திசைமாறிய தீபாவளி | தினகரன் வாரமஞ்சரி

திசைமாறிய தீபாவளி

போன் எடுத்து யாருகிட்டப் பேசிக்கிட்டிருக்க?

“நம்ம மகன் கௌதம் கிட்டத்தான்”

“போன இப்படி ஏங்கிட்டக் கொடு”

“கொஞ்சம் இரு தம்பி போன அப்பாக்கிட்டக் கொடுக்குறேன்.”

ராசாத்தியிடமிருந்த செல்போன் இப்பொழுது அவளின் கணவனான பாண்டிய வீரன் கைக்குப் போகிறது.

“தம்பி... எப்படிடா இருக்கு?”

“எல்லாம் நல்ல சுகமா இருக்கேப்பா.”

“எப்படா வீட்டுக்கு வர்ற...?”

“தீபாவளிக்கு ரெண்டு நாளைக்கி முன்னமே வந்து சேர்ந்திடுறேன்.”

“இங்கு வீட்டுக்கு வர்றப்ப உன் கூட்டாளிமார் யாரையும் கூட்டிக்கிட்டு வருவியோ?”

“ஆமாப்பா இந்த முறை தீவாளிக்கு நம்ம வீட்டு ஏங்கூட வர்றேன்னு என் கூட்டாளிமாரு ஒத்தக் கால்ல நிக்கிறாங்கப்பா. வேணா வராதீங்கன்னு தடுத்து சொல்ல முடியல்ல.

முஸ்தபாவும் அவனோட விக்டரும் ஏங்கூட வர்றதா இருக்காங்க. அவுங்களுக்கு தோட்டப் பகுதி சரியா தெரியாதாம். கொழும்புலேயே பிறந்து வாழுறவுங்க. இங்க நான் வேலை செய்யுற எடத்திலத்தான் என்னோட வேலை செய்யுறாங்க. அவுங்களோட கிறிஸ்மஸ், றம்லான் பெருநாட்களுக்கெல்லாம் அவுங்களோட வீடுகளுக்கு என்ன கூட்டிப் பொயிருக்காங்க. இப்ப நம்ம தீபாவளி பண்டிகைக்கு அவுங்களை நம்ம வீட்டுக்கு கூட்டிக் கிட்டுத்தானே வரணும்?”

“நீ கூட்டிக்கிட்டு வா. அதுல ஒண்ணும் பிரச்சினை இல்ல. ரெண்டு நாளில்ல அஞ்சி நாட்கள் அவுங்க வந்து தங்கினாலும் நேரத்துக்கு ஒரு விருந்து வச்சி, அவுங்கள உபகரிக்க நம்மளால முடியும். ஆனா...”

பாண்டியவீரன் பேச்சை இழுத்தார்.

“என்னாப்பா அவுங்கள கூட்டிக்கிட்டு வந்தா... ஏதும் சங்கடமா?” என்று கௌதம் கேட்க...

“ஆமாம்... நம்ம வீட்டு நெலமத்தான் ஒனக்கு நல்லாத் தெரியுமே...?

நம்மல லயத்தில இன்னும் தகரம் மாத்தல. ஓட்டத் தகரம் தான். போன மாசம் சின்னத்தொரையும் வெல் பெயரும் வந்து பார்த்துட்டுப் போனாங்களே தவிர – இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கல்ல. நம்ம வீட்டு டெய்லட்டும் அவ்வளவு நல்லதா இல்ல. டெய்லட்டுக்கு தண்ணீ பைப்பு போட்டுத் தர்றதா சொன்னாங்க அதையும் இன்னும் செய்யல்ல.

தோட்ட தலைவரும் வந்து லயத்தப் பார்த்தாரு. எதுவும் நடக்கல்ல. மழை பெஞ்சா வீடே ஒழுகுது. தோட்டத் துரையோ மந்திரிமார்களோ எதுவும் செய்ய மாட்டேங்கிறாங்க. எல்லாமே ஏமாத்து வேலையா இருக்கு” என்று செல்ப்போன் மூலமாக தன் மகன் கௌதமிடம் எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டிருந்தார் பாண்டியவீரன்.

“அப்பா தீபாவளிக்கு வேண்டிய சாமான்கள் எல்லாம் வாங்கிட்டீங்களா? கையில காசு இருக்குத்தானே....?”

“கௌதம் காசுக்கு என்னப்பா கொறவு எனக்கு, அம்மாவுக்கு, தங்கச் சிக்கு எல்லாத்துக்கும் நல்ல சம்பளம். அதோட தீபாவளி அட்வான்ஸ், தீபாவளிக்கு பிடிச்சி வைத்திருந்த காசு. அப்புறம் அம்மா போட்ட சீட்டுப் பணமும் கிடைச்சிருச்சி. அதோட நான் கொன்றைக்ட் எடுத்து முருங்கமரம் வெட்டுனேன் தானே... அந்த பணத்தையும் துரைக்கிட்ட இருந்து வாங்கிட்டேன். ஆனா... இன்னும் வீட்டுக்கு எந்த சாமான்களோ... உடுப்பு துணி மணிகளே வாங்கல்ல. நீ இங்க வந்தால் தான் எதையும் வாங்கலாம். நீ ஒரு நாலு நாளைக்கு முன்ன இங்க வரமுடியுமா?”

“சரிப்பா கண்டிப்பாக வர்றேன். நான் வரும் வரைக்கும் நீங்க எதுவும் வாங்காதீங்க. நானும் இங்க எந்த சாமான்களும் வாங்காமல் பணத்தோட மட்டும் வர்றேன். நீங்க லைட்பில்லை மட்டும் கட்டிருங்க. மற்ற எல்லா வற்றையும் நான் வந்து பாக்கிறேன். நீங்க எதுவும் வாங்காதீங்க”, “சரிப்பா நீ நாலு நாளைக்கு முன்னமே வரப் பாரு. தயவுசெஞ்சி உன் கூட்டாளிமார் யாரையும் கூட்டிக் கிட்டு வராதே!” என்று பாண்டியவீரன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே... செல்போனில் கணக்கு முடிந்து விட்டது. தொடர்ந்து தொடர்பு கொள்ள முடியவில்லை.

“என்னாங்க பேசி முடிச்சிட்டீங்களா...? கொடுங்க நான் மகன் கிட்ட இன்னும் கொஞ்சம் பேசிக்கிறேன்”

“போடி... காசு முடிஞ்சிப் பொயிருச்சி”

“மகன்,.... என்னா சொன்னான்?”

“நாம தீபாவளிக்கின்னு எந்த சாமான்களும் வாங்கக் கூடாதாம். அவன் வந்தப் பிறகுதான் வாங்கணுமாம். அவன் நாலு நாட்களுக்கு முன்னமே வருவதாக சொல்லிவிட்டான்”

“கூட்டாளிமார் யாரையும் கூட்டிக்கிட்டு வருவானா?” ராசாத்திக் கேட்டாள்.

“இல்ல... அவனுக்குத்தான் தெரியுமே இங்க வசதியில்லன்னு... எப்படி கூட்டிக்கிட்டு வருவான்?”

“நமக்கெல்லாம் தீபாவளி உடுப்ப அவனே கொழும்பில இருந்து வாங்கிக் கொண்டு வருவானே?”

“அப்படிதான் நானும் நினைக்கிறேன்.”

"சரிங்க, மகன் விருப்பப்படியே செய்யப்பட்டும். கையிருப்பு பணத்த நாம் வீணா செலவு செய்யுறதைவிட அவனே அதை வாங்கி வீட்டுக்கு வேண்டிய சாமான்களை வந்து வாங்கட்டும்” என்றாள் ராசாத்தி.

“அம்மா அண்ணன் வந்து எதுஎது தேவைன்னு செலவு செஞ்சா அது சரியா இருக்கும். எனக்குக் கூட தீபாவளிக்கின்னு எந்த உடுப்பும் எடுக்கத் தேவையில்ல. எனக்குத்தான் ரெண்டு மாசத்துக்கு முன்ன கொழும்பில இருந்து நல்ல நல்ல உடுப்பெல்லாம் கொண்டு வந்து கொடுத்திட்டுப் போனிச்சே.... அதெல்லாம் நான் உடுத்தலத்தானே” என்றாள் ராசாத்தியின் மகளான சித்திரவடிவு.

“ஆமா வடிவு அண்ணன் எனக்கு வாங்கிட்டு வந்த சாரியும் நான் கட்டாம அப்படியேதான் இருக்கு” என்றான் ராசாத்தி.

“ஓ... அப்ப ஒங்களுக்கின்னு தீபாவளி உடுப்பு எதுவும் வேணாமா?” என்று பாண்டிய வீரன் கேட்டதும்...

புது உடுப்பு வீட்டுல இருக்கப் மேலும் மேலும் எதுக்கு உடுப்பு...?

“அண்ணன் எப்படியும் நமக்கு புது உடுப்பு வாங்கிட்டுதான் வரும்” என்றான் சித்திரவடிவு.

“தீபாவளிக்கு இன்னும் அஞ்சாறு நாட்கள் இருக்கு... அண்ணன் இன்னும் ரெண்டு நாட்களுக்குள்ள வந்திடும்” என்றாள் ராசாத்தி.

“ஆமா ரெண்டுநாள் கழிச்சி அண்ணா வந்திடும்” எதிர்பார்ப்போடு சொன்னாள் சித்திரவடிவு.

ஆனால் அடுத்த நாளே அண்ணன் கௌதம் வந்து விடுவான் என்று சித்திரவடிவு எதிர்பார்க்கவே இல்லை.

ஆட்டோ வந்து நின்றது. அநேகமாக இப்படியாகப்பட்ட பண்டிகை காலங்களில் தோட்டத்திற்கும் டவுனுக்குமிடையில் அடிக்கடி ஆட்டோக்கள் வரவும் போகவுமாக பறந்துக் கொணடுதான் இருக்கும்.

ஆட்டோவிலிருந்து கௌதம் மட்டும் இறங்கவில்லை. கூடவே இரண்டு இளைஞர்களும் இறங்கினர்.

“என்னடா தீபாவளிக்கு இவன் மட்டும் வருவதாக சொன்னான். இப்போது இன்னும் ரெண்டு பேரையும் கூட்டிக் கொண்டு வந்திருக்கிறான். இது வசதியில்லாத வீடு என்று இவனுக்கு தெரியாதா? டொய்லட் வசதியில்லை. வீடு ஒழுகும்... ஒரு ரூம் முழுக்க சட்டுமுட்டு சாமான்கள். பின் பக்கமுள்ள குளியல் காம்பிராவும் ஓட்டை தகரத்தால ஒழுங்கில்லாம இருக்கு. இதில் எப்படி?” என்று வீரன் எண்ணிக் கொண்டாலும் அதை வெளிக் காட்டாமல்... “வாங்க... வாங்க” என்று வரவேற்றார்.

கௌதம்... தீபாவளிக்கு வந்திட்டியாப்பா? இவுங்கெல்லாம் என்னா ஓங் கூட்டாளிகளா?” என்று கேட்ட அடுத்த வீட்டு மன்னாரு, “ஏன் தம்பி... ஆட்டோ திரும்பி டவுனுக்குத்தானே போவுது...? நானும் இதே ஆட்டோவுல டவனுக்குப் போகட்டுமா?” என்று கேட்க...

“இல்ல மாமா இது போவாது. இது கொழும்பு ஆட்டோ. நேரா அங்க இருந்துதான் இதுல வந்தோம். தீபாவளி வரைக்கும் இங்கத்தான் நிக்கும்” என்றான் கௌதம்.

“அப்ப தீபாவளி விஷேசம் தான்” என்ற மன்னாரு எனக்கு டவுனுக்கு போக அவசரம். நடந்தே போறேன்...” என்று சொல்லி விட்டு நடந்தார்.

“தீபாவளி வரைக்கும் எப்படியும் இவர்களை சமாளிக்க வேண்டும். அதுவரைக்கும் மழை வந்திடக் கூடாது" என்று கடவுளை வேண்டிக் கொண்டார் பாண்டியவீரன்.

எப்படி இருந்தாலும் கடவுள்தன் கட்டுப்பாட்டுக்குள் இயற்கை அனர்த்தத்தை கட்டுப்படுத்திக் கொண்டிருக்க முடியுமா? என்ற கேள்விளோடு ஒரு தீபாவளி நேரத்தில் மீறியாபெத்தயில் நடந்த மண்சரிவையும் இந்த தீபாவளி வரும் முன் நோர்வூட்டில் நடந்த மண் சரிவுகளையும் நினைத்துப் பார்த்தான். அவரின் மனசுக்கே கஷ்டமாக இருந்தது. ஆட்டோவில் கௌதம் கொண்டு வந்த சில பொட்டணங்களை சித்தரவடிவு வீட்டுக்குள் எடுத்து வைத்தாள்.

“தம்பி நீ நாளான்றைக்குதான் வருவன்னு எதிர்பார்த்தோம். இப்ப ஒரு கோல் கூட கொடுக்காம வந்திட்ட. இதுவும் நல்லதுக்குத்தான். வீட்டுக்கு தேவையான சாமான்களை எல்லாம் வாங்கணுந்தானே. அதோட இவுங்களையும் அழைச்சிக்கிட்டு வந்தது சந்தோஷமாக இருக்கு” என்ற ராசாத்தி உள்ளுக்குள் ஓட்டை விழுந்துக் கிடக்கும் சங்கடங்களை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

ராசாத்தியும் சித்திரவடிவும் வந்திருப்பவர்களுக்காக அவசரம் அவசரமாக ருசி குறையாமல் சமைக்கத் தொடங்கினார்கள். கௌதமனோட வந்தவர்கள் அந்த லயத்தையும் அதை அண்டியுள்ள மற்றைய லயங்களையும் அதன் சூழல்களையும் அந்த மக்களின் நடைமுறைகளையும் பேச்சு வழக்கையும் ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருந்தனர்.

தீபாவளி என்றாலே இங்கு சிறுவர்களுக்கு பட்டாசுவெடி எவ்வளவு முக்கியமோ அதுபோல ஆம்பளைக்களுக்கு குடித்து விட்டு குதியாலம் போடுவதும் முக்கியம்தான். அதுவும் தீபாவளி வருவதற்கு முன்பே குடித்துவிட்டு சண்டைப் போட்டுக் கொள்பவர்களும் இங்கு இல்லாமவில்லை. அதே எதிர்லயத்தில் குடிக்காரர்கள் இருவர் போட்டுக்கொள்ளும் சண்டையும் அங்கே வெடித்து சிதறும் கெட்டவார்த்தைகளும்...?

“மச்சான்... இங்க இதுவெல்லாம் சகஜம். அதையெல்லாம் கண்டுக்கொள்ளாத” என்றான் கௌதம்.

“இது இங்க மட்டுமில்ல. எங்க ஊருல இதைவிட மோசமா நடக்கும்” என்றான்.

ஆட்டோ சொந்தக்காரனான தர்மசிரியும் “உங்க நீர்கொழும்பை விட எங்கட முகத்துவாரத்தில் இதுவெல்லாம் ரொம்பவே ஓவர். குடிச்சிட்டு வந்தா ஒருத்தர் தலைவெடிக்க கத்துவான். அடுத்தவன் கத்தமாட்டான் கத்தி எடுத்து வெட்டுவான். ஆக இந்த குடிகாரனெல்லாம் பொல்லாத ஆளுங்க’ என்றான்.

பகல் மூன்று மணிக்கு பகல் சாப்பாடுமுடிந்தது. சாப்பாட்டிற்கு பிறகு...

“தம்பி நீ வந்தப் பிறகுதான் வீட்டுக்குத் தேவையான சாமான்களையெல்லாம் வாங்க நினைத்தோம். இந்த எங்கக் கிட்ட உள்ள பணம். தீபாவளிக்கு என்ன தேவையோ அதையெல்லாம் வாங்கி வா” என்று சொன்ன பாண்டியவீரன் தன்னிடம் உள்ள எல்லாப் பணத்தையும் மகனிடம் கொடுத்தார்.

“அப்பா உடுப்பெல்லாம் வாங்கி வந்திட்டேன். நீங்க வீட்டுக்கு தேவையான மளிகை சாமான் வாங்க... இந்தா இதை வைத்துக் கொள்ளுங்கள்” என்று தந்தைக் கொடுத்தப் பணத்தில் ஒரு தொகையை அவரிடம் கொடுத்துவிட்டு....

“அப்பா நானும் பணம் கொண்டு வந்திருக்கிறேன். ஆனால் இந்த பணமெல்லாம் தீபாவளி செலவுக்காக அல்ல. அதைவிட மேலான செய்கைக்கு செலவு செய்யத்தான். இந்த முறை நாம் தீபாவளியை மிகவும் சிறப்பாக அடம்பரமாக கொண்டாடத் தேவையல்லை. இப்போது கையிலிருக்கும் பணத்தில் டொய்லட்டை புதுபிக்க வேண்டும். பக்கத்து ஊற்றுக் காணிலிருந்து பட்டைப் போட்டு வீட்டுக்கு தண்ணீர் எடுக்கணும். வீடு மழைபெய்தா ஒழுகுதுண்ணு அடிக்கடி சொல்லுறீங்களே... அதனால் கூரைக்கு புது தகரங்கள் வாங்கணும். வீட்டுக்குள்ள மோசமாக இருக்கிற வயர், வோல்டர், சுவீஸ் எல்லாத்தையும் மாத்தணும். இதை எல்லாம் தோட்ட நிர்வாகமும், தலைவர்மார்களும் செஞ்சி தரணுமின்னு எதிர்பார்த்துக்கிட்டு இருந்தா நாம பல வருஷம் மழையில நனைஞ்சுக்கிட்டும் நாத்தம் பிடிச்ச டொய்லட் டோடேயும் தண்ணீரவராத பயிப்போடேயும் போராடிக்கிட்டுதான் இருக்கணும்.

இதுவெல்லாம் நமக்கு தேவையான ஒண்ணு. இதை நாம செஞ்சிக்கிறதுல்ல என்னாக் குத்தம்? எதுக்கு அடுத்தவன் எதிர்பார்த்துக்கிட்டு இருக்க. இப்ப நம்மக்கையில காசு இருக்கத்தானே. இதையெல்லாம் நாமலே செய்வோம், தீபாவளிக்கு செய்யுற வீண் செலவை குறைப்மே. அடிப்படை தேவையை பூர்த்தி செய்வோம். இப்ப கொழும்பில இருந்து என் கூட இங்க வந்திருக்கும் இந்த கூட்டாளிமார்களெல்லாம். தீபாவளி விருந்து சாப்பிடவில்ல.

ரெண்டு மூணு நாட்களுக்கு இங்க இருந்து இந்த வேலைகளை செய்து தர வந்திருக்கும் உற்ற நண்பர்கள் என்ற கௌதம்... “இந்த விக்டர் நல்ல எலக்றிஷன். இந்த முஸ்தபா காபன்டர் வேலை தெரிந்தவன். இந்த பீட்டர் சிறந்த மேசன். இந்த ஆட்டோவுக்கு சொந்தக்கார தர்மசிறியும் நல்ல லீபடு பாஸ்தான்” என்றான் கௌதம்.

“ஆமாப்பா அவன் செஞ்சி தருவான் இவன் கெஞ்சித் தருவான். தலைவர் தகரம் தருவான், மந்திரி பைப்பு தருவான்..ன்னு இப்படி எல்லாமே வரும்... வருமின்னு எதிர்பார்த்து இன்னும் ஏமாற்றுக்கிட்டுத்தான் இருக்கேன். என் சொந்தகால்ல கொஞ்ச நேரமாவது நின்னு பார்போமின்னு எனக்கு தோனல்ல. அடுத்தவனை நம்பியே வாழப் பழகிட்டேன். அவுங்கெல்லாம் சொல்லுவாங்க. ஆனா கெஞ்சித்தர மாட்டாங்க. இப்ப நீயே செய்ய முன் வந்திட்ட... இந்த தீபாவளி என் திசையை மாற்றிய தீபாவளியாக இருக்கட்டும்” என்றார் பாண்டிவீரன்.

Comments