மக்கள் ஆணையிட்டால் முதலமைச்சராகப் பொறுப்பேற்பேன் | தினகரன் வாரமஞ்சரி

மக்கள் ஆணையிட்டால் முதலமைச்சராகப் பொறுப்பேற்பேன்

''கடந்த அரசை ஆட்சிப்பொறுப்புக்கு கொண்டுவந்ததாகக் கூறிய தமிழ்த் தலைமைகள் அந்த அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தையும் பயன்படுத்திக்கொள்ளவில்லை, அந்த ஆட்சிக்காலத்தையும் உரியவாறு பன்படுத்திக்கொள்ளவில்லை.''

''முக்கியத்துவமான பிரச்சனைகளுக்கான தீர்வுகளை புதிய ஆட்சியை அமைத்து 6 மாதங்கள் அல்லது ஒரு வருடத்திற்குள் காணவேண்டும்''

பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை தூக்கி நிறுத்தும் காரியங்கள் எவையும் தமிழ்த் தலைமைகளால் மேற்கொள்ளப்படாததாலேயே மக்கள் தமது பிரச்சினைகளுக்கு தீர்வுகேட்டு வீதியில் இறங்கிப்போராடுகின்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றார்கள் எனக்கூறும் மீள்குடியேற்றம் புனர்வாழ்வளிப்பு வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அவ்வாறானதொரு நிலையிலேயே மீண்டும் தான் ஆட்சியில் பங்கெடுத்திருப்பதை தமிழ் மக்கள் மகிழ்ச்சியோடு தன்னெழுச்சியாகக் கொண்டாடினர் என்கின்றார். தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய செவ்வியில் புதிய அரசில் தான் பங்கெடுத்ததற்கான காரணத்தையும் தனது மக்களுக்கு அவசரமாக செய்யப்பட வேண்டிய சேவைகள் பற்றியும் அவர் விளக்குகின்றார்....

புதிய பிரதமர் தனக்கான பெரும்பான்மை ஆதரவை பாராளுமன்றத்தில் நிரூபித்தாலே புதிய அரசு தொடர்ந்து இயங்கலாம் என்ற நிலையில், அமைச்சுப் பொறுப்பை ஏற்க நீங்கள் முன்வந்ததேன்?

பதில்: நான் தொடர்ச்சியாக ஆறு தடவைகளாக நாடாளுமன்றத்திற்கு தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதாலும், முன்னைய அரசாங்கங்களில் நான்கு தடவைகள் மத்திய அமைச்சராக பணியாற்றியிருப்பதாலும், பல தென் இலங்கைத் தலைமைகளுடன் இணைந்து பணியாற்றியிருப்பதாலும் தென் இலங்கை அரசியல் நகர்வுகளை என்னால் ஓரளவுக்கு ஊகிக்க முடியும்.

அந்த வகையிலும், கடந்த காலத்தில் நான் அமைச்சுப்பொறுப்புக்களை பொறுப்பேற்று எவ்விதமான முறைகேடுகளுக்கும் இடமளிக்காமல் அர்த்தமுள்ள சேவையை நாட்டு மக்களுக்கு வழங்கியிருப்பதாலும், பிரதமர் தலையில் அமையப்பெறுகின்ற புதிய அமைச்சரவையில் முக்கியமான அமைச்சுப் பொறுப்பேற்க அழைத்தபோது, அதைப் பொறுப்பேற்று அரசியல் தீர்வுக்கோரிக்கை உட்பட கோரிக்கைகளுடன் இருக்கும் தமிழ் மக்களுக்கு உதவவும், உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கவும் முடியும் என்று நம்பினேன். ஆகையால் மீள்குடியேற்றம்,புனர்வாழ்வு, வடக்கின் அபிவிருத்தி மற்றும் இந்துவிவகார அலுவல்கள் அமைச்சை பொறுப்பேற்றுள்ளேன். இந்த அமைச்சின் ஊடாகவும், எனது முயற்சிகளின் ஊடாகவும் எனக்கு கிடைக்கப்பெற்ற அரசியல் பலத்திற்கு ஏற்பவும் நிறையவே மக்கள் பணி செய்யலாம் என்று நினைக்கின்றேன்.

2. தமிழ் மக்கள் தொடர்பிலான முக்கிய அமைச்சுப் பதவி உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. படையினர் வசமுள்ள காணிகள் விடுவிப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வென உங்களுக்கான அமைச்சின் கீழான விவகாரங்கள் தொடர்பில் வடக்கு - கிழக்கு வாழ் மக்களுக்கு அனேக பிரச்சினைகளும், முறைப்பாடுகளும், போராட்டங்களும் காணப்படுகின்ற நிலையில், அமைச்சராக நீங்கள் உடனடியாக முன்னுரிமையளிக்கவுள்ள விடயங்கள் எவை?

பதில்: நீங்கள் குறிப்பிட்ட பிரச்சினைகள் மட்டுமல்ல, சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, யுத்தம் மற்றும் வன்செயல்களினால் பல்வேறுவகையான இழப்புக்களை சந்தித்த மக்களுக்கான இழப்பீட்டுக்கொடுப்பனவுகளை வழங்குவது, அதே காரணங்களினால் பலியானவர்களுக்கு நஷ்டஈடுகளைக் கொடுப்பது, வீடுகளை அமைத்துக்கொடுப்பது, எமது இளைஞர், யுவதிகளுக்கும், பெண்களைத் தலைத்துவமாகக் கொண்ட குடும்பங்களுக்கும் அவர்கள் சுய பொருளாதாரத்தில் தலை நிமிர்த்தி வாழ்வதற்கு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுப்பது, மாகாணத்தின் வருமானத்தை அதிகரிக்கச் செய்வதற்காக சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது, தொழில் மையங்களை ஏற்படுத்துவது என்று பல பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண வேண்டியுள்ளது.

எனவே எனது அமைச்சின் முயற்சிகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் மகிந்த ராஜபக்சவும் விஷேடமாக உதவுவார்கள் என்று கூறியிருக்கின்றார்கள். அந்தவகையில் எமது மக்களின் அரசியல் மற்றும் அடிப்படைப் பிரச்சனைகளுக்கு தீர்வைப் பெற்று எமது மக்களை கெளரவமாக வாழ வைக்கவேண்டும் என்ற விருப்பமும், அதற்கான முயற்சியும், வேலைத்திட்டமும் என்னிடம் இருப்பதால் அந்த இலக்குகளை நோக்கி எனது பயணம் அமையும்.

இந்த அமைச்சை பொறுப்பேற்று இன்னும் ஒருவாரம் கூட ஆகவில்லை அதற்குள் யுத்தம் மற்றும் வன்செயல்களினால் பல இழப்புக்களைச் சந்தித்த மக்களின் ஒரு தொகுதியினருக்கு இழப்பீட்டுக்கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளேன். அந்தவகையில் எதிர்வரும் 9ஆம் திகதி முல்லைத்தீவில் 320 பேருக்கும், கிளிநொச்சியில் 300 பேருக்கும், யாழ்ப்பாணத்தில் 170 பேருக்குமாக 790 பேருக்கு அந்தக் கொடுப்பனவுகள் வழங்கிவைக்கப்படவுள்ளன.

அதேவேளை எமது மக்களுக்கு இன்னும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வீடுகளுக்கான தேவை இருக்கின்றது, அந்த வீடுகளை அமைத்துக்கொடுக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கும் முகமாக இம்மாதம் 5000 வீடுகளை கட்டுவதற்கான திட்டத்தை ஆரம்பிக்கத் தேவையான பணிகளை துரிதப்படுத்தி செய்துகொண்டிருக்கின்றேன்.

இதேபோல் எனது அமைச்சு ஊடாக செய்யக்கூடிய அனைத்துப்பணிகளையும் விரைவாக முன்னெடுப்பதற்கு உரிய அதிகாரிகளை பணித்துள்ளேன். எனது முழு ஈடுபாடும் இந்தப் பணிகளில் இருக்கும்.

பேதமில்லாமல், பாரபட்சம் இல்லாமல் இந்த நாட்டின் அனைத்துப் பிரஜைகளும் என்னை அல்லது எனது அமைச்சை தொடர்புகொண்டு தமது பிரச்சனைகளுக்கான தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும்.

புதிய அரசியலமைப்பின் மூலமே தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்று கடந்த மூன்றாண்டுகளாக தரப்பட்ட நம்பிக்கைகள் இனியும் தொடருமா?

பதில்: நான் ஆரம்பித்திலிருந்தே கூறிவந்திருக்கின்றேன் அதாவது தேசிய முக்கியத்துவமான பிரச்சனைகளுக்கான தீர்வுகளை புதிய ஆட்சியை அமைத்து 6 மாதங்கள் அல்லது ஒரு வருடத்திற்குள் காண வேண்டும். அவ்வாறு செய்யாமல் காலம் கடந்துவிட்டால் பின்னர் வேறு பிரச்சினைகள் தலைதூக்கிவிடும் என்று. இப்போது அதுவே நடந்து முடிந்துள்ளது.

கடந்த அரசை ஆட்சிப்பொறுப்புக்கு கொண்டுவந்ததாகக் கூறிய தமிழ்த் தலைமைகள் அந்த அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தையும் பயன்படுத்திக்கொள்ளவில்லை, அந்த ஆட்சிக்காலத்தையும் உரியவாறு பன்படுத்திக்கொள்ளவில்லை.

இந்தநிலையில் வரையப்படுவதாக கூறப்படும் புதிய அரசியலமைப்பு தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிவர்த்தி செய்யும் உள்ளடக்கங்களைக் கொண்டிருந்தால் அதை வரவேற்கலாம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது வருமா, என்பது நிச்சயமற்றதாக மாறியிருக்கின்றது.

நீங்கள் முன்னர் அமைச்சராக இருந்த​போதான காலப்பகுதியுடன் ஒப்பிடும் போது கடந்த மூன்றாண்டுளில் வடக்கு மக்களிடையே உங்கள் மீதான அபிமானம் அதிகரித்திருப்பதாக பலர் சொல்கின்றனர். தங்களது கோரிக்கைகைள நிறைவேற்றாத அரசாங்கத்திற்கு தங்களது பிரதிநிதிகள் ஆதரவு தரக்கூடாதென தமிழ் மக்கள் எண்ணுவதே இதற்குக் காரணமாக இருக்கலாமோ?

பதில்: ஆம் நான் ஆட்சியில் பங்கெடுத்திருந்த ஒவ்வொரு காலப்பகுதியிலும் எனக்கு கிடைத்த அரசியல் பலத்திற்கு ஏற்பவும், எனது அயராத முயற்சிகளின் அடிப்படையிலும் யுத்தத்தில் அழிந்த தேசத்தையும், எமது மக்களின் வாழ்க்கையையும் மீளக்கட்டியெழுப்ப கடினமாக உழைத்திருக்கின்றேன்.

அது ஊர்பார்த்த உண்மையாக இருக்கின்றது. துரதிர்ஷ்வசமாக நான் கடந்த ஆட்சியிலும் தொடர்ந்து இருக்கமுடியவில்லை. அதற்கு பல தடைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

அக்காலப்பகுதியில் தேச கட்டுமானப்பணிகளோ, பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை தூக்கி நிறுத்தும் காரியங்களோ தமிழ்த் தலைமைகளால் மேற்கொள்ளப்படவில்லை. எமது மக்கள் தமது பிரச்சனைகளுக்கு தீர்வுகேட்டு வீதியில் இறங்கிப்போராடுகின்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இந்த நிலையில் மீண்டும் நான் ஆட்சியில் பங்கெடுத்திருப்பதை குறிப்பாக தமிழ் மக்கள் மகிழ்ச்சியோடு தன்னெழுச்சியாகக் கொண்டாடுகின்றார்கள், பட்டாசு வெடித்தும், விசேட மதவழிபாடுகளில் ஈடுபட்டும் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றார்கள். எமது மக்களின் அந்த எதிர்பார்ப்பையும், நம்பிக்கையையும் பாதுகாக்கும் வகையில் எனது சேவைகள் இருக்கும்.

5. வடக்கு மாகாணசபையின் காலம் அண்மையில் பூர்த்தியடைந்தது. எதிர்வரும் மாகாணசபைக்கான தேர்தல் கூட்டணிகள் பற்றிய பேச்சுக்கள் வடக்கில் அண்மைய பேசுபொருளாகவிருந்தது. ஈ.பி.டி.பி யின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக, உங்கள் பெயரும் அடிபட்டதே?

பதில்: ஆம் மத்தியில் கூட்டாட்சி! மாநிலத்தில் சுயாட்சி!! என்ற எமது கட்சியின் அரசியல் இலக்கை வென்றெடுப்பதற்கும், அதை அர்த்தமுள்ளதாக்குவதற்கும் மாகாணசபையின் ஆட்சிப்பொறுப்பை பொறுப்பேற்று எமது மாகாணத்தை வளமான தேசமாக கட்டியெழுப்ப வேண்டிய பாரிய பணிகள் இருக்கின்றன. அதை நிறைவேற்ற முதலமைச்சராக மக்கள் ஆணையிட்டால், அதை நிறைவேற்றுவேன்.

மாகாணசபைத் தேர்தலை எதிர்கொள்வதற்கு பிராந்தியக் கூட்டுக்கள் தொடர்பாக நீங்கள் கூறுவதுபோல் பல பேச்சுவார்த்தைகள் நடைபெறுவது உண்மைதான்.

எம்மைப் பொறுத்தவரை, கூட்டுச் செயற்பாட்டுக்கு எமது இணக்க சமிக்ஞையை வெளிப்படுத்தியுள்ளோம். கூட்டு என்பது வெறுமனே தேர்தலுக்கானதாகவோ, வாக்குகளை அபகரிப்பதற்கானதாகவோ இருக்கமுடியாது, தொடர்ச்சியாக செயற்படுவதற்கும், மக்களுக்கு இடையூரற்ற சேவையைச் செய்வதற்கும் பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில், பரஸ்பரம் விட்டுக்கொடுப்பு, சகிப்புத்தன்மை என்பவற்றுடன் அமைய வேண்டும். அவ்வாறான ஒரு கூட்டு வேலைத்திட்டம் அமைந்தால் அது பலமானதாக அமையும், கட்சிகளின் நலனுக்கான கூட்டாக இல்லாமல், மக்கள் நலனை முன்னிறுத்திய கூட்டாக இது இருக்க வேண்டும் பார்க்கலாம் அந்த முயற்சிகள்வெற்றிபெறுகின்றதா? என்று.

Comments