செயற்கை நெருக்கடியை ஏற்படுத்த ரணில் முயற்சி | தினகரன் வாரமஞ்சரி

செயற்கை நெருக்கடியை ஏற்படுத்த ரணில் முயற்சி

இலங்கையில் இல்லாத ஓர் அரசியல் நெருக்கடியை செயற்கையாக உருவாக்கி மேற்குலக நாடுகளின் தலையீட்டை ஏற்படுத்துவதற்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முயற்சிக்கின்றார் என்று ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான முன்னாள் வதிவிடப்பிரதிநிதி தமரா குணநாயகம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டுள்ள தீர்மானம், மக்கள் விருப்பத்திற்கு அமைவானது; அரசியலமைப்புக்கு ஏற்புடையது என்று தெரிவித்துள்ள அவர், இந்த இரண்டும் பிழையென்று முன்னாள் பிரதமர் கருதுவாராக இருந்தால், அவர் மக்கள் மத்தியில் செல்ல வேண்டும். அல்லது உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைவரம் பற்றி ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த அவர், ஊடகங்களின் செய்தி அறிக்ைகயிடல்களும் பக்கச்சார்பாகவே உள்ளதென்று குறிப்பிட்டார். இலங்கை ஊடகங்களையும் சர்வதேச ஊடகங்களையும்

உன்னிப்பாக அவதானித்து வருவதாகத் தெரிவித்த அவர், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் குறித்து பக்கச்சார்பான விமர்சனமே முன்வைக்கப்படுகின்றது. மேற்குலக அணிகள் ஒன்று திரண்டு ஒரு வகையான செயற்கை நெருக்கடியைத் தோற்றுவித்துக் காண்பிக்க முயற்சிக்கின்றன. முன்னாள் பிரதமரும் அந்த அணியில் இருக்கின்றார். அவருக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கின்றது என்றால், அவர் உச்ச நீதிமன்றத்தை நாடலாம். ஆனால், அவ்வாறு நாடினால், அவருக்குச் சார்பாகத் தீர்ப்பு கிடைக்காது என்பது அவருக்குத் தெரியும்.

அவ்வாறு இயலாவிட்டால், மக்கள் மத்திக்குச் செல்ல வேண்டும். மக்கள் மத்திக்குச் செல்வதென்றால் பொதுத் தேர்தலுக்குச் செல்ல வேண்டும். அரசியல் கள நிலவரப்படி அதுவும் அவருக்குச் சாதகமாக இல்லை. கடந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலின்போது கிடைத்த பெறுபேறு அதற்குச் சான்று. எனவே, அவர் மேற்குலக நாடுகளைத் தலையிடச்செய்ய முயற்சிக்கின்றார்.

இலங்கையில் தற்போதைய நிலவரம் மேற்கு நாடுகள் தலையிடும் விவகாரமன்று.

அதேபோன்று, நீக்கப்பட்ட ஒரு பிரதமரைச் சந்திக்க வேண்டிய தேவை வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்குக் கிடையாது. அவர்கள் வேண்டுமானால் ஜனாதிபதியையோ அல்லது புதிய பிரதமரையோ சந்தித்திருக்கலாம். அவ்வாறென்றாலும், அதுவும் அவர்கள் சந்திப்பதற்கான ஓர் ஒழுங்குமுறை இருக்கின்றது. அவர்கள் எடுத்த எடுப்பில் ஜனாதிபதியையோ பிரதமரையோ ஏன் வெளிநாட்டு அமைச்சரையோ சந்திக்க முடியாது. அவர்கள் முதலில் வெளிவிவகார அமைச்சின் செயலாளரையே சந்தித்துத் தமது கருத்தைக்கூற வேண்டும். இவர்கள் ஜனாதிபதியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திவிட்டுத் தங்கள் கருத்தைச் சொல்லியிருக்கிறார்கள். முன்னாள் அமைச்சர் கூறியதைப்போன்று ஜனநாயகத்திற்கு எதிரான சதி என்று சொற்பிரயோகத்தைப் பயன்படுத்த முடியாது. அது முற்றிலும் தவறானது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய அரசியல் மாற்றத்தை மக்கள் எதிர்க்கவில்லை; பொது அமைப்புகள் வெறுக்கவில்லை. ஓர் அரசியல் கட்சி கொள்ளுப்பிட்டியில் அலரி மாளிகைக்கு முன்பாக நடத்திய ஆர்ப்பாட்டம், தற்போதைய மாற்றத்திற்கான மக்களின் பிரதிபலிப்பல்ல. அஃது ஓர் அரசியல் கட்சி, முன்னாள் பிரதமருக்கு ஆதரவாக நடத்திய ஆர்ப்பாட்டம். அதனைத் தற்போதைய நிலவரத்தின் பிரதிபலிப்பாகக் காட்டுவதற்குச் சில ஊடகங்கள் முயற்சிக்கின்றன. அது தவறு.

உண்மையில், ஜனாதிபதி நியமித்துள்ள புதிய பிரதமருக்குப் பல தரப்பினரும் ஆதரவைத் தெரிவித்துள்ளனர். அத்தியாவசிய தேவையைக் கருதி எரிபொருள் விலையை குறைத்திருக்கிறார். இதனையடுத்து முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் கட்டணத்தைக் குறைத்துள்ளார்கள். சிற்றுண்டிச் சாலைகளின் உணவக உரிமையாளர்களும் விலைக்குறைப்பைச் செய்துள்ளனர். புதிய அரசாங்கத்திற்குக் கிடைத்துள்ள உண்மையான பிரதிபலிப்பு இதுதான். அதேநேரம், முல்லைத்தீவில் காணாமற்போனவர்களின் உறவுகள் புதிய பிரதமரைச் சந்தித்த போது, அவர் மீதான தமது நம்பிக்ைகயை வெளிப்படுத்தியுள்ளனர். எனவே, ஊடகங்கள் உண்மையான நிலவரத்தை உள்ளது உள்ளபடி நடுநிலையுடன் அறிக்ைகயிட வேண்டும். அதில் இருதரப்புத் தகவல்களையும் உள்ளடக்கித் தர வேண்டும் என்றும் தமரா குணநாயகம் வலியுறுத்தியுள்ளார்.

Comments