தோட்ட மக்கள் பயன்படுத்திய காணிகளுக்கு எதிராக கம்பனிகள் வழக்குத் தாக்கல் செய்ய முடியாது | தினகரன் வாரமஞ்சரி

தோட்ட மக்கள் பயன்படுத்திய காணிகளுக்கு எதிராக கம்பனிகள் வழக்குத் தாக்கல் செய்ய முடியாது

இதுவரை காலமும் தோட்டங்களில் வாழ்பவர்கள் பயன்படுத்திய காணிகளுக்கு எதிராக எந்தவொரு தோட்டக் கம்பனியும் வழக்குத் தாக்கல் முடியாது. வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தால் அவற்றை வாபஸ்பெற நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சின் சட்ட அதிகாரிகளுக்கு பணித்திருப்பதாக பெருந்தோட்ட இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சராக தான் பொறுப்பேற்ற 24 மணி நேர்த்துள் இதற்கான பணிப்புரையை வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

மலையகத்தில் வாழ்கின்ற மக்கள் அவர்கள் தோட்டத்தில்

வேலை செய்பவர்களாகவோ, செய்யாமலோ இருக்கலாம். ஓய்வூதியம் பெற்றிருக்கலாம். தோட்ட உத்தியோகத்தர்களாக இருக்கலாம் அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

பெருந்தோட்டத் தொழிலாளர்கள், தோட்ட உத்தியோகத்தர்கள் தோட்டக் காணிகளில் குடியிருப்பவர்கள், மரக்கறி செய்கை மற்றும் கால்நடை வளர்ப்பில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் ஒரு அங்குலக் காணியையேனும் கம்பனிகளுக்கு திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அவர்கள் குடியிருக்கும் காணிகள் அவர்களுக்கே சொந்தமாகும். நான் அமைச்சராக இருக்கும் வரையில் அவ்வாறானவர்களுக்கு எதிராக வழக்குபோட இடமளிக்க மாட்டேன். ஏற்கனவே போடப்பட்டிருக்கும் வழக்குகளை வாபஸ்பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சின் சட்ட அலுவலர்களுக்கு பணித்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

பெருந்தோட்ட மக்கள் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்வதற்காக மரக்கறி செய்கையில் ஈடுபட்டிருப்பதையும் கால்நடை வளர்ப்பதையும் பாட்டன் பூட்டன் காலத்திலிருந்தே செய்து வருகிறார்கள். பெருந்தோட்டத்துறை அமைச்சின் கீழ் இயங்கிவரும் பெருந்தோட்ட கண்காணிப்பு பிரிவுவானது இதுவரை காலமும் கம்பனிகளுக்குக் சார்பாகவே இயங்கி வந்திருப்பதாக சுட்டிக்காட்டிய அவர் இவ்வாறான நடவடிக்கைகள் இனிமேலும் தொடரக்கூடாது என மேலும் தெரிவித்தார்.

அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டதும் முதலாவது நடவடிக்கையாக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள உயர்வு, தீபாவளி முற்பணம் ஆகியவற்றை பெற்றுக்கொடுப்பதற்காக கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் மூன்று தொழிற்சங்கங்கள், முதலாளிமார் சம்மேளனம், 22 கம்பனிகளின் நிறைவேற்று அதிகாரிகள், தொழில் அமைச்சின் ஆணையாளர், தேயிலைச் சபை, இரப்பர் சபைகளின் தலைவர்கள் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஆகியோரை அழைத்து அமைச்சின் பேச்சுவார்த்தை நடத்தினோம். தீபாவளி முற்பணமாக 10,000 ரூபாவை வழங்க சில கம்பனிகள் இணங்கியிருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

 

Comments