பாஉரத்துச் சொல்வோம் | தினகரன் வாரமஞ்சரி

பாஉரத்துச் சொல்வோம்

லியல் இச்சை பற்றிப் பேசுவதை ஆண்கள் ஆண்மையின் அடையாளமாகவும் பெண்கள் கலாசாரக் கேடாகவும் பார்க்கிறார்கள். சமூகம் இப்படித்தான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ‘மீடூ’ வில் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் பற்றிப் பேசவே இப்போதுதான் பெண்களுக்குத் துணிவோ தைரியமோ வந்திருக்கிறது. பாலியல் துன்புறுத்தல்கள் பற்றிப் பகிரும் பெண்களையே இவ்வளவு விமர்சிக்கும் சமூகம், அவர்களின் இச்சையைப் பற்றிப் பேசினால் அவ்வளவுதான். பூலோகமே அழிந்துவிடும் என்ற அளவில் கொதித்து எழும்.

ஏன் நம் சமூகம் ஆண்களுக்கு ஒரு நியாயம், பெண்களுக்கு ஒரு நியாயம் என்று செயல்படுகிறது? பெண்களின் எண்ணம், ஆசை, செயற்பாடு என எல்லாவற்றையும் ஒன்றுகூடி தீர்மானிக்கும் சமூகம், ஏன் ஆண்களுக்கு இத்தகைய விதிமுறைகளை நிர்ணயிப்பதில்லை?

இது ஏட்டிக்குப் போட்டியான பேச்சல்ல. சமீபகாலமாகத் தகர்த்தெறியப்பட்ட சில சட்டங்களும் ‘மீடூ’ வும் சமூகத்தில் பெரிய கலக்கத்தை உண்டாக்கியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் நிறைய ஆண்கள், சில பெண்களின் எதிர்வினைகளைப் பார்க்கும்போது, ஏன் இந்தச் சமூகம் இப்படிப் பாரபட்சமாக இருக்கிறது எனப் புரியவில்லை. பாராட்டுபவர்களும் வரவேற்பவர்களும் ஒரு புறமிருக்க, மற்றவர்களால் ஒழுக்க நெறிகள் அலசப்படும் விதம் சீற்றத்தைத் தருகிறது. ‘மீ டூ’வில் பாதிப்பை உருவாக்கிய ஆணை விட்டுவிட்டு நம் சமூகம் பெண்களின் ஒழுக்கம் பற்றி மட்டுமே பேசுகிறது.

அப்போதே ஏன் சொல்லவில்லை, ஏன் இப்போது சொல்கிறாய் என்ற கேள்விகள் வேறு. வெளியே வந்திருக்கும் பெண்களைத் தாண்டி, வேறு பெண்கள் வந்துவிடக் கூடாது என்று, வந்த பெண்களைத் பற்றித் தரக்குறைவாகப் பேசுகிறார்கள்.

சினிமா, முறைசாரா துறைகளில் வேலைபார்க்கும் பெரும்பாலான பெண்கள் வாயைத் திறந்தால் சமூகம் முழுவதும் ‘மீ டூ’கள்தான் நிறைந்திருக்கும். இங்கு ஆண்களின் இச்சை என்பது மட்டுமல்ல பிரச்சினை.

ஆண்களுக்கு எதைப் பற்றியும் யாரிடமும் பேச முடியும், பேசலாம் என்று அளிக்கப்பட்டிருக்கும் அதிகாரமும் தான். உடன் வேலை பார்க்கிறார்கள், வெளியே ஒன்றாக உணவருந்த வருகிறார்கள், கூட்டங்களுக்கு உடன் வருகிறார்கள். இதற்கெல்லாம் தயாராக இருக்கும் பெண்கள்தானே, கேட்டுப் பார்ப்போம் என்ற எண்ணம்தான்.

இதே ஆண்கள், தங்கள் வீட்டுப் பெண்கள் அலுவலகத்திலிருந்து சிறிது நேரம் தாமதமாக வந்தால் ஏன் தாமதம், என்ன செய்து கொண்டிருந்தாய், ஏன் மேலதிக வேலை செய்தாய், அலுவலக நேரத்திலேயே அந்த வேலையை முடிக்க முடியாதா என்றெல்லாம் குறுக்கு விசாரணை செய்வார்கள். அவர்கள் வீட்டுப் பெண்களின் நடை, உடை, பாவனை, பழக்க வழக்கங்கள் எல்லாவற்றிலும் பரிசுத்தத்தை எதிர்பார்க்கும் ஆண்கள் தாம் அலுவலகங்களில், பொது இடங்களில் தங்களின் நட்புவட்டத்தில் உள்ள பெண்கள் ‘சுதந்திரமானவளாக’ இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

‘மீ டூ’ இனிமேலும் தொடரும். அதற்காகப் பெண்கள் வேலை பார்ப்பதையோ படிப்பதையோ பயணம் செய்வதையோ நிறுத்திவிட முடியாது. பெண்கள் தங்களை மேலும் உறுதியானவர்களாகக் கட்டமைத்துக்கொள்ள வேண்டும். இந்த உறுதி ஒரு நாளில் வந்துவிட முடியாது. சிறுவயதிலிருந்தே பெண் குழந்தைகளைப் பயந்தவர்களாக வளர்க்கும் போக்கைப் பெற்றோர்கள் கைவிட வேண்டும். பெண்கள் அடக்க ஒடுக்கமாக அமைதியான குழந்தைகளாக இருப்பதைப் பார்த்துப் பெருமிதம் கொள்ளக் கூடாது.

கடைக்கு அனுப்புவதில் இருந்து தன்னுடைய வெளி வேலைகளைத் தானே பார்த்துக் கொள்வதற்கான துணிச்சலை வளர்த்துக் கொள்வதற்கு கற்றுக் கொடுங்கள்.

பாட்டும் பரதமும் வீணையும் கற்றுக் கொடுப்பதைவிட, தற்காப்புக் கலைகளைக் கற்றுக் கொடுப்பது மிக அவசியம். பெண்கள் அதிகம் நடமாடும் இடங்களின் பாதுகாப்பை உறுதி செய்வது சமூகத்தின் கடமை. அதை அனைவரும் சேர்ந்து பெற்றுக் கொடுக்க வேண்டும். ஆபத்தான இடங்களைத் தவிர்க்கச் சொல்லுங்கள். துணிச்சல் வேறு, அசட்டுத் துணிச்சல் வேறு.

வேண்டாம் என்று மறுத்துச் சொல்லவும் அந்த இடத்தை விட்டு அகன்று செல்லவும் அதை நம்பகமான ஒருவரிடம் போய்ச் சொல்லவும் வளரிளம் பெண்கள் மட்டுமல்ல, வன் முறையை எதிர்கொள்ளும் அனைவரும் பின்பற்ற வேண்டியது அவசியம்.

Comments