உண்டு உண்டு என்று நம்பி...! | தினகரன் வாரமஞ்சரி

உண்டு உண்டு என்று நம்பி...!

யாரையாவது ஒரு பணிக்குக் கட்டளையிடுவதாயிருந்தால், அவரை மகிழ்ச்சியோடு அனுப்ப வேண்டும் என்று சொல்வார்கள் பெரியவர்கள். அப்போதுதான் அந்நபர் கொடுத்த வேலையைச் சரிவரச் செய்துகொண்டு வருவாராம். மகிழ்ச்சியோடு சென்றால்தான் மகிழ்ச்சியுடன் திரும்பி வரலாம். அநேகர் கடிந்து கட்டளையிடுவதைப் பார்த்திருக்கிறோம்; பார்த்துக்ெகாண்டிருக்கிறோம்! அதனால், பெறுபேறு பூஜ்ஜியமாகத்தான் இருக்கும்.

எனவே, எந்தச் செயலையும் மகிழ்ச்சியுடன் மட்டுமல்ல நம்பிக்ைகயுடன் ஆரம்பித்தால்தான் அஃது உரிய பலனைத்தரும். சிலபேர் வாயைத் திறந்தாலே அபசகுனமாய்; எதிர்மறையாய் எதையாவது சொல்வார்கள். அவர்கள் சொன்னதைப்போலவே சிலவேளை நடந்துவிடும். சிலவேளை என்பதைவிடப் பெரும்பாலும் நடக்கும். அப்படிச் சொன்னது பலித்ததும், அவனுக்குக் கருநாக்கு என்று சொல்லக்கேட்டிருக்கின்றோம். கருநாக்கெல்லாம் ஒன்றும் கிடையாது. சொன்னால் நடக்கும், அவ்வளவுதான். அதுதான் தத்துவம்; சத்தியம்.

எதையாவது எதிர்மறையாகச் சொன்னது நடந்ததும், பார்த்தீங்களா, நான் சொன்னேன்தானே! நீங்கள் கேட்கலயே! என்பார்கள். அதனால்தான், எடுத்த எடுப்பில் வாயிலிருந்து வரும் சொற்களை நேர்மறையானதாக வரும்படி பார்த்துக்ெகாள்ள வேண்டும் என்கிறார் நண்பர் செல்வா. அவர் ஒரு முறை யாழ்ப்பாணம் செல்லும்போது, அலுவலகத்தில் உள்ள ஒரு நண்பர் சொல்லியிருக்கிறார், "எதற்கும் தயாராகப் போங்க, ரயில் ஏதும் அநுராதபுரத்திலை நிற்க வேண்டி வந்தால், சிரமப்பட வேண்டி வரும்" என்று. அவர் சொன்னதைப்போலவே, ரயில் அநுராதபுரத்தில் பழுதாகி நின்று; பெரும் சிரமத்தை அனுபவித்திருக்கிறார். அன்றிலிருந்து எங்காவது போவதென்றால், எவரிடமும் எதுவும் சொல்லமாட்டார். குறிப்பாக அந்த நண்பரிடம்.

இவ்வாறான பின்விளைவுகள் வரும் என்பதால்தான், எதையாவது செய்யும் முன்னர் யாரிடமும் சொல்லக்கூடாது என்பார்கள் பெரியவர்கள். நாங்கள் அதனை மூட நம்பிக்ைக என்று சொல்வோம். மூட நம்பிக்ைக எல்லாம் இல்லை. சொற்களின் அதிர்வினால் ஏற்படுகிற விளைவுகள் அவை!

ஓரிடத்திற்கு ஒருவரைச் சந்திக்கச் சென்றால்கூட, ஐயோ இன்று அவர் இருக்கிறாரோ என்னவோ! என்று சொல்லிக்ெகாண்டு போனால், அவர் நிச்சயம் இருக்கமாட்டார். இதுதான் சொல்லின் சக்தி என்கிறார்கள் அனுபவசாலிகள். நமது சொல்லை நம் செயலைத் தீர்மானிக்கும் சக்தி.

அதனால்தான் கவியரசர் கண்ணதாசன்,

"உண்டு உண்டு என்று நம்பி

காலை எடு

இங்கு உன்னை விட்டால் பூமியேது

கவலை விடு

உண்டு உண்டு என்று நம்பி

காலை எடு

இங்கு உன்னை விட்டால் பூமியேது

கவலை விடு

இரண்டில் ஒன்று பார்ப்பதற்குத்

தோளை நிமிர்த்து

இரண்டில் ஒன்று பார்ப்பதற்குத்

தோளை நிமிர்த்து

அதில் நீதி உன்னைத் தேடி வரும்

மாலை தொடுத்து

ஏய்.. நெஞ்சம் உண்டு நேர்மை

உண்டு ஓடுராஜா

நேரம் வரும் காத்திருந்து

பாரு ராஜா" என்று எழுதுகிறார்.

சிலருக்கு எப்போது பார்த்தாலும் இல்லை... இல்லை தான். எதற்கெடுத்தாலும் இல்லையே.. அது சரியான கஷ்டமே என்பார்கள். எந்த வேலையைச் சொன்னாலும் கஷ்டம் என்றுதான் சொல்வார்கள்.

இன்னும் சிலரைப் பாருங்கள் சதா ஏதாவது பயனற்ற சொற்களையும் கதைகளையும் கூறிக்ெகாண்டு வம்பளந்துகொண்டிருப்பார்கள். அவர்களுக்குத் தொட்தெல்லாம் பகிடியாகத்தான் இருக்கும். எந்த விடயத்தைச் சொன்னாலும், அதில் ஒரு பகிடியைச் சொல்வார்கள். றெடிமேட்டாக பகிடியை வாய் நுனியில் வைத்திருப்பார்கள். அப்படியெல்லாம் எல்லாம் பேசக்கூடாது என்றால், கேட்கமாட்டார்கள்.

மேலும் சிலரைப் பாருங்கள் அவர்களின் வாயிலிருந்து சொல் வருவதற்குத் தவம் இருக்க வேண்டும். இன்னும் சிலர் கதைத்தால் நிறுத்தமாட்டார்கள். நாம் ஒன்றைச் சொல்லி முடிப்பதற்குள் அவர்கள் பத்தைச் சொல்லி விடுவார்கள். இதில் பெண்கள்தான் அதிகம் என்கிறார் நண்பர். எங்களுக்குத் தெரிந்த ஓர் அறிவிப்பாளர் இருக்கிறார். அவர் யாரையும் பேச விடமாட்டார். அவர்தான் பேசுவார். ஏனடா இவனிடம் வாயைக் கொடுத்தோம் என்றிருக்கும். அவருக்கு எல்லாம் தெரியும், ஆனால், ஒன்றும் தெரியாது!

பயனில பல்லார்முன் சொல்லல் நயனில

நட்டார்கண் செய்தலின் தீது

என்கிறார் வள்ளுவர்.

பயன் விளைவிக்காத சொற்களை ஒருவன் பேசுவானாகில், அவன் அறிவுடையோரால் வெறுக்கப்படுவான். ஏனெனில், பயனற்ற சொற்களைப் பேசுபவன் தன்னுடைய நேரத்தையும், ஆற்றலையும் வீணடிப்பதோடு மற்றவர்களுடைய நேரத்தையும் ஆற்றலையுங்கூட வீணடிக்கிறான். இதனால் எல்லோரும் அவனை இகழ்வர்.சிலருக்குத் தாம் இகழப்படுவது அவர்களுக்ேக தெரியாமல், வள வளா என்று கதைத்துக்ெகாண்டிருப்பார்கள். ஆனால், அவர்களின் சம்பாஷணையில் எந்தப் பயனும் இராது.

ஆகவே, வீணான சொற்பிரயோகங்களைத் தவிர்ப்பதுடன், எந்தவேளையிலும் நேர்மறையான சொற்களைப் பயன்படுத்துவதோடு, எங்கு சென்றாலும் உண்டு உண்டு என்று நம்பி காலை எடுத்து வைப்போம்.

பரீட்சையில் தோற்றுவிடக்கூடாது என்பதைவிட, வெற்றிபெற்றுவிட வேண்டும் எனச் சிந்திப்பது சிறந்த பலனைத் தரும் என்கிறார்கள் ஞானிகள்!

Comments