பண்டிதரும் 'பண்டித்த'யாவும்! | தினகரன் வாரமஞ்சரி

பண்டிதரும் 'பண்டித்த'யாவும்!

கற்றுத் தேர்ந்தவரை தமிழில் பண்டிதன் என்பார்கள். கண்டதைக் கற்றவன் பண்டிதனாவான் என்பது ஒரு முதுமொழி. ஆனால், அதிகம் படித்தவர்களுக்கு; அதிகப்பிரசங்கிகளுக்கு 'பண்டித்த' என்பார்கள். தமிழுக்கும் இது பொருந்தும்.

ஒரு கதையைச் சொல்லி முடிப்பதற்குள் சிலர் முந்திரிக்ெகாட்டை மாதிரி முந்திக்ெகாள்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பங்களில் "நான் இன்னும் ஆட்டையே அறுக்கவில்லை" என்பார் சிவா.

அரச நிறுவனங்களில் பார்த்தீர்கள் என்றால், இது தலைகீழாய் நடக்கும். அங்குப் பேசாத பண்டிதர்கள் இருப்பார்கள். அதிகாரிகள் மட்டத்தில் இருப்போர் அவ்வாறு துரைத்தனத்தைக் காண்பித்தாலும், பொதுசனத் தொடர்பு அதிகாரி என்று இருப்பவர்களும் பேசா மடந்தைகளாக இருப்பார்கள்.

எங்களுடன் ஒரு சகி பணியாற்றினாள். வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்றுதான் பேசுவாள். 'கட் அன்ட் றை' என்பார்களே அப்பிடி. அவவிடம் பேசுவதற்கே அஞ்சுவார்கள், முகத்தில் அடித்தாற்போல் ஏதும் சொல்லி விடுவாள் என்று. இன்று ஒரு பிரதேச செயலகத்தில் பணிபுரிகிறாள். அதுதான் அவவுக்குச் சரி என்றாள் மற்றொரு சகி. பிரதேச செயலகத்திற்கு வருபவர்களுக்கு அப்படித்தான் பேச வேண்டுமா? என்று கேட்டேன். அப்பதான், கரச்சல் கொடுக்கமாட்டார்கள் என்கிறாள்.

பெரும்பாலும் அநேக அரச அலுவலகங்களில் அப்படித்தான், அதிகம் பேசமாட்டார்கள் என்கிறார் நண்பர். நான் ஒரு முறை கிளிநொச்சி கச்சேரியில் நேரில் பார்த்தேன். அப்ப ரூபவதி அம்மாதான் அரச அதிபர். அந்த நேரம் அவர் வந்திருக்கவில்லை. செயலகத்திற்கு வருவோரிடம் யாரும் கதைக்கிறார்கள் இல்லை. மக்கள் தொடர்பு அதிகாரியாக இருப்பவரும் சரி சிற்றூழியரும் சரி, யாருமே வாய் திறக்கவில்லை. இது நடந்தது வன்ஸ் அப்பொன ரைம். இப்ப மாறியிருக்கலாம். என்றாலும், பெரும்பாலான அரச அலுவலகங்களில் எல்லோரும் பெரியவர்கள்தான். பயந்து பயந்துதான் கதைத்துக் காரியத்தை நிறைவேற்றிக்ெகாள்ள ​வேண்டும்.

ஆனால், தனியார் அலுவலகங்களில் அப்பிடியில்லை. செல்பவர்களை அன்பொழுகப் பேசி வரவேற்பார்கள். அமர வைப்பார்கள். கிரமமாக காத்திருக்கச் செய்து, காரியமாற்றி அனுப்பி வைப்பார்கள். அதுதான் அரச அலுவலகங்களிலிருந்து வினைத்திறனானதும் விளைதிறனுடையதுமான பெறுபேற்றைப் பெற வேண்டுமானால், தனியார்மயப்படுத்த வேண்டும் என்று சொல்வார்கள். அரச அலுவலகங்களில் நடப்பவற்றைப்பற்றி உங்களுக்கு அதிகம் சொல்லத் தேவையில்லை. எல்லோருக்கும் நல்ல அனுபவமிருக்கும். அரச வைத்தியசாலைகளில் நோயாளர்கள் நடத்தப்படுவதெல்லாம் நமக்குத் தெரியாதவை அல்ல.

சில இடங்களில் கதைக்கமாட்டார்கள்; இன்னும் சில இடங்களில் கதைத்தே கொன்றுவிடுவார்கள்.

ஆனால், எங்கெல்லாம் கதைத்து மக்களுக்கு உதவ வேண்டுமோ, அங்கெல்லாம் கதைக்காமல் தலையை ஆட்டுவதும், ம் என்பதும் எவ்வளவு எரிச்சலை ஏற்படுத்தும்.

இப்பிடித்தான் நண்பர் ஒரு ரயில் நிலையத்திற்குச் சென்றிருக்கிறார். நேரம் காலை 9.40. கோட்டைக்குச் செல்லும் ரயில் 9.35 இற்கு என்கிறது அறிவிப்புப் பலகை. 9.40 இற்கும் அஃது அழிக்கப்படாமல் இருந்திருக்கிறது. அடுத்த ரயில் 10.07இற்கு. அதற்கடுத்தது 11.38இற்கு. டிக்கற் வழங்குபவரிடத்தில் நண்பர் கேட்கிறார்,

"9.35 ரயில் போயிட்டுதா?"

"போர்டைப் பாருங்க"

"போர்டில் இருக்கிறது. இப்போது 9.40, அதுதான் கேட்கிறன். போய்விட்டதா, இல்லையா?"

"இல்லை"

"அப்ப கோட்டைக்கு ஒரு ரிக்கற் தாங்க" என்று ஐம்பது ரூபாய் கொடுக்கிறார்.

"பத்து ரூபாயும் தாங்க"

"இல்லையே, 100 ரூபாய் தரட்டுமா?"

"தாங்க. பஸ்ஸில் அறுபது ரூபாய் கொடுக்க வேண்டுமே. ரயிலில் 20 ரூபாய்தானே! அதுதான் எல்லோரும் இங்கு வருகிறார்கள்"

"நான் இருபது ரூபாய்க்காக வரவில்லை. நேரத்தை மிச்சப்படுத்தவே வந்திருக்கின்றேன்"

"இந்த நேரத்தில் ட்ராபிக் இல்லையே, பஸ்ஸில் போகலாமே!"

நண்பருக்கு அதற்கு மேல் அவரிடம் தர்க்கம் செய்துகொண்டிருக்க நேரம் இருக்கவில்லையாம். ஏற்கனவே ஐந்து நிமிடம் தாமதம்! பேசாமல் மேம்பாலத்தின் வழியாகச் சென்று நான்காம் மேடைக்குச் செல்லும்போதே ரயிலும் வந்திருக்கிறது. அந்த அலுவலருடன் தர்க்கித்திருந்தால், ரயிலைக் கோட்டை விட்டிருக்க வேண்டும்.

உவனுக்கு உந்தக் கதை தேவையா? என்று கேட்கிறார் நண்பர். அவர் போன்றவர்களுக்குத்தான் பண்டித்தயா என்று சொல்வார்கள். ரயிலுக்கு வரும் பயணியிடம் அப்படியா கதைப்பது, முட்டாள். இதுபற்றி நண்பர் ரயில் திணைக்களத்தைத் தொடர்புகொண்டிருக்கிறார். மறுமுனையில் பதில் அளித்தவர், "ஏற்கனவே 2, 3 முறைப்பாடுகள் இந்த நிலையத்தார் தொடர்பில் வந்திருக்கிறது. இப்போது அந்த அதிகாரி கதிரையில் இல்லை. நீங்கள் இரண்டு மணிக்கு அழையுங்கள், தொடர்பை ஏற்படுத்துகிறேன்" என்று சொல்லியிருக்கிறார்.

மீண்டும் இரண்டு மணிக்குத் தொலைபேசியை எடுத்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு 'லைன்' மாற்றப்பட்டிருக்கிறது. ஆனால், பதில் இல்லை. எப்படி இருக்கிறது ரயில்வே நிர்வாகம். அவர்கள் சிறு சிறு பிரச்சினை என்றாலும், உடனே வேலை நிறுத்தம் செய்கிறார்கள். குடித்துவிட்டு ரயில் ஓட்டுகிறார்கள். மக்களிடம் பேசத்தெரியாது என்று அடுக்கிக்ெகாண்டே போகிறார் நண்பர்.

இப்படி ஒரு கரையோர நிலையத்தில் மட்டுமல்ல, பல நிலையங்களில் உள்ள உத்தியோகத்தர்களும் பண்டித்தயாக்கள்தான். அரச சேவையில் உண்மையான பலனைப் பொதுமக்கள் அடையவேண்டுமானால், இப்படியான பண்டித்தயாக்கள் எந்த அரச சேவையில் இருந்தாலும் அவர்கள் பற்றி உடனடியாக உரிய நடவடிக்ைக எடுக்க வேண்டும்!

Comments