உணர்வுகளை கண்டுகொள்ளாதது ஏனோ? | தினகரன் வாரமஞ்சரி

உணர்வுகளை கண்டுகொள்ளாதது ஏனோ?

சிறைச்சாலைகளில் நிலவும் நிர்வாக்க குறைபாடுகள், மரணதண்டனை நிறைவேற்றப்படுவது என்பன அண்மைக்காலமாக அனைவராலும் பேசப்பட்டுவரும் விடயங்களாக உள்ளன. அவை பற்றிய வாதப்பிரதிவாதங்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. மேற்சொன்ன இரு விடயதானங்களையும் விவாதத்திற்குட்படுததாத இப்பத்தியாளர் வரையறுக்கப்பட்ட நான்கு சுவர்களுக்குள் வாழ்நாளை கழித்துவரும் சாதாரண கைதிகள் பக்கம் சற்றுத் திரும்பிப் பார்க்கிறார்.

“கைதிகளும் மனிதர்களே” என்ற கட்டுக்கோப்பான வாசகம் எழுதப்படாத சிறைச்சாலைகளே எமது நாட்டில் இல்லை என்று சொல்லலாம். ஆனாலும் அங்கெல்லாம் கைதிகள் மனிதர்களாக நடத்தப்படுகிறார்களா? சிறைச்சாலைகளில் விளக்கமறியல் கைதிகள், தண்டனை கைதிகள், மேன்முறையீட்டு கைதிகள் என சட்டரீதியாக 3 வகையினர் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள். எனினும் அவர்களை அரசியல் அதிகாரப்பலம் மிகுந்த கைதிகள், பணபலமுள்ள பாதாள உலகக்கைதிகள், சாதாரண கைதிகள் என்றே வெவ்வேறாக நடத்தப்படுகிறார்கள். இது இன்று நேற்று அல்ல பல தசாப்பங்களாக பின்பற்றப்பட்டு வரும் ஒரு “எழுதப்படாத சிறைவிதியாகவே” காணப்படுகின்றது. இருந்தாலும் அதிகாரிகள் மேடைப்பேச்சுக்களின் போது மட்டும் “சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்று சொல்லிக்கொள்வார்கள்.

ஏனோ தெரியவில்லை அரசியல் பலம் பொருந்தியவர்கள் சிறைச்சாலை அடைந்ததுமே அவர்களுக்கு வியாதிகள் தொற்றிவிடுவதனால் வைத்தியசாலைகளில் தடுத்து வைக்கப்படுகிறார்கள். இல்லை தங்கவைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கென சேவைச் சுகபோகங்கள் அனைத்தும் கையூட்டுக்கலையின் பெயரில் சிறப்பாக சென்றடைந்து விடுகிறது.

பணபலமுள்ள பாதாள உலக கைதிகள் சிறைக்குள்ளும் தாதாக்களாக வலம் வருகிறார்கள். இவர்களது கைக்கூலிகளாகவே அனேகமான சிறை அலுவலர்கள் தமது கடமையை முறையாக நிறைவேற்ற முற்படுகின்றபோது “நாளை உன் தலையை தெருநாய் நக்கவேண்டுமா?” என அச்சுறுத்தும் நிலை தொடர்கிறது.

இப்போது கடைநிலையில் உள்ள சாதாரண கைதிகள் பக்கம் திரும்பி பார்க்கலாம். இவர்கள் பண்னை அடிமைகள் போன்றே சிறைக்குள் பார்க்கப்படுகிறார்கள். சிறைச்சோற்றை நம்பியிருக்கும் இவர்கள் மீது மட்டும் தான் இறுக்கமான அனைத்து சிறைச்சட்டங்களும் பிரயோகிக்கப்படும். “சிறு தவறு கண்டாலும் சிறைத்தடிகள் பதில் சொல்லும்” என்ற வகையில் மன்னிப்பென்ற வார்த்தைக்கு அப்பாற்பட்டவர்களாகவே இவர்கள் மதிக்கப்படுகிறார்கள். சிறை அலுவலர்களுக்கு பிரத்தியேக சேவகம் செய்வது மட்டுமின்றி சிறைக்குள் இருக்கும் சிரே‌ஷ்ட கைதிகளுக்கும் கூட பணிவிடை செய்ய பழக்கப்படுகிறார்கள்.

சாதாரண கைதிகள் தடுத்து வைக்கப்படுகின்ற சிறை விடுதிகளில் உணவு, நீர், கழிப்பறை, படுக்கை வசதி போன்ற அடிப்படை தேவைப்பாடுகளின் போதாமைகள் எவராலும் கண்டுகொள்ளப்படுவதில்லை.

தண்டனைகள் கடுமையாக்கப்படுவதன் மூலம் குற்றங்களை கட்டுப்படுத்தலாமா?

தண்டனைகளை கடுமையாக்குவதன் மூலம் மட்டும் குற்றங்களையும் குற்றவாளிகளையும் கட்டுப்படுத்த முடியுமென்று பொதுமக்கள் மத்தியில் ஒரு பொதுமைக்கருத்து நிலவுகின்றது. உதாரணமாக போதைப்பொருள் குற்றச்சாட்டின் கீழ் ஒருவருக்கு நெடுநாள் சிறைத்தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ அல்லது மரணதண்டனை விதிக்கப்படும் பட்சத்தில் அந்தக்கைதியின் குடும்பங்களும் பிள்ளைகளும் எவ்வாறு சீவிக்க முடியும் என்றொரு கேள்வி மேல் எழுகிறது. அதற்கு அரசிடம் இதுவரை பதில் ஏதும் இல்லை. பல வருடங்கள் தண்டனைக் கைதிகளாக சிறையில் உள்ளவர்களின் மனைவி, பிள்ளைகள், பெற்றோர் எதிர்கொள்ளும் சமூக பொருளாதார பிரச்சனைகளுக்கு அரசிடம் தீர்வுப்பொறிமுறைகளும் இல்லை. இவ்விடத்தில் தான் இன்னுமொரு குற்றம் அல்லது குற்றவாளி உருவாக்கப்படுகிறார். அதிகரித்து செல்லும் வாழ்க்கை செலவில் இருந்து தம்மை தற்காத்துக்கொள்ளும் பொருட்டு சிறைத் தண்டனை அனுபவித்து வரும் கணவனின், தந்தையின் பிள்ளைகளின் அதே குற்றப்பாதையில் குடும்பமும் பயணிக்க வேண்டிய பரிதாப நிலை காணப்படுகிறது. குற்றவாளிகள் நீதியின் பால் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் பத்தியாளருக்கு மாற்றுக்கருத்தில்லை. மறுபக்கம் புதிய பல குற்றவாளிகள் உருவாகாமல் தடுப்பதும் அரசின் கடமை என்பது இங்கு சுட்டிக்காட்டப்படுகிறது. ஆகவே, சிறைச்சாலைகளில் உள்ள தண்டனைக் கைதிகளின் குடும்ப வாழ்வாதாரம் தொடர்பில் அரசாங்கம் சிந்திக்க தலைப்பட வேண்டும்.

சிறைக்கூடங்களுக்குள் கைப்பேசி பாவனையை கட்டுப்படுத்த முடியுமா?

ஒப்பந்த கொலைகளும் போதைப்பொருள் வியாபாரங்களும் பாதுகாப்பு மிக்க சிறைக்கூடங்களில் இருக்கும் பாதாள உலக நபர்களால் கைப்பேசி ஊடாக திட்டமிடப்பட்டு வெளியில் உள்ள அவர்களின் சகாக்களால் செவ்வனே நிறைவேற்றப்பட்டு வருகிறது என காவல்துறை தெரிவிக்கிறது. உண்மைதான் அதனை கட்டுப்படுத்த சிறைத்துறை எத்தகைய நடவடிக்கைகளை எடுத்துள்ளது? சிறைச்சாலைகளை சோதனையிடுவதற்கென விசேட ஆளணிகளை மறுசீரமைத்துள்ளது. “ஸ்கானர்” “ஜாமர்” போன்ற அதிநவீன கருவிகளை சிறைக்குள் பொருத்தியது. அதற்கும் அப்பால் சென்று பல சிறை அதிகாரிகளையும் காவலர்களையும் அதிரடியாக இடமாற்றம் செய்தது. ஆனாலும் மேற்சொன்ன குற்றங்களையும் கட்டுப்படுத்த முடிந்ததா? இல்லை. அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்ட முன்னாள் சிறைச்சாலை புலனாய்வு பிரிவு காவலர் ஒருவரிடம் கேட்ட போது அவர் “சம்பளத்தை அதிகரிக்காமல் இலஞ்சம் வாங்குவதை ஒரு நாளும் கட்டுப்படுத்த முடியாது.

அத்துடன் நாம் வேலை நிறுத்தங்களை செய்து தொழிற்சங்க போராட்டங்களில் ஈடுபட்டு சம்பள அதிகரிப்பை கோர முடியாத பணியாளர்களாக இருக்கின்றோம்” என்றார். அரசாங்கம் இது தொடாபில் பரீட்சித்து பார்க்கலாம். நகரத்தை அண்டியுள்ள சிறைச்சாலைகள் புறநகர் பிரதேசங்களுக்கு மாற்றுவதன் ஊடாக பல்வேறு நன்மைகள் அடைய முடியும். சிறைச்சாலைக்குள் குற்றச்செயல்களை கட்டுபடுத்த சிறைத்துறை இதய சுத்தியுடன் செயற்படுவதாக இருந்தால் கைதிகளை அவர்களின் குற்றப்பின்னணிக்கு அமைய வெவ்வேறாக வகைப்படுத்தி பராமரிக்க முடியும். அதன் மூலம் போதைப்பொருள் பாவனையாளர்களையும் வியாபாரிகளையும் தடுத்து வைத்திருக்க கூடிய விடுதிகள் மீது விசேட கவனம் செலுத்தி கண்காணிப்புக்களை மேற்கொள்ள முடியும்.

கைதிகள் தமது உறவினர்களை பார்த்துப் பேசுவதற்கென அமைக்கப்பட்டுள்ள மிகக்குறுகிய அறைக்குள் கண்ணாடி அல்லது 3க்கும் மேற்பட்ட நெற்றுக்களால் தடுப்பமைக்கப்பட்ட நிலையில் அளவுக்கதிகமானவர்களை உள்ளீர்த்து வெறும் 10- முதல் 15 நிமிடங்கள் மட்டும் கதைப்பதற்கு அனுமதிக்கப்படுகின்றது. இது போதுமா? என்னதான் குற்றவாளிகளாகவோ சந்தேக நபராகவோ இருந்தாலும் அவர்களும் மனிதர்கள் அல்லவா? அவர்களுக்கென்றும் மனைவி பிள்ளைகள் பெற்றோர் என உற்ற உறவுகளை பார்த்து பேச வேண்டுமென்ற உணர்வு இருக்கும் அல்லவா? இவ்விடத்தில் மிக நீண்ட காலமாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கொழும்பு, கண்டி அனுராதபுரம் போன்ற சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் நிலை பரிதாபத்திற்குரியது.வடக்கு கிழக்கு மலையக பகுதிகளை சேர்ந்த இவர்களது உறவினர்கள் 3-4 மாதங்களுக்கொரு தடவையே தமது உறவுகளை பார்க்க சிறைக்கு செல்கிறார்கள். சிறைக்கூடங்களுக்குள் கைப்பேசி பாவனையை தடுக்கவேண்டும் குற்றங்களை கட்டுப்படுத்த வேண்டும் என பாசாங்கு செய்யும் சிறைத்துறையினர் கடைநிலை கைதிகளின் உணர்வுகளை கண்டுகொள்ளாதது ஏனோ?. வகைப்படுத்தப்பட்ட கைதிகளின் வசதிக்கேற்ப சிறைச்சாலைகள் தோறும் கண்காணிப்பு பொறிமுறையுடன் கூடிய பொதுத்தொலைபேசி கட்டமைப்புக்களை ஏற்படுத்தி கட்டுப்பாட்டு அடிப்படையில் கைதிகளின் பாவனைக்கு வழங்கமுடியும். கைதிகள் அவரவர் வாழ்விடங்களுக்கு அண்மையில் உள்ள சிறைச்சாலைகளுக்கு மாற்றுவதன் மூலம் அனேகமான பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்க முடியும்.

புலோலியூர் காவியா

 

Comments