நோபல் பரிசுபெண்கள் புறக்கணிப்பு? | தினகரன் வாரமஞ்சரி

நோபல் பரிசுபெண்கள் புறக்கணிப்பு?

ண்கள் மீது சுமத்தப்படும் அழுத்தம் ஆண்களால் புரிந்துகொள்ள முடியாதது. குடும்பம், குழந்தை, கடமை போன்றவற்றால் பெண்களின் கால்கள் கட்டப்பட்டுள்ளன. கால்கள் கட்டப்பட்ட நிலையில்தான் பெண்கள் ஓடுகின்றனர், முன்னேறுகின்றனர், சாதிக்கின்றனர். இனியும் சாதிப்பார்கள். அந்தக் கட்டுகளைத் தளர்த்துவது ஒட்டுமொத்த உலகின் பொறுப்பாகும்.

உலக மக்கள் தொகையில் சரிபாதியாகப் பெண்கள் இருந்தபோதும் ஐந்து சதவீதத்தினர் மட்டுமே நோபல் வென்றிருக்கிறார்கள். இந் நிலையில், இந்த ஆண்டு மூன்று பெண்கள் நோபல் பரிசைப் பெற்றுள்ளனர். 2009-ல் ஐந்து பெண்கள் நோபல் பரிசைப் பெற்றனர். அதன் பிறகு இந்த ஆண்டு மூன்று பெண்கள் நோபல் பரிசு வென்றிருப்பது மாற்றத்துக்கான தொடக்கமாகும்.

நோபல் பரிசுகள் வழங்கத் தொடங்கி 117 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவரை வழங்கப்பட்ட 920 பரிசுகளில் 844 பரிசுகளை ஆண்களும் 49 பரிசுகளைப் பெண்களும் பெற்றுள்ளனர். 27 பரிசுகளை அமைப்புகள் பெற்றுள்ளன.

டோனா ஸ்ட்ரிக்லேண்டு

பொதுவாக, இயற்பியலில் பெண்களுக்குப் போதிய அளவு அங்கீகாரம் கிடைத்ததில்லை.‘இயற்பியல் துறை என்பது ஆண்களால் மட்டுமே கட்டமைக்கப்பட்டது’ என்று விஞ்ஞானி செர்ன் வெளிப்படையாகவே அறிவித்தார். அதற்கு மறுநாளே டோனா நோபலை வென்று இயற்பியலில் பெண்களின் பங்களிப்பை உறுதிசெய்தார். 55 ஆண்டுகளுக்குப் பிறகு இயற்பியலில் நோபல் பரிசு பெற்றிருக்கும் இவர், இந்தத் துறையில் நோபல் பரிசு பெறும் மூன்றாவது பெண்.

டோனா, கனடாவைச் சேர்ந்தவர். ஆன்டாரியாவில் உள்ள வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராக இருக்கிறார். மிகுந்த அடர்த்தியும் மிகக் குறைவான நீளமும் கொண்ட லேசர் கற்றையை உருவாக்கியதற்காக டோனாவுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. அறுவை சிகிச்சையில் குறிப்பாகக் கண் அறுவை சிகிச்சையில் நவீன சாதனங்களைப் பயன்படுத்த இந்தக் கண்டுபிடிப்பு புதிய பாதை அமைத்துக் கொடுத்துள்ளது.

பிரான்சஸ் அர்னால்டு

பிரான்சஸ், அமெரிக்காவைச் சேர்ந்தவர். கலிஃபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் பேராசிரியையாகப் பணியாற்றுகிறார். வேதியியல், உயிரியல் வேதியியல், உயிரிப்பொறியியல் ஆகியவற்றில் நிபுணத்துவம் கொண்டவர். உயிர் வாழ்வுக்கு இன்றியமையாத புரதங்களின் மீது ஆர்வம் கொண்டவர்.

டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை அடியொற்றி நொதிகளிலும் புரதங்களிலும் அவர் ஏற்படுத்திய மாற்றங்கள், அவருக்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசைப் பெற்றுத் தந்துள்ளன. இவர் கண்டுபிடித்த நொதிகள், இனக் கலப்பு போன்றவை. அந்த நொதிகள், இயற்கை எரிபொருள், மருந்துகள், சலவைப் பொடிகள் போன்றவற்றைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. கேடு விளைவிக்கும் இரசாயனங்களுக்கு மாற்றாக இருப்பதால் இவர் கண்டறிந்த நொதிகள் மருத்துவ உலகுக்கு மட்டுமல்லாமல் சுற்றுச் சூழலுக்கும் நன்மையளிக்கின்றன.

நாதீயே மூராத்

நாதீயே மூராத், வடக்கு ஈராக்கில் உள்ள யசீதி சமூகத்தைச் சேர்ந்தவர். 2014-ல் இவரது கிராமத்தின் மீது ஐ.எஸ். தீவிரவாதக் குழு கொடிய தாக்குதலை நடத்தியது. மூராத் உள்ளிட்ட அந்தக் கிராமத்தில் இருந்த பல பெண்கள் பாலியல் அடிமைகளாக இழுத்துச் செல்லப்பட்டனர். அவர்களில் சிறுமிகளும் அடக்கம். மூன்று மாதங்களுக்கு மேலாக அவர் தொடர் வல்லுறவுக்கு ஆளானார்.

வார்த்தைகளில் விவரிக்க முடியாத பாலியல் வன்முறைகளுக்கு ஆளாக்கப்பட்ட அவர், மூன்று மாதங்களுக்குப் பிறகு எப்படியோ அங்கிருந்து தப்பினார். கொடுமைகளும் அவமானமும் அவரை முடக்கிவிடவில்லை. மாறாக, அங்கு இன்றும் அடிமைகளாக இருக்கும் 3,000 பெண்களுக்காகப் போராடச் செய்தன. தனக்கு நேர்ந்த கொடுமையையே அதற்கான ஆயுதமாக்கினார். உலகம் முழுவதும் பயணித்துத் தனக்கு நேர்ந்த அவலங்களை எடுத்துரைத்தார்.

“கடத்தப்பட்டபோது எனக்கு 21 வயது. என்னை விட்டுவிடும்படி கையெடுத்துக் கும்பிட்டேன், வருவோர் போவோரின் காலில் எல்லாம் விழுந்து கெஞ்சினேன். இரக்கமற்ற அவர்களுக்கு என்னுடல் இரையானபோது வலுவற்ற எனது கைகளால் அவர்களைத் தாக்க முயன்றேன். என்னால் முடிந்த அளவுக்குப் போராடினேன்.

இருந்தும் தொடர் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டேன்” என ஐ.நா.வில் நாதீயே ஆற்றிய உரை உலகையே உலுக்கியது. 3,000 பெண்களுக்கான அவரது போராட்டம் இன்று பாலியல் வன்முறையால் பாதிக்கப்படும் அனைத்துப் பெண்களுக்குமான போராட்டமாக மாறியுள்ளது. அந்தப் போராட்டத்தை அங்கீகரிக்கும் விதமாக 2018-ன் அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இலக்கியத்துக்கான

நோபல் பரிசு நிறுத்தம்

இலக்கியத்துக்கான நோபல் பரிசு கமிட்டியில் இருக்கும் ஒரு பெண்ணின் கணவருக்கு எதிரான பாலியல் புகார்கள் காரணமாக இந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படவில்லை. பாலியல் புகாருக்கும் நோபல் பரிசுக் கமிட்டிக்கும் நேரடியாக எந்தத் தொடர்பும் இல்லை. இருந்தும் அந்தப் புகார்களைப் புறந்தள்ள முயலாமல், இலக்கியத்துக்கு நோபல் பரிசு வழங்குவதையே நோபல் கமிட்டி நிறுத்தியிருக்கிறது.

இது அந்த கமிட்டியின் மீதான நம்பகத்தன்மைக்கும் பெண்களின் எழுச்சிக்கும் சான்றாகி உள்ளது. மேலும், “இதுவரை அறிவியலில் மிகவும் குறைந்த அளவில்தான் பெண்கள் நோபல் பரிசு பெற்றுள்ளனர். இனியும் பெண்களை அறிவியலில் ஒதுக்கிவைப்பது ஆரோக்கியமானது அல்ல. அவ்வாறு தொடர்ந்தால் அது பெண்களுக்கு நாம் இழைக்கும் மிகப் பெரிய அநீதி. இதைச் சரி செய்தே ஆக வேண்டும்.

இந்த ஆண்டு தொடங்கி இனி ஒவ்வோர் ஆண்டும் அதிக எண்ணிக்கையில் பெண்கள் நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்படுவார்கள். தகுதி வாய்ந்த எந்தப் பெண்ணையும் இனி நாங்கள் விடுவதாக இல்லை” என நோபல் அகாடமியின் தலைவர் கோரன் ஹான்சன் (Goran Hansson) சொல்லியிருக்கிறார்.

 

Comments