குடிநீர் வசதி செய்யப்படாமலேயே திறக்கப்பட்ட அரப்பலாகந்த தோட்ட வீடமைப்புத் திட்டம் | தினகரன் வாரமஞ்சரி

குடிநீர் வசதி செய்யப்படாமலேயே திறக்கப்பட்ட அரப்பலாகந்த தோட்ட வீடமைப்புத் திட்டம்

களுத்துறை மாவட்டத்தின் தெபுவன அரப்பலாகந்த தோட்டம் லிஸ்க்லேன் பிரிவில் மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கிவந்த 29 குடும்பங்களுக்கென பாதுகாப்பான இடத்தில் காணி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒவ்வொரு குடும்பத்துக்கும் 7 பேர்ச் காணி பகிர்ந்தளிக்கப்பட்டு மலைநாட்டு புதிய கிராமம் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் நிதியொதுக்கீட்டில் தலா 10 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட குடிநீர்த்திட்டம் பூர்த்தி செய்யப்படாமை குறித்து குடியிருப்பாளர்கள் மிகுந்த அதிருப்தியும் கவலையும் தெரிவித்துள்ளனர்.

குடிநீர்த்திட்டத்துக்கென குறித்த அமைச்சினால் 17 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ட்ரஸ்ட் நிறுவனத்தின் மேற்பார்வையில் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் சுத்தமான, பொருத்தமான இடத்தில் கிணறு தோண்டப்படாது நீரோடை ஒன்றுக்கு அருகில் சுமார் 12 அடி ஆழத்தில் கிணறு தோண்டப்பட்டு பூமி மட்டத்துக்கு மூன்று சிலிண்டர்கள் இறக்கப்பட்டு பாதுகாப்பற்ற நிலையிலேயே காணப்படுகிறது.

கிணற்றிலிருந்து நீர் இறைக்கும் இயந்திரம் மூலம் நீர் உறிஞ்சி எடுக்கப்பட்டு சுமார் 20 ஆயிரம் லீட்டர் நீரை நிரப்பி அதிலிருந்து குடியிருப்பாளர்களுக்கு நீரை விநியோகிப்பதே திட்டத்தின் நோக்கமாகும். ஆனால் கிணற்றைவிட அருகில் ஓடும் நீரோடை உயர்ந்து காணப்படுவதால் மழைக்காலத்தில் நீர் பெருகி கழிவுகளுடன் கிணற்றினுள் பாய்ந்து கிணறு நிரம்பி அசுத்தமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதேவேளையில் கிணற்று நீர் குடிப்பதற்கு சற்றேனும் உகந்ததாக இல்லாது களிமண் நிறமாக காணப்படுவதால் குடியிருப்பாளர்கள் இந்த நீரை குடிப்பதைத் தவிர்த்து மலசலகூடத் தேவைக்கு மட்டுமே பாவித்து வருகின்றனர். நீண்டதூரம் நடந்துசென்று பாழுங்கிணறு ஒன்றிலிருந்தே பெரும் சிரமத்துக்கு மத்தியில் குடிநீரைச் சுமந்துவந்து தமது குடிநீர்த்தேவையைப் பூர்த்தி செய்துகொள்கின்றனர்.

இந்த வீட்டுத்திட்டம் திறந்து வைப்பதற்கு முதல்நாள் பவுசர் மூலம் நீர் கொண்டுவரப்பட்டு ஒவ்வொரு வீட்டினுள் கூரையிலும் வைக்கப்பட்டிருந்த சிறிய அளவிலான பிளாஸ்ரிக் தண்ணீர்த்தாங்கியில் நீரை நிரப்பி தங்களை ஏமாற்றியதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குடிநீர்ப் பிரச்சினையை எதிர்நோக்கிவரும் இவர்களின் நிலையை நேரில்சென்று பார்வையிட்டு உண்மையைக் கண்டறிந்த தொடங்கொட பிரதேச சபை உறுப்பினர் செல்வராஜ் விஜேபாண்டியன் தற்காலிக நடவடிக்கையாக தினமும் பிரதேச சபை ஊடாக பவுசர் மூலம் குடிநீரை விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளார். இவரது இந்த நடவடிக்கை குறித்து குடியிருப்பாளர்கள் இவருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

இதேவேளையில் சமையலறை மற்றும் குளியலறையிலிருந்து வெளியேறும் கழிவுநீர், மழைநீர் வழிந்தோட வடிகான் வசதி அமைக்கப்படாதபடியால் நீரை வெளியேற்றிக்கொள்வதில் குடியிருப்பாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

வீட்டுத்திட்டத்துக்கான பாதை கொன்கிறீட் இடப்பட்டுள்ள போதிலும் முழுமையாகப் பூர்த்தி செய்யப்படாத காரணத்தால் மழைக்காலத்தில் மழைநீரினால் மண் அரித்துக்கொண்டு ஓடி வீட்டு முற்றங்களில் தேங்கி நிற்பதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜுலை முதலாம் திகதி அமைச்சர் ராஜித சேனாரத்ன, மேல் மாகாண சபை உறுப்பினர் ஜகத் வித்தானகே, மலைநாட்டு புதிய கிராமம், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ரஞ்ஜனி நடராஜபிள்ளை, ட்ரஸ்ட் நிறுவனத்தின் தலைவர் வீ. புத்திரசிகாமணி ஆகியோர் தலைமையில் இவ்வீட்டுத் திட்டம் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஒரு வீட்டுத்திட்டம் ஆரம்பிக்கப்படும்போது அங்கு குடிநீர், மின்சாரம், பாதை வசதி என்பன இருக்க வேண்டியது அவசியமாகும். அதிலும் குடிநீர் மிகவும் இன்றியமையாததாகும்.

இங்கு குடிநீர் வசதி செய்து கொடுக்கப்படாமலேயே வீட்டுத்திட்டம் திறந்து வைக்கப்பட்டது. திறந்து வைக்கப்படுவதற்கு முதல்நாள்தான் பவுசர் மூலம் நீர்கொண்டுவரப்பட்டு ஒவ்வொரு வீட்டின் கூரையில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்ரிக் தண்ணீர்த்தாங்கியில் நீரை நிரப்பி ஏமாற்று வேலை செய்யப்பட்டுள்ளது.

குடிநீர் வசதியை ஏற்படுத்தி வீட்டுத்திட்டத்தை திறந்து வைத்திருக்கலாம். அவசரப்பட்டு திறந்து வைக்கவேண்டிய அவசியமே கிடையாது. திறந்து வைக்கப்பட்டு இரண்டு மாதம் கடந்துவிட்டது. ஆனால் ஆரம்பிக்கப்பட்ட குடிநீர்த்திட்டம் அரைகுறையாக கிடப்பதுடன் குடிப்பதற்கு உகந்த நீராகவும் இல்லை.

இலவசமாக கட்டிக்கொடுத்த வீடுதானே. குறைபாடுகள் இருந்தால் பரவாயில்லை சும்மா இருந்துவிட முடியாது. உண்மை வெளிவர வேண்டும். அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தெரியவர வேண்டும்.

இதுகுறித்து இவர்கள் கவனம் செலுத்தி இங்கு முறையான குடிக்கக்கூடிய குடிநீர்த்திட்டத்தை ஏற்படுத்திக் கொடுக்கவும், குறைபாடுகளை நிவர்த்தி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Comments