மூன்று தீபாவளிகளைக் கண்டு அசுர சாதனை படைத்த ஹரிதாஸ்! | தினகரன் வாரமஞ்சரி

மூன்று தீபாவளிகளைக் கண்டு அசுர சாதனை படைத்த ஹரிதாஸ்!

1934 முதல் தொடர்ந்து பத்தாண்டுகள் தமிழ்த் திரையுலகின் மன்னனாகத் திகழ்ந்த மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியாகராஜ பாகவதர் 01. 03. 1910 இல் பிறந்தவர். தந்தை கிருஷ்ணமூர்த்தி ஆச்சாரியார். தாய் மாணிக்கத்தம்மாள். பெற்றோர் பாகவதருக்கு சூட்டிய பெயர் தியாகராஜன்.

பாகவதர் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்ததெல்லாம் திருச்சியில் தான். திருச்சி பாலக்கரையில் உள்ள ​ெஜபமாலை மதா கோவிலுக்கு அருகே இருந்த பள்ளியில் தான் ஆரம்பக் கல்வியைப் பயின்றுள்ளார். பள்ளி சென்றாலும் பாகவதரின் மனமோ விளையாட்டிலும் இசை மேலுள்ள மோகத்திலும் திளைத்துக் கிடந்துள்ளது. அவரது சங்கீத சுகந்தத்தை முதன் முதலில் அனுபவித்துள்ளது ஊரிலுள்ள உய்யக் கொண்டான் என்ற ஆற்றில் வாழ்ந்த மீன்களாகும்.

இந்த ஆற்றில் கழுத்தளவு தண்ணீரில் நின்று கொண்டு உரத்த குரலில் சாதகம் செய்துள்ளார். எஸ். ஜீ. கிட்டப்பா நடிக்கும் நாடகங்கள் என்றால் இவருக்கு உயிர்.

எஸ். ஜீ. கிட்டப்பா நடிக்கும் நாடகங்கள் எங்கு நடந்தாலும் பார்க்கத் தவற மாட்டார். அவர் பாடல்களை மனனம் செய்து அவர் போலவே பாடுவாராம்.

மகனுக்கு படிப்பு தான் வரவில்லை நகைத் தொழிலில் தனக்கு உதவியாக இருப்பார் என்று நினைத்தால் அங்கும் பாட்டுத் தான். தன் மகன் நகைத் தொழில் செய்ய பிறந்தவனில்லை. மிகப் பெரிய பாடகனாக வர வல்லமைப் படைத்தவன் என்று உணர்ந்த தந்தை கிருஷ்ணமூர்த்தி, பாகவதரை திருவையாறு ராமசாமி பக்தரிடம் நாடகப் பாடல்களைக் கற்றுக் கொள்ள அனுப்பி வைத்துள்ளார்.

அதன் பின் மதுரை பொன்னுசாமி அய்யங்கரிடமும் ஆலத்தூர் சகோதரர்களிடமும் முறையான இசைப் பயிற்சி பெற்றுள்ளார். நடிப்புப் பயிற்சியை நாடக ஆசிரியர் நடராஜ வாத்தியாரிடமும் பெற்றுள்ளார். பாகவதர் நடித்த முதல் நாடகம் ‘ஹரிச்சந்திரா’. இதில் லோகிதாசன் வேடத்தில் பாகவதர் நடித்து பாடிய பாடல்களில் மயங்கிய ரசிகர்கள் மீண்டும் மீண்டும் பாடும் படி வற்புறுத்தியுள்ளனர்.

பதினெட்டு வயது பாகவதரும் அந்தக் காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த பதினைந்தே வயதான எஸ். டி. சுப்புலட்சுமியும் ஜோடி சேர்ந்து நடித்த நாடகங்கள் தமிழ் நாடு முழுவதும் சக்கை போடு போட்டுள்ளன. தியாகராஜன் என்ற பெயரில்

நாடகங்களில் நடித்து வந்தவருக்கு ‘பாகவதர்’ என்று பட்டம் கொடுத்தவர் எஸ். ஜீ. கிட்டப்பா.

பாகவதரும் எஸ் டி. சுப்புலட்சுமியும் நடித்த ‘பவளக் கொடி’ நாடகத்தை திரைப்படமாக எடுக்க விரும்பிய எஸ். எம். லட்சுமண செட்டியார் இருவரையும் ஒப்பந்தம் செய்துள்ளார். கே. சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளி வந்த இத்திரைப் படத்தில் அறுபது பாடல்கள் இடம் பெற்றிருந்தன. பவளக் கொடி திரைப்படத்துக்காக 1934 ஆம் ஆண்டு பாகவதருக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் ஆயிரம் ரூபாய்.

பாகவதரின் முதல் படமான பவளக்கொடி திரைக்கு வரும் முன்னரே ராஜம்மாள் என்பவருடன் பாகவதருக்கு திருமணமாகி விட்டது.

‘பவளக் கொடி’ திரைப்படம் இந்தியாவில் தமிழ் மக்களிடம் மட்டுமல்ல, இலங்கையில் சிங்கள மக்களிடமும் மாபெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இதிலுள்ள ஆறு, அல்லது ஏழு பாடல்கள், நான் மேலே குறிப்பிட்ட சார்ளிஸ் சில்வாவுக்கு மனனமாக இருந்தன.

பாகவதர் இரண்டாவதாக நடித்த ‘நவீன சாரங்கதாரா’ படமும் பெரும் வெற்றி பெற்றுள்ளது. இப்படத்தில் அவருக்கு இணையாக எம். எஸ். சுப்புலட்சுமி நடித்துள்ளார். இப்படத்தில் பாகவதர் பாடிய ‘சிவ பெருமானே கிருபை வேண்டும்.’ என்ற பாடல் பட்டி தொட்டிகளிலெல்லாம் ரீங்காரம் செய்துள்ளது.

‘நவீன சாரங்கதாரா’ படம் கொடுத்த மாபெரும் வெற்றியின் பின்னர் பாகவதர் ‘தியகராஜா பிலிம்ஸ்’ என்ற தனது சொந்த சினிமா கம்பனியைத் தொடங்கி ‘சத்திய சீலன்’ என்ற படத்தைத் தயாரித்தார். வெறும் ஐம்பத்திரெண்டாயிரம் ரூபாய் செலவில் பம்பாயில் தயாரிக்கப்பட்ட இப்படமும் பாகவதரருக்கு மாபெரும் வெற்றியையும் வசூலையும் அள்ளி வாரிக் குவித்தது. இந்த படத்தில் முதன் முதலாக பாகவதர் சண்டைக் காட்சிகளிலும் நடித்தார்.

பாகவதருக்கு 1937 ஆம் வருடம் மிகவும் முக்கியமானதாக இருந்துள்ளது. இந்த வருடத்தில் தான் பாகவதரின் ‘சிந்தாமணி’ ‘அம்பிகாவதி’ ஆகிய மாபெறும் வெற்றிப் படங்கள் வெளிவந்தன சிந்தாமணி படத்தில் பாகவதர் பாடிய ‘மாயப் பிரபஞ்சத்தில் ஆனந்தம் வேறில்லை’ என்ற பாடலைக் கேட்டு சித்தபிரமைக்கு உள்ளானோர் இலங்கையிலும் இந்தியாவிலும் பல்லாயிரக் கணக்கானோர். அதே படத்தில் ‘ராதே உனக்கு கோபம் ஆகாதடி’ பாடலும் மிகவும் பிரபலமடைந்தது.

அமெரிக்கரான எல்விஸ் ஆர். டங்கன் இயக்கிய ‘அம்பிகாவதி’ பல ஊர்களில் ஒரு வருடத்திற்கு மேல் ஒரே தியட்டரில் தொடர்ந்து ஓடியுள்ளது. இப்படத்தில் என். எஸ். கிஷ்ணனும் ரீ. ஏ. மதுரமும் நடித்துள்ளனர். இந்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து தன் சொந்த தயாரிப்பில் ‘திருநீலகண்டர்’ என்ற படத்தை 1939 இல் எடுத்தார். இதுவும் பாகவதருக்கு பெரும் வெற்றியைக் கொடுத்தது. ரசிகர்களின் வாக்கெடுப்பில் சிறந்த நடிகராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளர்கள் பாகவதரை நோக்கிப் படையெடுத்தனர். வசனம் எழுத இளங்கோவனையும் பாடல் எழுத பாபநாசம் சிவனையும் ஒப்பந்தம் செய்தால், நான் உங்கள் படத்தில் நடிக்கிறேன் என்று பாகவதர் நிபந்தனை விதித்தார். ‘அம்பிகாவதி’, ‘திருநீலகண்டர்’ படங்களுக்குப் பிறகு பாகவதரோடு இவ்விருவரும் சேர்ந்தால் அந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும் என்றாயிற்று.

இந்த மூவர் கூட்டணியில் உருவான படம் தான் ‘அசோக்குமார்’. இந்தப் படத்தில் பாகவதருக்கு உற்ற தோழனாக எம். ஜி. ஆர். நடித்திருப்பார். என். எஸ். கிருஷ்ணனின் நகைச்சுவையும் பிரமாதமாக அமைந்த இந்தப் படமும் பல ஊர்களில் ஒரு வருடத்திற்கு மேல் ஒரே தியட்டரில் தொடர்ந்து ஓடியுள்ளது.

‘அசோக்குமார்’ படத்திற்குப் பிறகு பாகவதர் நடித்த படம் ‘சிவகவி’ இப்படம் தான் டி. ஆர். ராஜகுமாரி பாகவதருடன் இணைந்து நடித்த முதல் படம். டி. ஆர். ராஜகுமாரிக்கு இதில் வில்லி வேடம். அதில் பாகவதர் பாடிய ‘வதனமே சந்திர பிம்பமோ’ நாட்டியக் கலையே. ‘அம்பா மனம் கனிந்து.’ ‘சொப்பன வாழவில் மகிழ்ந்து’ முதலான பாடல்கள் சிவகவியை இன்றும் அமரத்துவம் வாய்த இசைக் கவியாக மாற்றியுள்ளது.

இன்று சென்னையில் புதுப்படம் திரையிட்டு பத்து நாட்கள் படம் ஓடினாலே ‘வெற்றிகரமான பத்தாவது நாள்’ என பிரமாண்டமான போஸ்டர் ஒட்டும் தமிழ் திரையுலகில் இனி எந்த சக்கரவர்த்தியாலும் நினைத்தும் பார்க்க முடியாத சரித்திரம் படைத்தது ‘ஹரிதாஸ்’.

சினிமா கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் உலகில் இன்று வரை அனைத்து மொழிகளிலும் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களில் (அதிகமான நாட்கள் தொடர்ந்து தென் இந்தியா, சென்னை பிராட்வே, சன் தியட்டர்களில்) 16. 10. 1944. திரையிடப்பட்ட ‘ஹரிதாஸ்’. 22. 11. 1946 வரை 110. வாரங்கள் (768 ) நாட்கள் காட்சியளித்த ஒரே திரைப்படம் சுந்தர்ராவ் நாட்கர்னி இயக்கிய 'ஹரிதாஸ்' என்ற தென் இந்தியத் தமிழ்த்) திரைப்படமேயாகும் இது மூன்று தீபாவளிகளைக் கண்ட திரைப்படமாகும்.

ஹரிதாஸ் பாகவதரை புகழின் உச்சாணிக் கொம்பில் ஏற்றி வைத்தது.

பாகவதரின் காந்தர்வக் குரலும் அழகும் இலங்கையில் வாழ்ந்த சார்ளிஸ் சில்வா போன்ற சிங்கள மக்களைக் கூட வசீகரித்து பித்தம் கொண்டு தத்தளிக்க வைத்தபோது, பாகவதரின் சாரீரமும் சரீரமும் பெண்களின் நித்திரையைக் கெடுத்தது. அதுவும் உயர் குல, வசதியும் வாய்ப்பும் நிறைந்த, பெண்கள் பாகவதருடன் ஓர் நாள் வாழ்ந்து மாண்டாலும் போதும் என்ற பித்து பிடித்து திரிந்தனராம்! (தொடரும்...)

Comments