கொழும்பு இளைஞர்களின் சம்பள உயர்விற்கான போராட்டம் | தினகரன் வாரமஞ்சரி

கொழும்பு இளைஞர்களின் சம்பள உயர்விற்கான போராட்டம்

எந்த முக்கிய அரசியல் தலைவர்களின் வழிகாட்டுதலும் இன்றி மலையக இளைஞர்கள் சுயமாக அணிதிரண்டு நடத்திய சம்பள உயர்விற்கான மாபெரும் கறுப்புச்சட்டை போராட்டம் மலையக மக்களின் சரித்திரத்தில் சிறப்பான முன்னேற்ற நிகழ்வாக அமைந்திருந்து. இப்போராட்டத்தில் சுமார் பத்தாயிரம் இளைஞர்களும் மக்களும் கலந்து கொண்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மலையக மக்களைப் பொறுத்தவரை இந்நிகழ்வு ஒரு இமாலய சாதனை என்பதில் சந்தேகமில்லை.

மலையக மக்களின் உரிமைக்காகவும் அபிவிருத்திக்காகவும் தொடர்ந்து குரல்கொடுக்கும் நிறுவனம் என்ற வகையில் பிரிடோ சம்பந்தப்பட்ட ஏற்பாட்டுக் குழுவிற்கும், கலந்து கொண்ட அனைத்து தரப்பினருக்கும் தனது பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.

மலையக பெருந்தோட்ட மக்களை இதுவரை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு, மூடிய அறைகளில் பேச்சுவார்த்தை என்ற பெயரில் தாம் தீர்மானித்தது தான் சம்பளம் என்ற வகையிலும், தேர்தல்களின்போது அவ்வப்போது மக்களை ஏமாற்றும் கோஷங்களை முன்வைத்து வெற்றி பெற்றுவிடலாம் என இதுவரை நினைத்திருந்த மலையக பாரம்பரிய அரசியல் சிந்தனைக்கு மாற்றாக இந்த இளைஞர் போராட்டம் அமைந்திருந்ததால் மலையக சரித்திரத்தில் ஒரு திருப்பு முனையாக கருதப்பட வேண்டும்.

தங்கள் தோட்டங்களிலிருந்து தலைநகருக்கும் வேறு இடங்களுக்கு புலம் பெயர்ந்துள்ள இளைஞர்கள் தாங்கள் பிறந்து வளர்ந்த மண்ணை மறந்துவிட்டார்கள்.

தங்கள் சொந்த மக்களின் துன்பங்களில் பங்கெடுப்பதோ, அவர்களின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவதோ இல்லை என்ற மாயையான கருத்தை இந்த இளைஞர்கள் முறியடித்திருப்பதோடு, மலையக மக்களின் குரல் பாராளுமன்றத்தில் உரத்து ஒலித்து கொண்டிருக்கும் அதேவேளையில் பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான அதிகார சபை உருவாக்கம், பிரதேச சபை சட்டத் திருத்தம் என்பவற்றிற்கு பாராளுமன்றத்தின் ஒட்டுமொத்த ஆதரவு கிடைத்தமை, புதிய பிரதேச சபைகள் அமைக்கப்பட்டுள்ளமை என்பன போன்ற முக்கிய நிகழ்வுகளின் பின்னணியில் தலைநகர் வாழ் இளைஞர்களின் இந்த சம்பள போரட்டத்தை வெறும் சம்பளப்போராட்டமாக பார்க்காமல் முழு மலையக சமூகத்திலும் ஒரு காத்திரமான அரசியல் விழிப்புணர்வும் எழுச்சியும் ஏற்பட்டுள்ளதன் அடையாளமாகவே பார்க்கப்பட வேண்டும்.

சம்பளப் பிரச்சினையானது எந்த ஒரு அமைப்பினதோ தனி நபர்களினதோ கெளரவ பிரச்சினையல்ல, இது ஒட்டுமொத்த பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினையாகும். எனவே பேச்சுவார்த்தை சகல பெருந்தோட்ட மக்களையும் உள்ளடக்கியது என்பதால் அனைத்து மலையக தொழிற்சங்கங்களும், அரசியல் கட்சிகளும் ஒருமித்து குரல் எழுப்பவேண்டிய அவசியத்தை இளைஞர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள். சம்பளப் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் தொழிற்சங்கங்கள் இது தங்களது கெளரவப்பிரச்சினை என்ற விதண்டாவாதத்தை விட்டு அனைத்து தொழிற்சங்கங்களையும் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் சூழலை ஏற்படுத்த வேண்டும் என்பதையும், அவ்வாறான அழைப்பு விடுக்கப்படுமிடத்து பேச்சுவார்த்தை குழுவிற்கு வெளியில் இருக்கும் தொழிற்சங்கங்கள் விட்டுக்கொடுப்புடன் செயல்பட வேண்டும் என்ற செய்தி இப்போராட்டம் மூலம் உரத்துக் கூறப்பட்டிருக்கிறது.

பெருந்தோட்ட மக்கள் மாத்திரமன்றி, முதல் முறையாக மலையக இளைஞர்களின் எழுச்சி மற்றும் மலையகத்திற்கு அப்பால் வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் மற்றைய பகுதிகளில் வாழும் மக்கள் மட்டுமல்ல, வெளிநாட்டில் உள்ளவர்கள் கூட ஒட்டுமொத்தமாக சம்பள உயர்வுக்காக குரல் எழுப்பியிருக்கும் பின்னணியில் ஒரு வேளை நியாயமான சம்பள உயர்வு கிடைத்தால் கூட பேச்சுவார்த்தையில் ஈடுபடும் தொழிற்சங்கங்கள் அதற்கு சொந்தம் கொண்டாடி அரசியல் இலாபம் பெற முயலக்கூடாது என்ற செய்தியும் கொழும்பு இளைஞர்கள் இந்த போராட்டத்தின் மூலமாக தெளிவாக சொல்லியிருக்கிறார்கள். அது மட்டுமல்ல, இந்த நவீன யுகத்தில் கூட்டு ஒப்பந்தம் ஒரு காலாவதியான சம்பளக் கோட்பாட்டு நடைமுறை, அதனை தொடரக் கூடாது.

பெருந்தோட்ட மக்களை நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்யும் அபிவிருத்திப் பங்காளர்களாக கருதி கெளரவமான சம்பள உயர்வு நடைமுறையை உருவாக்குவது அவசியம் என்பதையும் இந்த இளைஞர்கள் உரத்த குரலில் எடுத்துக் கூறியிருக்கிறார்கள்.

இதனை குழப்புவதற்கு முயற்சிகள் நடந்ததாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பாரம்பரிய அரசியல்வாதிகளின் இருப்புக்கு சவால் விடும் இவ்வாறான நிகழ்வுகள் நடக்கும்போது அவர்கள் அந்த முயற்சியை சீர்குலைக்க முற்படுவது ஒன்றும் ஆச்சரியமான விடயமல்ல. ஆனால் சம்பந்தப்பட்ட ஏற்பாட்டுக் குழுவினரும் இளைஞர்களும் கட்டுக்கோப்புடனும், முதிர்ச்சியுடனும் நடந்து சவாலை வெற்றிகரமாக எதிர்கொண்டிருப்பது பாராட்டத்தக்கது.

Comments