வெளியாருக்கு கையளிக்கப்படும் அரச தோட்டக் காணிகள் | தினகரன் வாரமஞ்சரி

வெளியாருக்கு கையளிக்கப்படும் அரச தோட்டக் காணிகள்

செங்கொடிச் சங்கத்தின் பொருளாளர்

ஆனந்தி சிவசுப்பிரமணியம்

அரச நிர்வாகத்தின் கீழ் இயங்கிவரும் தோட்டங்களின் தற்போதைய நி​ைலமை தொடர்பாக என்ன நினைக்கின்றீர்கள்?

அரசுக்கு சொந்தமான கம்பனிகளான அரச பெருந்தோட்ட யாக்கம், ஜனவசம, எல்கடுவ ஆகியவற்றின் நிர்வாகத்தின் கீழ் இயங்கிவருகின்ற தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் இன்று பல்வேறு சவால்களுக்கும் பிரச்சினைகளுக்கும் முகங்கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த பல வருடங்களாக தோட்டங்கள் முறையாக பராமரிக்கப்படாமல், தேயிலை மீள் நடுகைக்குட்படுத்தப்படாமல், வளங்கள் சூறையாடப்பட்டது மட்டுமன்றி தற்போது நிர்வாக சீர்குலைவும் ஏற்பட்டு கைவிடப்பட்ட நிலையிலேயே தோட்டங்கள் காணப்படுகின்றன.

தற்போதைய நிலையில் தோட்டங்களில் புதிய முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை காண்கிறீர்களா? தோட்டங்கள் கைவிடப்பட்டுள்ளன என்று எவ்வாறு கூறுகிறீர்கள்?

அரசின் புதிய P P P கொள்கைத்திட்டத்திற்கு அமைவாக தோட்டங்களில் அதிகமான தனியார் உரிமையாளர்கள் முதலீடு செய்துள்ளார்கள். பலர் முதலீடுகளை மேற்கொள்ளவும் காத்திருக்கிறார்கள். ஆனால் இம்முதலீடுகள் அனைத்தும் விவசாயம் சார்ந்ததாகவோ, தேயிலைத் தோட்டங்களை புனரமைத்து அவற்றை மேம்படுத்தும் திட்டங்களாகவோ இருக்கவில்லை. தேயிலை உற்பத்தியை மீண்டும் பலப்படுத்த இயலாது என்ற அடிப்படையில் தற்போது சற்று செழிப்பாக காணப்படும் தேயிலைச் செடிகளை பராமரித்துக் கொண்டு ஏனைய நிலப்பரப்பில் மாற்று செய்கைகளுக்கான திட்டங்களே முன்மொழியப்பட்டுள்ளன. உதாரணமாக மாடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, காடு வளர்ப்பு மற்றும் சில தேயிலை தொழிற்சாலைகள் தனியாருக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டு அவை இயங்க ஆரம்பித்துள்ளன. சுற்றுலாத்துறையை ஊக்குவித்தல் போன்ற திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் இம்முதலீடுகள் தொடர்பாக தொழிலாளர்களுடன் எவ்விதமான கலந்துரையாடல்களும் மேற்கொள்ளப்படவில்லை என்பதோடு அதிகமான தோட்டங்களில் தொழிலாளர்களுக்கு தெரியாமலேயே முதலீட்டாளர்களிடம் தோட்டங்கள் கைமாற்றப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் காரணமாகவும் இங்குள்ள புதிய சூழல் காரணமாகவும் தொழிலாளர்கள் எதிர்கொள்ள இருக்கும் சவால்களுக்கு எவ்வாறு முகம் கொடுக்கப்போகின்றார்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஒரு நாட்டின் பொருளாதார அபிவிருத்தி அல்லது ஒரு துறையின் அபிவிருத்தி அந் நாட்டுக்கும் அங்குள்ள மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் காணப்பட்டால் மாத்திரமே அது உண்மையான அபிவிருத்தியாகும். அதைவிடுத்து முதலாளிகளின் இலாபத்தையும் அரசுக்கான வருமானத்தையும் மட்டும் குறிக்கோளாக கொண்ட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்போது அதனை எவ்வாறு சிறந்த அபிவிருத்தியாக கருத முடியும்? ஆகவே தற்போது காணப்படுகின்ற தோட்டங்களும் அங்கே வாழ்வாதாரத்தை நம்பியிருக்கின்ற தொழிலாளர்களும் கைவிடப்பட்டுள்ளார்கள் என்பதே உண்மையான நிலமையாகும்.

தோட்டங்கள் கைவிடப்பட்டுள்ள நிலையில் தொழிலாளர்கள் எவ்வாறான பாதிப்புகளுக்கு முகம் கொடுப்பார்கள்?

தற்போது அரச தோட்டத்தொழிலாளர்கள் மிகவும் மோசமான நிலையில் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களுடைய வேலை நாட்கள் வெகுவாக குறைய ஆரம்பித்துள்ளது. தோட்டங்களின் பரப்பளவு குறைந்து வருதல் அதாவது தோட்டங்களை காடுகளாக மாறவிட்டு அவற்றை பராமரிக்காமல் இருப்பதன் காரணமாக தொழிலாளர்கள் வேலை நாட்களை இழந்து வருகின்றார்கள். மாதத்தில் 09 தொடக்கம் 20 நாட்கள் மட்டுமே வேலை வழங்கும் தோட்டங்களும் காணப்படுகின்றது. இதன் காரணமாக தொழிலாளர்கள் அதிகரித்த வறுமைக்கு தள்ளப்பட்டு வருகின்றார்கள்.

மேலும் தோட்டங்கள் காடுகளாக மாறியிருப்பதன் காரணமாக பாம்பு, பன்றி, மான், குளவி உட்பட பல பிராணிகளினால் தொழிலாளர்கள் தாக்கப்படுவதோடு, வேலைத்தளத்தில் உடல்நல பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றார்கள். அத்துடன் தொழிலாளர்களின் தொழில்சார் உரிமைகள் அரச தோட்டங்களை பொருத்தவரையில் அதிகளவில் பாதுகாக்கப்படவில்லை என்பதே உண்மை. இதன் காரணமாக தனிப்பட்ட தொழிலாளி மட்டுமல்லாது அவர்களது குடும்பங்களும் இப்பிரச்சினையினால் பாதிக்கப்படுகின்றனர் என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தோட்டங்களில் புதிய முதலீடுகள் ஆரம்பிக்கப்படுகின்ற சந்தர்ப்பத்தில் அம் முதலீடுகளுக்கு ஏற்ற வகையில் அங்குள்ள சூழல் மாற்றியமைக்கப்படும். புதிய மற்றும் கல்வி கற்ற தொழிலாளர்கள் தேவைப்படுகின்ற பட்சத்தில் வெளிப்பிரதேசங்களில் இருந்து புதிய தொழிலாளர்கள் தோட்டங்களுக்கு உள்வாங்கப்படுவார்கள். தொழில் துறையின் தேவையின் பொருத்து இயந்திரமயமாக்கம் அதிகரிக்கும். அதன்போது தோட்டத்திலுள்ள தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடும். தோட்டப்புறங்களை பொருத்தவரையில் தொழிலாளர்களின் குடியிருப்புகள் தோட்டங்களுக்குள்ளேயே காணப்படுகின்றது. தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற முதலீடுகளின் காரணமாக தொழிலாளர்களுடைய குடியிருப்பும் பிரச்சினையாக மாறிவருகின்றது இவ்வாறு பல்வேறுபட்ட சவால்களை இத்தொழிலாளர்கள் சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

தோட்டங்களில் வேலை செய்வதற்கு தொழிலாளர்கள் இல்லை என்ற காரணத்தினால் அதிகமான தோட்டங்கள் மூடப்படுவதாக பரவலாக பேசப்படுகிறது. இது பற்றிய உங்களது கருத்தென்ன?

ஒரு தொழில் துறையானது தொழிலாளர்களை கவரக்கூடிய வகையில் காணப்படுவது மிகவும் அவசியமாகும். ஆனால் தோட்டத்துறையை பொருத்தவரையில் அங்கு காணப்படுகின்ற அதிகார கட்டமைப்பு, தொழில் உரிமைகள் மறுக்கப்படுகின்ற நிலை, தொழிலாளர்களுக்கான உடல்நல பாதுகாப்பில் கவனமற்ற தன்மை மற்றும் குறைந்த சம்பளம் என்ற பல்வேறுபட்ட காரணங்கள் இளம் தொழிலாளர்கள் இத்தொழிலை விரும்பி செய்யாததற்கு காரணங்களாகும்.

உதாரணமாக வேலைத்தளத்தில் தங்களுடைய கழிவறை தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள வாய்ப்பில்லாமல் எட்டுமணி நேரத்திற்கு அதிகமாக வேலை செய்ய வேண்டியிருக்கும் பட்சத்தில் இவ்வாறான வேலைத்தளத்தில் வேலை செய்ய யார் விருப்பப்படுவார்கள். அடுத்த விடயம் குறைந்த சம்பளம் அரச தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் மற்றும் ஏனைய அனைத்து தொழில் உரிமைகளும் கூட்டுஒப்பந்தத்தின் கீழ் கையாளப்படுகின்றது. இச்சம்பளமானது தற்போது காணப்படுகின்ற வாழ்க்கைச் செலவுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவாகும். இந்நிலையில் அரச தோட்டங்களில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் வேலை நாட்களும் குறைவாக வழங்கப்படுவதற்கு காரணமாக அந்த குறைந்த சம்பளத்தை கூட அவர்களால் பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. ஆகவே, தொழிலாளர்கள் தங்களுடைய குடும்பத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக வேறு தொழில்களை நாடிச்செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இந்நிலையை நிர்வாகங்கள் மற்றும் அரசாங்கமுமே உருவாக்கியுள்ளது. எனவே தொழிலாளர்களுக்கு உகந்த வேலைத்தள சூழலை அமைத்து கொடுப்பதை விடுத்து தொழிலாளர்களின் மீது பழிசுமத்துவது தவறாகும். இவ் வேலைத்தள சூழலை தொழிலாளர்களுக்கு உகந்ததாக மாற்றும் பட்சத்தில் நிச்சயமாக தோட்டங்களில் வேலை செய்வதற்கு தொழிலாளர்கள் முன்வருவார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

(00 ஆம் பக்கம் பார்க்க)

அரச நிர்வாகத்தின் கீழுள்ள இத்தோட்டங்களின் நி​ைலமை மாற்றக்கூடியது என நீங்கள் கருதுகின்றீர்களா?

இந்நிலை மாறுவதற்கு இங்குள்ள நிர்வாக கட்டமைப்பு மாறவேண்டிய தேவை காணப்படுகின்றது. தோட்டத்தை நிர்வகிக்கின்ற கம்பனிகளின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளே இன்றைய இந் நிலைக்கு பிரதான காரணங்களில் ஒன்றாக காணப்படுகின்றது. இரண்டாவது காரணம் இங்கு வேலை செய்கின்ற தொழிலாளர்கள் தங்களுக்கு ஒரு அநீதி இழைக்கப்படுகின்றது என்பதை அடையாளம் கண்டவுடனேயே தொழிலாளர்கள் அதனை எதிர்த்துப் போராட வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்ய தவறியதன் விளைவே இன்று அவர்கள் முகங்கொடுத்துள்ள நிலைக்கு காரணமாக அமைவதோடு, அரசு தன்னுடைய கடமையை சரிவர செய்யாமல் தொழிலாளர்களின் பிரச்சினைகளை கண்டும் காணாமல் இருக்கின்ற நிலையும் இத்தொழிலாளர்கள் இன்று முகம் கொடுத்துள்ள நிலைக்கு ஒரு காரணமாகும்.

எனவே தற்போதைய நிலையில் இருந்து மீண்டு வருவதற்கு தொழிலாளர்கள் தங்களுடைய அதிகாரத்தை கையிலெடுக்க வேண்டும். தங்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிகளுக்கு ஒரு நிரந்தர தீர்வை பெற்றுக் கொள்ளும் வரையில் இன, மொழி, மத, தொழிற்சங்க பாகுபாடுகள் இன்றி அனைத்து தொழிலாளர்களும் ஒன்றினைந்து செயற்படும்பட்சத்தில் தங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும். அரச தோட்டங்களிலுள்ள தொழிலாளர்கள் முகம் கொடுத்துள்ள பிரச்சினைகளில் இருந்து வெளியில் வருவது அவர்களுடைய போராட்டத்திலேயே தங்கியுள்ளது.

Comments