இலங்கையின் சுற்றுலாத்துறை; ஊக்குவிப்பதில் எதிர்கொள்ளும் தடைகளை வெளிப்படுத்திய AGSEP | தினகரன் வாரமஞ்சரி

இலங்கையின் சுற்றுலாத்துறை; ஊக்குவிப்பதில் எதிர்கொள்ளும் தடைகளை வெளிப்படுத்திய AGSEP

ஸ்மார்ட் சந்தைப்படுத்தல் மூலம் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதன் மூலம் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என பரிந்துரை அங்கீகாரம் பெற்ற வர்த்தக ரீதியற்ற அரச சார்பு அமைப்பான ஆசிய ​ெஜர்மன் விளையாட்டு பரிமாற்றுத்திட்டம் (AGSEP) அண்மையில் வெளியிட்ட ஆய்வறிக்கையில் சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பது மற்றும் முதலீடு செய்வதில் காணப்படும் தடைகள் பற்றிய உள்ளார்ந்த விடயங்கள் வெளிகொணரப்பட்டுள்ளன.

கொழும்பு கலதாரி ஹோட்டலில் கடந்த 11ஆம் திகதியன்று நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் இது தொடர்பான அறிவிப்பு வெளியானது. நாட்டின் அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்கிவரும் AGSEP இன் இவ்வறிக்கையானது சுற்றுலாத் தொழிற்துறையில், அதன் வளர்ச்சி மற்றும் பொருளாதார நன்மைகளில் காணப்படும் இடையூறுகள் உள்ளிட்ட முக்கிய விடயங்களைப் பகிரங்கப்படுத்தியுள்ளது.

ஆசியாவில் பிரபலமிக்க ஏனைய சுற்றுலாத் தளங்களுடன் ஒப்பிடுகையில், இலங்கை இன்னமும் செயற்திறன் குறைந்த இலக்காக உள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆசிய நாடுகளுக்கு வருடாந்தம் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் முறையே 35 மில்லியன் மற்றும் 26 மில்லியனைப் பதிவுசெய்துள்ளன.

வியட்னாமில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 10 மில்லியனாகவும், பிலிப்பைன்ஸில் 5 மில்லியனாகவும், லாவோஸில் 3 மில்லியனாகவும் காணப்படுகின்றன. ஒப்பீட்டளவில் இலங்கைக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஏறத்தாழ 2 மில்லியன்களாக மாத்திரமே காணப்படுகின்றமை இந்த ஆய்வின் புள்ளிவிபரங்கள் ஊடாகப் புலனாகிறது.

இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள உதாரணத்துக்கு அமைய 2007ஆம் ஆண்டு தாய்லாந்தின் பட்டாயா நகரில் 6.2 மில்லியனாகக் காணப்பட்ட சுற்றுலாப் பயணிகளின் வருகை விளையாட்டுக்கள் மற்றும் நிகழ்வுகளை அதிகரித்ததன் மூலம் 2015ஆம் ஆண்டு 9.2 மில்லியனாக அதிகரித்துள்ளது. இதுபோன்று மலேசியாவின் லங்காவி உள்ளூர் அதிகாரிகளுடன் பரஸ்பர விளையாட்டு பரிமாற்றுத் திட்டத்தின் ஊடாக இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் விகிதாசாரத்தையும் அதிகரிக்க முடியும்.

இதற்கு மேலதிகமாக ஊக்குவிப்புப் பிரசாரங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் வருடாந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை போன்றவற்றுக்கிடையில் காணப்படும் தொடர்புகளையும் இந்த அறிக்கை கோடிட்டுக் காட்டியுள்ளது. வியட்னாம் மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் சுற்றுலாத்துறை ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு கவர்ச்சியான நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படுகின்றபோதும், இலங்கையில் மிகவும் மோசமான ஒதுக்கீடே மேற்கொள்ளப்படுகிறது.

மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு பங்களிப்புச் செலுத்துவதில் நாட்டின் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறை ஆகியவற்றுக்கிடையில் காணப்படும் முக்கியமான தொடர்புகளும் இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

Comments