கடலில் தத்தளித்த எனது மகள்! | தினகரன் வாரமஞ்சரி

கடலில் தத்தளித்த எனது மகள்!

தொகுப்பு  பா. ஏகலைவன்

(சென்றவார தொடர்)

அதற்கு மேலே இரும்புக் கம்பிகளால் தடுக்கப்பட்டிருந்தது. முதலில் மாமியாரும் குழந்தையும் உள்ளே சென்றார்கள். அந்தப் பக்கம் ஒரு கம்பிவலைகளுக்கு அப்பால் மகனைக் கண்ட மாத்திரத்தில் என் மாமியார் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு கதறியழத் தொடங்கிவிட்டார்.

அதிகாரிகளைப் பார்த்து, ‘எப்படியாவது எம்புள்ளைய விட்டுடுங்கையா. அவனுக்கு இந்தக் கொலையில் ஒன்றும் தெரியாது அய்யா. ஊர்க்காரன்ங்கிறதால சிவராசன்கூட பழகினான் அய்யா’ என்று நடந்ததை எல்லாம் சொல்லி மார்பில் அடித்துக்கொண்டு ஒப்பாரி வைத்தார்.

அவருக்குக் கீழே குழந்தை மாமியின் காலைக் கட்டிப்பிடித்துக்கொண்டு, பாட்டி அழுகிறாளே என்று அவளும் அலறி அழுகிறாள். மறுபக்கம் அப்பாவின் குரலும் கேட்கிறது. ஆனால் முகம் தெரியவில்லை. ‘அப்பா என்னை பாருங்கோ, அப்பா, என்னைத் தூக்குங்கோ’, பாட்டீ என்னைத் தூக்குங்கோ, என்று திரும்பத் திரும்பக் கத்திக் கதறியபடி குதிக்கிறது குழந்தை.

எம்பி எம்பிக் குதிக்கும் போது குழந்தையின் இரண்டு கைகள் மட்டுமே கணவருக்குத் தெரிகிறது. முகம் தெரியவில்லை. உயரமான சுவர் தடுத்துக் கொண்டிருக்கிறது. அவர் அம்மாவைப் பார்த்து, “அம்மா, முதலில் குழந்தையைத் தூக்குங்கோ’ என்று சத்தம் போடுகிறார். அது மாமியின் காதில் விழவேயில்லை. அவர் அதிகாரிகளிடம் கெஞ்சி அழுவதிலேயே குறியாக இருக்கிறார்.

பாவம் மாமிக்கு என்ன தெரியும்? தன் பிள்ளை தூக்கில் தொங்கப்பேகிறானே என்ற பதற்றம். அதனால் சுற்றி நடப்பது ஏதும் தெரியவில்லை.

பக்கத்தில் உள்ள குழந்தை தொடர்ந்து எம்பிக் குதித்தபடி கத்திக்கொண்டே இருந்தாள். குழந்தையின் தவிப்பைப் பார்த்து நிதானமிழந்து ஒரு கட்டத்தில் சட்டெனக் கோபப்பட்ட கணவர், சற்றுக் கடுமையாகச் சத்தம்போட்டு ‘அம்மா என்ன பண்றீங்க. முதலில் குழந்தையைத் தூக்குங்க. பிள்ளையைத் தூக்கிக் காட்டுங்க’ என்று கத்தினார்.

அப்போதுதான் மாமியார் நிதானத்திற்கு வந்தார். பிள்ளையை மேலே தூக்கிக் காட்டினார். அழுதழுது முகம் சிவந்து போயிருந்தது. இந்தப் பக்கம் பாட்டி கத்தி அழுகிறாள். அந்தப் பக்கம் அப்பா அழுகிறார். என்னவோ ஏதோவென்று பிள்ளையும் சேர்ந்து கதறிவிட்டிருந்தது. ஒரு வழியாகச் சமாதானம் சொல்லி ஆசுவாசப்படுத்தினார்கள். அங்கிருந்த அதிகாரிகளும் குழந்தையின் நிலையை மனதில் வைத்து, ‘அப்பாவுக்கு ஒண்ணுமில்லைம்மா’ என்று சமாதானம் சொல்லி மாற்றினார்கள். மகனின் நிலையை நினைத்து மாமி வலியோடு கத்தி ஒப்பாரி வைத்தார். மகளின் நிலையைப் பார்த்துத் தந்தை வலியோடு கதறித் தீர்க்கிறார்.

நினைத்துத் தந்தை அழுத துயரமும் அங்கேயிருந்த இரும்புக் கம்பிவலைகளை ஒருசேரக் கரைத்து கொண்டிருந்தது.

பிறகு, மகளிர் சிறையில் இருந்த என்னைச் சந்திக்க வந்தபோதும் அதே நிலைதான். என்னைப் பார்த்ததுமே மாமி மார்பில் அடித்துக்கொண்டு அழுதார். கீழே இருந்த பிள்ளையின் முகத்தைப் பார்க்க முடியவில்லை. குழந்தையின் கைமட்டுமே எனக்குத் தெரிகிறது. குழந்தையைத் தூக்கிக்காட்டச் சொல்லி மாமியிடம் கெஞ்சுகிறேன். அவர் அழுவதை நிறுத்திவிட்டுப் பிள்ளைத் தூக்கிக்காட்டியபோது அப்படியே உடைந்து அழுது கம்பியைப் பிடித்தபடி சோர்ந்து விழுந்தேன். என்னவொரு கொடுமையான தருணமது....?

மரண தண்டனை அறிவித்த கைதிகளுக்குச் சிறையின் விதிமுறைகள் கடுமையாக இருக்கும். குழந்தையைத் தூக்கித்தழுவி முத்தமிட்டுக்கொள்ள முடியவில்லை. ஆரத்தழுவி அணைத்துக் கொள்ள முடியவில்லை. விதிமுறைகள் அப்படித் தடுத்துவிட்டது.

அதன் பிறகு என் மாமியாரிடம், ‘இங்கே இருக்க வேண்டாம். எனக்கு எது ஆனாலும் பரவாயில்லை. குழந்தையை அழைத்துக்கொண்டு நீங்கள் இலங்கைக்கே போயிவிடுங்கள்’ என்று கணவர் அழுத்தம் கொடுத்து வலியுறுத்தினார். ஆனால் என் மாமியார் இங்கிருந்து இலங்கை திரும்புவது, அதுவும் ஒரு குழந்தையோடு திரும்புவது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. அந்தக் குழந்தை யார்? இந்தியப் பிரஜையா, இலங்கையைச் சேர்ந்த குழந்தையா? பேரப்பிள்ள என்றால் என்ன ஆதாரம் என்று அடுக்கடுக்கான கேள்விகள், அவரைத் திக்குத்தெரியாமல் அலையவிட்டது.

மாநில அரசு அதிகாரிகளிடம் போனால் மத்திய அரசு அதிகாரிகளைக் கை நீட்டினார்கள். மத்திய அரசு அதிகாரிகளிடம் சென்றால், ‘மாநில அரசிடம்’ போக வேண்டும் என்று திருப்பி விட்டார்கள். கையில் அந்தக் குழந்தையை வைத்துக்கொண்டு இங்கும் அங்குமாக அலைந்து கொண்டிருந்திருக்கிறார்.

இப்போது இருப்பதைப் போன்று இளைஞர்களின் தன்னெழுச்சியான ஆதரவு, புரிதல் எல்லாம் அப்போது இருக்கவில்லை. ஒரு இறுக்கமான சூழ்நிலையே இருந்தது. அதனால் உதவிக்கு யாரும் வர முடியவில்லை. கடைசியாக வழக்கறிஞர் இளங்கோவன், ஆறுமுகம் என்ற உணர்வாளர் தம்பியின் உதவியோடு சென்னையில் இருந்த இலங்கை துணைத் தூதரக அதிகாரிகளையே நேரில் அணுகினார் மாமி. குழந்தையின் கண்ணீர்க் கதையைக் கேட்டு இரக்கப்பட்ட இலங்கைத் தூதரக அதிகாரிகள், உடனடியாக எமர்ஜென்ஸி விசாவைக் கொடுத்து இலங்கைக்குப் போக அனுமதித்தார்கள். இப்படி மோசமான அலைச்சலுக்குப் பிறகுதான் இலங்கையில் உள்ள சொந்த ஊர் ‘பளை’க்கு போய்ச் சேர்ந்தார்கள். அங்கேயும் ஏகப்பட்ட நெருக்கடி. இன்னாருடைய குழந்தை என்று வெளியில் சொல்லிக்கொள்ள முடியாது. இலங்கை பொலிஸ் ஒரு பக்கம், மற்ற போட்டி இயக்கங்கள் ஒரு பக்கம் என நெருக்கடி கொடுக்கும். பாதுகாப்புக் கருதி, வெளியில் தெரியாதபடிதான் வளர்க்க வேண்டும். ஏதேதோ பொய்களைக் கூறி சொந்த ஊர் பள்ளியிலேயே சேர்த்து விட்டார்கள். குழந்தை இந்தியாவா, இலங்கையைச் சேர்ந்தவளா என்ற சர்ச்சை ஒருபக்கம் ஓடிக் கொண்டிருந்தது.

இந்த நிலையில்தான் 2001ஆம் ஆண்டு ஆனையிறவில் அமைந்திருந்த ராணுவ முகாம் மீது புலிகளின் தாக்குதல் போர் தீவிரமாகியிருந்தது. குண்டுவீச்சுகளும் வெடிச்சத்தமும் அந்த ஊர் மக்களைத் திக்குமுக்காட வைத்தது. என் கணவர் பிறந்து வளர்ந்த அந்த ஊர் குண்டு மழையில் நனைந்தது. அந்த ஊர் முழுக்கப் பதற்றம்தான். போட்டது போட்டபடியே விட்டுவிட்டுக் கட்டிய துணிகளோடு குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு அகதிகளைப்போல் தப்பி ஓடி யாழ்ப்பாணத்தில் தஞ்சமடைந்தார்கள்.

அப்போதுதான் குடும்ப ஆவணங்கள், பத்திரங்கள், மற்றும் நகைகள் அனைத்தையும் விட்டுவிட்டு ஓடினார்கள். அவற்றை எடுத்துக்கொள்ளக்கூட அவகாசம் இல்லை. குழந்தைகளைக் காப்பாற்றினால் போதும் என்று தூக்கிக் கொண்டு யாழ்ப்பாணம் ஓடினார்கள். யாழ்ப்பாணத்தில் நிரந்தரமாகத் தங்கும் வசதி இல்லை. பள்ளிக்கூடங்களில் சிறிது காலம் தங்கியிருந்தார்கள். அந்த நேரத்தில் சுவிஸில் இருந்த கணவரின் தம்பி ஐங்கரன் பட்டினி கிடந்து சேர்த்து வைத்திருந்த சிறிய தொகையை அனுப்பி வைத்திருக்கிறார். அதில் தான் சின்னதாக ஒரு வாடகை வீடு பிடித்து அங்கே தங்கிக் கொண்டு ஒரு வேளைக்கு மட்டும் சமைத்து சாப்பிட்டுக்கொண்டு காலத்தைக் கழித்தார்கள். என் பிள்ளையும் அப்படியான வறுமையில்தான் வளர்ந்தாள்.

ஒவ்வொரு நாளையும் ஒரு யுகமாய்க் கழித்து அங்கேயே பத்தாம் வகுப்பு வரையிலும் மகள் படித்து முடித்தாள். ‘என்ன கஷ்டமென்றாலும் படிப்பை மட்டும் விட்டுவிடாதே அதுதான் உன்னையும் உன்னைச் சுற்றியுள்ளவர்களையும் காப்பாற்றப் போகும் மருந்து’ என்று என் கணவர் வலியுறுத்திக் கடிதம் எழுதியபடியே இருந்தார்.

எப்போது தூக்கிலிடுவார்கள் என ஒவ்வொரு நாளும் செத்துப் பிழைத்துக் கொண்டிருந்த அந்த நாட்களில் “நாங்கள் இறந்து போனாலும் கவலைப்படாதே. படித்து ஒரு உயர்ந்த நிலைக்குப் போய்விடு. அதுதான் உன்னைக் காப்பாற்றும். சமூகத்தில் மதிப்பு மிக்கவளாக வைத்திருக்கும்’ எனத் தொடர்ந்து நானும் கடிதம் எழுதி வலியுறுத்தியபடியே இருந்தேன்.

மகளே, எங்கள் வாழ்க்கை பறிக்கப்பட்டு விட்டது. இனி திரும்பி வராது. அவ்வளவுதான். அந்த வாழ்க்கையை உன் மூலமாக வாழவே நாங்கள் ஆசைப்படுகிறோம். நீ சிறப்பாக வாழ்ந்தால் அதுவே எங்களுக்கான எல்லா வேதனைகளையும் போக்கிவிடும். நாங்கள் இழந்த வாழ்க்கையை இனி உன் வாழ்வு மூலமாகத்தான் மீட்க விரும்புகிறோம் என்றெல்லாம் நானும் கணவரும் மாறி மாறிக் கடிதங்கள் எழுதி வந்தோம்.

அந்த வலியுறுத்தல் எல்லாம் என் மகளை ரொம்ப தூரத்திற்குக் கொண்டுபோய் நிறுத்திவிடும் என அறியவில்லை. அப்போது...

கடலில் தத்தளித்த என் மகள்!

யாழ்ப்பாணத்தில் இவர்களின் குழந்தை என்று வெளி உலகிற்குத் தெரியாமலேயே என் மகள் பத்தாம் வகுப்பு வரை படித்து முடித்தாள்.

நாங்கள் கைதாகும் போதெல்லாம் என் கணவரின் குடும்பம் ரொம்பவே வறுமையில் இருந்திருக்கிறார்கள். தினமும் ஒருவேளை, இரு வேளைச் சாப்பாடு என்றுதான் நாட்கள் ஓடியிருக்கிறது. ஒரு அக்காவைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் என் கணவருக்கு இளையவர்கள்தான். அப்போது அவர்களுக்கெல்லாம் சிறிய வயதுதான். கணவர் குடும்பத்தை விட்டுப் பிரிந்து வெளிநாடு போவதற்காகச் சென்னை வந்து விட்ட பிறகு அவரது தம்பிக்கு ராணுவத்தால் பிரச்சினை வந்தது. மூத்த அண்ணனைக் கேட்டு எப்படி என் கணவரைச் சித்திரவதை செய்தார்களோ, விரட்டினார்களோ, அப்படி அவரது ஐங்கரன் தம்பியையும் விரட்டத் தொடங்கினார்கள்.

1988ஆம் ஆண்டில் தம்பி ஐங்கரனையும் தாத்தா சின்னையாவையும் பிடித்துக்கொண்டு போனார்கள்.

“கருவில் இருந்தபோதே ஒவ்வொரு சிறைச்சாலையாக அகதி வாழ்க்கை. பிறந்ததில் இருந்தே இடம்விட்டு இடம் மாறி, ஊர்விட்டு ஊர் ஓடி, நாடுவிட்டு நாடு தாண்டியும் அகதி வாழ்க்கைதான்”

 

 

Comments