இன்று எனக்கு! நாளை உனக்கு! | தினகரன் வாரமஞ்சரி

இன்று எனக்கு! நாளை உனக்கு!

இன்று வளர்ச்சியடைந்துவரும் தொழில்நுட்பமும், நவீனத்துவமும் உறவுகளுக்கிடையில் பாரிய விரிசல்களை ஏற்படுத்திவிட்டது என்றால் அது மிகையாகாது. முன்னொரு காலத்தில் கூட்டுக்குடும்பங்கள் அதிகரித்துக் காணப்பட்டன. தாய், தந்தை, பாட்டன், பாட்டி என்று விரிந்த குடும்பங்கள் காணப்பட்டதால் உறவுகளுக்கிடையில் நெருக்கமான தொடர்பும் அந்நியோன்னியமும் அதிகரித்துக் காணப்பட்டது. முதியவர்களின் வழிகாட்டல்களும், அறிவுரைகளும், ஆலோசனைகளும், அனுபவங்களும் வளர்ந்துவரும் தலைமுறையினருக்குக் கிடைத்தது. முதியவர்கள் ஏட்டுக்கல்வியை விட அனுபவக்கல்வியில் தேர்ச்சி பெற்று விளங்கினார்கள். ஒரு முதியவரின் அனுபவம் ஒரு நூலகத்திற்கு சமமானது என்றால் அதில் ஆச்சரியப்படுவதற்கொன்றுமில்லை.

அறுபது வயதிற்கு மேற்பட்ட அனைவரையும் முதியவர்கள் எனலாம். நேற்றைய இளம் பராயத்தினரே இன்றைய முதியவர்கள் என்பதையும், இன்றைய இளம் பராயத்தினரே நாளைய முதியவர்கள் என்பதையும் எல்லோரும் மறந்து விடுகின்றார்கள். முதியவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய விடயங்கள் ஏராளம் இருக்கின்ற நிலையில் இத்தகைய முதியவர்களின் இன்றைய நிலை என்ன என்பதை நோக்குவோமாயின் அதிகமான முதியவர்கள் இன்று வீட்டின் மூலையிலே முடக்கப்படுகின்றார்கள். மேலும் வீட்டுக் காவலுக்காகவும், பேரக் குழந்தைகளைப் பராமரிப்பதற்காகவும் மட்டுமே பயன்படுத்தப்படும் சந்தர்ப்பங்கள்தான் அதிகம். பேரக்குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளுவதையும், தங்கள் பிள்ளைகளுடன் இருப்பதையும் முதியவர்கள் விரும்பினாலும் ஓரிடத்தில் அடைபட்டிருப்பது அவர்களுக்குச் சுமையான விடயமாகவே இருக்கின்றது. மறுபுறம் பார்க்கும் போது இன்றைய கால ஓட்டத்தில் எல்லோரும் நகர்ப்புறங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதனாலும், ஆண், பெண் என்ற வேறுபாடின்றி வேலைக்குச் செல்வதாலும் தங்கள் பெற்றோரையும் அழைத்துக் கொண்டு நகர்ப்புறத்திற்கே வந்து விடுகின்றார்கள்.

கிராமப் புறங்களில் பிறந்து வளர்ந்த முதியவர்கள் சொந்த பந்தங்கள், அயலவர்கள் ஆகியோரின் வீடுகளுக்குச் செல்வதும் முற்றத்தில் இருந்து சந்தோசமாகக் கதைத்துக் கொண்டு இருப்பதையும் விரும்புவதுடன் இயற்கை விரும்பிகளாகவே காணப்படுகின்றார்கள். ஆனால் இன்று நகர்ப்புறங்களில் உள்ள முதியவர்களும் சரி, கிராமப் புறங்களிலிருந்து குடியேறிய முதியவர்களும் சரி வீட்டுக்குள்ளே முடங்கி விடுகின்றனர். வேலைக்குச் செல்பவர்கள் வேலைக்கும் பேரக் குழந்தைகள் பாடசாலைக்கும் சென்றதும் வீட்டில் இருக்கும் முதியவர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றார்கள். பேச்சுத் துணைக்குக் கூட ஆட்கள் இல்லாத நிலையில் அல்லப்படுகின்றார்கள். இன்றைய முதியவர்கள் ஆரம்பகாலத்தில் விட்டுக்கொடுத்தல், கலாசாரப்பண்புகள், பொறுமை, ஒழுக்கம், எதிர்காலத்தை பற்றி திட்டமிடும் பண்பு, ஒத்துழைப்பு, அன்பு, அரவணைப்பு, பொறுப்புணர்ச்சி, சேமிப்பு, ஒற்றுமை என்பவற்றை குடும்பங்களில் வழங்கும் தூண்களாக காணப்பட்டார்கள். ஆனால் இன்று முதியவர்கள் சொல்வதையெல்லாம் “அதெல்லாம் அந்தக்காலம்” என்று கூறி உதாசீனப்படுத்தி விடுவார்கள் இன்றைய இளையவர்கள். முதியவர்கள் அனுபவங்களின் தொகுப்பு. அவர்கள் கூறும் ஒவ்வொரு விடயங்களிலும் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்து கிடக்கின்றன. ஆனால் இன்று முதியவர்கள் வீட்டில் இருப்பதையே அவமானமாக நினைக்கின்றார்கள்.

வீட்டுக்கு வரும் விருந்தினர்களிடத்தில் முதியவர்களை அறிமுகப்படுத்துவதை விரும்பமாட்டார்கள். அவர்கள் எதுவும் பேசுவதற்கு வாய்ப்பளிக்கமாட்டார்கள். வீட்டுக்கு விருந்தினர்கள் யாரும் வரப்போகின்றார்கள் என்றால் முன்கூட்டியே தங்கள் வீட்டில் இருக்கும் முதியவர்களிடம் எதுவும் பேசக்கூடாது என்று வாய்ப்பூட்டு போட்டு விடுகின்றார்கள். அதையும் மீறி ஏதும் பேசிவிட்டால் வயதானாலே அப்படித்தான் அறளைக் குணம் என்று கேலி செய்வார்கள்.

கருவில் தன் குழந்தையை சுமக்கும் நாளிலிருந்து தன் குழந்தையைப் பற்றிய கனவையும் சுமக்கும் தாயையும் நடை பழக்கும் போது கம்பீரத்தையும் நம்பிக்கையும் சேர்த்து பழக்கும் தந்தையையும் இன்றைய பிள்ளைகள் மதிக்காவிட்டாலும் பரவாயில்லை மிதிக்காமல் பார்த்து கொள்ள வேண்டும். இருபது வருடம் அன்புடன் வளர்க்கும் தந்தை, தாயை இருபது நொடியில் மறந்துவிடும் இன்றைய இளம் சமுதாயம் நாளை தாங்களும் பெற்றோராகப் போகின்றோம் என்பதை மறந்து விடுகின்றார்கள். இதையெல்லாம் விடக் கொடுமை தாய் தந்தையரை முதியோர் இல்லங்களில் சேர்த்து விடுவதாகும். இன்று எத்தனையோ முதியோர் இல்லங்கள் உருவாக்கப் பட்டுவருகின்றன. எத்தனையோ கஷ்டங்களைத் தாண்டி தன் குழந்தையும் சமூகத்தில் நல்ல மனிதராக வாழ வேண்டும் என்று இரத்தமும் வியர்வையும் சிந்தி வளர்க்கும் தாயையும் தந்தையையும் பிள்ளைகள் இலகுவாகக் கொண்டு முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுகின்றார்கள். அங்கு தங்கள் பிள்ளைகளே இங்கு கொண்டு வந்து விட்டு விட்டார்களே என்ற மனக்கவலையுடனும், பிள்ளைகள் பேரக்குழந்தைகளுடன் வாழ முடியவில்லையே என்ற ஏக்கத்துடனும் மனதில் எல்லா ஆசைகளையும் அடக்கிக் கொண்டு நடைப்பிணமாக வாழ்ந்து இறந்தும் விடுகின்றார்கள்.

தாய் தன் குழந்தை கருவில் உருவாகியதும் அளவற்ற சந்தோசப்படுகின்றாள். குழந்தை பிறந்ததும் தன் சந்தோசத்தை கண்ணீரால் வெளிப்படுத்துகின்றாள். தன் குழந்தை சிரித்தால் சேர்ந்து சிரிக்கிறாள், அழுதால் சேர்ந்து அழுகின்றாள். ஒவ்வொரு குழந்தையும் பிறந்து முதலடி எடுத்து வைப்பது தரையிலல்ல தாயின் இதயத்தில். அதே போன்று ஒவ்வொரு தந்தையும் தன் குழந்தைகளுக்காக இரவு பகலன்றி, ஊன் உறக்கமின்றி தனக்காக இல்லாமல் தன் குடும்பத்திற்காக வாழ்கின்றான். ஒரு தாய் தன் பிள்ளையை கருவில் சுமக்கின்றாள் தந்தை இதயத்தில் சுமக்கின்றான். இவ்வாறு குழந்தை ஒன்று பிறந்தது முதற்கொண்டு அவர்களுக்காக வாழும் பெற்றோரை வயதாகியதும் முதியவர்கள் என்று அவர்களை ஒதுக்கி விடுவது சரியா? என்பதை நாம் ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இன்றைய சமூகத்தை எடுத்துப் பார்க்கும் போது எத்தனையோ முதியவர்கள் வீதியோரங்களிலும், ஆலய வாசல்களிலும், வீடு வீடாகச் சென்றும் பிச்சை எடுப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. இது யாரின் தவறு? பிள்ளைகளின் பராமரிப்பின்றி கைவிடப்பட்ட முதியவர்களா? அல்லது பிள்ளைகளுக்குத் தெரியாமல் பிச்சை எடுக்கின்றார்களா? அல்லது பிள்ளைகள் இல்லாதவர்களா? என்பதை யாரும் அறியாத விடயமாகவே உள்ளது. ஓய்வூதியப் பணத்திற்காக மட்டுமே பெற்றோரைத் தங்களுடன் வைத்துக்கொள்ளும் ஒரு சில பிள்ளைகளும் சமூகத்தில் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

இன்றைய இளம் சமுதாயத்தினராகிய நாம் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும். இன்றைக்கு நாம் இளையவர்களாக ஓடி ஆடி உத்வேகத்துடன் இருந்தாலும் நாளை நாமும் முதியவர்காகத்தான் போகின்றோம் என்பதை நினைவிலிருத்திக் கொள்ள வேண்டும். இன்று நம் பெற்றோரை நாம் எவ்வாறு பார்த்துக் கொள்கின்றோமோ அதேபோன்றுதான் நம்மை நமது பிள்ளைகள் பார்த்துக் கொள்ளும் என்பதை மனதிலிருத்திக் கொள்ள வேண்டும்.

முதியவர்கள் நமது வீட்டில் இருப்பதனால் எவ்வளவோ பயனை நாம் பெற்றுக் கொள்ளலாம். இன்றைய இளைஞர் சமூகம் ஏட்டுக்கல்வி அறிவுடனேயே காணப்படுகின்றார்கள். அனுபவ அறிவு மிகக் குறைவாகவேயிருக்கும். உதாரணமாக தங்களின் குழந்தை தொடர்ந்து அழுகின்றது என்றால் உடனே வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுவிடுவார்கள். அதே நேரம் முதியவர் ஒருவர் வீட்டில் இருந்தால் அக்குழந்தை பசியால் அழுகின்றதா? வயிற்று வலியால் அழுகின்றதா? என்று கண்டறிந்து குழந்தையின் அழுகையை இலகுவாக நிறுத்தி விடுவார்கள். அதுமட்டுமில்லாது நமக்கும் எவ்வாறு ஒரு குழந்தையைப் பாராமரிக்க வேண்டும் என்ற அனுபமும் கிடைக்கும்.

அதுமட்டுமில்லாது நற்பண்புகளும், நல்ல சிந்தனைகளும் வளரும் சமுதாயத்திற்கு கிடைப்பதுடன் நல் மனிதர்கள் உருவாகுவதற்கும் துணைநிற்பார்கள்.

முன்னோர்களிடம் வழக்கிலிருந்த நிறைய விடயங்கள் இன்று மருவிவிட்டன. அதாவது நாட்டார் இலக்கியங்கள், மூலிகை மருத்துவம், மாந்திரிகச் செயன்முறைகள் என்பன சிறந்த எடுத்துக் காட்டுகளாகும். அவற்றை நாம் அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில் ஆங்கில மருத்துவத்தை விட மூலிகை மருத்துவம் மேலோங்கும் காலம் உருவாகும். எனவே மூதாதையர்களை கண்ணியமாக நடத்துவதுடன் அவா்களுக்குாிய மரியாதையையும் நாம் கொடுக்க வேண்டும். கணவனும் மனைவியும் கணவனின் தாய் தந்தையை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு வீட்டுக்கு வந்ததும் அவர்களின் குழந்தை கேட்ட முதல் கேள்வி “அப்பா நீயும் அம்மாவும் தாத்தா பாட்டி மாதிரி வந்ததும் நானும் உங்களை நீங்கள் தாத்தா பாட்டியை விட்ட இடத்தில்தானே விடணும்” என்பதே. எனவே இன்று உனக்கு என்றால் நாளை அதே எனக்கும்.

Comments