ஒரு பயிற்சியாளர் சுயமாக இயங்கினால் சிறந்த அணி உருவாகும் | தினகரன் வாரமஞ்சரி

ஒரு பயிற்சியாளர் சுயமாக இயங்கினால் சிறந்த அணி உருவாகும்

தெற்காசிய உதைபந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை அணி நாணயச் சுழற்சியில் தோல்வியுற்றதால் அரையிறுதி வாய்ப்பை இழந்து தொடரிலிருந்து வெளியேறியமை இலங்கை உதைபந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்திருந்தது.

கடந்த பல வருடங்களாக பின்னடைவை அடைந்திருந்த இலங்கை உதைபந்தாட்ட அணியை பங்களாதேஷ், மாலைதீவு அணிகளின் சிறந்த பயிற்சியாளராக கடமையாற்றிய பக்கீர் அலியின் சேவையைப் பெற்றதிலிருந்து இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணி முன்னேறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இம்முறை நடைபெற்ற தெற்காசியத் தொடரில் பலம்வாய்ந்த இந்திய அணியுடனான போட்டியில் இறுதி வரை போராடியே தோல்வியுற்றது.

தனது இரண்டாவது போட்டியிலும் மலைதீவுடன் விறுவிறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கடைசியில் போட்டியை வெற்றி தோல்வியின்றி முடித்துக் கொண்டது. மாலைதீவு அணியுடன் கடந்த 1999ம் ஆண்டுக்குப் பிறகு போட்டியை சமநிலையில் முடித்துக்கொண்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும். இதற்குமுன் 2005, 2008, 2009 களில் நடைபெற்ற போட்டிகளில் மாலைதீவு அணியிடம் தோல்வியுற்ற இலங்கை அணி 2013ஆம் ஆண்டு அவ்வணியுடன் நடைபெற்ற போட்டியில் 1 0- -0 என்ற கோல் கணக்கில் படுமோசமாகத் தோல்வியடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பின் பின்னடைவைநோக்கி நகர்ந்த இலங்கை உதைபந்தாட்ட அணி புதிய தேசிய உதை பந்தாட்ட பயிற்றுவிப்பாளர் பக்கீர் அலியின் முயற்சியினால் மீண்டெழ ஆரம்பித்துள்ளது. அண்மைய தொடர் பற்றியும் தனது பயிற்சி பற்றியும் அவர் கூறுகையில்:

இலங்கை உதைபந்தாட்ட அணியின் வெற்றி, தோல்விகளின் பொறுப்பை தான் ஏற்றுக் கொள்கிறேன். இன்னும் 5 வருடங்களில் இலங்கை உதைபந்தாட்ட அணியை உச்ச நிலைக்குக் கொண்டு வர தன்னால் முடியும் என்றும் அவர் தெரிவித்தார். “எனது பயிற்சிக்காலம் இன்னும் இரண்டு வருடங்களில் முடிவடைந்துவிடும் தொடர்ந்தும் என்னை பயிற்சியாளராக வைத்திருப்பதா என்பதைத் தீர்மானிக்க வேண்டியது இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனமே. நான் பதவியேற்ற கடந்த ஏழு மாதங்களில் இலங்கை உதைபந்தாட்ட அணியில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. குறுகிய கால இந்த முன்னேற்றத்துக்கு எனது பயிற்றுவிப்புடன் இலங்கை உதைபந்தாட்ட வீரர்களின் ஒற்றுமையும், தன்னம்பிக்கையுமே காரணம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இப்பிராந்தியத்தின் பிரபல உதைபந்தாட்ட நாடுகளான இந்தியா, மாலைதீவு, பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் பின்தங்கிய விளையாட்டுக் கழக அணிகளுக்கு பயிற்சியளித்து அக்கழக வீரர்களை தொழில் ரீதியான கழகங்களில் விளையாடும் அளவுக்கு முன்னேற்றியுள்ளேன்.

இங்கு ஒரு பலமிழந்த அணியை கட்டியெழுப்பும் பணியே எனக்குக் கிடைத்தது. அவர்களுக்கான பயிற்சியை அடிமட்டத்திலிருந்தே ஆரம்பித்தேன். இப்போது தேசிய அணியில் நல்ல மனவலிமையுடன் விளையாடக்கூடியவர்கள் பலர் உள்ளனர். மேலும் முன்னேறுவதற்கான பல திட்டங்களை வகுக்க வேண்டும்.

இங்கு பாடசாலை, மற்றும் உதைபந்தாட்ட சங்கப் பயிற்சியாளர்களுக்கு எப்படி திறமையான தொழில் ரீதியிலான ஒரு அணியை உருவாக்குவதற்தென்ற ஆலோசனையை அவர்களுக்கு வழங்க வேண்டும். முக்கியமாக இங்கு நடைபெறும் எப் ஏ. கிண்ணத் தொடர்களை அவதானித்து அதில் விளையாடும் திறமையான வீரர்களை அடையாளம் கண்டு அவர்களை அணுக வேண்டும். நல்ல பல வீரர்கள் கிராமப்புறங்களில் உள்ளனர். அவர்களில் திறமையானவர்களை இனம் கண்டு தேசிய அணியில் இணைத்துக் கொள்ள வேண்டும். புதிய இளம் வீரர்கள் அணிக்கு அவசியம். புதிய அணுகுமுறைகளின்றி நல்லதொரு அணியை உருவாக்க முடியாது.

நான் பயிற்சியாளராக பதவியேற்றதும் பழைய முகங்களே அவ்வணியில் இருந்தனர். திறமையானவர்கள் தேசிய அணிக்கு வெளியே இருந்தார்கள். நான் அவர்களை இனங்கண்டு பயிற்சியளித்தேன். ஒரு வாரத்துக்கு நான்கு நாள் பயிற்சியளிக்கின்றேன். மேலும் கிழமையில் ஒருநாள் கடற்கரை மணலில் பயிற்சி பெறுவதையும் கண்டிப்புடன் செயற்படுத்தினேன். சிறந்த ஒரு திட்டத்துடன் நாங்கள் இயங்கினோம். வீரர்களுக்கு அவசியமான உணவு மற்றும் விட்டமின்களை உதைபந்தாடட் சம்மேளனம் பெற்றுத் தந்தது. இப்போது திடீரென ஒரு சிரேஷ்ட வீரர் உபாதைக்குள்ளானால் அவ்விடத்தை நிவர்த்திக்க இளம் வீரர்களை தயார் செய்துள்ளோம். 23 வயதின் கீழ் திறமையான 18 வீரர்கள் உள்ளனர். அவர்களுக்கு போட்டி அனுபவங்களைப் பெற்றுக்கொடுக்க சர்வதேச மட்டத்திலான போட்டிகள் அவசியமாகின்றது.

வெளிநாட்டுப் பயிற்சியாளர்கள் பற்றிக் கூறும் போது: இங்கு பிரேஸில், கொரிய பயிற்சியாளர்களின் சேவைக் காலத்தின் போது இலங்கை உதைபந்தாட்டம் முன்னேறியதா? அக்காலத்தில் எங்கள் அணிக்கெதிராக எதிரணியினர் 10 கோல் அடித்த நிகழ்வுகளும் நடந்துள்ளது. அப்படியான பயிற்சியாளர்களுக்கு இங்கு மொழிப் பிரச்சினையுமுள்ளதால் வெளிநாட்டுப் பயிற்சியாளர்களின் கீழ் நமது வீரர்கள் பின்னடைவுகளையே சந்தித்தனர்.

எம். எஸ். எம். ஹில்மி...

Comments