எல்லை நிர்ணய மீளாய்வுக் குழுவுக்கு புதிய சட்டச் சிக்கல் | தினகரன் வாரமஞ்சரி

எல்லை நிர்ணய மீளாய்வுக் குழுவுக்கு புதிய சட்டச் சிக்கல்

பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்ட எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பில் மீளாய்வு செய்ய சபாநாயகரால் நியமிக்கப்பட்ட பிரதமர் தலைமையிலான குழு மீளாய்வு விடயத்தில் சட்டச்சிக்கலை எதிர்கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அறிக்கை பாராளுமன்றத்தில் எதிர்ப்பெதுவுமின்றி ஏகமனதாக தோற்கடிக்கப்பட்ட நிலையில், அதனை மீளாய்வு செய்து திருத்தப்பட்டாலும் அது செல்லுபடியாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தச் சட்டச்சிக்கலை மீளாய்வுக்குழு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை சுட்டிக்காட்டியதன் மூலம் மற்றொரு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

எல்லை நிர்ணய அறிக்கையை மீளாய்வு செய்ய நியமிக்கப்பட்ட பிரதமர் தலைமையிலான குழு கடந்த வியாழக்கிழமையும், வெள்ளிக்கிழமையும் கூடி ஆராய்ந்தது. முதல் நாளன்று இவ்விடயம் தொடர்பாக குழு கட்சித்தலைவர்களுடன் கலந்துரையாடியுள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை தவிர ஏனைய அனைத்துக் கட்சிகளும் சிறுபான்மை பிரதிநிதித்துவங்களை உறுதிசெய்யப்படாத வரை இந்த அறிக்கையை

ஏற்றுக்கொள்ள முடியாது. எல்லை நிர்ணயம் எல்லாப் பிரதேசங்களிலும் சிறுபான்மை பிரதிநிதித்துவத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

புதிய கலப்புமுறை தொகுதிவாரி தேர்தல் முறையைக் கொள்கையளவில் அனைத்துத் தரப்புகளும் ஏற்றுக்கொண்டபோதிலும் எல்லை நிர்ணயம் உரிய முறையில் அமையாத நிலையில் அதனடிப்படையில் மாகாணசபைத் தேர்தலை நடத்த இணங்க முடியாதென அனைத்துக் கட்சிகளும் சுட்டிக்காட்டியுள்ள அதேவேளை, மாகாண சபைகளுக்கான தேர்தலைக் காலம் தாழ்த்தாது நடத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளன.

இதற்குரிய மாற்றுவழியாக மீண்டும் விகிதாசாரத் தேர்தல் முறையை கொண்டு வந்து பாராளுமன்ற அங்கீகாரத்தைப் பெற்று 2019 முற்பகுதிக்குள் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்குமாறும் கட்சித்தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன் தமக்கு வழங்கப்பட்ட இரண்டு மாத காலத்துக்குள் அறிக்கையை மீளாய்வு செய்ய முடியாதிருப்பதாகவும் ஏற்கனவே இரண்டு வாரங்கள் கடந்து விட்டதாகவும் மீளாய்வுக்குழு சுட்டிக்காட்டி மேலும் இரண்டு மாதகால அவகாசம் தேவையெனக் கோரியுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக மீளாய்வுக்குழு சபாநாயகரிடம் கடிதமூலம் கால அவகாசம் கோரிய நிலையில், நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மீளாய்வுக்குழுவுடன் கலந்துரையாடிய சபாநாயகர் கரு ஜயசூரிய குழு எவ்வளவு காலத்தை இதற்காக எடுக்கலாம் என்பதை மட்டுப்படுத்தமுடியாது ஆனால், மாகாண சபைத் தேர்தல்கள் காலம் கடத்தப்படுவதை அனுமதிக்கவியலாது எனவே விரைவாக அடுத்த ஜனவரியில் தேர்தல் நடத்துவதற்குரிய விதத்தில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, எல்லை நிர்ணய அறிக்கை சிறுபான்மை பிரதிநிதித்துவத்தைப் பாதிக்கும் என்பதன் காரணமாக அதனை முழுமையாக மாற்றியமைக்க வேண்டியதன் அவசியத்தை பெரும்பான்மையான கட்சித் தலைவர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். அதனைச் செய்து முடிக்க நீண்டகாலமெடுக்கலாம். அதுவரையில் மாகாண சபைத் தேர்தலைத் தள்ளிப்போட முடியாது. எனவே (பழைய முறையில்) விகிதாசார விருப்புவாக்கு முறையை மீளக்கொண்டு வந்து தேர்தலை தாமதமின்றி நடத்த வேண்டுமென கட்சித்தலைவர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். இந்த நிலைப்பாட்டுக்கு சுதந்திரக்கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய அமைச்சர் நிமல் சிறிபால டிசில்வா இதனை கடுமையாக ஆட்சேபித்திருக்கிறார். புதிய தேர்தல் முறைக்கு கையுயர்த்தி அங்கீகாரமளித்து விட்டு இப்போது பழைய முறைக்குச் செல்வதை எமதுகட்சி ஏற்றுக்கொள்ளாது எனச் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தச் சந்தர்ப்பத்தில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்குமிடையில் கடும் விவாதம் இடம்பெற்றுள்ளது. ஏனைய கட்சித் தலைவர்களும் நிமல் சிறிபால டிசில்வாவின் நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்ளமறுத்தனர். இந்த நிலையில் புதிய சட்டச்சிக்கல் தொடர்பாக எதிர்வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் பிரஸ்தாபித்து ஆரோக்கியமான முடிவொன்றைப் பெற்று அதனை அடுத்தவாரம் கட்சித் தலைவர்களை மீண்டும் சந்தித்துப் பேசுவதாக பிரதமர் தெரிவித்திருக்கிறார்.

முழுப் பாராளுமன்றமும் எல்லை நிர்ணய அறிக்கையை நிராகரித்திருக்கின்ற நிலையில் அதனை மீளாய்வு செய்யும் குழுவின் முடிவு செல்லுபடியாகுமா என்ற சட்டச்சிக்கல் மற்றொரு நெருக்கடியை தோற்றுவித்திருக்கின்றது. இதன் காரணமாக பழைய விகிதாசார முறையில் மாகாண சபைத்தேர்தலை நடத்துவது குறித்து கவனம் செலுத்துமாறு அறிக்கையின் மீளாய்வுக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான கலாநிதி ஏ.எஸ்.எம். நௌபல் யோசனையொன்றை முன்வைத்திருக்கின்றார். அது குறித்தும் அமைச்சரவையின் கவனத்துக்குக் கொண்டுவருவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

Comments