அர்ப்பணிப்போடு கற்பித்தால் ஆசிரியர்கள் அதன் பலன்களை அனுபவிக்கலாம் | தினகரன் வாரமஞ்சரி

அர்ப்பணிப்போடு கற்பித்தால் ஆசிரியர்கள் அதன் பலன்களை அனுபவிக்கலாம்

கிழக்கு மாகாண புதிய  கல்விப்பணிப்பாளர் மன்சூர்

(கடந்தவாரத் தொடர்)

இன்று உலகத்தோடு போட்டிபோட வேண்டிய கட்டாயத்தில் எமது மாணவர்கள் உள்ளனர். எனவே, அதற்கேற்ப கிழக்கு மாகாண மாணவர்களையும் தயார்படுத்த வேண்டும் என்கிறார் கிழக்கு மாகாணத்திற்குப் புதிதாக நியமிக்கப்பட்ட மாகாணக் கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர்.

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகமவின் அறிவுறுத்தலுக்கமைவாக கடந்த புதனன்று பதவியேற்ற புதிய மாகாணக் கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூரை பிரத்தியேகமாக செவ்வி கண்டோம்.

கேள்வி: கல்வியில் வரவர போட்டித்தன்மை அதிகரிக்கின்றதே. இதனை கிழக்குமாகாணம் எவ்வாறு முகங்கொள்ளப்போகின்றது?

பதில்: சரியான கேள்வி. நாம் பல்கலைக்கழங்களில் இருக்கும்போது எமது அறை நண்பராக இலங்கையர் ஒருவர் இருந்திருப்பார். ஆனால் எங்கள் பிள்ளைகளின் வகுப்பு நண்பராக வெளிநாட்டுப்பிள்ளைகள் இருக்கப்போகின்றனர். வருங்கால பிள்ளையொன்றின் நண்பராக ஒரு அமெரிக்கனோ அல்லது யப்பான்காரனோ இருக்கலாம். எனவே உலகத்தோடு போட்டிபோட்டு கல்விகற்க வேண்டிய காலகட்டமிது. பிள்ளைகளை முறையாக கற்பிக்கவேண்டிய கட்டாயத்திலிருக்கின்றோம்.

கேள்வி: மாணவர்களை இலகுமுறையில் முறையாக முன்னேற்ற உங்களது ஆலோசனை என்ன?

பதில்: உண்மையில் ஆசிரியர்கள் பாடநூல்களையும் ஆசிரியர் அறிவுரை வழிகாட்டி நூலையும் முறையாகச் சரியாக நடைமுறைப்படுத்தினால் மாணவர்களின் கல்வி உச்சத்திற்குச் செல்லும். அதனூடாக சமுதாயம் முன்னேற்றம் காணும். உதாரணமாக தரம் 3 ஆங்கில பாட நூலையும் அறிவுரைப்பு வழிகாட்டியையும் பாருங்கள். எத்துணை நிபுணத்துவம் வாய்ந்தவர்களால் அனுபவசாலிகளால் தயாரிக்கப்பட்டவை அவை. எனவே, இந்த இருநூல்களையும் நடைமுறைப்படுத்துங்கள். மாணவன் தானாக முன்னேறுவான். சமுதாயமும் முன்னேறும்.

கேள்வி: ஆசிரியத்துவம் பற்றி என்ன கூற விளைகிறீர்கள்?

பதில்: ஆசிரியத்துவம் வங்கிச் சேமிப்புப் போன்றது. முறையாகக் கற்பித்தால் பிற்காலத்தில் அதன் அறுவடை அபரிமிதமாகவிருக்கும். அதனாலடையும் மகிழ்ச்சிக்கு எல்லையேயில்லை. அர்ப்பணிப்போடு கற்பித்தால் அதன் பலன் இப்போது அல்ல பிற்காலத்தில் நிச்சயமாகக் கிடைக்கும்.

கேள்வி: கிழக்கிலுள்ள 17 கல்வி வலயங்களும் தங்கள் பரிபாலனத்தின்கீழ் வருகின்றன. அங்கு நடைபெறும் வெளிவாரி மதிப்பீடுகள் வினைத்திறன்மிக்கவை என எண்ணுகிறீர்களா?

பதில்: நல்ல கேள்வி. மதிப்பீட்டுக்குரிய கருவிகள் நுட்பங்கள் எல்லாம் நிபுணர்களால் தயாரிக்கப்பட்டவையாகும். ஆனால் அதனை அமுல்படுத்துகின்றமுறையில்தான் அதன் வினைத்திறன் தங்கியுள்ளது. உதாரணமாக ஒரு பாடசாலைக்கு 58 வீத புள்ளி வழங்கப்படுகின்றது என்றால் அத்தோடு நாம் நிறுத்திவிடுகின்றோம். உண்மையில் மீதி 42வீத புள்ளிக்கு என்ன நடந்தது? என்று ஆராய்ந்து அதனை எவ்வாறு குறைப்பது என்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்கு நல்ல சிந்தனையுடன் கூடிய பயணம் தேவை. நேரம் வழங்கி அவற்றை படிப்படியாக சீர்செய்தால் பலன்கிட்டும். மாணவரை மையப்படுத்தியதாக செயற்பாடுகள் அமையவேண்டும்.

கேள்வி: பாடசாலைகளில் கைவிரல் பதிவு இயந்திர நடைமுறை இருப்பதால் நேரகாலத்தோடு பாடசாலைக்குச் செல்ல வேண்டும் என்ற அவசரத்தில் ஆசிரியர்கள் விபத்துக்குள்ளாகிவருவதாகவும் இது பின்தங்கிய பாடசாலைகளுக்கு பொருந்தாது என்று பலரும் குறைகூறிவருகின்றனரே. அதுதொடர்பாக தங்களது கருத்து என்ன?

பதில்: அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் இன்றில்லாவிடினும் அதனை நாளை சென்று முடித்துவிட முடியும். அப்படி கற்பித்தலை செய்யமுடியாது. தினமும் விபத்துக்கள் நடக்கின்றன என்பதற்காக யாராவது வாகனங்களில்செல்வதை தவிர்க்கிறார்களா? அல்லது வீதிகளை மூடிவிடுகின்றனரா? மின்சாரத்தால் தீவிபத்து ஏற்படுகின்றதென்றால் மின்சாரத்தை பாவிக்காமல் விடுகின்றோமா? ரயில் விபத்து நடக்கிறதென்பதற்காக ரயில் பயணத்தை தவிர்க்கின்றோமா?ஆசிரியர்கள் பிந்திவருவது நல்ல விசயமா? அது முறையா? அது மாணவர்களுக்குச் செய்யும் துரோகமில்லையா? பாடசாலைக்கு நேரத்திற்குச் செல்வது கடமையில்லையா? ஏனைய மாகாணத்தில் இல்லையென்பதற்காக நாமும் அப்படி இருக்கவேண்டுமா? அண்மையில் ரிதிதென்னை பாடசாலையொன்றுக்குச் சென்றிருந்தேன். அங்குள்ள ஆசிரியர்கள் சாப்பாடு கட்டிவந்திருந்தார்கள். நேரத்துக்கு வரவேண்டுமென்பதால் தினமும் அவர்கள் அப்படித்தான் வருகின்றார்களாம். அது எப்படியிருக்கு?

கேள்வி: சில வலயங்களில் பாடரீதியாக உதவிக்கல்விப் பணிப்பாளர்கள் அசிரியஆலோசகர்கள் தட்டுப்பாடு நிலவுவதாகக் கூறப்படுகின்றதே. அதை நிரப்ப நடவடிக்கை எடுப்பீர்களா?

பதில்: நிச்சயமாக. மாகாணக் கல்வி அலுவலகத்திலேகூட தமிழுக்கு வரலாற்றுக்கு இன்றும் உதவிக்கல்விப் பணிப்பாளர் இல்லை. இந்நிலை சில வலயங்களிலும் உண்டு. எனவே மாகாண மற்றும் வலயக் கல்விக்காரியாலயங்களில் நிலவும் கல்விசார் உத்தியோகத்தர்கள் தட்டுப்பாட்டை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். அப்போதுதான் கல்வி அபிவிருத்தி பற்றிக் கதைக்கமுடியும்.

கேள்வி: அனைத்து வலயங்களில் பல்லாண்டு காலமாக கடமை நிறைவேற்று உதவிக் கல்விப்பணிப்பாளர்களாக பலர் சீரிய சேவையாற்றிவருகின்றனர். இந்தநிலையில் புதிதாக இ.க.நி.சேவையில் தெரிவாகியவர்களும் நியமிக்கப்படுகிறார்கள். இதனை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

பதில்: அவர்கள் ஒன்றும் இயந்திரமல்ல. மனிதர்களோடு உறவாடியவர்கள். அவர்களது அனுபவத்தை இலகுவாக முடித்துக்கொள்ளமுடியாது. அவர்களை பாடசாலைக்கு அனுப்புவதும் கஷ்டம். எனவே இருதரப்பினரும் மனிதாபிமான அடிப்படையில் நோக்கப்படவேண்டியவர்கள்.

கேள்வி: கல்வித்துறையில் 3 கனதியான நூல்களை வெளியிட்டுள்ளீர்கள். மரபுரீதியான கற்பித்தலைவிட ஏதாவது முறைகளை உட்புகுத்தும் எண்ணமுண்டா?

பதில்: கற்பித்தல் உலகில் சுமார் 40முறைகள் உள்ளன. எனவே, ஆசிரியர்கள் பரவலாக பாடத்திற்கேற்ப முறைகளை பயன்படுத்தவேண்டும்.பாடப்பரப்பு கூடுதலாகவுள்ள வரலாறு போன்ற பாடங்களைக் கற்பித்தலில் இரட்டைப்பதிவுமுறையை பிரயோகிக்க ஊக்குவிக்கப்படும். இது அனைத்துப்பாடங்களுக்கும் அல்ல. உயர்தரத்திலும் உயிரியல் பாடங்களுக்குப் பொருந்தும். அது தவிர இன்னும் பாரம்பரிய சோக் அன்ட் ரோல்க் முறை நடைமுறையிலிருக்க தேவையானபோது பிஸ்வோல் முறைமையெல்லாம் அறிமுகப்படுத்தப்படும்.

கேள்வி: பல ஆசிரியர்கள் தாம் 10மாத கால கடனுக்கு விண்ணப்பித்துவிட்டு காத்திருந்து ஏமாறுவதாக கூறுகின்றார்களே?

பதில்: இதற்கென வலயங்களில் ஒரு முன்னுரிமைப்பட்டியல் தயாரிப்பார்கள். அதற்குள்ளும் ஏதாவது மருத்துவம் என அவசர தேவை எழுந்தால் அதற்கு முன்னுரிமை வழங்குவது மனிதாபிமானம்தானே.

கேள்வி: ஆசிரியர்களின் ஏன் அதிகாரிகளின் சம்பள அதிகரிப்பை வழங்குவதில் பொடுபோக்குத்தனம் சில அலுவலகங்களில் நிலவுவதாகக் கூறப்படுகின்றதே. ஆவணங்களை தொலைத்துவிட்டு அதனை மீண்டும் ஆசிரியர்களிடம் கேட்பது முறையா?

பதில்: இருக்கலாம். ஆனால் மூதூர் வலயத்திற்குச்சென்று பார்த்தால் இதற்கு பதில் கிடைக்கும். அதாவது ஒவ்வொரு அலுவலகமும் உற்பத்தித்திறன் விருதுக்காக தங்களை வாண்மைப்படுத்தும்போது இக்குறைபாடு நிலவாது. புதியவர்கள் வரும்போது அதற்கான பயிற்சியை வழங்கவேண்டும்.

கேள்வி: கிழக்கில் ஆசிரியர் வெற்றிடம் நிலவுகின்றதா?

பதில்: ஏனில்லை. சில பாடங்களில் குறிப்பாக கணிதப்பாடத்திற்கு சங்கீத பாடத்திற்கு தமிழ்ப்பாடத்திற்கு சில வலயங்களில் தட்டுப்பாடு நிலவுகின்றது. ஏன் பட்டிருப்பு வலயத்தில் இந்துசமய பாடத்திற்கு ஆசிரியர் தட்டுப்பாடு நிலவுகின்றதை அறிவீர்களா? அதேவேளை சில பாடங்களுக்கு ஆசிரியர்கள் அளவுக்கு அதிகமாக இருக்கலாம். இன்னமும் நான் அதனைக் கையாளவில்லை. வெகுவிரைவில் சரியான எண்ணிக்ைகயைச் சொல்லமுடியும்.

கேள்வி: முன்பொரு காலகட்டத்தில் ஆசிரியர்கள் அடிமாடுகள் போன்று தூர இடங்களுக்கு இடமாற்றப்பட்டார்கள். பல குடும்பங்கள் பிரிந்தன. நியாயம் கேட்க குழந்தைகளுடன் மாகாண கல்வி பணிமனைக்கும் அமைச்சுக்கும் அலைந்தனர். அதற்குள் சிலருக்கு மாற்றம். செல்வாக்கில்லாத பலர் அலைந்தனர். அப்படிப்பட்ட துர்நிலைமை மீண்டும் ஏற்படுமா?

பதில்: அப்படிப்பட்ட மனநிலையில் ஆசிரியர்கள் கற்பிப்பார்கள் என எதிர்பார்க்கமுடியாது. 2007/7 இடமாற்றக்கொள்கைத் திட்டத்தின்படி மாணவர் நலன்களை மையப்படுத்தி இடமாற்றங்கள் இடம்பெற வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது. கிழக்கிற்கான ஆசிரியர் இடமாற்றக் கொள்கை அமுலுக்கு வரும்பட்சத்தில் எந்தக் குழறுபடியும் நடக்க வாய்ப்பிருக்காது. எதையும் வெளிப்படைத்தன்மையுடன் செய்தால் சந்தேகங்களுக்கு இடமிருக்காது என எண்ணுகிறேன்.

வி.ரி.சகாதேவராஜா   
 

Comments