'மகளை லண்டனுக்கு அழைப்பதற்கான கடனை ஆறு வருடம் உழைத்தே அடைத்தார்கள்' | தினகரன் வாரமஞ்சரி

'மகளை லண்டனுக்கு அழைப்பதற்கான கடனை ஆறு வருடம் உழைத்தே அடைத்தார்கள்'

கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்திடம் பேசி பிள்ளைகளுக்கு மாணவர் வீசாவைத் தரச் சொல்கின்றோம் என சத்தியம் செய்து நம்பிக்கையை ஊட்டினார்கள். அப்படி மீண்டும் இலங்கைக்கே சென்ற என் பிள்ளைக்கு சொன்னபடி படிப்பதற்கான விசாவை இந்தியத் தூதரகம் கொடுக்கவில்லை. எங்களின் அவல நிலையைச் சொல்லி சட்ட-பூர்வமாகவே உதவினால் போதும் என்று மத்திய மாநில அரசுகளுக்குக் கோரிக்கை மனு அளித்திருந்தோம். அந்த மனுக்களும் சமாதியாகி விட்டிருந்தது. வேறு வழியின்றி நானும் என் கணவரும் சேர்ந்தே சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த வேண்டியதாயிற்று. அந்தப் போராட்டம் தொடர்ந்து 23 நாட்கள் வரை நீடித்தது.

நான் இந்தியப் பிரஜை. என் குழந்தையும் இங்குதான் பிறந்தாள். ஆனால் அவளை வெளிநாட்டுப் பிரஜை போல் நடத்தி நாட்டைவிட்டு வெளியேற்றுவதும், விசா கொடுக்க மறுப்பதும் எந்த விதத்தில் நியாயம் என்ற கேள்வி பலராலும் கேட்கப்பட்டது.

இந்தச் சம்பவத்தை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். 23 நாட்கள் நீடித்த போராட்டம் எங்கள் உடல் நிலையை மோசமாகப் பாதித்திருந்தது. அரச அதிகாரிகள் வந்து கொடுத்த உத்தரவாதத்தை நம்பி, வேறு வழியின்றி நாங்களும் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டோம்.

ஆனால் இந்திய அரசு சொன்னபடி நடந்து கொள்ளவில்லை. வேறு வழியின்றி நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருந்தோம்.

இதற்கிடையே வெளிநாடுகளில் இருந்த கணவரின் தம்பிகளும், சகோதரிகளும் ஒன்றாகச் சேர்ந்து எப்பாடுபட்டாவது என் பிள்ளையை வெளிநாட்டிற்கு அழைத்துக்கொள்ள வேண்டும், தொடர்ந்து வயதான பெற்றோர்களிடம் விட்டு வைத்திருப்பது பாதுகாப்பாக இருக்க முடியாது என்று பாடுபட்டார்கள். நளினி முருகனின் பிள்ளை என்றால் முகவர்கள், விசா வாங்குவதில் ஏக சிக்கல் என்று கூறி நான்கு மடங்கு பணத்தைக் கேட்டார்கள். அவ்வளவு தொகையை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அதனால் வேறு வழியை யோசித்தார்கள். அனைவரும் சேர்ந்து கடன் வாங்கி ஒரு தொகையைப் போட்டு என் பிள்ளையை ஏதோ ஒரு வழியாக லண்டனுக்குள் அழைத்துக் கொள்ள அந்த ஏஜெண்டுகளுக்குப் பணம் கட்டினார்கள்.

கடலில் படகு மூலம் அகதியாகப் போன தமிழர்களில் இதுவரை மூவாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கடலில் மூழ்கி இறந்து போயிருக்கிறார்கள். எந்த இடத்தில் எந்த திசையில் மூழ்கி இறந்து போனார்கள். அவர்களின் சடலங்கள் என்னாயின என்ற தகவல்கள் கூடக் கிடைக்காது. அந்தத் தகவல் ஒவ்வொன்றையும் கேட்கக் கேட்க எங்கள் அடிவயிற்றைக் கலக்கியது. ஆனாலும் எங்களுக்கும், கணவரின் உறவினர்களுக்கும் வேறு வழியிருக்கவில்லை. எப்போது, எப்படி, யார் மூலம் ஆபத்து வருமோ என்று இலங்கையில் கிடந்து சாவதைவிட, ஏதோ ஒரு முடிவை எடுக்கத்தானே வேண்டும் என்று மனதைத் திடப்படுத்திக் கொண்டோம். வாழ்வதற்காக வேண்டி சாகத் துணியும் பயணம் அது. வேறு எப்படி சொல்ல முடியும்?

இறுதியாக ஒரு நாள், இலங்கைக் கடற்கரையில் இருந்து மேலும் பலரோடு என் பிள்ளையும் படிந்த படகில் ஏற்றப்பட்டாள். ஒரு நாள் ஒரு வாரம் அல்ல. இரண்டு மாதத்திற்கு மேலான கடல் பயணம் அது. வழியில் எங்கும் எதுவும் நடக்கலாம். கொந்தளிப்பில் சிக்கலாம். நீர் சுழற்சியில் மாட்டலாம், ஏதோ ஒரு நாட்டின் ராணுவம் சுற்றி வளைக்கலாம். கடல்கொள்ளையில் ஈடுபடும் ஏதோ ஒரு குழு, போகிற போக்கில் சுட்டு விட்டும் போகலாம். இதுதான், இப்படித்தான் என்று இயற்கைக்கு யார் உத்தரவிட்டுக் கூற முடியும்.

தவிர புதிய கடல் பயண அனுபவம் என்பதால் கடுமையான வாந்தி, மயக்கம், காய்ச்சல் என்று பெரிதும் அவதிப்பட்டிருக்கிறாள். எது நடந்தாலும் சரி மறுகரைக்குப் போனால்தான் வாழ்வின் முகவரியைப் பெற்றுக்கொள்ள முடியும். வழியில் எது நடந்தாலும் சரி, கடவுளை வேண்டிக்கொண்டு கடலில் தூக்கி வீசிவிட்டுக் கனத்த மனதோடு பயணிக்க வேண்டியதுதான். கடல் பறவைகளுக்கும், மீன்களுக்கும் ஒரு நாள் உணவாகிப் போகும் அந்த உடல். தவிர ஒரு தகவல் தொடர்பும் கிடையாது. பயணம் செய்யும் கப்பல் எங்கே இருக்கிறது? அதில் உள்ளவர்கள் எப்படி இருக்கிறார்கள்? வேறு ஏதாகிலும் சிக்கலா என்ற தகவல் எதுவும் தெரியாது. அனுப்பி வைத்தவர்கள் சொன்னால்தான் உண்டு. சுருக்கமாக, தப்பிப் பிழைத்தால் வாழ்க்கை. தப்பிப் போனால் மரணம்.

லண்டனில் இருந்த கணவரின் சகோதர சகோதரிகளும், இங்கே நாங்களும் உறக்கத்தை தொலைத்து விட்டிருந்தோம். இரவில் தூக்கம் வராது. அந்த அறையின் இருட்டும் பேரமைதியும், தனிமைச் சிறையும் சேர்ந்து மகள் நினைப்பைப் பாடாய்ப்படுத்தி எடுக்கும். என் இதயத்தின் துடிப்பு அந்த அறை முழுக்க எதிரொலிக்கும். இருக்கின்ற தெய்வங்களை எல்லாம் வரிசையில் நிறுத்திக்கொண்டு, என் பிள்ளையையும் அந்தப் படகில் உள்ளவர்களையும் நல்லபடியாகக் கரை சேர்த்து விடுங்களேன் என்று வேண்டிக்கொண்டபடியே இருப்பேன்.

அதிகாலையில் எழுந்தவுடன் குளித்து முடித்துவிட்டுத் திரும்பவும் சாமிகளை வேண்டியபடி உட்கார்ந்து விடுவேன். சரியாகச் சாப்பிட்டதில்லை. உயிர் வாழ வேண்டும் என்பதற்காக ஒருவேளை பட்டும்படாமலும் தான் சாப்பாடு. அதுகூட மகளை நினைக்கும்போது நெஞ்சிலேயே தேங்கி அடைத்துக்கொள்ளும். அகதிகளாகக் கடலில் பயணிப்பவர்கள் குறித்து ஏதேனும் செய்தி வந்திருக்கிறதா, தப்பான செய்தி ஏதும் வந்துவிடக்கூடாதே என்று பதற்றத்தோடு செய்தித் தாள்களைப் புரட்டுவேன். கை நடுநடுங்கியபடியே இருக்கும். அந்தச் செய்தித்தாளை புரட்டுவதுகூட ஒரு யுகத்தின் வலியைப் புரட்டுவதாக இருந்தது. அவ்வளவு பதற்றம், பரபரப்போடு மனம் சோர்ந்து போய்விடும். ஆனால் மகளின் அந்தப் பயண முயற்சி தோல்வியில் முடிந்தது.

பல நாடுகளின் கடல்பரப்பில் அலைந்து திரிந்து அந்தப் படகு கடைசியாக ஒரு இஸ்லாமிய நாட்டின் எல்லையில் பயணித்துக் கொண்டிருந்தபோது பிடிபட்டது. சட்டப்படி அந்த நாட்டுச் சிறையில் வைக்க முடியாது என்று இலங்கைக்கே திருப்பி அனுப்பினார்கள். இலங்கையின் கரைகளில் கால் வைத்தவுடனேயே அந்த அரசு கைது செய்து சிறையில் அடைத்து, அதில் யார் யாரெல்லாம் புலிகள். யாரெல்லாம் இயக்க ஆதரவாளர்கள் என்று தேடிப் பிடிப்பார்கள்.

அப்படி என் மகளும் சிறைச்சாலைக்குள் செல்ல வேண்டிய அவலம் வந்துவிட்டது. அவள் யார்? அப்பா, அம்மா யார்? என்ன ஏது என்பதை எல்லாம் விசாரிக்கத் தொடங்கினால் அது வேறு சிக்கலைக் கொண்டு வந்துவிடும். ஆற்று நீருக்கு பயந்து ஓடி பாழும் கிணற்றில் விழுந்த கதையாக மாறிவிட்டது நிலைமை. லண்டனில் இருந்த உறவினர்கள் எல்லாரும் பதறிப் போனார்கள். அடுத்து என்ன செய்வதென்று புரியவில்லை.

சிறையில் இருந்த எங்களின் தவிப்பை விவரிக்கவே முடியாது. அப்படியாகி இருந்தேன். என் மகளைச் சிறைக்குள் அடைப்பதற்கு முன்பாகவே வெளியில் கொண்டு வந்துவிட வேண்டும். அதற்கு என்ன வழி என்று கணவரின் சகோதரர்களும் சகோதரிகளும் பதறிப்போய் செயல்பட்டார்கள். ஏற்கனவே குருவி சேர்ப்பதைப் போன்று சேர்த்து வைத்து பணத்தோடு மேலும் கடன் வாங்கித்தான் இந்தக் கடல் பயணத்திற்கு முகவர்களிடம் கொடுத்திருந்தார்கள். கையில் வேறு பணம் இல்லை. லண்டனில் தெரிந்தவர்களிடம் எல்லாம் ஆளாளுக்கு ஓடி அலைந்து திரிந்து மீண்டும் கடன் வாங்கினார்கள்.

(தொடரும்...)

தொகுப்பு பா. ஏகலைவன்

Comments