வலைப்பந்தாட்ட உலகையே வென்ற யாழ். மங்கை தர்ஜினி சிவலிங்கம் | தினகரன் வாரமஞ்சரி

வலைப்பந்தாட்ட உலகையே வென்ற யாழ். மங்கை தர்ஜினி சிவலிங்கம்

ஆசிய கிண்ணத்தை ஐந்தாவது தடவையாக இலங்கை அணி வெற்றிகொண்டது. உங்களது மனநிலை எவ்வாறு உள்ளது?

உலகக் கிண்ணத்திற்கு தெரிவாக வேண்டும் என்ற நோக்கத்துடனேயே சிங்கப்பூர், மலேஷியா மற்றும் ஹொங்கொங் ஆகிய அணிகள் களமிறங்கியிருந்தன. இம்முறை போட்டிகள் அனைத்தும் மிகவும் சவால்மிக்கதான அமைந்தது. யாரும் இங்கு வந்து தோல்வியைத் தழுவுவதற்கு விரும்பவில்லை. ஆனாலும், பயிற்சியாளரின் ஒருசில வியூகங்களாலும் எமது வீராங்கனைகள் ஒன்றாக விளையாடி அந்த மூன்று அணிகளுக்கும் பலத்த போட்டியைக் கொடுத்து ஆசிய கிண்ணத்தை வென்றோம்.

நீங்கள் கடந்த மூன்று வருடங்களாக இலங்கை அணிக்காக விளையாடி வருகின்றீர்கள். எனினும், உங்களது மீள்வருகையும்,இலங்கை அணியின் அனைத்து வெற்றிகளுக்கும் நீங்கள் தான் முக்கிய காரணமாக இருந்தீர்கள். அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?

உண்மையில் இது தனியொருவரால் மாத்திரம் பெற்றுக்கொண்ட வெற்றி அல்ல. போட்டியின் போது மைதானத்திற்கு உள்ளே இருக்கின்ற ஏழு வீராங்கனைகளும், வெளியில் உள்ள நான்கு வீராங்கனைகளும் உட்பட் 12 பேரும் ஒன்றாக சேர்ந்து விளையாடியதன் காரணமாகத்தான் இந்த வெற்றியைப் பெற்றுக் கொண்டோம். எனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை நான் சரிவர செய்தேன். என்மீதும், எனது அனுபவத்தின் மீதும் அணியின் பயிற்றுவிப்பாளர், முகாமைத்துவம் மற்றும் வலைப்பந்தாட்ட சம்மேளனம் ஆகியன மிகப் பெரிய நம்பிக்கை வைத்திருந்தனர். அந்த நம்பிக்கையை நான் நிறைவேற்றிக் கொடுத்தேன்.

நீங்கள் அவுஸ்திரேலியாவுக்குச் சென்று தொழில்சார் வலைப்பந்தாட்டப் போட்டிளில் அங்குள்ள கழகங்களுக்காக விளையாடி இருந்தீர்கள். அங்கு பெற்ற அனுபவத்தைப் பற்றிச் சொல்லுங்கள்?

உண்மையில் நான் கடந்த மூன்று வருடங்களாக இலங்கையில் விளையாடவில்லை. அப்போது நான் இனிமேல் வலைப்பந்தாட்டம் விளையாடப் போவதில்லை என முடிவெடுத்திருந்தேன். ஆனால் இலங்கை அணியின் பயிற்சியாளராக திலகா ஜினதாச மீண்டும் பொறுப்பேற்ற பிறகு அவருடையவேண்டுகோளுக்கு இணங்க நான் மீண்டும் இலங்கை அணிக்காக விளையாடினேன். அதுமாத்திரமின்றி,அவருடைய உதவியுடன் நான் அவுஸ்திரேலியாவுக்குச் சென்று அங்குள்ள உள்ளூர் கழகங்களுக்காக விளையாடினேன். எனவே என்னை இந்த இடத்துக்கு கொண்டு வருவதில் முக்கிய பங்குதாரராக இருந்த எனது பயிற்சியாளர் திலகா ஜினதாசவுக்கு இந்த நேரத்தில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அதேபோல, அவுஸ்திரேலியாவில் என்னை கவனித்துக் கொண்ட நிகொலஹா ரிச்சாஜனை இந்த நேரத்தில் ஞாபகப்படுத்த விரும்புகிறேன். அவுஸ்திரேலிய வலைப்பந்தாட்ட அணியின் நட்சத்திர வீராங்கனைகளில் ஒருவரான ரிச்சாஜன், ஒலிம்பிக் மற்றும் பொதுநலவாய போட்டிகளில் பதக்கம் வென்றவரும் ஆவார்.

அத்துடன்,தற்போது அவுஸ்திரேலிய கழக வலைப்பந்தாட்ட போட்டிகளில் பயிற்சியாளாராகவும் செயற்பட்டு வருகின்ற மார்க்கையும் இந்த இடத்தில் குறிப்பிட விரும்புகின்றேன். வலைப்பந்தாட்டமே வேண்டாம் என்று இருந்த என்னை மீண்டும் வலைப்பந்தாட்டத்தில் ஈடுபட வைத்தமைக்கும், இலங்கைக்குச் சென்று மீண்டும் விளையாட அனுமதி அளித்தமைக்கும் அவர்கள் இருவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். எனவே அவுஸ்திரேலியாவில் பெற்ற அனுபவங்கள் இந்த முறை ஆசிய கிண்ணத்தில் சிறப்பாக விளையாடுவதற்கு நிறைய உதவியாக இருந்தது.

2019 இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டிகளுக்கான உங்களது ஆயத்தம் குறித்து சொல்லுங்கள்?

ஆசிய கிண்ணத்தை வென்ற உலகக் கிண்ணத்தை வெல்வதற்கான அனைத்து தகுதியும் இருக்கின்றது. அந்த நம்பிக்கை எம்மிடம் நிறைய உள்ளது. ஆனால் அதற்கான வசதிகள் இல்லாமை கவலையளிக்கிறது. எமக்கென்று தனியான உள்ளக அரங்கொன்று இல்லை. நீண்ட தூரப் பயணங்களை மேற்கொண்டுதான் இங்கு வருகின்றோம். எனவே எமக்கான வசதிகளை அதிகாரிகள் பெற்றுத் தந்தால் நிச்சயம் உலகக் கிண்ணத்தில் எங்களால் சாதிக்க முடியும். அதேபோல, நான் உலக்கிண்ணத்தில் விளையாடுவது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை.

நீங்கள் தொடர்ந்து எவ்வளவு காலம் நாட்டுக்காக விளையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளீர்கள்?

அதுதொடர்பில் நான் எந்தவொரு தீர்மானத்தையும் இதுவரை எடுக்கவில்லை. எனினும், நான் தொடர்ந்து விளையாடுவேனா? இல்லையா? என்பது தொடர்பில் பயிற்சியாளரும், வலைப்பந்தாட்ட நிர்வாகமும் தான் முடிவெடுக்க வேண்டும். ஆனால் சிறந்த பயிற்சியாளரும், நிர்வாகமும் தொடர்ந்து இருந்தால் நான் நிச்சயம் இலங்கைக்காக விளையாடுவேன்.

இறுதியாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

என்னை வலைப்பந்தாட்ட உலகில் நட்சத்திர வீராங்கனையாக மாற்றுவதற்குகாரணமாக இருந்த எனது பெற்றோர், குடும்பத்தினர், வலைப்பந்தாட்ட சம்மேளனம், பயிற்சியாளர், முன்னாள் மற்றும் இந்நாள் வீராங்கனைகள், நான் தொழில் செய்கின்ற செலான் வங்கி மற்றும் அங்கு பணிபுரிகின்ற அதிகாரிகளுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அதுமாத்திரமின்றி, என்னை வாழவைத்த எனது மண்ணுக்கும், என்னை எப்போதும் நேசிக்கின்ற, எனக்காக பிரார்த்தனை செய்கின்ற அனைத்து தமிழ் மக்களுக்கும் வாழ்நாள் முழுவதும் நன்றி உடையவளாக இருக்க விரும்புகிறேன்.

 

 

Comments