வடஇ தென் கொரிய தலைவர்களின் சந்திப்பும் அமெரிக்காவின் அணுகுமுறையூம் | தினகரன் வாரமஞ்சரி

வடஇ தென் கொரிய தலைவர்களின் சந்திப்பும் அமெரிக்காவின் அணுகுமுறையூம்

கொரியர்கள் திகைப்பூட்டும் அரசியலை அடிக்கடி வெளிப்படுத்திக் கொண்டு வருகின்றனர். உலக அரசியலில் 2018 அவர்களது அரசியலாகவே பதிவாகி வருகின்றது. அணுவாயுதப் பரிசோதனையிலும் சரி, சமாதானத்திலும் சரி அவர்களது பங்கு உலக வரலாற்றை புதிய திசைக்கும் நகர்த்தி வருகிறது. இதன் வரிசையில் முடிந்த வாரத்தில் வட−தென் கொரியத் தலைவர்களது சந்திப்பு மீண்டும் நிகழ்ந்துள்ளது. இதன் அரசியல் பக்கத்தினை புரிவதே இக்கட்டுரையின் வெளிப்பாடாகும்.

உலகத்தின் போக்கில் உரையாடல் இராஜதந்திரம் அதிக தாக்கத்தினை ஏற்படுத்தக்கூடியது. இருபத்தியோரம் நூற்றாண்டில் எழுச்சி பெற்றுள்ள மென்அதிகார தந்திரோபாயம் உரையாடலை மிகச்சிறந்த முதலீடாக கொண்டு இயங்குகிறது. உரையாடல் மூலம் அழிந்துபோன ஆட்சிகளும், ஆயுதப் போராட்டங்களும் ஏராளம். வெற்றிகரமான முறியடிக்க முடியாத தலைமைகளை எல்லாம் உரையாடல் மூலம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும் என்பதை இந்த இராஜதந்திரம் உணர்த்துகிறது. நம்பிக்கையூட்டும் வார்த்தைகளும் உடல்மொழியும், மீள மீள உரைப்பதும் உணர்ச்சியற்று உரையாடுவதும் எனப் பல தளத்தில் உரையாடல் இராஜதந்திரம் நாடுகளால் நகர்த்தப்படுகிறது. தனித்துவமாகவும் சுயமாகவும் ஒரு தலைமையை செயல்படவிடுவதென்பது உறுதியான நிலைத்திருக்கும் முடிவுகளுக்கு இட்டு செல்லும் என உரையாடல் இராஜதந்திரம் கருதுகின்றது. இதனால் இடைவிடாது தமது எண்ணத்தையும், கருத்தையும் ஊட்டிக் கொண்டிருத்தல், மீள மீள வலியுறுத்தல், பாராட்டுதல் அல்லது புகழாரம் செய்தல், அத்தகைய ஆட்சியாளன் வேகத்தை அதே திசையில் வேகப்படுத்தல் என்பனவற்றைக் குறிப்பிடலாம்.

இவ்வகை உத்தியையே வடகொரியா மீது அமெரிக்க ,தென்கொரிய கூட்டு வெளிப்படுத்துகிறது. கடந்த வாரம் தென் கொரியா தனது கடற்படையில் தாக்குதல் திறன் கொண்ட ஏவுகணையை இணைத்துக் கொண்டது. அதற்கு முன்பு வடகொரியா தனது எழுபதாவது சுதந்திர தினத்தில் அணுவாயுதமில்லாத அணிவகுப்பொன்றை நிகழ்த்தியது. இது அமெரிக்க ஜனாதிபதியின் டுவிட்டர் பக்கத்தில் பாராட்டப்பட்டதுடன் உலகளாவிய மட்டத்திலும் வரவேற்புக் கிடைத்தது.

மேற்குறித்த இரண்டு விடயமும் இரு நாட்டுக்குமான உறவில் சற்று விரிசலை ஏற்படுத்தத் தொடங்கியது. வடகொரிய பாதுகாப்பு விவகாரத்திற்கான வராந்த சந்திப்பில் தென்கொரியாவின் ஏவுகணை விவகாரம் உரையாப்பட்டது. இது இயல்பாக விரிசலை ஏற்படுத்திவிடும் என்ற உணர்வு தென்கொரிய அமெரிக்க தரப்பிடம் ஏற்பட்டது. இதனை எப்படி சரிசெய்வதென்ற உரையாடலின் விளைவாகவே தென்கொரிய ஜனாதிபதியும் அவரது துணைவியாரும் வடகொரியாவுக்கு திடீர் விஜயத்தினை மேற்கொண்டார்.

அதுமட்டுமல்லாது அமெரிக்க ஜனாதிபதியுடனான சிங்கப்பூர் சந்திப்பிற்கு பின்னர் வடகொரிய அமெரிக்க புரிதலில் சரியான வெளிப்பாடு இல்லாதிருந்தது. அதில் குறிப்பாக வடகொரியாவின் ஒரு தலைப்பட்சமான அணுவாயுத பரிசோதனைக்கான நிலையங்களை அழித்தமை அதன் பின்னர் சற்றிலைட் ஒளிப்படங்களில் வெளியான காட்சிகள் இரு தரப்பையும் சந்தேகிக்கத் தூண்டியது. அதாவது வடகொரியா அழித்ததாக குறிப்பிட்ட அணுவாயுத நிலையங்களில் வாகனங்கள் நடமாட்டத்தை தாம் இனங்கண்டதாகவும் வடகொரியா அணுவாயுதத்தினை தயாரிப்பதாகவும் சி. ஐ. ஏ ஐ ஆதாரம் காட்டி அமெரிக்கா குற்றஞ்சாட்டியது.

இத்தகைய அதிருப்தியை எப்படிக் குறைப்பதென்ற எண்ணமும் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவிடம் எழுந்தது. இதன் பிரதிபலிப்பாகவே இத்தகைய திடீர் விஜயம் நிகழ்ந்துள்ளது. அதனை மேலும் தெளிவுபடுத்த அவர்கள் உரையாடிய விழுமியங்களை நோக்குவது பொருத்தமாக அமையும்.

இச்சந்திப்பின் பிரதான நோக்கம் இரு கொரியர்களுக்கும் இடையில் மேலதிக ஒத்துழைப்பையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துதல், அணுவாயுத ஒழிப்பு விடயத்தில் அமெரிக்காவுக்கும் வடகொரியாவிற்கும் இடையில் மத்தியஸ்தராக செயல்படுதல் என தென்கொரிய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இரு தலைவர்களும் சந்தித்து உரையாடிய பின்பு கூட்டாக செய்தியாளர் முன்னிலையில் வெளியிட்ட அறிக்கையிலும் மேற்குறித்த திடீர் விஜயத்திற்கான காரணத்தினை உணர முடிந்தது. அதில் தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன் குறிப்பிடும் போது,

வடகொரியா அதன் முக்கிய அணுவாயுத ஏவுகணை சோதனைக்கான நிலையங்களை நிரந்தரமாக அழிப்பதற்காக ஒப்புக் கொண்டுள்ளது. அணுவாயுதம் மற்றும் அணுசக்தி பிரயோகம் இல்லாத கொரிய தீபகற்பம் மாற வடகொரியா சம்மதம் தெரிவித்துள்ளது. வடகொரியா அதன் அணுவாயுத சோதனை நிலையங்களை வெளிநாட்டு நிபுணர்கள் முன்னிலையில் நிரந்தரமாக அழிக்க அந்நாடு ஒப்புக் கொண்டுள்ளது. மேலும் அமெரிக்காவின் பரஸ்பர நடவடிக்கையைப் பொறுத்து மீதமுள்ள அணுவாயுத சோதனை நிலையங்களையும் அழிப்பதாக வடகொரியா தெரிவித்துள்ளது என்றார்.

வடகொரிய ஜனாதிபதி கிம் குறிப்பிடும் போது,

நான் எதிர்காலத்தில் முன் ஜே இன் ஐ தென்கொரியாவில் சந்திப்பேன் என்று தெரிவித்தார். இருவரது வெளிப்பாடுகளும் தெளிவற்ற நட்புறவையே காட்டுகிறது. உடல் மொழிகள் போன்று அவர்களது உள மொழிகள் அமையவில்லை என்பதையும் உணர்தல் அவசியமானது.

இதேநேரம் அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மைக்பாம்பியோ மீண்டும் வடகொரியாவுடன் பேசப்போவதாக அறிவித்துள்ளார்.

அவர் தனது அறிக்கையில் அணுவாயுத தயாரிப்பிற்கான நிலையங்களை அழிக்க வடகொரியா ஜனாதிபதி கிம் ஒப்புக்கொண்டதையடுத்து வடகொரியாவுடன் தான் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்போவதாக அறிவித்துள்ளார். சிங்கப்பூர் உச்சி மாநாட்டில் அணுவாயுதங்களை முழுமையாக கைவிடுவதற்கு அளித்த உறுதியை எப்படி நிறைவேற்றிக் காட்டுவது என்பது தொடர்பாக வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடாத்த தாம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேற்குறித்த அறிவிப்புக்கள் எல்லாவற்றிலும் ஒரு தரப்பாக நகர்வதனை காணமுடிகின்றது. அணுவாயுதத்தை கைவிடுவது பற்றியோ, அதன் நிலைகளை அழிப்பது பற்றியோ, வடகொரியா ஜனாதிபதி பத்திரிகையாளர் முன்னிலையில் கருத்து எதனையும் முன்வைக்கவில்லை என்பதை அவதானிக்க முடிகிறது. மறுபக்கத்தில் தென்கொரிய, அமெரிக்க தரப்பே அத்தகைய கருத்தினை வலியுறுத்தி உரையாடுவதாக உள்ளன. இதன் மூலம் வடகொரிய ஜனாதிபதி ஏதோ ஒரு விடயத்தை அடைய விரும்புவதைக் காணமுடிகின்றது.

அதனை எட்டும் வரை முழுமையான பிடியை விடாது செயல்படுவது போல் அவரது செயல் விளங்குகிறது.

வடகொரியாவின் பலம் அணுவாயுதம் மட்டுமே. அதற்காகவே தென்கொரியாவும் அமெரிக்காவும் இவ்வளவு இறங்கி வந்துள்ளன அதனை நன்கு உணர்ந்தவராகவே கிம் காணப்படுகின்றார். அதனால் இலகுவில் அணுவாயுதத்தினை கிம் கைவிடுவார் எனக் கணக்குப் போடமுடியாது.

ஆனால் அணுவாயுத தயாரிப்பு நிலையங்களை அழிப்பதென்பது சாத்தியமாகலாம். அதிலும் பலவீனப்பட்டுபோயுள்ள நிலைகளை அழித்துவிடுவதென்பது வடகொரியாவிற்கு சாதாரண விடயமாகவே அமையும். அவ்வகை அழிவுக்குள்ளாகும் தறுவாயிலுள்ள நிலைகளை அழிப்பதற்காக தான் அமெரிக்கா நகர்கின்றதா என்ற கேள்வியும் இயல்பானது. எதுவாயினும் அணுவாயுதத்தினையும் அதற்கான ஏவுகணைத் தொழில்நுட்பத்தினையும் உலகம் எச்சரிக்கைவிடுக்கின்ற போதெல்லாம் அசட்டை செய்துவிட்டு தற்போது அழிக்குமென கணக்குப் போடுவது மிக தரக்குறைவான எண்ணமாகும். எதனை அழித்தாலும் அணுவாயுத தொழில்நுட்பத்திற்கான அறிவையும், திறனையும் வடகொரியர் கொண்டிருக்கும் வரை அந்நாட்டு இராணுவ சமநிலையில் பலமானதேயாகும்.

எனவே தென்கொரிய ஜனாதிபதியின் வடகொரிய விஜயம் மீளவும் உடல் மொழியின் அசைவுகளை உலகத்திற்கு காட்டியுள்ளது. சந்திப்பு வடகொரியத் தலைவரை தனது திசைக்கு போகவிடாது தடுப்பதாக அமைந்தாலும், வடகொரியத் தலைவரின் போக்கு தனித்துவமானதாகவே உள்ளது. எனவே இந்தப்போக்கின் நீட்சி பல ஆண்டுகளுக்கு தொடர வாய்ப்புள்ளது.

கலாநிதி கே.ரீ. கணேசலிங்கம் யாழ்.பல்கலைக்கழகம்

 

Comments