கண்டி இளவரசன் என்ற பதவியாவது கிடைக்குமா என எதிர்பார்த்திருந்த எஹலபொல | தினகரன் வாரமஞ்சரி

கண்டி இளவரசன் என்ற பதவியாவது கிடைக்குமா என எதிர்பார்த்திருந்த எஹலபொல

நன்றி: பேராசிரியர்

கணநாத ஒபேசேகரவின்

THE DOOMED KING

தலதா மாளிகையின் முன்னால் ஸ்ரீமாபோதிக்கு (அரச மரத்தின்) அருகிலும் விஷ்ணு தேவாலயத்துக்கு அருகிலும் மண் மேடு ஏற்படுத்தியதனால் நாய்களும், நரிளும் மாத்திரமின்றி மனிதர்களும் அசுத்தப்படுத்தியதாக முப்பத்தோராவது கவிதை சொல்கிறது.

தலதா மாளிகைக்கு பத்திருப்பு மண்டபத்தை நிர்மாணித்தமை தவறெனவும், அங்கு கதிரைகளை வைத்து பெண்களோடு அமர்ந்து நாட்களையும் பொழுதையும் கழித்தமை மன்னனின் மறுபிறப்பை மாசுபடுத்துமெனவும் அடுத்த கவிதை கூறுகிறது.

கெட்டம்பேயிலிருந்து வீதி அமைத்தமை, பூந்தோட்டம் அமைத்தமை நகரைச் சுற்றி மைதானம் உருவாக்கியமை என்பன மன்னனின் குற்றச் செயல்களாகவும், தும்பறை, ஹேவாஹெட்ட வாசிகளை தவிர ஏனையோர் மீது அரசனுக்கு நம்பிக்கை இல்லாமை காரணமாக சகல பாதுகாப்பு அரண்களிலும் தும்பறை வாசிகள் நிறுத்தப்பட்டதாகவும் சொல்லப்பட்டுள்ளது. இத்தகைய மூளையற்ற எருமை (அனுவன கொணா)க்கு வெள்ளை உடுத்திய அதிகாரிகள் மீது நம்பிக்கை இல்லாமை காரணமாக உடுநுவர, மீமுறே முதலிய ஐந்து கிராமங்களிலிருந்து வேடர்களை அழைத்துவந்து காவல் உத்தியோகத்தர்களாக நியமித்தான் என வசைப்பாடுகிறது.

முப்பத்தெட்டாவது கவிதையில் ஹாரகம பல்லேகெலேயில் வாழை, தென்னை, மரக்கறி பயிர்ச்செய்கை மேற்கொண்ட மக்களை கட்டாயப்படுத்தி விளைச்சலை ஏற்படுத்தியமை, வடுகர்களுக்கு உணவு வழங்குவதற்காகவே என சாடுகிறது.

முப்பத்தொன்பதாவது கவிதையில் குருதெனியவில் தலவத்து ஓயாவில் மக்களின் காணிகளை அபகரித்து பலவந்தமாக விவசாயம் மேற்கொண்டமையையும், மக்களை கழுமரத்தில் ஏற்றியதையும் அடுத்த கவிதைகள் கண்டிக்கின்றன. பல அமைச்சர்கள் பிரதானிகளுக்கு மன்னனால் மரண தண்டனை விதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எஹலபொலவின் சேனை ஆங்கிலேயருடன் இணைந்து போர்ப்பிரகடனம் செய்ததாகவும் ‘நாட்டைச் சீரழிக்கும் தமிழனை’ கைது செய்வதற்கு திடசங்கற்பம் பூண்டதாகவும் 83-85 கவிதைகள் தெரிவிக்கின்றன. அடுத்து வரும் கவிதைகளில், இத் துஷ்ட மன்னன் தீயைக் கண்ட மெழுகாக பயந்துருகி நடுங்கி, மனைவி மற்றும் உறவினர்களோடு தும்பறையை நோக்கி ஓடினான் எனவும், துட்டகெமுனு தமிழர்களை அழித்தது போன்று எஹலபொலவும் தமிழர்களை அழிப்பதற்காக நகருக்கு எழுந்தருளினார் எனவும் கூறப்பட்டுள்ளது.

தேசத்தைச் சீரழிக்கும் தமிழன் தும்பறையில் மறைந்திருப்பதை அறிந்த எஹலபொல குதிரை மீதேறி வீராவேசமாக புறப்பட்டதாகவும், பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் ஆயுதம் தாங்கிய மக்கள் கூட்டம் மன்னன் எஹலபொலவை பின் தொடர்ந்ததாகவும், செல்லும் வழிகளிலும் அகப்பட்ட தமிழர்களைப் பிடித்து மலே இனத்தவர்களுக்கு அடிமைத் தொழில் புரிய வழங்கியதாகவும் கவிதைகள் புனையப்பட்டுள்ளன.

97-101 கவிதைகளில் வீரம் நிறைந்தவனும் தர்மசீலனுமாகிய எஹலபொல யுவராஜன் தனது சேனையுடன் ஒளிந்திருந்த அரசனை கைது செய்து இழுத்து வந்ததாகவும் மன்னனின் மனைவியரை சித்திரவதை செய்தும் அவர்களின் காதுகளிலும் கழுத்துகளிலும் அணிந்திருந்த நகைகளைப் பறித்தும் இடுப்பிலிருந்த ஆடையையும் உரிந்ததாகவும் அவர்களை தெல்தெனியாவுக்கு இழுத்து வந்ததாகவும், சில வீரர்கள் ஹங்வெல்லைக்குச் சென்று மன்னனின் தாயையும் உறவினர்களையும் இழுத்து வந்ததாகவும், மன்னனின் மாமன்மார்களாகிய கம்பளை தமிழனையும் கண்ணையா என்னும் நச்சுத் தமினையும் மேலும் தமிழர்களையும் அவர்களின் மனைவிமார்களையும் பிடித்து வந்ததாகவும் பின்னர் அவர்களின் தலைகளில் குட்டியவாறு இழுத்து வந்து திருவாளர் டொய்லியிடம் ஒப்படைத்தமையானது இராவணனை தோற்கடித்த இராமனைப் போன்ற ஒன்றாகும் எனவும் விவரிக்கப்பட்டுள்ளது.

சிங்கள மக்கள் மத்தியில் தமிழர்களை துரோகிகளாகவும், எதிரிகளாகவும் சித்தரிக்கும் இத்தகைய படைப்புகள் கண்டியில் வலம் வந்தன.

எனினும் கண்டி இராசதானியின் வரலாற்றை ஆராய்ந்து அறிஞர்கள், கடைசி மன்னன் ஸ்ரீவிக்கிரம இராஜசிங்கன் நேர்மையும் தயாளசிந்தையும் கொண்ட மன்னனென புகழாரம் சூட்டியுள்ளனர். சிங்கள பௌத்த மக்களின் பெருமதிப்புக்குரியவராக போற்றப்படும் அநகாரிக்க தர்மபால, ஸ்ரீவிக்கிரம இராஜசிங்கனுக்கு புகழாரம் சூட்டியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கண்டி இளவரசன் என்ற பதவியாவது கிடைக்குமா என எதிர்பார்த்திருந்த எஹலபொல இலங்கையை இறுதியாக ஆண்ட ஸ்ரீவிக்கிரம இராஜசிங்கனை இனவாத கண்ணோட்டத்துடன் காவியங்களையும் வேறு பல இலக்கியங்களையும் படைத்து அம் மன்னனை மக்களிடமிருந்து அந்நியப்படுத்திவைத்தனர் கண்டி கவிஞர்கள். இலங்கையின் சுதேசிய ஆட்சியின் இறுதி காலகட்டங்களில் இவ்வாறு இலக்கியங்கள் படைக்கப்பட்டு மக்களின் மனங்களில் இடம்பெற்றபோதும். ஆங்கிலேயரின் ஆட்சியில் பெற்ற அனுபவங்களைக் கொண்டு மன்னன் ஸ்ரீவிக்கிரம இராஜசிங்கனைப் போற்றி புகழ்ந்தனர் சிங்கள அறிஞர்கள். இவர்களில் குறிப்பிடத்தக்கவர் அநகாரிக தர்மபால.

அமைச்சராக பதவிவகித்த எஹலபொல கண்டியை சிங்களவர்களே ஆள வேண்டுமென்றம் தனது கொள்கையில் சற்றும் தளராது நடவடிக்கைகளை மேற்கொண்டபோது அவனுக்காக புனையப்பட்ட ‘எஹலபொல வர்ணனாவ’ என்னும் நூல் மன்னனை ‘தமிழன்’ என்றும் தரம்குறைந்தவன் எனவும் வரிக்குவரி பழித்ததைப் போன்று கண்டியிலிருந்து வெளிவந்த மற்றொரு காவியமே ‘கிரல சந்தேசய’ ஆகும். இக்காவியம் மன்னன் ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கன் கைது செய்யப்படுவதற்கு முன்னர் எழுதப்பட்டமையினால் எஹலபொலவை மன்னன் எனக் குறிப்பிட்டிருந்தது. மன்னன் கைதான பின்னர் நிகழ்ந்த சம்பவங்களும் ஆங்கிலேயர்களின் ஆட்சி வியூகங்களும் எஹலபொலவின் மன்னனாகும் கனவில் மண்ணைத் தூவிக் கொண்டிருந்ததையினால் ‘மன்னன்’ என்னும் எதிர்பார்ப்பிலிருந்து விடுபட்டு ‘யுவராஜன்’ அல்லது ‘உபராஜன்’ என்னும் பதவியையேனும் வாங்கித்தர வேண்டும் என சங்கற்பம் பூண்டனர் கண்டிச் சிங்களவர்கள். அக்கால கட்டத்தில் இயற்றப்பட்டமையினாலேயே ‘எஹலபொல வர்ணணாவ’ நூலில் எஹலபொலவை மன்னனாக சித்தரிக்காது ‘யுவராஜன் என்னும் துணையரசனாகவும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மூன்றாம் ஜோர்ஜ் மன்னனின் கீழ் பதவி வகிப்பவனாகவும் எடுத்தியம்பினர்.

முற்றிலும் தமிழர் எதிர்ப்பு காவியமாக புனையப்பட்ட ‘கிரல சந்தேசய’, மாமன்னன் எஹலபொலவை இரட்சிக்க வேண்டுமென எம்பெக்கேயில் குடிகொண்டுள்ள ஸ்ரீ ஸ்கந்தகுமாரவுக்கு தூதுவிடுவதாக அமைந்துள்ளது.

அரசர்களுக்கு ஆசி வழங்குமாறு தேவேந்திரமுனை (தெவிநுவர)யில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ விஷ்ணு பகவானை வேண்டிக் கொள்ளும் வண்ணம் தூதுவிடும் நூல்களே இலங்கையில் ‘சந்தேசய’ என அழைக்கப்படுகின்றன. அவ்வகையில் ‘கிரல சந்தேசய’ மன்னன் எஹலபொலவை ஆசீர்வதிக்குமாறு கண்டி எம்பெக்கே கோவிலுக்கு தூதுவிடுவதாக எழுதப்பட்டதாகும்.

இக்காவியத்தில் ஆங்கிலேயர் பற்றி ஒரு வார்த்தையேனும் குறிப்பிடப்படாது கண்டி மன்னன் கைது செய்யப்படுவதற்கு எஹலபொலவின் துணிச்சல் மிக்க நடவடிக்கையே காரணமெனவும் ஸ்ரீவிக்கிரம இராஜசிங்கன் பற்றி குறிப்பிடும் போது மன்னனின் பெயரை குறிப்பிடாது ‘தமிழன்’ எனவும், ‘மன்னன்’ எனவுமே வெளிப்படுத்தியிருப்பதும் விசேடமாகும்.

இறைமை கொண்ட மன்னனாக எஹலபொல இருக்கும் போது வெளிநாட்டவனொருவன் அரசனாக இருக்க முடியாதென இக்காவியம் வாதிடுகிறது. ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கன் கைது செய்யப்படும் வரை மன்னனாக எண்ணம் கொண்டிருந்த எஹலபொல ஆங்கிலேயரின் அணுகுமுறைகளையறிந்து யுவராஜனாக கனவு காண ஆரம்பித்தான்.

1815பெப்ரவரி 25ம் திகதி பிரிட்டிஷ் அதிகாரி டொயிலியிடம் தம்மை யுவராஜனாகவாவது அங்கீகரிக்காவிட்டால் எந்தப் பதவியையும் ஏற்கப் போவதில்லையென தெரிவித்தான்.

அரசனாவதற்கான ஆவல் எவ்வாறிருந்தது என்பது பற்றி வெலகெதர அப்புஹாமி சட்டம்பி தெரிவித்த தகவல்கள் போல் ஈ. பீரிஸ் எழுதிய ‘த்ரிசிங்ஹல’ நூலில் காணப்படுகிறது. வெலகெதர, மன்னனின் சயன அறைக்கு அண்மித்ததாக இருந்த அரச ஆபரணங்களை பாதுகாக்கும் அறைக்கும் பொறுப்பாக இருந்தவன். எஹலபொலவுக்கு மன்னனின் ஆபரணங்கள் தேவைப்பட்டன.

‘அமைச்சர் அரசரின் தங்க தலைக்கவசத்தையும் மேலாடையையும் அணிந்து கொண்டான். அது முறையற்றதென நான் கூறினேன். பதிலுக்கு அவர் இன்னும் சில தினங்களில் ஆங்கிலேயர் தம்மை அரசனாக முடிசூட்டவிருப்பதாக கூறினார்”

என வெலகெதர கூறியதாக அந்நூல் தெரிவிக்கின்றது. இச்சம்பவம் மன்னன் இராஜசிங்கன் கைது செய்யப்பட்டு ஆறு தினங்கள் கழிந்து நிகழ்ந்ததாகும். இத்தகைய ஈடேறாத ஆசைகளை நிறைவேற்றுவதற்காக ‘கிரல சந்தேசய’ முயற்சித்தது. 1815மார்ச் 02ம் திகதி கண்டி ஒப்பந்தம் பிரகடனம் செய்யப்பட்டு பத்தாம் திகதி கையொப்பமிடப்பட்டது. அன்று முதல் மூன்றாம் ஜோர்ஜ் மன்னன் முழு இலங்கைக் மன்னனாக அங்கீகரிக்கப்பட்டதனால் தன் கனவை ‘யுவராஜன்’ கனவாக மாற்றிக் கொண்டான் எஹலபொல.

கண்டி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டபோது ஆளுநர் பிரவுன்றிக் மற்றும் டொய்லி ஆகிய இருவரும் எஹலபொலவை மிகச் சிறப்பாக வரவேற்றபடியால் அவன் தன்னை மேலும் ஊதிப் பெருப்பித்துக் கொண்டான். யுவராஜனாகும் கனவு இச் சந்தர்ப்பத்தில் அதி உச்ச நிலையை எய்தியது. மார்ச் 12ஆம் திகதி ஆளுநர் பிரவுன்றிக்கைச் சந்தித்து தனக்கு எதிரிகள்

(தொடரும்...)

Comments