தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம் இடைநிறுத்தம் | தினகரன் வாரமஞ்சரி

தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம் இடைநிறுத்தம்

 

யாழ். பல்கலை மாணவர் பேரணி பிரதிநிதிகளும்
கைதிகளுடன் சந்திப்பு

 

அநுராதபுரம் சிறையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த தமிழ் அரசியல் கைதிகள் அரசியல், சிவில், சமூக பிரதிநிதிகளின் வாக்குறுதியையடுத்து நேற்று தங்களது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர்.

கைதிகளுக்கு நீராகாரம் வழங்கி அவர்களது போராட்டம் முடித்து வைக்கப்பட்டது

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் கைதிகளை நேற்றையதினம் (13) சனிக்கிழமை காலை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் சிவமோகன் ஆகியோர் சென்று பார்வையிட்டதுடன் உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கேட்டுக் கொண்டனர்.

இதனையடுத்து நேற்று மாலை பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் அமைப்புகள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் அநுராதபுரம் சிறைக்குச் சென்று கைதிகளை சந்தித்தனர். போராட்டத்தைக் கைவிடுமாறும், உங்களுக்காக நாம் போராடுகிறோம் என்றும் உறுதி அளித்துள்ளனர்.

இதனையடுத்து உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு நீராகாரமும் வழங்கி அவர்களது போராட்டத்தை முடித்து வைத்துள்ளனர்.

சிவில், சமூக அமைப்புகள் தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்து வெளியே வந்ததன் பின்னர் கைதிகளுடனான சந்திப்பு தொடர்பில் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய அமைப்பின் தலைவர் அருட்தந்தை மா. சக்திவேல் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்தார்.

‘உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள அரசியல் கைதிகளை சந்தித்தோம். அதன் போது அவர்கள் காலையில் தம்மைத் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா மற்றும் சிவமோகன் ஆகியோர் சந்தித்ததாக தெரிவித்தனர்.

‘எம்மை தரம் பிரிக்காது விடுதலை செய்ய வேண்டும். அவ்வாறு முடியாவிடின் சிறிது கால புனர்வாழ்வளித்து விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை எம்பிக்களிடம் கைதிகள் முன் வைத்ததாகக் கூறினர். தாம் ஜனாதிபதியுடன் மீண்டுமொரு சந்திப்பை மேற்கொள்ளவுள்ளதால் அதன்போது தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை முன் வைப்பதாக எம்பிக்கள் உறுதி யளித்துள்ளனர். ஜனாதிபதியுடனான சந்திப்பில் எமக்குச் சாதகமான பதில் கிடைக்கும் என நம்புகின்றோம். அவ்வாறு இல்லையெனில் உங்கள் விடுதலைக்காகத் தொடர் போராட்டத்தை முன்னெடுப்போம். அத்துடன் வரவு – செலவு திட்டத்தை எதிர்ப்போம் என்றும் மாவை சேனாதிராஜா எம்பி உறுதி தந்துள்ளார் எனத் தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்தனர் என அருட்தந்தை தெரிவித்துள்ளார்.

அதனையடுத்து அவர்களும் கைதிகளின் போராட்டத்தைக் கைவிடுமாறு கோரியுள்ளனர். கைதிகளுக்காகத் தாம் போராடுவதாக உறுதி வழங்கியதாகவும் அருட்தந்தை தெரிவித்தார்.

அதனை அவர்கள் ஏற்றுக்கொண்டு, தாம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் உறுதி மொழியையும் நம்பி தமது போராட்டத்தை தற்காலிகமாக இடை நிறுத்துவதாகக் கூறியுள்ளனர்.

அதேவேளை, "எமது விடுதலை தொடர்பில் சாத்தியமான முடிவெடுக்க வேண்டும். விடுதலையை சாத்தியமாக்காவிடின் மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தில் குதிப்போம்" எனப் போராட்டம் நடத்தும் அரசியல் கைதிகள் தம்மிடம் தெரிவித்ததாக அருட்தந்தை மேலும் தெரிவித்தார்.

அதேவேளை, யாழில் இருந்து அநுராதபுர சிறைச்சாலை நோக்கி நடைபவனி மேற்கொண்ட யாழ்.பல்கலைகழக மாணவர்கள் நேற்று சிறைச்சாலையை சென்றடைந்து அரசியல். கைதிகளை சந்தித்தனர். இதனிடையே அங்கு வந்த சிலர், ‘இங்கு அரசியல் கைதிகள் எவரும் இல்லை. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களே’ எனத் தெரிவித்து யாழ். பல்கலை மாணவர்களுடன் முரண்பட்டனர். இருப்பினும் அங்குவந்த ஏனையவர்களால் நிலைமை கட்டுப்படுத்தப்படுத்தப்பட்டது.
 

யாழ். விசேட, வவுனியா விசேட நிருபர்கள்

 

 

Comments