேருரைகளை தொகுத்து 2017இல் வெளியிடப்பட்ட “மலையகம் : பல்பக்கப்பார்வை” என்னும் காத்திரமான நூலையும் பதிப்பித்துள்ளார்.

இதுவரை சுமார் 25இற்கு மேற்பட்ட கல்விசார் நூல்கள், அறிக்கைகள் உட்பட பல ஆவணங்களை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்த்துள்ளார்.

தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் (NIE) தேசியக்கல்வி ஆணைக்குழுவின் உபகுழு தேசிய அமைச்சுகள் சிலவற்றின் ஆலோசனைக் குழுக்கள் ஆகழியவை உட்பட இலங்கை கல்வி மேம்பாட்டு சங்கம் (SLAAED), J.E. ஜயசூரிய பேரவைக்குழு போன்ற பத்துக்கும் மேற்பட்ட குழுக்களில் உறுப்பினராக செயற்பட்டுள்ளதோடு சிலவற்றில் தற்போதும் உறுப்பினராக உள்ளார்.

நன்னம்பிக்கை கல்வி நிதியம் (GHEF) என்ற பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்படும் பொருளாதார வசதி குறைந்த மலையக மாணவர்களுக்கு நிதியுதவி செய்கின்ற மேற்படி நிறுவனத்தில் கடந்த ஆறு வருடங்களாக செயலாளராக பேராசிரியர் கடமையாற்றுகிறார்.

இதுவரை சுமார் 150 மாணவர்களுக்கு இந்நிறுவனம் நிதி செய்துள்ளது. இதில் செயலாளராகப் பணிபுரிவது குறித்து பேராசிரியர் பெருமிதம் கொள்கிறார்.

வறுமை நிலையிலும் தன்னை தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்ய விடாமல் படிக்க வைத்த தனது குடும்பத்தினர், புனித பத்திரிசியார் கல்லூரியில் தான் க.பொ.த. சாதாரணதரம் படித்த காலத்தில் பாடசாலைக் கட்டணத்திலிருந்து தனக்கு விலக்களித்து பரீட்சை எழுத உதவிய எனது ஆசிரியர்கள் வண. சகோதரி ஜுஸ்டினா, அமரர் பேதுருப்பிள்ளை, இராசேந்திரம் முதலியோர். எத்தகைய துன்பம் எந்த வேளையிலும் தனது நலன்களை தியாகம் செய்து என்னை இன்னும் ஊக்குவித்துக் கொண்டிருக்கும் எனது துணைவி மனோகரி ஆகியோருக்கு தனது வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டிருப்பதாக இவர் நன்றியுடன் கூறுகிறார்.

Comments