அதிகரித்துவரும் வீதி விபத்து மரணங்கள் | தினகரன் வாரமஞ்சரி

அதிகரித்துவரும் வீதி விபத்து மரணங்கள்

தண்டப்பணம் அதிகரிப்பின் பின்னர் வீதி விபத்துக்கள் மூலம் ஏற்படும் மரண விகிதம் குறைந்துள்ளது என்கிறார் மோட்டார் போக்குவரத்து பொலிஸ் அத்தியட்சகர் இந்திக ஹப்புகொட. ஆனால் நாளாந்தம் ஊடகங்களில் வெளியாகும் வீதி விபத்து மரணங்களை பார்க்கும்போது அப்படி தோன்ற மாட்டேன் என்கிறது. பரந்தன் ரயில் கடவை விபத்து உங்களை உலுக்கி விட்டிருக்கும்.

நாட்டில் ஏற்பட்டிருந்த யுத்தத்தினால் ஏற்பட்ட உயிரிழப்பு விகிதத்தினைவிட வீதி விபத்துக்களினால் நாளாந்தம் இடம்பெறும் வீதி விபத்துக்களினால் மரணிப்பவர்களின் எண்ணிக்ைகயும், அங்கவீனமடையும் எண்ணிக்ைகயும் அதிகரிப்பது கவலைக்குரியது. வீதி நடமாட்டம் பாதுகாப்பற்றது என்றல்லவா எண்ணத் தோன்றுகிறது! வீட்டிலிருந்து வெளியேறிச் செல்லுகையில், "சென்று வருகிறேன் என்று கூறுவதைவிட செல்கிறேன்" என்ற சொல்லுவதே பொருத்தமாக இருக்கும் போலத் தோன்றுகிறது. எவ்விடத்தில், எப்போது காலன் வந்து உயிரை காவிக்ெகாண்டு போவானோ என வீதியில் நடமாடும்போது அச்சம் ஏற்படுகிறது. ஏனெனில் வீதி விபத்துக்களினால் நாளாந்தம் சுமார் எட்டு பேர் மரணிப்பதாக அறிக்ைககள் சுட்டிக்காட்டுகின்றன.

வாகன விபத்துக்களில் 49 சதவீதமானவை வேக அதிகரிப்பினால் இடம்பெறுகின்றன. பெரும்பாலும் சாரதி/ ஓட்டுனர்களின் கவனக்குறைவு, ஓய்வின்றி தொடர்ச்சியாக வாகனத்தைச் செலுத்துவதினால் ஏற்படும் உடல், மன அசதி வேக கட்டுப்பாட்டை இழப்பது என்பன வீதி விபத்துகளுக்கான முக்கிய காரணங்களாக மோட்டார் போக்குவரத்து பொலிஸ் பிரிவு சுட்டிக்காட்டுகிறது.

வீதி விபத்தின் மூலம் மரணமடைந்தவர்களின் எண்ணிக்ைகயை 2017 எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், கடந்த 6 ஆம் திகதி வரை எடுக்கப்பட்ட புள்ளிவிபரத்தின்படி கடந்த வருடத்தைவிட 108 எண்ணிக்ைகயளவில் வீதி மரணங்கள் குறைந்துள்ளன. 2016 இல் மரணித்தவர்களின் எண்ணிக்ைக 3017 பேர் எனவும், 2017 இல் 3197 பேர் எனவும் ஆனால் 2018.09.06 வரை 2141 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர் என்றும் மோட்டார் போக்குவரத்து பொலிஸ் அத்தியட்சகர் இந்திக ஹப்புகொட எம்மிடம் கூறினார்.

நாட்டில் தினசரி இடம்பெறும் விபத்துக்களில் அதிகமானவை வாகன விபத்துக்களாகவே உள்ளன. போக்குவரத்துப் பொலிஸார் நாடளாவிய ரீதியில் கடமையில் இருந்து இவற்றை கண்காணித்து வருகின்ற போதிலும், சாரதிகளில் அதிகமானவர்கள் வீதி ஒழுங்குகளை குறித்து அதிகம் கவனத்தில் கொள்வதில்லை. ஆனாலும் ஒரு பொலிஸாரை கண்டால் மாத்திரமே ஏதோ மரியாதைக்காவது வீதி ஒழுங்கினை பேணுகின்றவர் போன்று காண்பிக்கின்றனர். வீதி ஒழுங்குகளை சரியாக அனுசரித்து நடந்தால் பொலிஸாரைப் பார்த்து அஞ்சத்தேவையில்லை. சாரதிகள் ஒத்துழைத்தால் வீதி விபத்துக்களை முழுமையாக தடுத்து நிறுத்தலாம் என்பது பொலிஸ் தலைமை காரியாலய பொலிஸ் பிரதி அத்தியட்சகர் டபிள்யூ. டி. ஏ. தனஞ்ஜெயவின் கருத்து.

வீதி விபத்து ஏற்படுவதற்கு பொதுவான காரணங்களாக பொறுப்பற்ற அல்லது கவனக்குறைவான ஓட்டம், வேகக்கட்டுப்பாட்டை இழத்தல், அதிகரித்த வேகம், முந்திச் செல்வதிலேயே குறியாக இருத்தல், மது அருந்திய பின் வாகனம் செலுத்துதல், வீதி சமிக்ஞையை அலட்சிப்படுத்தல், கவனக்குறைவாக திரும்புதல், போட்டா போட்டியாக வாகனத்தைச் செலுத்துதல், ஒத்துழைக்காத நிலையிலும் வாகனம் செலுத்துதல் என்பனவற்றை வீதி விபத்துகளுக்கான முக்கிய காரணங்களாக பட்டியலிடலாம். இதுதவிர வீதிகளில் கட்டாக்காலிகளின் நடமாட்டமும், விபத்துகளுக்கு காரணமாகிறது. சில இளைஞர்கள் வாகனத்தை செலுத்தும் போது, வீதி தங்களது பொழுதுபோக்கு மைதானம் என்ற சிந்தனையில் செலுத்துவதினால், தங்களின் உயிரை பாதியில் முடித்துக் கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலை உருவாகுகின்றது.

இலங்கையில் முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள், துவிச்சக்கர வண்டி என்பன அதிகமான விபத்துக்குள்ளாகும் வாகனங்களாகும். பொலிஸ் அறிக்ைகயின்படி அதிகப்படியான விபத்துக்கள் மலைநாட்டுப் பகுதியிலும், கொழும்புக்கு வெளியே அகன்ற காப்பர்ட் வீதிகளிலுமே நடைபெறுகின்றன. இவ்விபத்துக்களினாலே மரணிப்பவர்களின் எண்ணிக்ைக அதிகரிக்கிறது. அத்துடன் இப்பாதைகளில் அதிவேகமாக வாகனத்தை செலுத்துவதினாலும் அதிகமான விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புக்களும் ஏற்படுகின்றன.

அதிவேக நெடுஞ்சாலையில் வீதி விபத்துக்கள் குறைந்தளவே நடைபெறுகின்றன. அத்துடன் அவ்வீதியில் ஒரு வீதி விபத்து நடைபெற்றால் அவ்விடத்திற்கு பொலிஸாருடன், அவ்வீதி சம்பந்தப்பட்ட சகல திணைக்கள, அதிகார சபை அதிகாரிகளும், சம்பந்தப்பட்ட பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளும் அவ்விடத்திற்கு வந்து ஒரு குழுவாகவே செயற்படுகின்றனர். ஆனால் ஏனைய வீதிகளில் இடம்பெறும் விபத்துக்களில் பொலிஸார் அவ்விடத்திற்கு சென்றாலும் சம்பந்தப்பட்ட விடயங்களுக்கு பொறுப்பானவர்கள் அவ்விடத்திற்கு வருவதில்லை. எதிர்காலத்தில் பொலிஸாருடன் இணைந்து அரச பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளும் இணைந்து செயற்படும் போது வீதிவிபத்துக்களை குறைக்கலாம் என்ற நம்பிக்ைகயினை வெளியிட்டார் பொலிஸ் உதவி அத்தியட்சகர்.

தண்டப்பணம் அறவிடுவதன் மூலம் பொலிஸாரும் ஒரு பங்கை லாபமாக சம்பாதிப்பதாக பல சாரதிகள் குற்றஞ்சாட்டுகின்றனரே என்றவுடன், பொலிஸ் அத்தியட்சகரும், உதவி அத்தியட்சகரும் இக்குற்றச்சாட்டை முழுமையாக மறுத்தனர். “அப்படியொரு பங்கு எமக்கு கிடைப்பதில்லை. அப்படி கிடைக்குமென்றால் நாம் இவ்விடத்தில் உட்கார்ந்து இருக்கவேண்டியதில்லையே. எமக்கு கொடுக்கப்பட்டுள்ள கடமையை செய்கிறோம். சாரதி அல்லது ஓட்டுநர் வீதி சட்டத்தை ஒழுங்காக கடைப்பிடித்தால் தண்டம் செலுத்த தேவையிருக்காது. வீதி விபத்துக்கள் நூறுவீதம் குறைவடைந்துவிடும்” என்று உறுதியாகக் கூறினார்.

வெளிநாடுகளில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளதால் அதனூடாகவே வீதி போக்குவரத்து குற்றங்களை தடுக்கின்றனர். இதை இங்கு நடைமுறைக்குக் கொண்டு வரலாமே என்ற யோசனையை முன்வைத்ததும் அபிவிருத்தி அடைந்த நாடுகளில் நவீனதொழில்நுட்பங்களை அதிகளவில் பயன்படுத்துகின்றனர் என்றும் எமது நாட்டுக்கு அவற்றைக் கொண்டு வந்தால் நிச்சயம் வரவேற்போம் என்றும் பதிலளித்தனர்.

வடக்கு, கிழக்கு உட்பட கிராமப் பகுதிகளில் மாணவர்கள் துவிச்சக்கரவண்டியே அதிகமாக பயன்படுத்துகின்றனர். வெளிநாடுகளில் நான்கு வழிபாதைகளாக காணப்படுவதால் துவிச்சக்கரவண்டிக்கும் தனியான வழித்தடம் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இங்கு அப்படியல்ல, அதிகமான வீதிகள் இருவழிபாதைகளாகவே காணப்படுவதால் மிகவும் அவதானமாக பயணிக்க வேண்டியிருக்கிறது. எதிர்காலத்தில் பாடசாலை மட்டத்தில் வீதிப் போக்குவரத்து குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அத்துடன் கிராம மற்றும் தோட்டப்புறங்களில் வசிப்பவர்கள் பிரதான வீதிக்கு வரும்போது வீதி ஒழுங்கு குறித்து தெளிவான சிந்தனை அவர்களிடம் இருப்பதில்லை. அவர்கள் மத்தியிலும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

“பாதசாரிகளும் வீதி ஒழுங்கை சரியாக கடைப்பிடிக்க முன்வர வேண்டும். சிலர் அலைபேசியில் பேசிக்ெகாண்டே வீதியை கடக்கும்போது அவர்களின் முழு அவதானமும் கைபேசியில் இருப்பதால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உண்டாகுகிறது. அத்துடன், சாரதிகள்/ ஓட்டுநர்கள் வாகனத்தை செலுத்திக் கொண்டே அலைபேசியில் பேசுவதாலும் பெருமளவு விபத்துக்கள் ஏற்படுகின்றன. சிலர் வீதிகளில் கட்டாக்காலியைப் போன்று நடந்து செல்கின்றனர். அத்துடன் வீதிக்கடவை எதிரே பார்த்தவாறு குறுக்காக வீதியை கடக்கின்றனர்” என்று ஒரு முதியவர் எம்முடன் பேசும்போது சுட்டிக்காட்டினார்.

ஒரு முச்சக்கர வண்டி சாரதி, “நாங்கள் வருமானத்தை தேடியே வாழுகிறோம். பாதையும் குண்டும்குழியுமாக காணப்படுகிறது. சில வாகன சாரதிகளின் ஒழுங்கற்ற அவசரமான ஓட்டமும் வீதி விபத்துக்கு காரணமாகின்றன'' என்றார்.

ஒரு மோட்டார் ஓட்டுநர், “விரைந்து செல்லவும் வேண்டும். வீதியில் அதிகளவான வாகனங்கள் ஓடுவதினால் எமது வாகனத்தை முன்னோக்கி நகர்த்தியே ஆகவேண்டியிருக்கிறது. மேலும் சில பாதசாரிகளினாலேயே விபத்துக்கள் ஏற்படுகின்றன” என்று தன் கருத்தைச் சொன்னார்.

இதேவேளையில், வீதிக்கடவையில் கடப்பவர்கள், இந்த வீதி கடவையில் நாம் கடக்கும்வரைக்கும்

 

வாகனங்கள் அசையாது என்ற சிந்தனையில் நடப்பதினாலும் விபத்துக்கள் ஏற்பட முடியும். வீதியில் மிக நெருக்கமாக வாகனங்கள் வந்து கொண்டிருக்கும் போது வீதியை கடக்க முயற்சிக்கக் கூடாது. சில சமயம் பாதசாரி சமிஞ்சை விளக்கு சமிஞ்சை காட்டாவிட்டாலும் சிலர் வீதியை அலட்சியமாகக் கடந்து செல்வார்கள். கடவை எமக்கானது அதில் கடக்கும் போது வாகனங்கள் நிறுத்தியே ஆக வேண்டும் என்று அவர்கள் கருதுகிறார்கள் இது தவறு. சமிக்ஞை விழுந்தும் மற்றும் வாய்ப்பான தருணங்களிலும்தான் வீதிக்கடவையூடாக கடக்க வேண்டும்.

ஆனால் பொதுமக்கள் வீதி ஒழுங்குகளை உதாசீனப்படுத்துவதினாலேயே அதிகளவிலான வீதி விபத்துக்கள் நடைபெறுகின்றது என்று பிரதி பொலிஸ் அத்தியட்சகர் மேலும் சுட்டிக்காட்டுகிறார். மோட்டார் சைக்கிளில் பயணிப்பவர்கள் தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற சட்டம் அமுலில் உள்ளது. தலைகவசம் அணிவது அவர்களின் பாதுகாப்புக்காகவே. இதனை அணியாமல் மோட்டார் சைக்கிளில் செல்ல முடியாது. இதனை கைக்கட்டி பொலிஸார் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்றார்.

தண்டபணம் அதிகரிக்கப்பட்ட பின்பே, அநாவசியமாக பெரும் தொகை பணத்தை தண்டமாக செலுத்த வேண்டுமா என்ற மனப்பான்மையில் பெரும்பாலான சாரதிகள் வீதி ஒழுங்கினை சீராக கடைப்பிடிக்கின்றனர். வீதி விபத்துக்களை குறைப்பதற்கு தண்டப்பணமோ, பொலிஸாரோ வேண்டியதில்லை. சகல சாரதிகளும் வீதி ஒழுங்கினை சீராக கடைப்பிடித்து வாகனத்தை செலுத்தினால் பெறுமதிமிக்க உயிர்களை பாதுகாத்துக் கொள்ளலாம். பஸ்ஸில் பயணிப்பவர்கள் சிலர் கூறுவர், 'எமது உயிர் பஸ் சாரதியின் கையில்தான்' என்று. இது போலத்தான் வீதியில் நடமாடும் போதும் உங்கள் உயிர் உங்கள் நடவடிக்கைகளிலேயே தங்கியுள்ளது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

 

Comments