'ஒக்ேடாபர் 26' ஜனநாயகப் புரட்சி | தினகரன் வாரமஞ்சரி

'ஒக்ேடாபர் 26' ஜனநாயகப் புரட்சி

''சுதந்திர இலங்கையின் 22 வது பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கபட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்நியமனத்தை மேற்கொண்டிருக்கின்றார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பில் தமக்கு உள்ள அதிகாரப்படி ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி இந்நியமனத்தை மேற்கொண்டார்.''

கடந்த அரசாங்கத்தின் பிரதான பங்காளிக்கட்சியாக இருந்து வந்த ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அவ்வாட்சிக்கான ஆதரவை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து ஜனாதிபதி இந்த புதிய பிரதமரையும் அமைச்சர்களையும் நியமித்து இருக்கின்றார்.

இதன் ஊடாக நாட்டினதும் மக்களதும் நலன்களுக்கு முன்னுரிமை அளித்து செயற்பட்டு வருவதை மீண்டுமொரு தடவை ஜனாதிபதி நிரூபித்து இருக்கின்றார்.

உண்மையில் நாட்டினதும் மக்களினதும் நலன்களுக்கு முன்னுரிமை அளித்து செயற்படும் தலைமை தான் சமூகத்திற்கும் நாட்டுக்கும் இன்றியமையாதது. அவ்வாறான தலைமையின் மூலம் தான் நாடும் மக்களும் சுபீட்சம் பெறுவர். அதற்கேற்பவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்ப்பட்டு வருகின்றார்.

இருப்பினும் நாட்டினதும் மக்களினதும் நலன்களுக்கு முன்னுரிமை அளித்து ஜனாதிபதி செயற்பட்டு வருகையில் கடந்த ஆட்சியாளர்கள் அதற்கு மாற்றமாக செயற்பட்டு வந்தனர். ஜனாதிபதியின் மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளுக்கும் கடந்த ஆட்சியாளர்கள் மக்களை கருத்தில் கொள்ளாது மேற்கொண்ட செயற்பாடுகளுக்கும் இடையில் பாரிய இடைவெளிகள் காணப்பட்டு வந்தன. இந்த இடைவெளியை அவ்வப்போது மக்களால் கூட அவதானிக்கவும் முடிந்தது.

கடந்த ஆட்சியாளர்கள் நாட்டினதும் மக்களினதும் நலன்களுக்கு முரணாக வகையில் மேற்கொண்ட பல நடவடிக்கைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி பல சந்தர்ப்பங்களில் தடுத்து நிறுத்தியுள்ளார். அதேநேரம் நாட்டினதும் மக்களினதும் நலன்களுக்கு முன்னுரிமை அளித்து செயற்படுமாறு கடந்த ஆட்சியாளர்களுக்கு ஆலோசனைகள், அறிவுறுத்தல்கள், பணிப்புரைகள் வழங்கவும் ஜனாதிபதி தவறவில்லை. ஆனால் அவை செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருந்தது. இந்நிலைமையை இட்டு ஜனாதிபதி பெரிதும் கவலை அடைந்தார்.

இவ்வாறான நிலையில் 2018 பெப்ரவரி 10 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தல் முடிவின் ஊடாக நாட்டு மக்கள் கடந்த ஆட்சியாளர்களுக்கு தெளிவான செய்தியை வழங்கினர். அந்த செய்தியை கருத்தில் எடுத்து செயற்படுமாறும் மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறும் கடந்த ஆட்சியாளர்களுக்கு ஜனாதிபதி பல சந்தர்ப்பங்களில் ஆலோசனை, அறிவுரைகள் வழங்கினார்.

ஆனால் மக்கள் வழங்கிய செய்தியையோ, ஜனாதிபதியின் ஆலோசனைகளையோ கிஞ்சித்தும் கவனத்தில் எடுக்காது கடந்த ஆட்சியாளர்கள் செயற்பட்டு வந்தனர். இதனால் கடந்த ஆட்சியாளர்களது மக்களின் நலன்களுக்கு முரணான செயற்பாடுகள் நாளுக்கு நாள் வளர்ச்சி பெற்று வந்தன.

இதன் விளைவாக அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட சகல பொருட்களின் விலைகளும் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கின. டொலரின் பெறுமதியும் நாளுக்கு நாள் உயர்வடைந்து சென்றது.

இந்த சந்தர்ப்பத்தில் மக்களுக்கு நன்மை பயக்கும் என்ற போர்வையில் எரிபொருட்களுக்கு விலைச்சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அந்த சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது முதல் ஜனாதிபதி புதிய பிரதமரை நியமிக்கும் வரையும் ஒரு தடவையும் எரிபொருட்களின் விலைகள் குறைவடையவில்லை.

இவ்வாறு கடந்த ஆட்சியாளர்கள் மக்களது நலன்களைக் கருத்தில் கொள்ளாது மேற்கொண்டு வந்த நடவடிக்கைகளால் நாட்டு மக்கள் பொருளாதார அசெளகரியங்களுக்கு உள்ளாவது தவிர்க்க முடியாத ஒன்றானது. அந்த அசெளகரியங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கின. இந்நிலைமையை இட்டு ஜனாதிபதி பெரிதும் கவலையடைந்தார்.

இதேவேளை கடந்த ஆட்சியாளர்களின் பிழையான பொருளாதார அணுகுமுறைகளுக்கு எதிராக மக்கள் வீதிக்கு இறங்கி ஆர்ப்பாட்டம், ஊர்வலங்கள் நடாத்தும் அளவுக்கு நிலைமை வளர்ச்சி பெற்றது. அவற்றைக்கூட கவனத்தில் எடுப்பதற்கு கடந்த ஆட்சியாளர்கள் தயாராக இருக்கவில்லை. ஆனால் ஜனநாயக நாடொன்றில் மக்களின் கருத்துக்களையும் கோரிக்கைகளையும் மதித்து நடக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பும் கடமையும் ஆகும். அதனையும் கூட அவர்கள் உதாசீனம் செய்தபடியே செயற்பட்டு வந்தனர்.

இவ்வாறான நிலையில் தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய பிரதமரை நியமித்து அமைச்சர்களையும் நியமித்திருக்கின்றார். ஜனாதிபதியின் இந்நடவடிக்கை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதோடு புதிய நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் அவர்களில் ஏற்படுத்தியுள்ளது.

புதிய பிரதமர் நியமிக்கப்பட்டு 24 மணித்தியாலங்கள் செல்வதற்குள் அகில இலங்கை சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர்கள் சங்கம் தேனீருக்கான விலையை ஐந்து ரூபாவால் குறைத்தது. ஜனாதிபதி மீதும் புதிய பிரதமர் மீதும் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் நம்பிக்கைகளின் வெளிப்பாட்டுக்கு இது நல்ல எடுத்துக்காட்டாகும்.

அதேநேரம் புதிய பிரதமரான மஹிந்த ராஜபக்ஷ நிதி மற்றும் பொருளாதார விவகார அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கடந்த புதனன்று (31 ஆம் திகதி) நிதியமைச்சில் தமது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றார். அவர் கடமைகளைப் பொறுப்பேற்ற 24 மணித்தியாலயங்களுக்குள் மக்களின் நலன்களை முன்னிலைப்படுத்தி எரிபொருட்கள் உட்பட பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளார். அதற்கேற்ப ஒரு லீற்றர் பெற்றோல் பத்து ரூபாவாலும், ஒரு லீற்றர் டீசல் ஏழு ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது. விஷேட பண்டங்கள் அறவீட்டு வரி சீனி கிலோவுக்கு பத்து ரூபாவாலும், கொண்டக்கடலை கிலோவுக்கு 25 ரூபாவாலும் பருப்பு கிலோவுக்கு ஐந்து ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது. அதேநேரம் தொலைத்தொடர்பாடல் வரி 25 வீதத்திலிருந்து 15 வீதமாகவும், விவசாயிகளுக்கான உற்பத்தி வரி 24 வீதத்திலிருந்து 14 வீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் 50 கிலோ கொண்ட பசளை மூடையொன்றை ஐநூறு ரூபாவுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ள பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ, ஏனைய பயிர்ச்செய்கைகளுக்கான ஐம்பது கிலோ கொண்ட பசளை மூடையொன்றின் விலையை ஐநூறு ரூபாவாலும் குறைத்துள்ளார். அத்தோடு மொத்த மற்றும் சில்லறை விற்பனை துறையினர் வற் வரி செலுத்துவதற்கான பொறுப்பெல்லை வருடமொன்றுக்கு ஐம்பது மில்லியன் ரூபாவிலிருந்து நூறு மில்லியன் ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் கடந்த ஆட்சிக்காலத்தில் டொலரின் பெறுமதி நாளுக்கு நாள் அதிகரித்து செல்லும் நிலைமையே காணப்பட்டது. அதுவும் இந்நாட்டு மக்கள் பொருளாதார அசெளகரியங்களை எதிர்கொள்ளக் காரணமாக அமைந்தன. அதனைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் கூட கடந்த ஆட்சியாளர்கள் கவனம் செலுத்தவில்லை.

ஆனால் புதிய நிதியமைச்சர் கடமைகளைப் பொறுப்பேற்று இரண்டொரு தினங்கள் செல்வதற்குள் டொலரின் பெறுமதி அதிகரித்து செல்வதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளார். அதனடிப்படையில் கடந்த வியாழக்கிழமை வரையும் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த டொலரின் பெறுமதி வெள்ளிக்கிழமை வீழ்ச்சியடைந்தது. அதாவது வியாழனன்று ஒரு டொலரின் பெறுமதி ரூபா 177.32 காணப்பட்டது. அது வெள்ளியன்று ரூபா 175.82 க்கு வீழ்ச்சியடைந்தது. அண்மைக்காலத்தில் இந்நாட்டில் டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்தது இதுவே முதற் தடவையாகும்.

உண்மையில் மக்களின் நலன்களை முன்னுரிமை அளித்து செயற்பட்டுவரும் தலைமைத்துவத்தின் பணிகள் இவ்வாறு தான் இருக்கும் என்பதற்கு ஜனாதிபதியினதும், புதிய பிரதமரினதும் பணிகள் நல்ல சான்றுகளாக விளங்குகின்றன. புதிய நிதியமைச்சரின் இந்நடவடிக்கைகளை நாட்டு மக்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர். புதிய நிதியமைச்சருக்கு இவ்வாறு செய்ய முடிந்திருக்கின்றது என்றால் ஏன் ஏற்கனவே பதவியில் இருந்த கடந்த ஆட்சியாளர்களால் செய்ய முடியாமல் போனது என்பது தான் மக்களின் பிரதான கேள்வியாக உள்ளது. புதிய நிதியமைச்சர் மேற்கொண்டிருக்கும் இந்நடவடிக்கைகளால் சாதாரண மக்கள் மாத்திரமல்லாமல் நாட்டின் எல்லா மட்டத்தினருமே நன்மை பெறுவர். இதில் எவ்வித ஐயமும் இல்லை.

ஆகவே ஜனாதிபதி மேற்கொண்டிருக்கும் அரசியல் நடடிக்கைகள் நாட்டினதும் மக்களினதும் முன்னிலைப்படுத்தி முன்னெடுக்கப்பட்டிருப்பது மிகவும் வெளிப்படையானதும் தெளிவானதுமாகும். அவர் எப்போதும் சாதாரண மக்களின் உணர்வுகளையும் தேவைகளையும் மதித்து அதற்கு ஏற்ப செயற்படுபவர் என்பதை மீண்டும் ஒரு தடவை எடுத்துக்காட்டியுள்ளார். என்றாலும் மக்களின் நலன்களை கவனத்தில் கொள்ளாது தன்னிஷ்டப்படி கடந்த மூன்றரை வருடங்களைக் கடத்திவிட்ட கடந்த ஆட்சியாளர்கள் இப்போது மக்களுக்காக செயற்படுபவர்களாகக் காட்ட முயற்சிப்பது வேடிக்கையானது. நாட்டு மக்கள் எல்லாவற்றையும் நன்கறிந்தவர்களாக உள்ளனர்.

Comments