'இளையநிலா' திரைப்படம் என்னிடம்தான் இருக்கின்றது என்றார் எஸ்.எஸ். தம்பு | தினகரன் வாரமஞ்சரி

'இளையநிலா' திரைப்படம் என்னிடம்தான் இருக்கின்றது என்றார் எஸ்.எஸ். தம்பு

யாழ்ப்பாணத்தில் புகழ் பெற்ற நாடகமாக விளங்கிய ‘அடங்காப் பிடாரி’ நாடகத்தில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்த, அராலியூர் புவனேந்திரன், 'வெண் சங்கு' திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி நடித்துக் கொண்டிருந்தார். வெண் சங்கு திரைப்படம் பாதி வளர்ந்துக் கொண்டிருந்த போது, புவனேந்திரன் தனக்கு மேலதிகமாக பணம் தந்தால் தான் தொடர்நது நடிப்பேன் என அடம்பிடித்து நடிக்க மறுத்து விட்டார்.

ஏற்கனவே டப்ளியூ. எம். எஸ். தம்பு தென் இந்தியாவில் 'வைரமாலை' போன்ற திரைப்படங்களை தயாரித்தவர். அதனால் அராலியூர் புவனேந்திரனின் வீம்பு அவரிடம் பலிக்கவில்லை.

திரைக்கதையில் வில்லன் கதாபாத்திரத்தை, கதாநாயகன் கதாபத்திரமாக மாற்றியமைத்து, அதில் வில்லனாக நடித்துக் கொண்டிருந்த லடிஸ் வீரமணியை கதாநாயகனாக நடிக்க வைத்தார். கதையில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்த அராலியூர் புவனேந்திரன், மேலதிகமாகக் கேட்ட பணத்தைக் கொடுக்காமல், படத்தில் அவரை “டம்மி யாக்கி” படத்தை திரையிட்டார். எதிர்க்காலத்தில் நல்ல தமிழ் திரைபடங்களைத் தயாரிக்க வேண்டிய ஒரு நல்ல தயாரிப்பாளரை இலங்கைத் தமிழத் திரைப்படத்துறை பக்கமே தலை வைத்து படுக்கவிடாமல் செய்து விட்டார் அராலியூர் புவனேந்திரன்.

பல பிரச்சினைகளில் சிக்கியபோதும் வெண் சங்கு ஒரு வருட காலத்தில் திரைக்கு வந்தது. வழமைபோல தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டு சுருண்டது படம். இலங்கை தயாரிப்பாளர்கள் படம் எடுத்துக்கொண்டுதான் இருந்தார்கள்.

1993. 09. 24 ஆம் திகதி என்னுடைய 'ஷர்மிலாவின் இதய ராகம்' திரையிடப்பட்ட பின்னர், டப்ளியூ. எம். எஸ். தம்பு என்னைச் சந்தித்து என்னுடைய படத்தின் திரையிடப்பட்ட பின்னரான அனுபவங்களைச் கேட்டறிந்தார். திரையிட்ட பின் விபரங்களைச் சொன்ன நான், தமிழ்ப் படம் எடுக்க உத்தேசமா? எனக் கேட்டேன்.

தன்னிடம் இந்திய நடிகர்களை வைத்து ஷண் என்பவர் இங்கு தயாரித்த ‘இளைய நிலா’ என்ற படம் இருப்பதாகவும் அதனை திரையிட விருப்பம் இருப்பதாகவும் தமிழ் படம் என்பதால் திரையிடுவதில் உதவ முடியுமா? என என்னிடம் கேட்டார்.

“சொல்லுங்கள் செய்வோம்” என்றேன்.

இது நடந்து கொஞ்ச காலத்தில் டப்ளியூ. எம். எஸ். தம்பு காலமாகி விட்டார். அவர் உயிருடன் இருந்திருந்தால் இளைய நிலா வெள்ளித் திரையைக் கொண்டிருக்கும். இளைய நிலாவின் துரதிர்ஷ்டம் என்றுதான் இதைச் சொல்ல வேண்டும். எனவே, இளைய நிலா பிலிம் சுருள்கள் எங்கோ இருக்கத்தான் வேண்டும். ஆனால் அவை முற்றிலுமாக பழுதாகிப் போயிருக்கும்.

அவர் குறிப்பிட்ட “இளைய நிலா” என்ற அந்தத் திரைப்படம், இன்று வரை திரைக்கு வரவே இல்லை.

பேராதனை ஏ.ஏ. ஜூனைதீன்

Comments