19 அமுலிலிருந்தாலும் 70வது சரத்தில் எந்த மாற்றமுமில்லை | தினகரன் வாரமஞ்சரி

19 அமுலிலிருந்தாலும் 70வது சரத்தில் எந்த மாற்றமுமில்லை

முன்னாள் சபாநாயகர் லொக்குபண்டார

அரசியலமைப்பின் பத்தொன்பதாவது திருத்தச் சட்டம் அமுலில் இருந்தபோதிலும் 70ஆவது சரத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படாததால், ஜனாதிபதிக்கு முழுமையான அதிகாரம் இன்னமும் அவ்வாறே உள்ளதென்று முன்னாள் சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டார சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தின் கூட்டத்தொடரை முடிவுறுத்துவதும் மீள ஆரம்பிப்பதும் ஜனாதிபதிக்குள்ள அதிகாரமாகும் என்றும் அவரைத்தவிர வேறு எவருக்கும் பாராளுமன்றத்தைக் கூட்டும் அதிகாரம் கிடையாதென்றும் அவர் கூறினார்.

ஜனாதிபதி பாராளுமன்றக் கூட்டத் தொடரை ஓரிரு நாட்களுக்ேகா, வாரங்களுக்கோ அன்றி, இரண்டு மாதங்கள் வரை இடைநிறுத்தி வைத்து மீள ஆரம்பிக்க முடியுமென்றும் விளக்கினார். அதேநேரம், அவ்வாறு சம்பிரதாயபூர்வமாக மீள ஆரம்பிக்கப்பட்ட கூட்டத்தொடரை மீண்டும் ஒத்திவைக்கும் அதிகாரமும் ஜனாதிபதிக்கு உண்டென்றும் நேற்று செய்தியாளர்களிடம் லொக்குபண்டார தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவை நியமித்தது அரசியலமைப்புக்கு முரணானதல்ல என்றும் முன்னாள் சபாநாயகர் லொக்குபண்டார தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை பிரதமராக நியமனம் செய்த பின்னர், ரணில் விக்கிரமசிங்க

அலரிமாளிகையில் தங்கியிருப்பது சட்டவிரோதமான செயற்பாடாகும். 19ஆவது திருத்த சட்டம் அமுலுக்கு வந்தாலும் இலங்கை ஜனநாயக சோசலிஸ குடியரசின் அரசியலமைப்பில் 70ஆவது சரத்து திருத்தப்படாமையினால் ஜனாதிபதிக்கு நிறைவேற்று அதிகாரம் முழுமையாகவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து அவர் கூறுகையில்,

முன்னாள் ஜனாதிபதிகளான ஜே. ஆர். ஜயவர்தன, பிரேமதாச, சந்திரிகா பண்டாரநாயக்க, மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோருக்கிருந்த அதிகாரமே தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இருக்கின்றது. நான் சபாநாயகராக பதவி வகித்த காலத்தில் இந்நாட்டின் 3ஆவது பிரஜையாக இருந்து சட்டத்தைப் பாதுகாத்தேன். இன்றும் பாதுகாத்து வருகின்றேன். சபாநாயகர் பாராளுமன்ற உறுப்பினர்களால் தெரிவு செய்யப்பட்டவர். அவர் இந்நாட்டின் அரசியலமைப்புக்குச் சார்பாக தமது பதவியினை வகிக்க வேண்டும். அவர் தாம் சார்ந்த கட்சிக்குச் சார்பாக செயற்பட முடியாது. அவர் மத்தியஸ்தம் வகிக்க வேண்டியவர். பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கோ, அல்லது கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நடத்துவதற்கோ அவருக்கு அதிகாரமில்லை. ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்றக் கூட்டத் தொடரை ஆரம்பிப்பதற்கு ஜனாதிபதி திகதியினைக் குறிப்பிட வேண்டும். நான் பதவி வகித்த காலத்தில் எந்தக் கட்சிக்கும் விலை போகவில்லை. முழுமையாக ஆறு வருடங்கள் பதவி வகித்தேன். நான் பதவி வகித்த காலமானது, இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலம். அப்போது அவசர காலச்சட்டம் நிறைவேற்றுவதற்கும் முக்கியமாக பங்காற்றினேன். நாட்டின் சட்டம் ஒழுங்கினைப் பாதுகாக்க வேண்டியது சபாநாயகரின் கடமையாக கொள்ள வேண்டும்.

பாராளுமன்றத்தினை கலைக்கவும் ஜனாதிபதிக்ேக அதிகாரமுண்டு. அத்துடன் பட்ஜெட் விவாதத்தில் தோற்கடிக்கப்பட்டால் அல்லது பிரதமருக்கு எதிராக நம்பிக்ைகயில்லா பிரேரணை கொண்டு வந்து தோற்கடிக்கப்பட்டால் கூட பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்ேக உரித்தானது.

நான் சபாநாயகராக பதவி வகித்த பின்பு, சிறிகொத்தவுக்குச் செல்லவுமில்லை. மீண்டும் அதிகாரத்திற்கு வரவும் மில்லை. இப்பதவி மிகவும் மேன்மையானதும் கௌரவமானதுமாகும். இதனை இன்றும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். எமது நாடு குடியரசு. அந்நியர் இங்கு தலையிட முடியாது. எமக்ெகன்று சட்டங்கள் இருக்குன்றன என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

Comments