புவள்ளிக்கொடி | தினகரன் வாரமஞ்சரி

புவள்ளிக்கொடி

ல்லாந்திப் பற்றையும் சேர்ந்தாப் போல விண்னாங்கு மரங்களும் விளாத்தியுமாய் சூரப்பற்றையும் கிழாசெடிகளுமாய் இருந்த அந்த காடு. இடையிடையே வளர்ந்திருந்த செம்புற்றுக்கள் புற்றை அண்டி நிறைத்திருந்த கட்டக்காரச் செடிகளும் புதர் அடந்த கராவல் முள்ளிடையே அவள் கையில் ஒரு தடி கொண்டு நடந்தாள். வால்காவிலிருந்து கங்கை வரை எனும் வரலாற்று மூலத்தில் சொன்ன முதிர்தாயை நினைவு படுத்தினாள் அவள். எல்லாவற்றையும் கடக்கும் திறனும் முதிர்ந்த அனுபவத்தின் கோடுகள் நெற்றி வரிகளில் வெளிப்பட சேலையை மேலிருந்து கீழாக குறுக்காக ஒருவளையமாய் சுற்றி நீள நீண்ட சோணை வழி குண்டலம் போன்ற தொங்கட்டான். ஆட நடக்கும் அழகு காட்டு அரசியாய் அவளை காட்சிப் படுத்தியது. அந்த காடுதான் அவள் வாழ்வு.

காட்டின் ஒவ்வொரு பூவும் காயும் பழமும் அவளுக்கு தெரியாமல் பூக்கவோ காய்க்கவோ முடியாது. காடு அளித்த அருங்கொடைகள் அவள் வாழ்வுக்கு எப்போதும் துணையாய் சேனையூர் ஆறும் அதையண்டிய குன்றுகளும் குன்றுகளையண்டிய காடு. அந்த காடே எல்லாவற்றையும் அவளுக்கு கொடுத்தது.

அவள் பின்னால் அவள் பேரப் பிள்ளைகள் தொடர, அவள் நடந்தாள் அவள் கைப்பிடித்திருந்த கம்பின் நுனியில் கூரான இரும்பு கத்தி போன்ற ஒன்று பொருத்தப்பட்டிருந்தது. அதுவே அவள் ஆயுதம். அவளுக்கு உணவும் பாதுகாப்புமான ஆயுதம் அது.

முயலை எறிந்து கொல்வாள் ஓடும் உடும்பை குத்தி குடல் எடுப்பாள். எதிரேவரும் பன்றியை பாடு பார்த்து. குடைந்தெடுத்து உணவாக்குவாள் எற் பண்டி இவள் முன் எகிறி குதித்தாலும் காலடியில் கதற கதற வதம் செய்வாள். ஆற்றில் துள்ளி உயரும் கயல்மீன்கள் கம்புக்கு இரையாகி, அவள் உணவுக்கு உரமாகும் வள்ளியாயி அவள்தான். அந்த குடும்பத்தின் தலைவி, மகன் கொம்பன் காடேறி தேன் எடுப்பவன். கொம்பனின் மனைவி ஒரு மார்கழி மழை நாளில் பாம்பு கொத்தி மாண்டு போனாள். காடெல்லாம் அவர்கள் தங்கள் உலகமாய் கொண்டாடினார்கள். கொம்பன் இன்னொரு பெண்ணை கலியாணம் செய்யாமல், தன் தாய் வள்ளியாயிடமே பிள்ளைகளை விட்டிருந்தான். அந்த சமூகத்தின் ஆதித்தாய் அவள்தான்.

சிலப்பதிகாரத்து சாலினிபோல குறி சொல்வாள். காட்டின் ஒவ்வொரு அங்குலமும் அவள் காலால் அளந்த பெரு நிலம். ஒவ்வொரு புல்லும் அவள் காலறியும் உரம் சேர்ந்த கால்களில் ஒரு காலில் ஒரு செவ்வளையம். எப்போதும் இருக்கும் சிலம்பு போல கைகள் சங்கு வளையல்கள் கலகலக்க நடப்பாள். அவள் வரவு கண்டு சிறு மிருகங்கள் பயந்து ஓடும். வள்ளியாயி ஒரு வன ராணிதான்.

சொண்டாம் பழங்களின் சுவையில் சொக்கிக் கிடப்பாள். கிண்ணம் பழங்களை பிழந்து பேரப் பிள்ளைகளுக்கு உணவாக்குவாள். பன்னப் பழம், தவிட்டம் பழம், முதலிப் பழம் பிள்ளைகள் அழுகைக்கு தீனி போடும். எப்போதும் காட்டுத் தேங்காய் கொட்டைகளை சுட்டு, மடியில் கட்டிக் கொள்வாள். பசியேற்படும் போது கொறிப்பதற்காக, தாகம் எடுத்தால் காடெங்கும் நிறைந்திருக்கும் கற்சுனைகள் துணையாகும்.

பேரப்பிள்ளைக்களுக்கு பசியெடுத்து விட்டால், தன் கைக் கம்பை எடுத்துக் கொண்டு, வெளிக்கிட்டு விடுவாள். கிழங்கு தோண்டுவதுக்கு காட்டில் விளைந்து கிடக்கும் கிழங்கு எல்லோருக்கும் உண்வாகும். மழை பெய்து மார்கழிக்கு பின்னய நாட்களில் தை மாதத்தில் காட்டில் உறங்கு நிலையில் இருக்கும் கிழங்கு வகை முளை காட்டத் தொடங்கும் எப்போதும் ஒரு மரத்தை அண்டி பெரும் புற்றுக்களை அண்டி கிழங்கு கொடி வளரும் அல்லக் கொடியும், கவலக் கொடியுமே காட்டில் செழித்து வளர்ந்து மனிதர்க்கு உணவாய் மாறும் கிழங்கு வகை.

அல்லக்கொடி முளைவிடும் போது சிறிய பாம்பொன்று புற்றுக்குள் இருந்து தலை நீட்டுவது போல இருக்கும் முளை விடும் போதே பார்த்து வைத்திருப்பாள் வள்ளியாயி. வளர்ந்த பின் அந்த இடத்துக்கு குறிப்பாய் போய் கண்டுபிடித்து, கிழங்கு தோண்டுவது அவள் வழக்கம்.

சித்திரை மாதம் அல்லக் கொடி கவலக்கொடி பூக்கும், பருவம் பூக்கும் காலமே கிழங்கு நல்லா விழைந்திருக்கும் என்பாள் வள்ளியாயி. காய்க்க தொடங்கி விட்டால், கீழே இருக்கும் கிழங்கின் சத்து பூ காயாகும் போது, அதுக்கு அதன் சக்தியெல்லாம் போய்விடும் என்பாள் அவள். அல்லக் கொடியின் பூ அழகாயிருக்கும். பெண்கள் காதுகளில் தொங்கும் கலாவரை தோட்டைப் போல தூக்கணமாய் அழகு தரும். சிறுவர்கள் காதுகளில் தோடாய் அணிந்து விளையாடுவது வழக்கம். அல்லக்கொடி இலைகள் முக்கவர் கொண்டிருக்க கவலக் கொடி ஒற்றை இலையாய் நீண்டிருக்கும். அல்லக்கொடி பாம்பின் முதுகைப் போல வழுவழுப்பாய் இருக்க கவலக்கொடி மர நிறத்தில் இருக்கும் கவலக் கொடியே பெருமளவில் காய்க்கும் குணம் கொண்டது.

வள்ளியாயி இந்த கிழங்கு வகைகளின் எல்லா ரகசியமும் தெரிந்தவள். சங்க இலக்கியம் சுட்டும் வள்ளிக் கிழங்கு வள்ளிக் கொடி, இந்த அல்லிக் கொடிதான். சங்ககால மகளீருடன் வள்ளிக்கொடிக்கு நெருங்கிய தொடர்பை பாடல்கள் மூலம் அறிய முடிகிறது.

"முரிந்த சிலம்பின் நெரிந்த

வள்ளியின் புறன் அழிந்து

ஒலிவரும் தாழிருங் கூந்தல்"-

நற்றிணை

"பிரிந்தவர் மேனிபோல்

புல்லென்ற வள்ளி,

பொருந்தினர் மேனிபோல்,

பொற்ப, - திருந்திழாய்!

வானம் பொழியவும்

வாரார்கொல், இன்னாத

கானம் கடந்து சென்றார்?"-

ஐந்திணை ஐம்பது 8

கானம் கடந்து கால்கள் சோர இன்று கிழங்கு தேடிக் கழைத்து விட்டாள் குழந்தைகளும் சோர்ந்து விட்டனர். காட்டு தண்ணீர் கொடியயை அறுத்து அவர்களுக்கு குடிக்க கொடுத்து. காட்டிலந்தை சொரிந்து கிடக்க, அவற்றை புறக்கி கொடுத்து சாப்பிட வைத்து, பருத்தி பெருத்து கிளை பரப்பி விழுதுகளால் வீடு கட்டியிருந்த அத்தி மர நிழலில் அமர்ந்திருந்து சிறிது குட்டித் தூக்கமும் போட்டு குன்றுச் சாரலுக்கு போய் சாரல் கல்லிடையே அல்லக் கொடியயை தேடிப் போனாள் .

தூரத்தே பந்தல் கட்டி சடைத்திருந்த அல்லக் கொடியொன்று கற்களிடையே வளர்ந்திருந்த புற்றையண்டி இரணைப் பாம்புகள் போல முறுகி வளர்ந்து பூக்கள் நிறைய வள்ளியாயியை வரவேற்றது.வேகமாக நடந்தாள் கால்களை அகட்டி கொடியருகே அமர்ந்து தோண்ட தொடங்கினாள் சில வேளைகளில் புற்றருகே படரும் அல்லக் கொடிய தோண்டும் போது பாம்புகள் வந்து பயமுறுத்துவதுண்டு அவள் அசர மாட்டாள்.

இன்றும் ஒரு முன் தயாரிப்பில்தான் இருந்தாள் பாம்பை எப்படி மடக்கி பிடிப்பது என்பதையும் அவள் கற்றிருந்தாள், அவள் தாய் வேலாத்தையிடம். குழந்தைகள் சொரிந்திருந்த அல்லக்கொடி பூக்களை காதுகளிலும் கழுத்திலும் அணிந்து மகிழ்ந்து விளயாடிக் கொண்டிருந்தனர். அல்லக் கொடியிருந்தால் கவலக்கொடியும் பக்கத்திலிருக்கும் என்பது காட்டின் ஒழுங்குகளில் ஒன்று. கவலக் கொடி காய்த்து அந்த காய்கள் கீழே விழுந்து கிடந்தன. அவற்றை பச்சையாகவே சாப்பிடலாம். குழந்தைகளின் பசிக்கு உடன் உணவாக இருந்தது. அல்லக் கிழங்கு அதன் தோல் கொஞ்சம் கடிக்கும்.

கிழங்குக் கொடியை பிய்க்காமல் கொடிக்கு எந்த பழுதும் இல்லாமல் தோண்டுவாள். தோண்ட தோண்ட அவளுக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை. கிழங்கு கால் விட்டு புரி புரியாக நீண்டிருந்தது. மண்ணை அள்ள கம்போடு கட்டியிருந்த சிரடையால் அள்ளி வெளியே எடுக்க எடுக்க கிழங்கு அதன் தடிப்பமும் ஆழமும் அவளுக்கு புரிய ஆரம்பித்தது. அவள் வாழ்வில் அப்படியொரு கிழங்கை காணவில்லை. கிழங்கின் அடியயை கண்டு விட்டாள். கொடியின் அடியை பக்குவமாய் அறுத்து கிழங்கை அப்படியே அள்ளி எடுத்தாள்.

தோலால் ஆன பையில் கிழங்கு முழுவதையும் போட்டெடுத்தவள், தன் குடிசை நோக்கி குழந்தைகள் பின் தொடர, அந்த மூத்த தாய்கான வெளியில் நடக்க தொடங்கினாள் நாளை இன்னொரு அல்லக் கொடிக்காய்.

பாலசிங்கம் சுகுமார்

 

Comments