வாய்ப்புகளை மற்றொரு தடவையும் தவறவிட்ட நாடாக இலங்கை இருந்துவிடக் கூடாது! | தினகரன் வாரமஞ்சரி

வாய்ப்புகளை மற்றொரு தடவையும் தவறவிட்ட நாடாக இலங்கை இருந்துவிடக் கூடாது!

இலங்கையின் தொழிற்படையானது 2026ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாகக் குறைவடைந்து செல்லுமெனவும் முதியோர் தங்கிவாழ்வோர் சதவீதம் அதிகரிக்குமெனவும் எதிர்வு கூறப்படுகிறது. பயிற்றப்படாத ஊழியர்கள் நிரம்பல் கணிசமான அளவு, குறைந்து விட்டதை வேலைக்கு ஆள் பிடிப்பதில் எதிர்நோக்கும் சிரமங்கள் நன்கு புலப்படுத்துகின்றன. எதிர்காலத்தில் தொழிற்படை சுருங்கி முதியோர் குடித்தொகை அதிகரிக்கும்போது இந்த நிலைமை மேலும் தீவிரமடையும். பயிற்றப்படாத ஊழியர்களை வேண்டி நிற்கும் துறைகள் நலிவடையும். பயிற்றப்பட்ட ஊழியத்தைப் பொறுத்த மட்டிலும் அதன் எண்ணிக்கையும் குறையும் வாய்ப்புக்கள் அதிகம் தென்படுகின்றன.

ஒரு புறம் தொழிற்படையில் சேரும் எண்ணிக்கை இயற்கை காரணங்களால் வீழ்ச்சியடையும் அதே வேளை, பயிற்றப்பட்ட ஊழியமும்- மனித மூலதனமும் அதிக சம்பளத்துடன் தொடர்புடைய வாழ்க்கை வசதிகள் எதிர்காலத்திற்கான சுபீட்சமான நிலவரம் என்பவற்றைக் கருத்திற் கொண்டு நிரந்தரமாகவே நாட்டை விட்டு குடியகல்வதாலும் நாட்டிற்கு அவசியமான மனிதவளம் இழக்கப்படுகிறது.

பிறப்பு எண்ணிக்கை நிலையாகவுள்ளதுடன் இளவயது குடித்தொகையில் விரிவாக்கம் தடைப்பட்டுள்ளது. மறுபுறம் முதியோர் எண்ணிக்கை அதிகரிப்பதால் இயற்கையாக தொழிற்படை சுருங்குகிறது. இதனை ஈடுசெய்வது சாத்தியமில்லை. ஊழிய இறக்குமதி ஒரு மாற்றுவழியாக அமையலாம். அத்தோடு 'நாட்டுப்பற்று', 'இலவசக் கல்வியால் பயன் பெற்றோம்' போன்ற உணர்ச்சிகரமான சுலோகங்களால் நாட்டைவிட்டு வெளியேறும் அறிவுசார் மனித மூலதன வெளியேற்றத்தை தடுப்பதும் சாத்தியமில்லை. எனவே மனித மூலதனத்தை கட்டியெழுப்ப முயற்சிசெய்யும் அதேவேளை, அதனைத் தக்கவைத்துக் கொள்வதற்கு அவசியமான பொருளாதாரத்தின் அடித்தளத்தை விரிவாக்குவதும் அவசியமாகும்.

சட்டம் போட்டு மூளைசாலிகள் வெளியேற்றத்தை தடுத்து நிறுத்த இயலாது. ஆனால் அவர்களை நாட்டுக்குப் பயன்படும் விதத்தில் அவசியமான புறச்சூழலை உருவாக்கிப் பயன்பெறுவது ஆட்சியாளர்களின் கைகளிலேயே உள்ளது. ஒரு புறம் சுருங்கிச் செல்லும் ஊழியப்படையானது பயிற்றப்படாத ஊழியத்திற்கான கூலியை அதிகரிக்கும். அதனால் நாட்டின் உற்பத்திப் பொருட்கள் சர்வதேச சந்தையில் போட்டியிட முடியாத நிலை உருவாகும். மறுபுறம் உள்நாட்டுச் சந்தையில் பொருட்களின் விலை அதிகரிப்பதால் பணவீக்கத் தாக்கங்கள் ஏற்பட்டு பொருளாதார வளர்ச்சியில் கணிசமான பாதிப்புகள் உருவாகும்.

இந்நிலையில் நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பு தொடர்ந்தும் தேயிலையையும், ஆடை தயாரிப்புகளையும் நம்பியிருக்குமாயின் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பின்னடைவுகள் மிக அதிகம். ஒரு நாட்டு தொழிற்படையின் வேகம் அதிகரித்து செல்லுமாயின் அதனைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் பொருளின் அல்லது சேவையின் பெறுமதியும் அதிகரித்தால் மட்டுமே அந்நாடு முன்னேற்றம் காண முடியும்.

உதாரணமாக, ஜப்பானியர்களின் வேதனங்கள் மிகவும் உயர்வாக இருந்த போதிலும் அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் மற்றும் சேவைகளின் பெறுமதியும் உயர்வாக உள்ளதால் தாக்குப் பிடிக்க முடிகிறது. அமெரிக்கர்களின் வேதனங்கள் அதிகமென்றாலும் சராசரி அமெரிக்கர் ஒருவரின் உற்பத்தித்திறன் மிகவும் அதிகமாகும். இதற்கு அங்கு கட்டியெழுப்பட்டுள்ள மனித மூலதனத்தில் அளவும், பயிற்சியும், தொழிநுட்ப முன்னேற்றமுமே காரணமாகும்.

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் அறிவும் தொழினுட்பமும் முக்கிய பங்காற்றுகின்றன. அறிவு என்பது மனிதனிலிருந்து பிரிக்க முடியாத ஒன்றாகவுள்ள அதேவேளை தொழினுட்பத்திலும் அது உள்ளடக்கியுள்ளது. மனிதனில் உள்ளடங்கியுள்ள அறிவையே நாம் மனித மூலதனமென்கிறோம். முறையான கல்வி பயிற்றல் மற்றும் பயிற்சிகள் ஊடாகவும் சுகாதார மற்றும் நலனோம்பு நடவடிக்கைகள் ஊடாகவும் மனித மூலதனத்தைக் கட்டியெழுப்பலாம்.

அறிவையும் தொழினுட்பத்தையும் அதிகளவில் பயன்படுத்தும் நாடுகளே இன்று உலகின் முன்னணி நாடுகளாகவுள்ளன. உலகில் அமெரிக்காவின் முதன்மைத்தானம் அதன் மனித மூலதனத்திலும் அறிவுப் பொருளாதாரத்திலுமே தங்கியுள்ளது. இதன் மூலமே, புதிய கண்டு பிடிப்புகள் மற்றும் புத்தாக்க நடவடிக்கைகள் ஊடாக உலகின் முதன்மைப் பொருளாதாரம் என்னும் இடத்தை அமெரிக்கா தக்கவைத்துக் கொண்டுள்ளது.

சீனா பயிற்றப்படாத ஊழியத்தை அதிகளவில் கொண்டுள்ளபடியால் உற்பத்தித் துறையில் பல மைல்கற்களை எட்டியுள்ள போதிலும் அதன் நீண்டகால இருப்பு அறிவுசார் துறைகளின் விரிவாக்கத்திலேயே தங்கியுள்ளது என்பதை உணர்ந்தால் மனித மூலதனத்தை உருவாக்குவதிலும் புதிய தொழினுட்ப புத்தாக்கங்களை அறிமுகப்படுத்துவதிலும் பாரியளவு முதலீடுகளை மேற்கொண்டுள்ளது.

ஒரு நாட்டின் அறிவுப் பொருளாதாரத்தை உருவாக்குவதில் அந்நாட்டில் நிலவும் விஞ்ஞான முறைமை முக்கியத்துவம் உடையது. உயர்கல்வி நிறுவனங்கள், அரசாங்க ஆய்வு மற்றும் அபிவிருத்தி நிறுவனங்கள், தனியார்துறை அறிவு மையங்கள் ஆய்வு மற்றும் அபிவிருத்திக்கான உட்கட்டுமானங்கள், அரசாங்க அமைச்சுக்கள் அவற்றின் இணை நிறுவனங்கள் இம்முறைமையின் கூறுகளாகும்.

இவ்விஞ்ஞான முறைமையானது, புதிய அறிவை உருவாக்கி அதனை ஊடுகடத்தி அதனைப் பிரயோக நிலைக்கு கொண்டுவர வேண்டும் இதன் மூலம் மனித மூலதனத்தின் தரம் வினைத்திறன் என்பவற்றை மேம்படுத்துவதுடன் பொருளாதாரத்தில் அறிவுசார் உற்பத்திகளின் வெளியீட்டையும் அதிகரிக்கலாம்.

கணனித் தொழினுட்பம், மின்னணுத் தொழினுட்பம், விண்வெளித் தொழினுட்பம், மரபியல் தொழினுட்பம், உற்பத்தி சந்தைப் படுத்தல் நுட்பமுறைகள், மருத்துவத் தொழினுட்பம் உள்ளடங்களாக பல்வேறு அறிவுசார் கூறுகள் ஒரு நாட்டின் உற்பத்தியில் அதிக பெறுமதி வாய்ந்த பங்களிப்பை செலுத்த முடியும்.

இலங்கையில் இலவசக்கல்வி மற்றும் சுகாதாரம் என்பன நீண்டகாலமாகவே அமுலில் இருந்தபோதிலும் அதன் மூலம் வினைத்திறன் வாய்ந்த விதத்தில் மனித மூலதனத்தைக் கட்டியெழுப்பப் போதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.

அதேவேளை அவ்வாறு உருவாக்கப்பட்ட மனித மூலதனத்தை இலவசக்கல்வி மற்றும் சுகாதாரத்தின் ஊடாக தக்கவைத்துக் கொள்வதற்கான அறிவுப் பொருளாதாரத்தை உருவாக்கும் முயற்சிகள் போதியளவில் இடம் பெறவில்லை அத்துடன் அவை வெற்றியளிக்கவும் இல்லை.

குறிப்பாக ஆய்வு மற்றும் அபிவிருத்தித்துறையில் போதியளவு முதலீடுகள் மேற்கொள்ளப்படவில்லை. மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அபிவிருத்தி நடவடிக்கைகள் மூலம் உருவாக்கப்பட்ட புதிய அறிவு நூலகங்களில் ஆய்வு கூடங்களிலும் முடங்கிக் கிடக்கிறது. அவற்றைப் பிரயோக அடிப்படையில் பயன்படுத்தத் தேவையாக பின்புலம் – அல்லது அதற்குரிய விருப்பம் இல்லாமையும் இந்நிலைக்கான காரணமாகும்.

இப்போதைய சூழலில் தொழிற்படையில் ஏற்பட்டுவரும் மாற்றங்களைக் கருத்திற்கொண்டு உற்பத்தித் தெரிவுகள் தொடர்பான தீர்மானங்களை எடுப்பதுடன் பொருளாதாரக் கட்டமைப்பிலும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும்.

மாறிவரும் உலக ஒழுங்குபாடுகளை இனங்கண்டு அதற்கேற்ப நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பை மாற்றியமைக்கத் தவறும் பட்சத்தில் வாய்ப்புக்களை மற்றொருமுறை தவறிவிட்ட நாடாக இலங்கை அடையாளப்படுத்தப்படுவதை தவிர்க்க முடியாது.

Comments