தவறான கற்பிதங்களால் தேக்க நிலையிலுள்ள இலங்கையின் உல்லாசத்துறை | தினகரன் வாரமஞ்சரி

தவறான கற்பிதங்களால் தேக்க நிலையிலுள்ள இலங்கையின் உல்லாசத்துறை

இலங்கைக்கு அந்நியச் செலாவணியை ஈட்டிக் கொடுக்கும் ஒரு துறையாக சுற்றுலாத்துறை இருந்த போதிலும் அத்துறையின் வளர்ச்சி மித வேகத்தில் இருப்பதுடன் அது பற்றி மக்கள் கொண்டுள்ள தவறான கற்பிதங்கள் அதன் வளர்ச்சி எல்லையை தேங்கு நிலையில் வைத்திருக்க முனைவதைக் காணலாம்.

இலங்கை அரசு அவுஸ்ரேலிய அரசுடன் இணைந்து திறன் அபிவிருத்தி அமைச்சினூடாக சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையினை அபிவிருத்தி செய்யப் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது. இருந்த போதிலும் அத்திட்டங்கள் இன்னும் மக்கள் மயப்படுத்தப்படவில்லை என்ற கருத்து உயர்வலயங்களில் பேசப்பட்டு வருகின்றன.

ஈ.எல்.லைப் S4IG நிகழ்ச்சித்திட்டம் எனும் பெயரில் முன்னெடுக்கப்படுகின்ற இவ்விடயம் குறித்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வொன்று குழுமத்தின் பணிப்பாளர் பிரசாத் ஜயசிங்க தலைமையில் மாளிகைக்காடு பேர்ள் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது

இத்துறை வாண்மையாளரும் சப்ரகமுவ பல்கலைக்கழக சுற்றுலா முகாமைத்துவப் பேராசிரியராகவும் கடமையாற்றும் எம்.எஸ்.எம்.அஸ்லம் பிரதம வளவாளராகக் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் குழுமத்தின் திட்ட இணைப்பாளர் எம்.எஸ்.எம்.சாமிர்- அம்பாறை மாவட்ட திட்ட உத்தியோகத்தர் அர்சத் இஸ்மாயில் ஆகியோரும் நிகழ்ச்சித் திட்டம் தொடர்பில் விளக்கமளித்தனர். சுற்றுலாத்துறை என்றால் அது துஷ்பிரயோகம், குடிபோதை போன்ற இன்னோரன்ன சமூக விரோத செயல்களுடன் பின்னிப் பிணைந்தது என்ற கருத்து பரவலாக விதைக்கப்பட்டுள்ளது. இது பிழையான எண்ணக்கருவாகும்.

உல்லாசப் பிரயாணத்தில் ஈடுபடுகின்றவர்கள் சில வேளைகளில் துஷ்பிரயோகம் போன்றவைகளில் ஈடுபட்ட போதும் உல்லாசத்துறைக்கும் அதற்கும் சம்பந்தம் கிடையாது. ஒரு நாட்டின் இறைமையையும் ஒழுக்கத்தையும் கெளரவத்தையும் பாதுகாத்து அதனை தன்னுடன் இணைத்துச் செல்கின்ற உன்னத துறையே உல்லாசத்துறையாகும்.

இலங்கையில் உல்லாசத்துறையினுாடாக எத்தனையோ வகையான செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும். அதனூடாக பொருளாதாரத்தின் தன்மையை உயர்த்தி மக்களின் வாழ்வையும் மேம்படுத்த முடியும். எனினும் இது பற்றிய அறிவில்லாமையே இத்துறைக்குள் நுழைய முடியாத தடைக்காரணியாக உள்ளது. இத்தடைகளை அகற்றி மக்களை விழிப்படைய வைப்பதில் ஊடகத்துறையே காத்திரமான பங்கை ஆற்ற வேண்டுமென உல்லாசத்துறையை மேம்படுத்த எண்ணுகின்றவர்கள் கருதுகின்றனர்.

நமது கிராமப்புறத்தவர்கள் ரொட்டி போடுவதிலும் சிற்றுண்டிச் சாலைகளை நடத்துவதிலுமே குறியாக இருக்கின்றனர். மீன் பிடித்துறையினை வைத்துக் கொண்டே “கடல் உணவகம்” ஒன்றை திறனுள்ளதாகச் செய்தால் இலங்கைக்கு வரும் உல்லாசப் பயணிகளை எமது பிரதேசத்திற்கு வரவழைக்க முடியும். ஆனால் எமது மீனவர்களும் கடல்பிரதேச மக்களும் இது பற்றிச் சிந்திக்க வாய்ப்பற்றவர்களாக இருக்கின்றனர். இவ் வாய்ப்பினை ஏற்படுத்தி அம் மக்களைத் தூண்டி விடுவதே எமது நோக்கமாகும் என்கின்றனர் உல்லாசத்துறை அபிவிருத்தியாளர்கள்.

சுற்றுலாத்துறை முன்னேற வேண்டுமென்றால் மக்களின் ஒத்துழைப்பு அவசியமாகும். மக்கள் விரும்புகின்ற, அவர்களுடன் ஒன்றிணைந்துள்ள அம்சங்களை இணைத்து அதனை மேம்படுத்த சுற்றுலாத்துறை முனைகின்ற போது இத்துறையை மிக இலகுவில் முன்னேற்ற முடியும்

சுற்றுலாத்துறை மையம் உருவாக குளங்கள் தேவைப்படும்- புராதன இடங்கள் தேவை. இவைகள் இருந்தால்தான் சுற்றுலாத்துறை மையங்களை உருவாக்கலாம் என்ற எண்ணங்கள் பிழையானவையாகும். மக்களின் பண்பாடுகளையும் அவர்களிடம் உள்ள வழமையான தொழிற்துறைகளையும் கவர்ச்சி மிக்கதாக மாற்றும் போதே குறித்த ஒரு பிரதேசத்தை சுற்றுலாத்துறை மையமாக மாற்ற முடியும்.

மருதமுனை நெசவுத்துறைக்குப் பெயர்போன கிராமம். ஆயினும் அப்பிரதேசத்தில் நெசவுத் தொழிலை அடையாளப்படுத்தக் கூடிய பதாதைகளை அவ்வூரின் முகப்பில் காண முடியாதுள்ளது. இவ்வாறான முகப்புகளை உருவாக்கி அடையாளப்படுத்துவதுதான் இத்துறையின் இலக்கை அடைவதற்கான வழிகளில் ஒன்றாகும்.

இலங்கையைப் போன்ற இயற்கை வளம் மிக்க நாட்டில் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள சுற்றுலாத்துறைத் தளங்கள் போதாமையாகவுள்ளது.

சமய பண்பாடுகளுக்கு அப்பாற்பட்ட ஒன்றாகவும் இது பார்க்கப்படுகிறது. ஆனால் சமயங்களுக்கும் உல்லாசத்துறைக்கும் நெருக்கமான தொடர்புண்டு. இஸ்லாமிய வரலாற்றைப் பார்க்கும் போது இறைதூதர்கள் தங்களது பணிகளை சுற்றுலாப் பிரயாணங்களினூடாகவே இலகுபடுத்தினார்கள் என்பதை அறிய முடிகிறது.

அம்பாறை கரையோரப்பகுதிகளில் சுற்றுலாத்துறை மையங்களாக உருவாக்கக் கூடிய எத்தனையோ இடங்கள் இருந்தும் அவை எம்மால் ஆய்வுக்குட்படுத்தி உரியமட்டங்களுக்கு கொண்டு செல்லப்பட்டும் அரச தரப்பு அதிகாரிகள் இவ்விடயத்தில் அக்கறையற்றும் ஒத்துழைப்பு இல்லாமலும் இருப்பதும் கவலையளிக்கிறது. நாம் இத்துறையில் நீண்ட தூரப்பயணம் போக வேண்டுமாயின் சகல தரப்பினரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும்.

நமது நாட்டிள்ள இயற்கை வளங்கள் எத்தனையோ அழிக்கப்பட்டுள்ளன. குளங்கள் பல மூடப்பட்டள்ளன. வகுப்பறைகளில் கற்பிக்கப்படுகின்ற பாடங்களை மட்டும் நம்பியிராமல் சுற்றுப்புறத்தின் அவசியம் பற்றியும் மாணவர்களுக்கு நேரடித்தரிசிப்பின் மூலம் உணர்ந்த வேண்டும். இயற்கைப் பாதுகாப்பு பற்றி எத்தி வைக்க வேண்டும். இதுவெல்லாம் உல்லாசத்துறை வளர்ச்சிக்கு கட்டியம் கூறவல்லன

கல்முனை மாநகர எல்லைக்குள் எத்தனையோ சுற்றுலாத்துறை இசைவிடங்கள் இருக்கின்றன. அவற்றை அழகு படுத்தினாலே போதும் இப்பிரதேசத்தை செல்வச் செழிப்புடனும் மற்றவர்கள் தேடுகின்ற மையமாகவும் மாற்ற முடியும். பொருளாதாரத்தளமாகவும் மாற்றலாம். ஆயினும் அதற்கான ஆயத்தங்களில் சம்பந்தப்பட்ட தரப்பினர் இல்லாமையே சுற்றுலாத்துறையின் பின்னிற்றலுக்குக் காரணமாகும். மீன் பிடித்துறையை வைத்தே மிகப்பெரிய சுற்றுலா மையத்தை உருவாக்க முடியும் என்பதே சுற்றுலாத்துறை ஆய்வுகளின் முடிவாகும்.

உள்ளத்தைக் கவர்வதும் இருப்பதை வளமாக்குவதுமே இத்துறையின் முக்கிய அடைவுக்கான ஆயுதமாகும். அதனை விளங்கி அனைவரும் ஒன்றிணைவதன் மூலம் சுற்றுலாத்துறையை இலங்கையில் மேம்மபடுத்த முடியும்

கல்முனை நகரத்தை மட்டும் அழகுபடுத்தினாலே போதும் வருமானம் சார்ந்த உல்லாசத்துறையொன்றை ஏற்படுத்துவதற்கு. கல்முனையின் கரையோரப்பகுதிகளில் எவ்வளவோ சுற்றுலாக் கவர்தல் இடங்களை உருவாக்க முடியும். இருந்தும் இப்பிரதேசத்திலுள்ள அரச அதிகாரிகளின் ஒத்துழைப்பு மந்தமாக இருப்பதே இவ் அடைவினை எட்டுவதற்குத் தடையாகவுள்ளது. இலங்கையில எந்தத் திட்டங்கள் மேற்கொள்ளும் போதும் அது மக்களை மையப்படுத்தியதாக இருப்பதில்லை. ஆனால் வெளிநாடுகளில் மக்களே பிரதானம். இதனால் பொதுவான திட்டங்கள் மக்களுக்குப் பலனளிப்பதாக இருப்பதில்லை.

கிழக்கு மாகாணத்தில் பாசிக்குடா-, உல்லை போன்ற உல்லாசத்தளங்கள் இருக்கின்ற போதும் அதனை திறனுடையதாக மாற்றியமைக்க வேண்டிய தேவையுண்டு. இதற்கு பொதுநலமாகச் சிந்திக்கின்ற நிருவாகக் கட்டமைப்பினர் அவசியமாகும் என பேராசிரியர் அஸ்லம் சுட்டிக்காட்டினார். கிழக்கின் சுற்றுலாத்துறை பற்றி அறிந்து கொள்ளக் கூடிய இணையமொன்றே இல்லாத துர்ப்பாக்கிய நிலையுள்ளதாக வளவாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

வேலைவாய்ப்பற்றிருக்கும் ஆண்கள், பெண்கள் மற்றும் வலது குறைந்தோரை இத்துறைக்குள் உட்படுத்தி பயிற்சிகளையும் தொழில்வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். ஈ.எல்.லைப் S4IG திட்டமானது பொலன்னறுவை-, திருகோணமலை,- மட்டக்களப்பு-, அம்பாறை ஆகிய இடங்களில் முன்னெடுக்கப்படுகின்றமை முக்கிய அம்சமாகும்

எனவே உல்லாசத்துறை பற்றிய தவறான எண்ணங்களைக் களைந்து மக்களுக்குப் பயன்தரும் ஒரு துறையாக இதனை மாற்றும் போது மக்களும் நாடும் உயர்வளமுள்ளதாக மாறமுடியும்.

Comments