நினைத்துப் பார்க்கிறேன் | தினகரன் வாரமஞ்சரி

நினைத்துப் பார்க்கிறேன்

இந்தத் தோட்டத்திற்கு வந்திருக்கிற ‘டாக்டர்’ ஐயா மிச்சம் நல்லவரு. ஒரு‘பறங்கி’க்காரராம். அவரு நல்ல கைராசிக்காரர் எனக் கேள்வி பட்டேன். அவரு கொடுக்கிற மருந்துள எல்லா நோயாளிகளும் சுகமாகிறார்களாம். இதற்கு முந்தி இவரு இருந்த தோட்டத்தில இவரை அங்கிருந்து மாத்த வேணாம்னு தொழிலாளிகளெல்லாம் ‘ஸ்ரைக்’ கூட செய்தாங்களாம். இவரு மட்டும் மில்ல, அந்த அம்மாவும, பிள்ளைகளும்கூட மிச்சம் நல்லவுங்க”

தோட்டத்துக்குப் புதிதாக வேலைக்கு வந்துள்ள டாக்டரை பற்றி ‘மருந்துக்கார’ முனியன் புகழ்ந்து கொண்டே போனான்.

“அய்யா புதுக்காட்டு டிவிசன் சின்னையா கங்காணிக்கு சொகமில்லனு பாக்க போனாரு. இப்ப கொஞ்ச நேரத்துல வந்திருவாரு. அவரே ஓம் காலு புண்ணுக்கு மருந்து போட்டு கட்டுவாரு. அவரு கை பட்டாலே சுகமாகிரும்” என்று கூறிக் கொண்டே ‘இராசலிங்கத்தின்’காலை அங்கு போடப்பட்டிருந்த மேசையின் மேல் வைத்து அவனது புண்ணை ‘அயடினைப்’போட்டு சுத்தம் செய்து கொண்டிருந்தான் முனியன்.

‘கவ்வாத்து’ மலையில் வேலை செய்யும் போது கத்தி வெட்டி, முழங்காலில் காயத்துக்குள்ளான இராசலிங்கத்தை இரண்டு தொழிலாளர்கள் தோட்டத்து வைத்தியசாலைக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். அங்குள்ள மேசையில் ராசலிங்கத்தை அமர வைத்த முனியன், புதிதாக வந்துள்ள டாக்டரைப் பற்றிக்கூறித் தைரியமூட்டிக்​ெகாண்டிருந்தான்.

அந்த நேரம் டாக்டரின் மோட்டார் சைக்கிள் புடு..புடு..புடு..என்று உருமிக் ெகாண்டு வந்து நின்றது.

புதிய டாக்டர்!

சிவந்த நிறம். ஐந்தரை அடி உயரம் இருக்கும். காக்கிநிறக் காற்சட்டையும் வெள்ளை நிற சேர்ட்டும் அவருக்கு மேலும் அழகைக்ெகாடுத்தது. "ஐயா வந்திட்டாரு, பயமில்லாமல் இரு" மீண்டும் தெம்பூட்டினான் முனியன்.

அங்கு வந்த டாக்டர், இராசலிங்கத்தின் புண்ணைப் பார்த்து விட்டு “ஏன் கத்தியில வெட்டிக்கிட்டீங்களா? வேலை செய்யும் போது கவனமா வேலை செய்யனுமில்லையா! சரி,சரி, இந்த மருந்தைப் போடுறன். கெதியில ஆறிவிடும். நீங்க இந்த புண் ஆறும் வரை புண்ணில் தண்ணி படாம பாத்துக்கணும். முழங்காலில் காயம் பட்டதனால் வலியா இருக்கும். புண் சுகமாகும்வரை வேலைக்குப் போக வேண்டாம். நான் தொரைக்கு கடிதம் அனுப்பி ஒங்களுக்கு பேர் போட சொல்லுறேன்”

இராசலிங்கம் தலையாட்டினார்.

மருந்தைப் போட்டுவிட்டு அங்கிருந்து சென்றார் டாக்டர்.

இராசலிங்கத்துக்குக் காயம் வருத்தமாகவிருந்தாலும் டாக்டரின் உபசரிப்பு அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. “இந்த டாக்டர் ஐயா இவ்வளவு நோயாளிகளோடு எவ்வளவு அன்பாகப் பழகுகிறார், இதற்கு முன்பிருந்த டாக்டர்கள் இப்படி மக்களோடு பழகலியே.சிடுசிடுவென அல்லவா சீறி விழுவார்கள். நீங்க சொன்னது போல இவர் தங்கமானவர்தான்”

முனியன் சொன்ன வார்த்தைக்கு அங்கீகாரம் கொடுத்துவிட்டு அங்கிருந்து அகன்றான் இராசலிங்கம்.

முனியன் வேலைசெய்யும் வைத்தியசாலை மிகவும் அழகான ஓரிடத்தில் அமைந்திருந்தது. அந்த மருத்துவசாலைக்கு அருகில் அழகான பெரிய ‘பங்களா’ஒன்று இருந்தது. அந்த பங்களாவிலேயே டாக்டரின் குடும்பத்தினர் வசித்து வந்தனர். டாக்டர் வீட்டுக்குப் பக்கத்தில் பிரசவ விடுதியும் அதற்குப் பக்கத்தில் ‘பிரசவ விடுதி’க்குப் பொறுப்பான ‘மருத்துவிச்சி’ வசிக்கும் வீடும் இருந்தது.

தோட்டத் தொழிலாளர்களுக்குத் தேவையான சகல வைத்திய வசதிகளும் அங்கு இருந்தன. லயன்களிலுள்ள நோயாளிகளை வந்து பார்ப்பதற்கும்,நோயினால் பீடிக்கப்பட்ட தொழிலாளர்கள் வந்தால், அவர்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகளை செய்து கொடுப்பதற்கும், பெண்களுக்கு பிரசவம் ஏற்படும் போது அவர்களைப் பிரசவ விடுதியில் அனுமதித்து அவர்களுக்குத் தேவையான பிரசவ வசதிகளைச் செய்வதற்கும் எல்லா வளங்களும் இருந்தன.

புதிய டாக்டர் தோட்டத்துக்கு வந்த நேரம், தோட்ட இளைஞர்களுக்குப் புதுத் தெம்பைத் தோற்றுவித்திருந்தது. டாக்டரின் புதல்வர்கள் எல்லோருமே நன்கு படித்தவர்கள். ஆங்கில மொழியில் சிறந்த அறிவும் சகலரிடமும் அன்பாகப் பழகும் பண்பும் கொண்டவர்களாகவுமிருந்தனர். அதன் காரணமாகத் தோட்டத்திலிருந்து நகர்ப்புற பாடசாலைகளுக்குச் சென்று கல்வி பயின்று கொண்டிருந்த ஒரு சில இளைஞர்களும் தோட்டத்தில் தொழிலாளர்களாக வேலை செய்த சில இளைஞர்களும் இவர்கள்பால் ஈர்க்கப்பட்டார்கள்.

முதலில் நகர்ப்புற பாடசாலை ஒன்றில் கல்வி பயின்ற கணேசன், இவர்களோடு பழக ஆரம்பித்தான். அதனைத் தொடர்ந்து தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த பல இளைஞர்கள் இவர்களோடு பழகி மாலை நேரங்களில் டாக்டர் வீட்டுக்குச் சென்று ஆங்கிலப் பாடம் கற்றுக் கொள்ள ஆரம்பித்தனர்.

டாக்டரின் மகன்மார்களில் ‘வில்லியம்’ என்ற மூத்தவன் பாடசாலை அதிபராகவும் ‘ஹேர்வின்’ என்ற இரண்டாவது மகன் பாடசாலை ஆங்கில ஆசிரியராகவும் தொழில் செய்தார்கள், ‘அன்டெனி’ என்ற மூன்றாவது மகன் படித்துக் கொண்டிருந்தான். வில்லியமும் ஹேர்வினும் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தால், ஆங்கிலப் புத்தகங்கள் பத்திரிகைகள் ‘டிஷ்னரி’ போன்றவற்றை வாசித்துக் கொண்டிருப்பர். மாலை வேளைகளில் தோட்டத்து இளைஞர்கள் வந்து விட்டால், அவர்களுக்கு மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையும் ஆங்கில பாடங்களைப் போதிப்பார்கள்.

தோட்டத்து இளைஞர்களிடம் அவர்கள் எவ்வித பிரதிபலனையும் எதிர் பாராமல் அவர்களுக்கு இனாமாகவே படிப்பித்தனர். தோட்ட வாழ் இளைஞர்களின் ஆங்கில அறிவினைப் அபிவிருத்தி செய்ய வேண்டும் என்பதே அவர்களின் குறிக்கோளாகவிருந்தது. டாக்டர் வீட்டிலிருந்த மூன்றாவது மகன் கணேசனோடு மிகவும் நெருங்கிப் பழகினான். இதன் காரணமாக அநேகமான சந்தர்ப்பங்களில் கணேசன் இரவு நேரங்களில் அவர்களின் வீட்டிலேயே தங்கிவிடுவது வழக்கம்.

தோட்ட இளைஞர்கள் இவர்களோடு பழகிய அந்த நாட்கள் மறக்க முடியாதவை. மிகவும் சந்தோஷமாகவும் குதூகளிப்பாகவும் பிரயோசனமாகவும் காலத்தைக் கழித்தனர். சில வேளைகளில் இவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து டாக்டரின் வீட்டிலேயே சமைத்துச் சாப்பிட்டு மகிழ்ந்தனர். மாலை வேளைகளில் இவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து ‘பெரிய பங்களா’ வளவிலுள்ள பெரிய துரையின் குதிரையைப் பார்ப்பதற்காகச் செல்வர். அவ்வேளைகளில் இவர்களைக் ‘குதிரைக்காரன்’ கண்டால் பக்கத்திலுள்ள மரங்களில் பழங்களைக் கொய்து இவர்களுக்குக் கொடுப்பான்.

கொழும்பு, கந்தான, காலி போன்ற இடங்களுக்கு இவர்களின் உறவினர்களைக் காணப் போகும் போது தோட்ட இளைஞர்களையும் சுற்றுலா பயணம் செல்வது போல் அழைத்துச் சென்று மகிழ்ந்தனர். இவர்களோடு சேர்ந்து கல்வி பயின்ற தோட்டத்து இளைஞர்கள் சகலருமே ஆங்கில மொழியைக் கற்றுக் கொண்டு தாங்கள் செல்லுமிடமெல்லாம் ஆங்கில மொழியில் பேசி மகிழ்ந்தனர்.

தனது எஸ்எஸ்ஸி கல்வியை நிறைவுசெய்திருந்த கணேசன், இப்போது தொழில் ஒன்றைத் தேட தீவிரமாக ஆரம்பித்து விட்டான். தினமும் டாக்டர் ஐயாவின் பெரிய மகன் வில்லியம் வாங்கிக் கொண்டு வரும் பத்திரிகைகளில் வெளியாகி வந்த விளம்பரங்களைப் பார்த்து வேலைக்கு விண்ணப்பித்துக் கொண்டிருந்தான். இவ்வாறு பல இடங்களுக்கு விண்ணப்பித்தும் தனக்கு வேலை கிடைக்கவில்லையே என அவன் நினைத்து வருந்திக் கொண்டிருந்தான்.

ஒரு நாள் கணேசன், டாக்டர் பங்களாவுக்கு வந்த போது, அன்டெனி பேப்பர் ஒன்றுடன் ஓடி வந்து. “மச்சான் இங்க பாரு..’ஸ்டெதன்’ தோட்டத்துள கிளார்க் ஒருவர் தேவை என்று விளம்பரம் வந்திருக்கு. அதுக்கு இன்னக்கே விண்ணப்பம் அனுப்பு மச்சான், ஒனக்கு கட்டாயம் வேலை கிடைக்கும் என்றான். பத்திரிகை விளம்பரத்தைப் பார்த்து அன்றைய தினமே விண்ணப்பம் ஒன்றைத் தயார் செய்து ஸ்டெதன் தோட்ட த்திற்கு அனுப்பினான்.

அவன் அனுப்பியிருந்த விண்ணப்பம் கிடைத்துள்ளதாகவும் நேர்முகப் பரீட்சைக்கு வரும்படியும் கணேசனுக்குப் பதில் கடிதம் வந்திருந்தது. இந்தக் கடிதத்தைப் பார்த்த அவன் பெரும் பூரிப்பில் ஆழ்ந்துபோயிருந்தான். இதனைக் கேட்ட டாக்டர் வீட்டில் உள்ள எல்லோருமே மகிழ்ச்சியடைந்தனர். அன்டெனி ஓடி வந்து, “அடே மச்சான் ஒனக்கு இன்டர்வீவுக்கு கடிதம் வந்திருக்கு. நீ போ..மச்சான். ஒனக்கு நிச்சயம் வேலை கிடைக்கும். நீ வேலைக்குப் போனா என்னையும் அங்கே சேர்த்துக்கொள். என்னை மறந்திராத மச்சான்” என்றான்.

கணேசன், தோட்ட காரியாலயத்துக்குச் சென்றபோது அங்கு நேர்முகப் பரீட்சைக்கு வந்திருந்த ஏனையவர்களைப் பார்த்து அசந்து போய்விட்டான். அவனுக்கு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க ஆரம்பித்தது. காரணம் அங்கு வந்திருந்தவர்களில் இவன் ஒருவனே மிகவும் சிறியவன். ஏனைய எல்லோருமே நாற்பது ஐம்பது வயதினை அடைந்தவர்ளைப்போல் இருந்தனர். ஒவ்வொருவரும் கோட்சூட் ‘டை’களைக் கட்டி கையில் அழகான பையில்களோடு ‘டிப் டொப்பாக’வந்திருந்தனர்.

சரியாக இரண்டு மணிக்குத் தோட்டத் துரையின் காரியாலய கதவு திறக்கப்பட்டது. நேர்முகப்பரீட்சை நடத்துவதற்கு ‘வைட்’ என்ற வெள்ளைக்கார துரை அங்கே தனது ஆசனத்தில் அமர்ந்திருந்தார். அவருக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருந்த இலிகிதர், வந்திருந்தவர்கள் ஒவ்வொருவரையும் பெயரைச் சொல்லி அழைக்கிறார். இரண்டு மூன்று பேர் போய் வந்து விட்டார்கள். அடுத்ததாக,“மிஸ்டர் கணேசன், மிஸ்டர் கணேசன் உள்ளே வாங்க”

உரத்த குரலில் சத்தமிட்டுக் கூப்பிட்டார் இலிகிதர்.

கணேசன் உடனடியாகவே உள்ளே ஓடினான், வெள்ளைக்கார துரை அவனை உற்றுப் பார்த்து விட்டு “உங்கள் பெயர் என்ன” என்று ஆங்கில மொழியில் கேட்டான்.

கணேசன் சட்டென்று “எனது பெயர் கணேசன் சேர்” எனஆங்கில மொழியில் பதில் கூறிவிட்டுத் தனது கையிலிருந்த பத்திரங்களைக் கடிதக் கூட்டிலிருந்து வெளியில் எடுத்துத் துரையிடம் கொடுக்க, துரை அவற்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

“இப்போது வேலை சம்பந்தமாக துரை என்ன கேள்வி கேட்கப் போகிறாரோ தெரியலயே” என்ற பீதியில் துரை முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். அந்த வெள்ளைக்கார துரை கணேசனை உற்று நோக்கிச் சிரித்துவிட்டு “

I am sorry. you are too small for this post - please go away” என்று கூறி அவன் கொடுத்த பத்திரங்களை அவனிடம் கொடுத்து விட்டு. பக்கத்தில் நின்ற இலிகிதரைப் பார்த்து

“call the next“ என்றான்.

கணேசன் விரக்தியடைந்த நிலையில் காரியாலய வளவிலிருந்து யாரையும் திரும்பிக் கூட பார்க்காமல் அங்கிருந்து விரைவாகச் சென்று விட்டான்.

நேர்முகப்பரீட்சைக்குப் போய் வந்தவன் அங்கு என்ன நடந்ததென்பதை தனது வீட்டில் அம்மா அப்பாவிடம் கூறி விட்டு மாலை நேரம் தனது நண்பர்களைத் தேடி டாக்டர் வீட்டுக்குப் போனான். அங்கும் நடந்தவற்றை கூறி விட்டு, நண்பன் அன்டெனியோடு சேர்ந்து எதிர்காலத்தைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தான்.

வெள்ளைக்கார துரை அவனைப் பொடிப்பயல் என்று சொல்லாமல் சொல்லிவிட்டதை எண்ணி நொந்துபோனான். அன்று அன்டனியில் கட்டிலிலேயே உறங்கிவிட்டான்.

அடுத்த நாள் காலை‘காசல்ரீ’அணை கட்டும் இடத்தில் வேலைக்கு ஆட்களை சேர்க்கவிருப்பதாக அவன் கேள்விப்பட்டான். அன்றைய தினமே அங்கு செல்ல வேண்டுமென அவன் அவசரமாகப் புறப்பட்டான். தனது நண்பன் அன்டெனியும் அவனோடு புறப்பட்டு, இருவருமாக அங்கு சென்றனர். காசல்ரீ அணை கட்டும் வேலையை ‘ஸ்கன்ஸ்கா அன் டப்லியூ பி’ என்ற நிறுவனம் இலங்கை அரசாங்கத்திடமிருந்து பொறுப்பேற்றிருந்தது. இதில் முக்கியமான பெரும் பதவிகளில் ‘சுவிடிஷ்காரர்களே’இருந்தனர். ‘பிலிப்பின்ஸ்’மற்றும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் ஏனைய வேலைகளுக்கு அமர்த்தப்பட்டிருந்தனர். சுவிடிஷ் பிரஜைகள் ‘சுவிடிஷ் கேம்ப்’ என்ற ஒரு வட்டத்துக்குள் அவர்களது குடும்பத்தினரோடு காசல்ரீ டேம் ஓரங்களில் அமைக்கப்பட்டிருந்த வீடுகளிலேயே வசித்தனர். இவர்கள் வசித்த இடம் பாதுகாக்கப்பட்ட இடமாக சுற்றிலும் கம்பி வேலியடிக்கப்பட்டு கேட்டுகள் போடப்பட்டிருந்தன. இதன் வாயிற் படிக்கருகிலேயே இந்த கம்பனிக்குச் சொந்தமான தலைமைக் காரியாலயம் இயங்கியது.

காசல்ரீக்குச் சென்ற கணேசனும் அன்டெனியும் அலுவலக கேட்டுக்கு அருகாமையில் சென்று நின்றனர். அன்று அங்கு சுமார் ஐம்பது பேர் வரையில் வேலை தேடி வந்து கேட்டுக்கு முன் கும்பலாக நின்று கொண்டிருந்தனர். அச்சமயம் வெள்ளை நிற கார் ஒன்று அங்கே வந்தது. ‘கேட் கீப்பர்’ ஓடிவந்து கேட்டை உயர்த்த, கார் உள்ளே சென்றது.

சிறிது நேரத்தில் காரிலிருந்து இறங்கி ஒருவன் வருகிறான். அவன் சுமார் ஆறு அடி உயரமானவன் தலைமுடியை கட்டையாக வெட்டி, காக்கி நிறத்திலான நீண்ட காற்சட்டை, வெள்ளை அரைக் கை சேட் ‘கம் பூட்ஸ்’அணிந்து கேட்டருகில் வந்தான். கணேசனும் அன்டனியும் முண்டியடித்துக் கொண்டு அவன் முன்னால் ஓடி நின்றனர். “இன்னக்கி நீங்கள் எல்லாம் போகலாம். இங்கு வேலை இல்லை. மீண்டும் ரெண்டு வாரம் சென்று வரலாம். இங்கிருந்து போய்விடுங்கள்” என்று அங்கிருந்தவர்களைப் நோக்கி ஆங்கில மொழியில் உரத்த குரலில் சத்தமிட்டுவிட்டு சென்று விட்டான்.

அங்கிருந்து எல்லோரும் சென்றனர். கணேசனும் அன்டெனியும் வேலை கிடைக்காமல் மனம் நொந்த நிலையில் பஸ் வண்டி ஒன்றில் ஏறி வீட்டை நோக்கிச் சென்றார்கள். இவர்கள் கேட்டடியில் நின்ற போது இவர்களை சத்தம் போட்டு அனுப்பியவன் ‘டோனிகர்’ என்ற சுவிடிஷ்காரன் என்றும் அவன்தான் ‘சுரங்க’ இன்ஜீனியராகவும் ஆட்களை வேலைகளுக்கு சேர்க்கும் பொறுப்புடன் இருந்ததாகவும் அங்கு வந்திருந்த ஏனையவர்கள் மூலம் தெரிந்து கொண்டனர் இருவரும்.

அடுத்த நாள் காலை கணேசன் வேறு ஒரு நபரை சந்திப்பதற்காக அட்டன் நகருக்குச் சென்றிருந்தான். அவனது வேலைகளை முடித்துக்கொண்டு அவன் அட்டன் புகையிரத பாலத்துக்குப் பக்கத்திலிருந்த சிறு கடையொன்றில் ‘பிளேன் டீ’ ஒன்றைக் குடிப்பதற்காகச் சென்றிருந்தான். பிளேண்டியைக் குடித்து விட்டு வெளியில் வரும்போது பக்கத்தில் வெள்ளை நிற கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன் உள்ளே இருந்தவன் வீதி ஓரத்திலிருந்த வழி காட்டி பெயர் பலகையை உற்று நோக்கிக் கொண்டிருந்தான்.

அவன் எங்கோ செல்வதற்காக வழியைத் தேடுகிறான் என்பதை உணர்ந்து கொண்ட கணேசன் அந்தக் காருக்குப் பக்கத்தில் ஓடிப் போய் பார்க்கிறான். அவன் கண்ட காட்சியை அவனாலேயே நம்ப முடியாதிருந்தது. ஆம்! அவன் கண்ட அந்த நபர்தான் முதல் நாள் காசல்ரீக்குப் போயிருந்த போது அவனையும் ஏனையவர்களையும் சத்த மிட்டுத் துரத்திய வெள்ளைக்காரன். “எதற்காக இங்கு வந்திருப்பான்?" என நினைத்த கணேசன், இன்று இவனிடம் எப்படியாவது நமது விசயத்தை சொல்லி இவனை நமக்குச் சாதகமாகப் பயன் படுத்திக் கொள்ள வேன்டும்” எனச் சிந்தித்தான்.

“நான் நீதிமன்றத்துக்குச் செல்ல வேண்டும் எந்த வழியில் செல்வது” என ஆங்கில மொழியில் கேட்டான் அந்த வெள்ளைக்காரன்.“சேர் நானும் நீதிமன்றத்துக்குத்தான் செல்கிறேன் நீங்கள் என்னோடு வாருங்கள் நான் உங்களை அங்குக் கூட்டிப் போய் விடுகிறேன்” எனப் பட்டென்று ஆங்கில மொழியில் பதில் கூறினான். டாக்டர் ஐயாவின் புதல்வர்களிடமிருந்து கற்றுக் கொண்ட ஆங்கில மொழி அல்லவா! விட்டு வைப்பானா கணேசன்.

நீதிமன்றத்திற்குச் சென்றதும் அவருக்குச் சரியான வழியைக் காண்பித்துவிட்டு அவர் மீண்டும் வரும் வரை காருக்குப் பக்கத்தில் காத்திருந்தான் கணேசன்.

தனது வழக்கை முடித்துக் கொண்டு அங்கு வந்த அந்த வெள்ளைக்காரன் “என்ன நீ இன்னும் போகவில்லையா? இங்கேயே இருக்கிறாயா?..நீ செய்த உதவிக்கு நன்றி” என்று கூறிவிட்டு காரில் ஏறுவதற்குத் தயாரானான்.

அந்த வெள்ளைக்காரனைத் தன் வசம் இழுக்க வேண்டும் என எத்தனை எத்தனையோ கற்பனைகளில் மூழ்கிப்போய் காத்திருந்த கணேசன், "பரவாயில்ல சேர் நான் நேத்து உங்களைக் கண்டு வேலை ஒன்றைப் பெற்றுக் கொள்ளலாம் என்று காசல்ரீக்கு வந்து, கேட்டடியில் நின்றேன். ஆனால், நீங்கள் அங்கிருந்து என்னைத் துரத்தி விட்டீர்கள் சேர்” என்று அவசர அவசரமாகப் பதில் சொன்னான். அப்போது கணேசனது முகத்தைப் பார்த்துப் புன்னகை புரிந்த அவன், “நீ நாளைக்கு என்னை ஒப்பீஸில வந்து பாரு” என்று சொல்லிவிட்டுக் காரில் ஏறி அங்கிருந்து பட்டென்று சென்று விட்டான்.

அந்த வெள்ளைக்காரர் சொன்னதைப்போலவே அங்குச் சென்று வேலையொன்றைப்பெற்றுக் ெகாண்ட கணேசன், நண்பன் அன்டெனியையும் தன்னுடன் வேலைக்குச் சேர்த்துக்ெகாண்டான். அங்குச் சிறிது காலம் பணியாற்றிவிட்டுக் கொழும்புக்குச் சென்று தொழிலில் சேர்ந்துகொண்டான். இவ்வாறான காலத்தில் டாக்டர் தோட்டத்திலிருந்து ஓய்வு பெற்றுத் தனது குடுப்பத்தினரோடு கொழும்புக்குச் சென்றார். இவர்கள் இங்கிருந்து செல்லும் போது பிரிவைத் தாங்கிக் கொள்ள முடியாத தோட்ட மக்கள் அழுது புலம்பி அவர்களை வழியனுப்பி வைத்தனர்.

தோட்டத்தை விட்டு கொழும்புக்குச் சென்று தொழில் செய்து கொண்டிருந்த கணேசன் சில காலத்துக்குப் பின் தனது சேவையிலிருந்து ஓய்வு பெற்றுக் கொண்டான். அவனுக்கு இப்போழுது எழுபது வயதாகிவிட்டது. தான் ஏற்கனவே வசித்த தோட்டத்தில் தனது நண்பன் ஒருவனது பேரனின் திருமண வைபவத்தில் கலந்து கொள்வதற்காக அந்தத் தோட்டத்துக்குச் சென்றான்.

அவன் சென்ற வழிகளில் தான் சிறுவனாக இருந்த போது டாக்டர் பங்களாவில் அவனும் அவனது நண்பர்களும் ஆங்கிலம் கற்றுக் கொண்ட அனுபவம்,நேர்முகப் பரீட்சைக்காகச் சென்ற இடம், அங்கு வைட் துரை தன்னைப் பார்த்து சிரித்து விட்டுச் சொன்னவை, அட்டனில் வைத்து அந்த சுவிடிஷ் வெள்ளைக்கார துரையை சந்தித்து சமாளித்தது, தான் அம்மா அப்பாவோடு தோட்டத்தில வசித்த வாழ்ந்த காலம், அந்த குருஸ் துரை, அவனது குதிரை, குதிரைப்பட்டி, அந்த அழகான தேயிலைத் தோட்டம், அங்கிருந்த மக்கள், உத்தியோகஸ்தர்கள் என்று எல்லோரையம் பற்றிய நினைவுகளும் அவனது மனக்கண் முன்னால் ஓடிக்கொண்டிருந்தன.

 

மாத்தளை ராம்

 

Comments